Friday, September 30, 2011

கீழக்கரை நகராட்சி தலைவருக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் !(படங்கள்)

கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு கட்சிகள் சார்பாகவும் ,சுயேச்சையாகவும் மனுதாக்கல் செய்துள்ளவர்களின் படங்கள் கீழே வெளியிடப்படுள்ளது மீதமுள்ள தேமுதிக,புதிய தமிழகம், ஒரு சில சுயேச்சைகள் ஆகியோர்களின் படங்கள் கிடைத்தவுடன் வெளியிடப்படும்

காங்கிரஸ் சார்பாக வேட்பாளராக மனுதாக்கல் செய்த ஆயிசத்துல் முபஸ்ஸரா அருகில் கவுன்சிலர் ஹமீதுகான் உள்ளார்.


சுயேச்சையாக மனுதாக்கல் செய்துள்ள ஆயிசத் இவர் பட்டாளம் மன்சூரின் சகோதரி ஆவார்



சுயேச்சையாக மனுதாக்கல் செய்த மெஹர்நிஷா அருகில் நிற்பவர் அவரது கணவர் கிழக்கரை சமக வின் செயலாளர் பந்தே நவாஸ்





திமுக சார்பில் தாக்கல் செய்த வேட்பாளர் தாஜீனிசா


கீழக்கரை 'அனைத்து ஜமாத் தேர்தல் குழு' என்ற அமைப்பினால் பொது வேட்பாளராக அறிவித்து ஆதரவு தெரிவிக்கப்பட்டு வேட்பாளராக போட்டியிடும் மெஹர்பானு மனு தாக்கல் செய்தார் அருகில் அவரது சகோதரரும் முன்னாள் கவுன்சிலருமான் ஜஹாங்கிர் அரூஸி உள்ளார்





அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்துள்ள ராபியத்துல் காதரியா




சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ள கீழக்கரை முத்துசாமி புரத்தை சேர்ந்த கதிராயி

கீழக்கரை நகராட்சி தேர்தல் தடை கோரி வழக்கு!தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!


கீழக்கரை நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதில் வழிகாட்டுதல்கள் சரியாக பின் பற்றவில்லை என கீழக்கரை நகராட்சி தேர்தலுக்கு தடை கோரி ஜாஹிர் ஹீசைன் களஞ்சியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே

இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் .

இது தொடர்பான முந்தைய செய்தியை பார்க்க :-http://keelakaraitimes.blogspot.com/2011/09/blog-post_22.html

கீழக்கரை நகராட்சியில் போட்டியிட மனுதாக்கல் செய்தவர்களில் வயதில் இளையவர் !

ஆனாமூனா என்ற காதர் சாகிபு (வெள்ளை சட்டை, கண்ணாடி அணிந்திருப்பவர்)

கீழக்கரையில் கவுன்சிலர் வேட்பாளர்களாக 128 பேர் போட்டியிடுகின்றனர்.இவர்களில் வயதில் இளையவர் 17வது வார்டில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ள ஆனாமூனா என்ற காதர் சாகிபு தான் என்று கூறப்படுகிறது .அதிமுக சார்பில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ள இவருக்கு வயது 28 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுல்தான் அப்துல் காதர் கூறியதாவது,இம்முறை ஏராளமான இளைஞர்கள் தேர்தலில் பங்கெடுக்க ஆர்வத்துடன் முன் வந்துள்ளது பாராட்டுக்குறிய விசயம் என்றார்.

கீழக்கரையில் 139 நபர்கள் வேட்புமனு தாக்கல் !

கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளருக்கு திமுக சார்பில் தாஜீனிசா,அதிமுக சார்பில் ராபியத்துல் காதரியா,தேமுதிக சார்பில் ஜீனத் பேகம்,காங்கிரஸ் சார்பில் ஆயிசத்துல் முபஸ்ஸரா மற்றும் சுயேச்சைகள் உள்பட 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கீழக்கரை நகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்களாக‌ போட்டியிட 128 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Wednesday, September 28, 2011

ஊராட்சி தலைவர் பதவிக்கு பெரியபட்டிணம் கபீர் வேட்பு மனு தாக்கல் !


திருப்புல்லாணி ஒன்றியத்தை சேர்ந்த பெரியபட்டினம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட பெரியபட்டினம் கபீர் வேட்புமனு தாக்கல் செய்தார்.பல்லாண்டு காலம் துபாயில் தனியார் நிறுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சமூக பணிகளில் ஆர்வமிக்கவர்.

18வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட கரீம் மனு தாக்கல்!



18வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக‌ போட்டியிட கரீம் மனு தாக்கல் செய்தார்.அவருடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

17வது வார்டு கவுன்சிலருக்கு ஜமாத் சார்பில் வேட்பாளர் முஜம்மில் மனு தாக்கல் !

கீழக்கரை தெற்குதெரு ஜமாத் சார்பில் 17வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு முஜம்மில் மனுதாக்கல் செய்தார். தற்போதைய கவுன்சிலர் எம்.எம்.கே.காசிம் என்ற செல்வராஜா,ஹுசைன் ஹாஜியார் , மெட்ராஸ் மரிக்கா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்.
இது குறித்து தெற்குதெருவை சேர்ந்த சாவன்னா என்பவர் கூறுகையில் , ஜமாத் சார்பில் ஒருவர் போட்டியிடுவது இதுவே முதல் முறை என்றார்

நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் தாஜீனிசா மனு தாக்கல்!



கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட வேட்பாளர் தாஜீனிசா கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.அவருடன் தற்போதைய நகராட்சி தலைவரும் ,திமுக நகர் செயலாளருமான பஷீர் அகமது,ராஜா ,இஞ்சினியர் கபீர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கீழக்கரை குத்பா கமிட்டியின் முக்கிய அறிவிப்பு !

எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர்


கீழக்கரை குத்பா கமிட்டி சார்பாக அல்ஹாஜ் எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர் பத்திரிக்கை அறிவிப்பை(28-09-11) வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது,
25.09.11 அன்று கீழக்கரை தெற்குதெரு பள்ளிவாசலில் நடைபெற்ற ''ஜமாத் மகாசபை'' என்ற பெயரில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கும்,அதன்பின் அறிவிக்கப்பட்ட ''கீழக்கரை அனைத்து ஜமாத் தேர்தல் குழு'' என்ற அறிவிப்பிற்கும் கீழக்கரையின் அனைத்து ஜமாத்களின் கூட்டமைப்பான குத்பா கமிட்டிக்கும் எந்த விதமான தொடர்போ,சம்பந்தமோ இல்லை என்பதை இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது . என்று தெரிவித்துள்ளார்.

