Tuesday, July 31, 2012

கீழக்கரையில் தாசிம் பீவி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி !



கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் கல்லூரி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் திருப்புல்லாணி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய உலக மக்கள் தொகை தின பேரணி அனைவருக்கும் கல்வி,சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு நலன்களை வலியுறுத்தி நடைபெற்றது.

இப்பேரணியை கல்லூரி முதல்வர் சுமையா தாவூது தலைமை வகித்து துவங்கி வைத்தார்.வைத்தார்.கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா முன்னிலை வகித்தார்.

குடும்பகட்டுப்பாடுத்துறை இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம்,டாக்டர் ராசிக்தீன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார்,செல்லக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட மாணவிகள் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

பேரணி தாசிம் பீவி கல்லூரியில் இருந்து தொடங்கி வள்ளல் சீதக்காதி சாலை வழியாக முக்கிய வீதிகளில் நடைபெற்றது.

பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,
இயற்கை வளம் மிகுந்த இந்தியாவில் மகாசக்தியாக விளங்கும் மனித சக்தியை அறிவியல் தொழில்நுட்பத்தோடு இணைத்து ஆக்க வழியில் ஈடுபடுத்தினால் சுமையாக கருதப்படும் மக்கள்தொகை சொத்தாக மாறும் என்றார்.

கீழக்கரை நக‌ர்நல இயக்கம் சார்பில் மாணவ,மாணவியருக்கு விலையில்லா சீருடை !



மாணவ, மாணவியருக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி!

கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த மஹ்தூமியா தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் விலையில்லா சீருடை வழங்கும் விழா நடைபெற் றது. இயக்கத்தின் தலைவர் செய்யது இபுராகிம் தலைமை வகித்தார். பள் ளியின் தாளாளர் மன்சூர் அலி, இயக்கத்தின் செயலா ளர் பசீர் அகமது, பொரு ளாளர் ஹாஜா அனீஸ், கிருஷ்ணமூர்த்தி, மக்கள் நல பாதுகாப்பு கழக பொருளா ளர் சாலிஹ் உசைன், பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் முகமது சேக்தம்பி, இயக்கத்தின் மகளிர் அணி சித்தி ஜரினா முன்னிலை வகித்தனர்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி பிரேமா வரவேற்றார். ஆலோசகர் பாரதி நன்றி கூறினார். இதில் 65க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் கமால்நாசர், விஜயன், பாரதி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிரசவம் உள்ளிட்ட மருத்துவ பணிகளுக்கு புதிய உபகரணங்களுடன் பெண் மருத்துவரும் நியமனம்!


ப‌ட‌ விள‌க்க‌ம்:- சென்ற‌ ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக்கு அமைச்ச‌ர் சுந்த‌ர்ராஜ‌ன் வ‌ருகை த‌ந்து ஆய்வு செய்தார்.அப்போது அளித்த‌ பேட்டியில் பெண் ம‌ருத்துவ‌ர் விரைவில் நிய‌மிக்க‌ப்ப‌டுவார் என‌ அறிவித்திருந்தார்.


கீழ‌க்கரை அரசு மருத்துவமனையில் க‌ட‌ந்த‌ ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ பெண் ம‌ருத்துவ‌ர் இல்லை என்ற‌ நிலை இருந்து வ‌ந்த‌து கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அத‌ன் சுற்று வ‌ட்டார‌ ப‌குதிக‌ளில் உள்ளோர் பிரசவம் உள்ளிட்டவைகளுக்கு ராம‌நாத‌புர‌ம் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னை சென்று சிகிச்சை பெறும் சூழ்நிலை நில‌விய‌து.

இத‌னால் நீண்ட‌கால‌மாக‌ பெண் டாக்ட‌ர் நிய‌மிக்க‌ வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வ‌ந்த‌ன‌ர்.பல்வேறு தரப்பினரும் இதற்காக முயற்சியை மேற்கொண்டு வந்தனர்.இந்த‌ கோரிக்கையை ஏற்ற‌ அதிமுக‌ அர‌சு கீழ‌க்க‌ரைக்கு பெண் டாக்ட‌ரை நிய‌மித்துள்ளத்து.இத‌ன் இப்ப‌குதியில் உள்ள‌ தாய்மார்கள் கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் பிரச‌வ‌த்திற்கான‌ சிகிச்சையை பெற்று கொள்ள‌ வ‌ச‌தி ஏற்ப‌ட்டுள்ள‌து.