Monday, September 26, 2011

கீழக்கரை நகராட்சி தேர்தலுக்கு தடை கோரி வழக்கு ! நாளை விசாரணை?



கீழக்கரை நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதில் வழிகாட்டுதல்கள் சரியாக பின் பற்றவில்லை என கீழக்கரை நகராட்சி தேர்தலுக்கு தடை கோரி ஜாஹிர் ஹீசைன் களஞ்சியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே

இவ்வழக்கு நீதிமன்றத்தில் நாளை(27-09-11) விசாரணைக்கு வரும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் .

இது தொடர்பான முந்தைய செய்தியை பார்க்க :-http://keelakaraitimes.blogspot.com/2011/09/blog-post_22.html

கீழக்கரை நகராட்சி தேர்தல் ! அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியா வேட்புமனு தாக்கல் !


கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட‌ அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியா கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கீழக்கரையில் பொது வேட்பாளர் தேர்வுக்கு தேர்தல் பணிக்குழு அமைப்பு !

கூட்டத்தில் மேலத்தெருவை சேர்ந்த அப்துல் மாலிக்
கூட்டத்தில் அன்பு நகரை சேர்ந்த தங்கம் ராதாகிருஸ்ணன் பேசுகிறார்

கீழக்கரை தெற்கு தெருவில் கீழக்கரை நகராட்சி தலைவருக்கான பொது வேட்பாளரை தேர்வு செய்ய அனைத்து ஜமாத் மற்றும் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இன்று கூட்டம் நடைபெற்றது .இக்குகூட்டத்தில் வடக்கு தெரு ஜமாத் மற்றும் பழைய குத்பா பள்ளி தெரு ஜமாத் தவிர மற்ற அனைத்து ஜமாத்களும் ,சமுதாய அமைப்புகளும், இந்து சகோதர அமைப்புகளும் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் பணிக்குழு அமைப்பது என முடிவெடுக்கப்பட்டு 8 பேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1.அப்துல் மாலிக், (மேலதெரு), தேர்தல் குழு தலைவர்,9360061333

2.சாஹிப், (கடற்கரை பள்ளிவாசல் தலைவர் ),

3.ஹபீப் முஹம்மது தம்பி, (நடுத்தெரு ஜமாஅத் செயலாளர் )

4.செய்யது இபுராஹீம், ( மின் ஹாஜியார் பள்ளி தலைவர் )9965153276

5.செய்யது அப்துல் மத்தின் ( கிழக்கு தெரு ஜமாஅத் பொருளாளர் )9443684273

6.பவுசு அலியூர் ரஹ்மான் ( தெற்கு தெரு ஜமாஅத் செயலாளர் )9944731692

7.ராதா கிருஷ்ணன் ( அன்பு நகர் )9942383427

8.வேலுச் சாமி ( நாடார் உறவின் முறை )9159766348
ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இப்பணிக்குழு நாளை (26-09-11) மாலை 5 மணிக்குள் நகராட்சி தலைவராக போட்டியிட ஆர்வமுள்ளவர்களிடம் மனுக்கள் பெற்று ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யும். தற்போது கூடிய அனைவரும் மீண்டும் தெற்கு தெருவில் நாளை (26-09-11) இஷா தொழுகைக்கு பின் ஒன்று கூடுவார்கள் எனவும் அக்கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு, போட்டியிட விரும்புவோர் பற்றிய தனது ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்யும் பின்னர் கூட்டத்தில் விவாதித்து பொது வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது
நன்றி :- படங்கள் :நெய்னா

Sunday, September 25, 2011

கீழக்கரையில் சரித்திர சான்றுகள் ! ஜப்பான் மாணவர்கள் பிரமிப்பு !



தொன்மையான பண்டைகால கட்டிடங்களை ஆராய்ச்சி செய்வதற்காக ஜப்பானை சேர்ந்த பேராசிரியர்,மற்றும் மாணவர்கள் கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு பழமை வாய்ந்த கட்டிடங்களை பார்வையிட்டு அதன் சிறப்புகளை கேட்டு அறிந்தனர்.

ஜப்பான் பல்கலைகழக பேராசிரியர் சூ யமானே தலைமையில் புக்காமி நவோக்கா ஆராய்ச்சியாளர் சுசூகி மற்றும் மாணவர்கள் யுனிஸின்யே, ஹேஹக்கி,டெசூ ஆகியோர்கள் கீழக்கரை ,ஏர்வாடி பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த மசூதிகள்,கட்டிடங்கள் ,உத்தரகோசமங்கை,திருப்புல்லாணியில் உள்ள கோவில்கள் மற்று சிற்பங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இது குறித்து ஜப்பான் பல்கலைகழக பேராசிரியர் சூயமானே கூறுகையில் ,
கீழக்கரையில் மீன்கடை தெருவில் அமைந்துள்ள பழைய குத்பா பள்ளி,நடுத்தெருவில் அமைந்துள்ள ஜீம்மா பள்ளி மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உள்பட இப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்கள், இங்குள்ள சரித்திர சான்றுகள் எங்களை பிரமிக்க வைக்கிறது.. ராமேஸ்வரம் ,திருப்புல்லாணி சொக்கநாதர் கோவில்களில் உள்ள கல்வெட்டு சான்றுகள் ஆராய்ச்சிக்கு உதவும் .மேலும் இப்பகுதி மக்கள் எங்களை அன்புடன் உபசரித்து தேவையான விளக்கங்களை அளித்தனர் என்றார்

முன்னதாக ஏர்வாடி தர்ஹாவில் தர்கா ஹக்தார் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. இவர்களுக்கு தேவையான உதவிகளை கீழக்கரையை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அபுசாலிஹ் மற்றும் சீனி ஹசனா ஆகியோர் செய்திருந்தனர்.

கீழக்கரையில் இலங்கையை சேர்ந்தவர் கைது ! 10 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன !



கீழக்கரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த இளைஞர்


வெளிநாட்டை சேர்ந்த சிலர் கீழக்கரை பகுயில் தங்கியிருந்து கடத்தலில் ஈடுபடுவதாக க்யூ பிராஞ்சுக்கு தகவல் கிடைத்தது அதனடிப்படையில் கீழக்கரை வள்ளல் சீதக்காதி பகுதியில் அமைந்துள்ள விடுதியில் சோதனை மேற்கொண்டதில் அங்கிருந்த இலங்கை பத்தளம் மாவட்டம் மடவாக்குளத்தை சேர்ந்த சேர்ந்த முகம்மது தம்லிக் என்பவரின் மகன் ஹசனின்(27) என்பவர் பிடிபட்டார் .இவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இப்பகுதியில் தங்கியிருந்துள்ளார் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்துபோலி அடையாள அட்டையுடன் 10க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் கைப்பற்றபட்டதாகவும் இதன் மூலம் அவர் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு பேசியிருப்பது தெரிய வந்தது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.இவர் கடத்தலில் ஈடுபட்டாரா ,ஹவாலா பண பரிமாற்றத்தில் சம்பந்தபட்டிருப்பாரா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Saturday, September 24, 2011

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி விழா


கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் சதக் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் நினைவு நாள் விழாவையோட்டி பள்ளி மாணவ,மாணவிகளுக்கான ரங்கோலி போட்டி நடைபெற்ற

நகராட்சி தலைவருக்கான‌ பொது வேட்பாளர் தேர்வு சம்பந்தமாக செப்25ல் கூட்டம் !




கீழ‌க்க‌ரை தெற்குதெரு ஜ‌மாத் சார்பில் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில் கூறியிருப்ப‌தாவ‌து,

கீழக்கரையில் உள்ள தெரு ஜமாஅத்கள் தத்தமது நிர்வாகம் தொடர்பான வேலைகளை மட்டுமே கவனம் செலுத்தி வருவதால் மற்ற பொது பிரச்சனைகளான மக்களின் அன்றாட தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள் மற்று சுகாதாரம், கழிவுநீர், குப்பை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி பொது மக்கள் தவிக்கும் சூழ்நிலை உள்ளது.

இந்நிலை மாற, மக்களின் பொறுப்புதாரிகளான நாம் இவ்விசயத்தில் தீர்க்கமான ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆகவே இது தொடர்பாக எங்களது தெற்குத் தெரு ஜமாத்தின் சார்பாக வருகின்ற 25.09.2011 அன்று தேர்தல் சம்பந்தமாக ஜமாஅத் மகா சபை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, எங்களது தெருவில் அடங்கி உள்ள வார்டுகளுக்கு பிரதிநிதிகளை ஜமாஅத் மூலம் தேர்ந்தெடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் அவர்களது கடமைகளை சரிவர செய்வதற்கும், தெரு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும்,ஜமாத்தின் கண்காணிப்பில் வருவதற்கும் வழி வகை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதே திட்டத்தை தொடர்ந்து, நமது நகர் மன்ற தலைவரை அனைத்து ஜமாத்தினரும் ஒருங்கிணைந்து பொது நோக்கோடு தேர்ந்தெடுத்து கீழக்கரை நகரின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் மற்றும் நலத் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையவும் ஜமாத்தினராகிய நாம் உறுதுணையாக இருக்க முடியும்.

பொது வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்வதன் மூலம் அவர் தன்னிச்சையாகவோ, ஒரு தலை பட்சமாகவோ, தனது தெருவை மட்டும் கவனித்து கொண்டு தமக்கு வேண்டாதவர்கள் தெருவை புறக்கணிக்கும் போக்கு ஏற்படாமல் அனைத்து தெருவிற்கும் தேவையான திட்டங்களை செயல்படுத்தக் கூடிய தலைவரை நாம் தேர்ந்தெடுக்க முடியும்.

எனவே கீழக்கரைக்கு பொது வேட்பாளரை தெரு பாகு பாடின்றி தேர்ந்தெடுப்பது சம்பந்தமாக அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் சங்கங்கள், அமைப்புகள் ஒருங்கிணைந்து முடிவு செய்வதற்கு இன்ஷா அல்லாஹ் 25 .09 .2011 இஷா தொழுகைக்கு பிறகு தெற்கு தெரு பள்ளிவாசலில் கூட்ட ஏற்பாடு செய்துள்ளோம், எனவே இக்கூட்டத்திற்கு அனைவரும் பொது நோக்கோடு ஒன்று கூடி நமது ஊருக்காக நல்ல சுமூகமான முடிவு எடுக்க ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Friday, September 23, 2011

6 பேர் மீது வரதட்சனை வழக்கு ! கணவர், மனைவி கைது !



இன்ஸ்பெக்டர் விமலா

கீழக்கரையில் கூடுதல் வரதட்சனை கேட்டதாக கூறி முதல் மனைவி புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கணவரையும் 2வது மனைவியையும் கைது செய்து மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கீழக்கரை 500 பிளாட்டை சேர்ந்த வாஹிதா பானு(30) இவருக்கும் இதே ஊரை சேர்ந்த வடக்குத்தெருவை சேர்ந்த செய்யது முகம்மது மகன் ஜகுபர் சாதிக்(35) என்பவருக்கும் 1998ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

1லட்சத்து 80 ஆயிரம் வரதட்சனையாகவும்,நகை மற்றும் வீடு சீதனமாகவும் கொடுக்கப்பட்டதாக பெண் தரப்பில் கூறப்படுகிறது. இவர்களுக்கு 10 வயதிலும்,5 வயதிலும் பெண் குழந்தைகள் உள்ளனவாம். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக மேலும் 50ஆயிரம் கேட்டு தன்னை கொடுமைபடுத்தியதாகவும் மேலும் பணத்தை கொடுக்க மறுத்ததால் ஹாமிலத்து சமீமா (24) என்ற பெண்னை 2வது திருமணம் செய்து அழைத்து வந்து கீழக்கரையில் குடும்பம் நடத்திவருவதாகவும் முதல் மனைவி வாஹிதா பானு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன் பேரில் மகளிர் காவல் துறை இன்ஸ்பெக்டர் விமலா இது குறித்து விசாரணை செய்து கணவர் ஜகுபர் சாதிக்,அவரின் தாயார் ,சகோதரி, சின்னதாயார்,மாமா 2வது மனைவி ஹாமிலத்து சமீமா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கணவி ,2வது மனைவி இருவரையும் கைது செய்தனர் மற்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் தாஜீனிசா ! அதிகாரபூர்வ அறிவிப்பு


திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக என்.எம்.டி தெருவை சேர்ந்த தாஜீனிசா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

பரமக்குடி கலவரம் !அப்பாவிகள் என்று அறியபட்டால் வழக்குகள் வாபஸ்! டி.ஐ.ஜி. ரவிக்குமார்




கீழக்கரை காவல் நிலையத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி ரவிக்குமார் தலைமையில் எஸ்.பி காளிராஜ் மகேஸ்குமார் மற்றும் டிஎஸ்பி முனியப்பன் முன்னிலையில் தலித் கிராம கிராம தலைவர்கள் கருத்தாய்வு கூட்டம் நடைபெற்றது.