இது குறித்து கீழ‌க்க‌ரை அர‌சு த‌லைமை ம‌ருத்துவ‌ர் ராஜ்மோக‌ன் கூறிய‌தாவ‌து,

கீழ‌க்க‌ரை ம‌க்க‌ளின் ந‌ல‌னை க‌ருத்தில் கொண்டு த‌ற்போதைய‌ அர‌சான‌து பிர‌ச‌வ‌ம் பார்ப்ப‌த‌ற்கு தேவையான‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ள்(ஸ்கேன்) உள்ப‌ட‌ அனைத்தையும் கீழ‌க்க‌ரை ம‌ருத்துவ‌ம‌னைக்கு வ‌ழ‌ங்கிய‌துட‌ன் பெண் ம‌ருத்துவ‌ர்(முத்தமிழ‌ர‌சி) ஒருவ‌ரையும் நிய‌ம‌ன‌ம் செய்துள்ள‌து.மேலும் குழ‌ந்தைக‌ள் ம‌ருத்துவ‌ர்க‌ள் இருவ‌ரை நிய‌ம‌ன‌ம் செய்துள்ள‌து.

கீழ‌க்க‌ரை,மாய‌குள‌ம்,ஏர்வாடி,காஞ்சிர‌ங்குடி உள்ளிட்ட‌ பகுதிகளை சேர்ந்த‌ ம‌க்க‌ளில் தேவையான‌வ‌ர் இங்குள்ள‌ ம‌ருத்துவ‌ வ‌ச‌திக‌ளை ப‌ய‌ன் ப‌டுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.மேலும் பிர‌ச‌வ‌த்திற்கு அவ‌ச‌ர‌ உத‌விக்கு 04567 - 244551 என்ற‌ எண்னில் தொட‌ர்பு கொள்ளலாம் என்றார். பேட்டியின் போது ம‌ருத்துவ‌ர்க‌ள் அசின்,ஜ‌வாஹிர் ஹுசைன்,முத்த‌மிழ‌ர‌சி ஆகியோர் உட‌னிருந்த‌ன‌ர்.

ஜனவரி மாதம் அமைச்சர் சுந்தர்ராஜன் கீழக்கரை அரசு மருத்துவமனை வந்திருந்த போது விரைவில் பெண் மருத்துவர் நியமிக்கபடுவார் என அறிவித்தார் அதன் படி நியமனம் செய்யப்படுள்ளது குறிப்பிடதக்கது பார்க்க செய்தி :-http://keelakaraitimes.blogspot.com/2012/01/blog-post_10.html
நீண்ட கால கோரிக்கையான பெண் ம‌ருத்துவ‌ நியமன‌த்திற்க்காக‌ முய‌ற்சித்த‌ அனைவ‌ருக்கும் நியமனம் செய்த‌ த‌மிழ‌க‌ அர‌சிற்கும் பொதும‌க்க‌ள் சார்பில் சமூக ஆர்வலர் நெய்னார் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்த‌ன‌ர்.

Monday, July 30, 2012

நகராட்சி தலைவர்,கலெக்டர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக‌ இடி மின்னல் ஹாஜா,முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட பல‌ கவுன்சிலர்கள் சார்பில் போஸ்டர்!



நகராட்சி தலைவர்,மாவட்ட கலெக்டர்,நகராட்சிகளின் மண்டல இயக்குநர் உள்ளிட்ட பலருக்கு, ஊழலை த‌டுத்த‌த‌ற்கு நன்றி என‌ தெரிவித்து 5(சாகுல் ஹமீது),6(தங்க ராஜ்),7(அன்வர் அலி),8(செய்யது கருணை),18(முகைதீன் இப்ராகிம்),19(அரூசியா பேகம்),20(ஹாஜா நஜிமுதீன்),21(ஜெயபிரகாஷ்) வார்டு கவுன்சிலர் சார்பாக என்று அச்சிடப்பட்டு நகர் முழுவதும் ஏராளமான‌ போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

செய்தி எதிரொலி!கீழக்கரையில் போலீசார் வாகன சோதனை!நோ பார்கிங்கில் நிறுத்த‌ப்ப‌ட்ட‌ வாக‌ன‌ங்களுக்கு "வீல் லாக்"!