பரமக்குடியில் கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தன .கீழக்கரை பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மீது கல்வீச்சி நடந்தது. இது தொடர்பாக போலீசார் பல்வேறு கிராமங்களில் சந்தேகத்திற்கு உட்பட்ட நபர்களை தேடி சென்றனர்.

இதற்கு பெண்கள் எதிர்ப்பை வெளிபடுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்ததை தொடர்ந்து கீழக்கரையை சுற்றியுள்ள ஏர்வாடி,சிக்கல் ,உத்தரகோஷமங்கை, திருப்புல்லாணி ஆகிய பகுதிகளில் உள்ள தலித் கிராமதலைவர்களை அழைத்து கருத்தாய்வு கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கினர்.

கிராம தலைவர்களின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். இந்த கூட்டம் 90 நிமிடங்கள் நடைபெற்றது.முன்னதாக பரமக்குடியில் நடந்த துப்பாகி சூட்டில் பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது குறித்து தஞ்சை சரக டிஐஜி ரவிக்குமார் கூறுகையில்,

மாவட்டத்தில் அமைதி ஏற்பட்டு பொது மக்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாருடன் மக்களின் நட்பை வலுபடுத்தும் விதமாக மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தையும் அச்சத்தையும் போக்குவதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. சமூக தலைவர்கள் விடுத்த கோரிக்கைகளில் நியாயமானைவை குறித்து பரீசிலிக்கப்படும். மேலும் யார் மீதும் தவறாக வழக்குகள் போடபட்டிருந்தால் வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்

Thursday, September 22, 2011

கீழக்கரை நகராட்சி தேர்தலுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

ஜாஹிர் ஹீசைன் களஞ்சியம்

வக்கீல் அலிப்தீன்


கீழக்கரை நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதில் வழிகாட்டுதல்கள் சரியாக பின் பற்றவில்லை என கீழக்கரை நகராட்சி தேர்தலுக்கு தடை கோரி ஜாஹிர் ஹீசைன் களஞ்சியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் தரப்பில் கூறியதாவது , சட்ட விதிகளின் படி 10 வருடத்துக்கு ஒரு முறைதான் இம்மாற்றங்கள் இருக்க வேண்டும் என்று சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள் அதன் படி கீழக்கரை நகராட்சி தலைவர் பதவி 1996 முதல் 2006 வரை 10 வருடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டு முறையே சக்கீலா மற்றும் நசீரா பர்வீன் ஆகியோர் கீழக்கரை நகராட்சி தலைவராக இருந்தனர்

மீண்டும் பொது தொகுதியாக மாற்றப்பட்டு 2006 முதல் 2011 வரை தற்போது தலைவராக பசீர் இருந்து வருகிறார். எனவே அடுத்த 5 வருடங்களுக்கு 2016 வரை பொது தொகுதியாகத்தான் இருக்க வேண்டும் ஆனால் தற்போது மகளிருக்கான தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது வழக்கத்துக்கு விரோதமாக உள்ளது.

மேலும் நகராட்சி தலைவர் பதவிக்கு மகளிருக்கான வாய்ப்பை கீழக்கரைக்கு ஒதுக்குவதை காட்டிலும் மற்ற ஊர்களுக்கு இந்த வாய்ப்புகளை வழங்கி பெண் தொகுதியாக அறிவித்தால் அந்தந்த ஊர் பெண்களுக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். இப்படி செய்தால் அனைத்தூர் மகளிருக்கும் சமமான வாய்ப்பு கிட்டும்.
நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கான வாய்ப்பை தொடர்ந்து கீழக்கரைக்கு வழங்குவதினால் இந்த முறை வேறு ஒரு நகராட்சி மகளிருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டி பறித்தது போல் ஆகிறது

மேலும் பெண் தொகுதியா பொது தொகுதியா என்று ஒதுக்கப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன் இதற்கான முன்னறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் மற்றும் பல்வேறு காரணங்களை எடுத்து கூறி கீழக்கரை நகராட்சி தேர்தலுக்குதடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறினர்.

சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் எம்.எம்.கே. அலிப்தீன் மற்றும் சத்தியநாராயணன் ஆகிய வக்கீல்கள் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Wednesday, September 21, 2011

கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக விருப்ப மனு !


உள்ளாட்சி தேர்தல் தேதி அக்டோபர் 17 மற்றும் 19ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே கீழக்கரை நகராட்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே இந்நிலையில் அதிமுக சார்பில் ராபியத்துல் காதரியா நகராட்சி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாத நிலையில் திமுக சார்பில் கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக போட்டியிட கீழக்கரை என்.எம்.டி தெருவை சேர்ந்த எம்.தாஜீனிசா நூர்தீன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

சேகு நூர்தீன் அவர்களின் மனைவியான இவர் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துள்ளார்.வாணியம்பாடி மதராஸவில் ஆலிமா பட்டம் பெற்றுள்ளார்.கீழக்கரை அனைத்து பெண்கள் மதரஸாக்களின் தலைவியாக உள்ளார். சமூக சேவையில் ஆர்வமுள்ள இவர் ஹமீதிய மெட்ரிக் பள்ளியின் பெற்றோர் கழக உறுப்பினராக உள்ளார். தந்தையார் பெயர் முகம்மது மீரசாகிபு ஆகும் .
இவரே திமுக சார்பில் கீழக்கரை நகராட்சி தலைவி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன

கீழக்கரையில் மீண்டும் செம்பி ராஜ்யம்..! கட்டுரையாளர் : கீழைராஸா





கட்டுரையாளர் : கீழைராஸா




”என்ன காக்கா, உள்ளாட்சி தேர்தலில்,இந்த முறை நம்ம ஊரை பெண்களுக்கு ஒதுக்கிட்டாங்களாமே..?”
”என்னக் கொடுமை தம்பி நாட்டை தான் பொம்பளைங்க கையிலே கொடுத்தாச்சுன்னா ஊரையுமா..?”
”வீட்டை மட்டும் ஏன் விட்டுட்டீங்க..? அங்கேயும் பொம்பள ஆட்சி தானே..?”
”அடப் பாவி அதுவும் உனக்குத் தெரிஞ்சி போச்சா..?”
”இதுலே என்ன காக்கா ரகசியம் இருக்கு..., லாத்தா பேரைக் கேட்டாலே உங்க பேஸ்மெண்ட் வீக்காகிடும்னு ஊருக்கே தெரியுமே....? ”

இப்படி நகைச்சுவையாக ஊரெங்கும் உரையாடல் நிகழ்ந்தாலும் உண்மையில் இந்த விசயம் ரொம்பவும் சீரிஸ்ஸானது..!

கீழக்கரை நகராட்சி தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து, ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்து கொண்டிருந்த வேளை, இடி மாதிரி வந்து விழுந்த இந்த செய்தியால் ஸ்தம்பித்து போனது அரசியல் களம்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பட்டியலில், கீழக்கரை, காயல்பட்டினம், கடையநல்லூர் போன்ற முஸ்லிம் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளெல்லாம் பெண்களுக்காக ஒதுக்கப் பட்ட நோக்கத்தை ஆராய்ந்து பார்க்கும் போது, அது ஆதிக்க சக்திகளின் அரசியல் சகுனி வேலையோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது...இந்த உள்நோக்கம் அறியாமல் உள்ளூர் அரசியல்வாதிகளும் அவர்களின் பின்னால் கொடி பிடித்துத் திரியும் கொடுமையை என்ன சொல்வது...?

இந்த அரசியல் சகுனி வேலைகளுக்கு அப்பாற் பட்டு ஆராயுவோமேயானால் கீழக்கரைக்கும் பெண்களுக்கும் உண்டான ஆட்சி சம்பந்தப்பட்ட பிணைப்புகளை அறிய முடியும்.
பெண்களுக்கு ஆட்சி அதிகாரம் என்பது கீழக்கரைக்கு புதிதில்லை, 11 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கீழக்கரை ஒரு பெண்ணால் ஆளப்பட்டு என்பது வரலாற்று உண்மை.

ஆம் 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய சகோதர்கள் மூவர் தங்களின் கருத்து வேறுபாடு காரணமாக, பாண்டிய தேசத்தை மூன்று பாகங்களாக பங்கிட்டு, கீழக்கரையை தலைமையிடமாக கொண்ட தென் மதுரையை விக்கிரபாண்டியன் ஆண்டு கொண்டிருந்த வேளை, அது சோழ மன்னர் ராஜராஜ சோழனால் கைப்பற்றப்பட்டு அவர் மனைவியரில் ஒருவரான செம்பிமாதேவியிடம் அதை ஒப்படைத்து, செம்பிமாதேவியே கீழக்கரையை சில வருடங்கள் ஆண்டு வந்தார் என்பது வரலாறு. அதனாலேயே கீழக்கரைக்கு ”செம்பி நாடு” என்றொரு பெயரும் உண்டு என்பது நம்மில் பலர் அறிவர்.

இப்படி வரலாறு முதல் கொண்டே கீழக்கரையில் பெண்கள் ராஜ்யம் நிகழ்ந்தாலேயோ என்னவோ இன்றும் அது விட்டகுறை தொட்ட குறையாக தொடரத்தான் செய்கிறது...
கீழக்கரை சுற்று வட்டாரத்தை பொருத்த மட்டும் பெரும்பாலான வீடுகளில் பெண்களின் ராஜ்யம் தான். அதற்கு காரணம் பெரும்பாலான ஆண்கள் வெளிநாடு வேலைகளுக்கு சென்று விடுவதால், பெண்களே வீட்டை நிர்வகிக்க வேண்டிய நிர்பந்தம். பெரும்பாலானோர் அந்தப் பொறுப்பை சிறப்பாகவே செய்கின்றனர்.

வீட்டை சிறப்பாக ஆட்சி செய்யும் எங்களால் ஊரை ஆட்சி செய்ய முடியாதா என்ன? என்பது தான், இன்றைய இளம் பெண்களின் விவாதம்.



முடியும்..! கண்டிப்பாக முடியும்..! அவர்கள் சுயமாக செயல்படும் பட்சத்த்தில் அது முடியும் ...!ஆனால் நமதூரில் நடப்பது என்ன? உதவி சேர்மனாக இருந்து கொண்டு சேர்மனை இயக்கும் எண்ணத்தில் தான் ஆண் வேட்பாளர்கள் களம் இறங்குகிறார்கள்.இந்த நிலை மாற வேண்டும். தன்னிச்சையாக, துணிச்சலுடன் திறம்பட செயல்படும் தகுதியுள்ள ஒரு பெண்மணியை நாம் முன்னிருத்த வேண்டும்.

அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு ஏவல் விடுவதை விட, களத்தில் சென்று பணியாற்றும் திறம் படைத்த பெண்ணை இனம் காண வேண்டும்.

ஒரு அன்னையாக, ஆசிரியையாக, அன்னை தெரசாவாக, கனிவான, கண்ணியமான, ஒழுக்கமான, ஊரின் நடப்பறிந்தவராக, பொதுவாழ்க்கையில் கணவனின் இடையூறு இல்லாதவராக, தேவைப்பட்டால் சில விசயங்களில் அல்லிராணியாக செயல்படக் கூடிய ஒருவரை அடையாளம். காண ஆண்களில் செயல் படுத்த முயலாத , முடியாத “பொது வேட்பாளர்” முறையை பெண்களிலாவது செயல்படுத்துவோமா..? என்ற கேள்வியுடன்...



உங்கள் அன்பன்...கீழைராஸா - துபாய் ,

கீழக்கரை சம்பந்தப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை பரிமாறிக்கொண்ட புலவர்.ஹக்கிம் (வரலாற்று ஆராய்ச்சியாளர்) வடக்குத்தெரு. அவர்களுக்கு நன்றி.
_________________________________________________________________________________________________________________________________________________________________________

அன்பு உள்ளங்களுக்கு, இந்த கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் . உங்கள் கருத்துக்கள்தான் எங்களுக்கு ஆக்கமும்,ஊக்கமும் தருகிறது.

அன்புடன்,

கீழக்கரை டைம்ஸ் குழுவினர்



கீழக்கரை நகராட்சி! தெற்குதெரு ஜமாத் ஆதரவு யாருக்கு ? அக் 2ல் முடிவு !



தெளிவாக‌ காண‌ ப‌ட‌த்தின் மேல் கிளிக் செய்ய‌வும்

நோட்டீஸ் இணைக்கப்பட்டுள்ளது

கீழக்கரையில் மஹ்துமியா பள்ளி மாணவர்கள் சுற்று சூழல் பாதுகாப்பு ஊர்வலம்


சுற்று சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கீழக்கரை மஹ்துமியா பள்ளி மாணவர்கள் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் ஊர்வலமாக சென்றனர்

வாலிபால் போட்டி! கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன்!


கீழக்கரை சதக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் தமிழகமெங்கும் உள்ள ஏராளமான கல்லூரிகள் கலந்து கொண்டன. இப்போட்டியை கல்லூரி முதல்வர் அலாவுதீன் தொடங்கி வைத்தார். முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது .திருப்பத்தூர் விவேகனந்தா பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பிடித்தது வெற்றி பெற்ற அணிகளுக்கு சதக் அறக்கட்டளையின் செயல் இயக்குநர் யூசுப் சாகிப் பரிசளித்து பாராட்டினார்.

Tuesday, September 20, 2011

தெற்குதெரு 17வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு!






தெற்குதெருவை சேர்ந்த மறைந்த செய்யது முகம்மது ஜலாலுதீன் அவர்களின் மகன் பிரதவ்ஸ் இப்ராகிம் என்ற ராஜா திமுக சார்பில் 17வது வார்டில் கவுன்சிலராக போட்டியிட ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் விருப்ப மனு தாக்கல் செய்து உள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் பொது நலப்பணிகளில் ஆர்வமுடையவர்.

ராஜா கூறியதாவது, ஏராளமான இளைஞர்கள் எனக்கு ஆதரவாக தேர்தல் பணி செய்ய தயாராக‌ உள்ளார்கள.அனைத்து தரப்பினரிடமும் எனக்கு ஆதரவு உள்ளது. இப்பகுதியில் வய‌திலும் ,அனுப‌வ‌த்திலும் பெரிய‌வரான‌ அக்க‌லா ம‌ரிக்கா அவ‌ர்க‌ளிட‌ம் வாழ்த்துக்க‌ளை பெற்றுள்ளேன்.

17 வது நான் வெற்றி பெற்றால் வார்டின் பிரச்சினைகளை தீர்க்க நகராட்சியில் குரல் கொடுப்பேன் ,பழுதால் ஏற்படும் மின் தடை ,தெரு விளக்கு எரியாமல் இருப்பது, போன்ற மக்களின் அன்றாட பிரச்சினைகளை நானே முன் நின்று அக்குறைகளை போக்க முயற்சி செய்வேன். தினமும் சுகாதார மேற்பார்வையாளர்களுடன் நானே நேரில் சென்று எங்கள் பகுதியில் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். மொத்ததில் இப்பகுதி மக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன்.இப்பகுதியை சுகாதாரமான பகுதியாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்

வடக்குத்தெரு 19வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக செய்யது இப்ராகிம் போட்டி!



கீழக்கரை நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கு பலரும் ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் கீழக்கரை 19வது வார்டு வடக்குத்தெரு பகுதியில் மறைந்த கே.எஸ்.எம்.எஸ்.அஹமது அபுதாகிர் அவர்களின் மகன் செய்யது இப்ராகிம்(39) என்ற இளைஞர் கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர் நாஸா சமுக நல அமைப்பில் செயலாளராக பணியாற்றி பல் வேறு நலப்பணிகளை ஆற்றியுள்ளார். பொது சேவையில் ஆர்வமுள்ள இவர் கீழக்கரையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது , உள்ளூரிலேயே தொழில் செய்து வருவதால் கவுன்சிலராக மக்களுக்கு பணியாற்றுவதில் எனக்கு சிரமமிருக்காது மேலும் இப்பகுதியில் பிறந்து வளர்ந்தவன் இப்பகுதி மக்களுக்கு நான் நன்கு அறிமுகமானவன் இப்பகுதியில் உள்ள சுகாதார பிரச்சினை உள்பட இப்பகுதி மக்களின் அன்றாட பிரச்சினைகளை நன்கு அறிந்தவன் அவற்றை தீர்க்க நிச்சயம் முயற்சி செய்வேன் . இறைவன் உதவியால் இப்பகுதி மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெறுவேன் என்றார்.

குறிப்பு : கீழக்கரை நகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் புகைபடங்களுடன் முழு தகவலையும் அனுப்பி வைத்தால் செய்தியாக வெளியிட தயாராக‌ உள்ளோம் keelakraitimes@yahoo.com

Monday, September 19, 2011

ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி ! மாசா இப்திகார் அறிக்கை


மாசா சமூக நல அமைப்பின் நிறுவனர் இப்திகார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப‌தாவ‌து ,
அல்லாஹ் மிகப்பெரியவன், வரும் உள்ளாட்சி தேர்தலில் நமதூர் நகராட்சி தலைவர் பதவிக்கு ஆண்,பெண் என இருபாலரும் போட்டியிடும் வகையில் அமையும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்து இருக்கும்போது, எதிர்பாராத‌ வகையில் அது மகளிருக்கு ஒதுக்கப்பட்டது.

என்னை நகராட்சி தலைவர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று ஊக்கம் கொடுத்த என் இனிய நண்பர்கள், வெளிநாடு வாழ் நண்பர்கள், MASA,NASA சமுக நல அமைப்புகல்,மனிதநேய மக்கள் கட்சி,தமுமுக, நிர்வாகிகள், உறுப்பின்ர்கள், அனைத்து தெரு நண்பர்கள்,சகோதர,சகோதரிகள், கீழக்கரை டைம்ஸ்,கீழக்கரை.இன் வலைதளங்கள் தினகரன் ,தினமணி போன்ற பத்திரிக்கைகள்,FACE BOOK மற்றும் தொலைபேசியின் மூலம் ஆதரவு தந்த அனைத்து உள்ளங்களுக்கும்,எனது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் தொடர்ந்து எப்போதும் உங்களுடன் நட்புள்ளத்தோடு இணைந்திருப்பேன் என்பதை தாழ்மையுடன் கூறுகிறேன்.

நகராட்சி தலைவராக‌ இருந்து தான் பொது சேவைகள் செய்ய வேண்டும் என்றில்லை என்ற எண்ணத்தை உடையவன் நான் எனவே எனது நல பணிகள் எப்போதும் போல் தொடரும் இன்ஷா அல்லாஹ்.. நாம் அனைவரும் சேர்ந்து நல்ல ஒரு பெண் சேர்மனை தேர்ந்தெடுத்து நமதூர் வளர்ச்சிக்காக பாடுபடுவோம், வளமான சுத்தமான, சுகாதாரமான கீழக்கரையாக மாற அனைவரும் உழைப்போம், துவா செய்வோம்..

அதிமுக சார்பில் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் வேட்பாளர் அறிவிப்பு



கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி தேர்தலில் தலைவர் வேட்பாளராக அதிமுக‌ சார்பில் போட்டியிட‌ ராபிய‌த்துல் காத‌ரியா என்ப‌வ‌ர் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.கிழ‌க்குத்தெருவை சேர்ந்த‌ இவரின் க‌ண‌வ‌ர் பெய‌ர் ரிஸ்வான்

தொடக்கத்திலேயே க‌ளையிழ‌ந்த‌ கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி தேர்த‌ல்!






கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் வேட்பாளராக போட்டியிட பலரும் ஆர்வத்துடன் பல் வேறு கட்சியிலும் விருப்ப மனுக்களை அளித்தனர்.ஆனால் கீழக்கரை நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அரசின் முடிவால் போட்டியிட ஆர்வத்துடன் இருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பல நாட்கள் முன்னதாகவே நமது இணையதளத்தில் கீழக்கரை நகராட்சி மகளிருக்கு ஒதுக்கப்பட உள்ளது என்ற செய்தியை தெரிவித்திருந்தோம்(http://keelakaraitimes.blogspot.com/2011/09/blog-post_7516.html) ஆனாலும் பல் வேறு பிரமுகர்கள் இச்செய்தி வதந்தி என்று மறுத்து வந்தனர். ஆனால் தற்போது அது உறுதியாகிவிட்டது.

கீழக்கரையில் மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கிய தேர்தல் பரபரப்பு தற்போது குறைந்து விட்டது.மகளிருக்கான நகராட்சி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததால் அனைத்து கட்சியினரும் உற்சாகமிழந்து காணப்படுகின்றனர்.எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம்,இப்திகார்,முஜீப் ,எம்.எம்.கே.காசிம் போன்ற இளைஞர்கள் போட்டியிட முன் வந்தது ஆரோக்கியமான துவக்கம் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர அதே போல் என்றுமில்லாத அளவில் இம்முறை ஏராள‌மான‌ இளைஞ‌ர்க‌ள் த‌மது ஆத‌ர‌வு வேட்பாள‌ர்க‌ளுக்காக‌ தேர்த‌ல் ப‌ணியில் ஈடுப‌ட‌ த‌யாராகியிருந்த‌ன‌ர். இநிலையில் பெண் ந‌க‌ராட்சி என்ற அறிவிப்பு வ‌ந்த‌தும் பலரும் உற்சாக‌மிழந்த‌ன‌ர்.


இது குறித்து அர‌சிய‌ல் க‌ட்சி பிரமுகர் ஒருவ‌ர் கூறுகையில் ,

க‌ட்சியின் மேலிட‌ த‌லைவ‌ர்களுக்கு கீழக்கரை மகளிருக்கான நகராட்சி என அறிவிக்கப்பட உள்ளது என்பது முன்னதாகவே தெரியும். ஆனாலும் விருப்ப மனுக்களை வாங்கினார்கள்.தெரிந்திருந்தும் வேட்பாளர்களாக போட்டியிட விரும்பியர்வர்களிடம் ஏன் ம‌னுக்க‌ளை வாங்கினார்க‌ள் என்று வாங்கியவர்கள்தான் ப‌தில் சொல்ல‌ வேண்டும் என்றார்.

கீழக்கரையில் பெண்கள் அதிகளவில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை இதனால் பெண் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது என அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

த‌ற்போது திமுக‌ த‌ர‌ப்பில் பெண் வேட்பாள‌ராக‌ போட்டியிட என்.எம்.டி. தெருவை சேர்ந்த தாஜீன்நிசா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் . இவர் பெண்கள் மதரசா நடத்தி வருகிறார்.
அதிமுக‌ சார்பில் எஸ்.ராபிய‌த்துல் காத‌ரியா என்ப‌வ‌ர் வேட்பாள‌ராக அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி ம‌களிருக்கு ஒதுக்க‌ப்ப‌ட்டால் போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ப்ப‌டும் என‌ கீழை ஜ‌மீல் அறிவித்திருந்தார் என்ப‌து குறிப்பிட‌த‌க்க‌து

Sunday, September 18, 2011

கீழக்கரை நகராட்சி தலைவர் ப‌த‌வி மகளிருக்கு ஒதுக்கீடு !

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நகர்மன்றங்களில் கீழக்கரைக்கான‌ தலைமை பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.

மாவட்டங்கள் வாரியான விபரம் வருமாறு (பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சிகள்)


ராமநாதபுரம் மாவட்டம்

கீழக்கரை

திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரம்
கடையநல்லூர்
தென்காசி
விகிரமசிங்கபுரம்

தூத்துக்குடி மாவட்டம்
காயல்பட்டினம்
கோவில்பட்டி


நாகை மாவட்டம்
வேதாரண்யம்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை

திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி
ஆரணி

விருதுநகர் மாவட்டம்
சாத்தூர்
விருதுநகர்
திருவில்லிபுத்தூர்
திருத்தங்கள்

கன்னியாகுமரி மாவட்டம்
குழித்துறை
நாகர்கோயில்
பத்மநாபபுரம்

திருப்பூர் மாவட்டம்
உடுமலைப்பேட்டை
தாராபுரம்

சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை
காரைக்குடி

கடலூர் மாவட்டம்
சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கி

ஈரோடு மாவட்டம்
கோபிசெட்டிப்பாளையம்

வேலூர் மாவட்டம்
ஆம்பூர்

ஜோலார்பேட்டை
குடியாத்தம்

தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர்
கும்பகோணம்

அரியலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டான்

திருவண்ணாமலை மாவட்டம்
திருவாதிபுரம்

திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி

திருச்சி மாவட்டம்
மணப்பாறை

தகவல்:
தினமணி (18-09-2011)

[செய்தி திருத்தப்பட்டது]

வெளிநாட்டில் பணிபுரிவோர் கீழக்கரையில் தொழில் செய்ய உதவி மையம் ! மாசா அமைப்பின் நிறுவனர் இப்திகார் (படங்கள்)








தமுமுக சார்பில் கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக போட்டியிட மாஸா சமூக நல அமைப்பின் நிறுவனர் இப்திகார் சென்னையில் உள்ள தமுமுக அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார்.இந்நிகழ்ச்சியில் செய்யது இப்ராகிம்,கலீல் ரஹ்மான்,ஹமீது சுல்தான்,கபீர்,அப்துல் ஒனி,நசீருதீன்,சித்தீக் ரஹ்மான்,சபீக்,ஆலிம் உள்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இப்திகார் நமது இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் ..


கேள்வி : கீழக்கரை நகராட்சி இம்முறை மகளிருக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறதே ?

இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வரவில்லை இது ஒரு வதந்தியே.

கேள்வி :கீழக்கரை நலனுக்கென்று என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள் ?

குப்பை இல்லாத சுத்தமான, சுகாதரமான கீழக்கரை, 5ஆண்டுகளில் மலேரியா என்ற சொல் கீழக்கரையில் இல்லாமல் செய்வது, பாதாள் சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற முழு முயற்சி, மின்சாரகட்டணம் செலுத்த வண்ணாந்துரை வரை சென்று அவதிபடும் நம்மூர் மக்களின் கஷ்டம் அறிவேன் எனவே கட்டண அலுவலகத்தை ஊருக்குள் கொண்டு வருவேன், அரசு திட்டங்கள் அனைத்தும் எல்லா தரப்பு மக்களுக்கும் சென்றடைய செய்வேன்.ஊருக்குள் தரமான சாலைகள் போடப்படும், பசுமையான,வளமான கீழக்கரை, ஊழல் இல்லாத நிர்வாகம் நடக்கும் , பழுதான‌ மின் விளக்குகள் சரி செய்யப்பட்டு தேவைப்படும் இடங்களில் புது விளக்குகள் பொருத்தப்படும்.

மிக‌ முக்கிய‌மாக‌ ந‌ம‌தூரை சேர்ந்த‌ பெரும்பாலானோர் வெளிநாடுக‌ளில் ப‌ணி புரிந்து வ‌ருகின்ற‌ன‌ர்.அவ‌ர்க‌ள் தாய‌க‌ம் திரும்பி தொழில் செய்ய‌ விரும்பினால் அவ‌ர்க‌ளுக்காக‌,கடனுதவி செய்வதற்கு தனியார் தொண்டு நிறுவனங்களிடமும், அரசாங்கத்தையும் அணுகி வெளிநாட்டிலிருந்து திரும்புவோருக்கு தொழில் கடன் உதவி மையம் மற்றும் தொழில் மையம் கீழக்கரையிலேயே ஏற்படுத்த முய‌ற்சி செய்வேன். இத‌ன் மூல‌ம் உள்ளூர் தொழில் வாய்ப்புக‌ள் பெருகும்.

கேள்வி :சமூக சேவையில் எத்தனை ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறீர்கள்?

பள்ளி பருவத்திலேயே ஜுனியர் ரோட்டரி கிளப் மெம்பராக கொடைக்கானலில் பணியாற்றியுள்ளேன், கல்லூரி வாழ்வில் புதுக்கல்லூரியில் மாணவர் பேரவை பொது செயலாளராக பணியாற்றியுள்ளேன், பள்ளி பருவதிலிருந்தே பொது சேவைகளில் ஈடுபாடு உண்டு. 12 ஆண்டுகளாக MASA என்றஅமைப்பை நிறுவி அதன் மூலம் பல்வேறு சமூக நல பணிகள் செய்து வருகிறோம்,


கேள்வி : வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பதினால் எளிய மக்களின் அடிப்படை பிரச்சினைகளை புரிந்து செயல்பட முடியாது என்று கூறப்படுகிறதே?

இதை நான் முற்றிலும் மறுக்கின்றேன், நான் வசதியான வீட்டு பிள்ளையாய் யாருக்கும் அடையாளம் தெரியாது, என்னை யாரும் எளிதாக சந்திக்கமுடியும், ஊரின் பிரச்சனைகள் அனைத்தும் நான் நன்கு அறிவேன், எனக்கு எனது ஊரின் சேவையில் அதிக ஈடு பாடு இருப்பதால் இந்த வாய்ப்பை பயன் படுத்தி இந்த கருத்து பொய் என்பதை நிருபிப்பேன்.
நகராட்சி தலைவர் என்பது பதவி என்பதை விட ஊர் மக்களின் நலனை பாதுகாக்கிற மிக பெரிய பொறுப்பு என்பதை நன்கு உணர்ந்துள்ளேன்.நகரின் ப‌ல‌ வேறு பெரிய‌வ‌ர்க‌ளும் அல‌ங்க‌ரித்த‌ த‌லைவ‌ர் என்ற இந்த‌ பொறுப்புக்கு எவ்வித‌ க‌ள‌ங்க‌மும் இல்லாம‌ல் செயல்‌டுவேன்.
தேர்த‌லுக்குத்தான் நான் புதிய‌வ‌ன் ந‌ம் ஊர் ம‌க்க‌ளுக்கு அல்ல‌ ஏனென்றால் ப‌ல்லாண்டு கால‌மாக‌ ம‌க்க‌ளுட‌ன் இணைந்து ப‌ல் வேறு ந‌ல‌ப்ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டுள்ளேன்.மேலும் நாம் செயல்படுத்தும் நலபணிகளை விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்துவ‌தில் என‌க்கு ஈடுபாடில்லை.

கேள்வி :உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது ?

எல்லாம் வல்ல இறைவனின் துணையோடும், எனது சேவையையும், எனது உழைப்பையும் நம்பி இந்த பொறுப்புக்கு போட்டியிட கேட்டுகொண்ட அனைத்து தெரு மக்களின் ஆதர‌வோடும் போட்டியிட உள்ளேன், வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.(இன்ஷா அல்லா)........ என்றார்