பட விளக்கம்:-கீழ‌க்க‌ரை வாக‌ன‌ம் நிறுத்த‌ த‌டை செய்ய‌ப்ப‌ட்ட "நோ பார்க்கிங்" பகுதியான‌ வள்ளல் சீதக்காதி சாலையில் நிறுத்த‌ப்ப‌ட்டிருந்த‌ வாக‌ன‌த்தை போலீசார் "வீல் லாக்' செய்த‌ன‌ர்


கீழ‌க்க‌ரையில் பள்ளிக்கு இயக்கப்படும் தனியார் வாக‌னங்கள், வாடகைக்கு இயக்க அனுமதி இல்லாமலும் , ஒட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட‌ பல் வேறு குற்றச்சாட்டுகள் நிலவுவதாக செய்திகள் வெளியானது.இதை தொட‌ர்ந்து கீழ‌க்க‌ரை இன்ஸ்பெக்ட‌ர் இள‌ங்கோவன் உத்தரவின் பேரில் இன்று காலை திடீர் வாக‌ன‌ சோத‌னை ந‌டைபெற்ற‌து. இதில் 6 ஆம்னி வேன்கள் முறையான அனுமதி இல்லாமல் மாத வாடகை அடிப்படையில் ப‌ள்ளி குழ‌ந்தைக‌ளை ஏற்றி சென்றதால் அவர்கள் மீது வ‌ழ‌க்கு ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.

இது குறித்து ச‌ப் இன்ஸ்பெக்ட‌ர் கார்மேக‌ம் கூறுகையில் ,
இன்று சோத‌னையை தொட‌ங்கியுள்ளோம். இது தொட‌ரும்.. மேலும் வாகனம் வைத்திருப்போர் அனைவரும் முறையான‌ ஆவ‌ன‌ங்களை வாகனத்தில் வைத்திருக்க‌ வேண்டும்.மேலும் நோ பார்க்கிங் ஏரியாவில் வாக‌ன‌ங்க‌ள் நிறுத்த‌ கூடாது மீறி நிறுத்தினால் வீல் லாக் செய்ய‌ப்ப‌டும் என்றார்

கீழக்கரைக்கு தனி கமிஷனர் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற‌ அமைச்சரை சந்தித்த நகராட்சி தலைவர்!



கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா சென்னை சென்று உள்ளாட்சி துறை அமைச்ச‌ர் முனுசாமி ம‌ற்றும் உய‌ர் அதிகாரிக‌ளை ச‌ந்தித்து கீழ‌க்க‌ரைக்கு த‌னி க‌மிஷ‌னர் நியமனம் உள்ளிட்ட‌ கீழ‌க்க‌ரை ந‌ல‌ன் தொடர்பாக‌ ப‌ல்வேறு கோரிக்கைக‌ளை செய‌ல்ப‌டுத்துமாறு வ‌லியுறுத்தினார்.

விரைவில் க‌மிஷ‌ன‌ர் நிய‌மிக்க‌ப‌டுவார் என்றும் ப‌ல்வேறு கோரிக்கைக‌ளும் உரிய‌ வ‌கையில் நிறைவேற்ற‌ப்ப‌டும் என்று ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் உறுதிய‌ளித்த‌ன‌ர்.




கீழக்கரையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் !நகராட்சி கமிஷனர் நடவடிக்கை!


நகராட்சி கமிஷனர்(பொறுப்பு) முஜிபுர் ரஹ்மான்
பைல்(பழைய) படம்

கீழக்கரையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சி கமிஷனர்(பொறுப்பு) முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நேற்று கீழக்கரையில் சோதனை நடத்தப்பட்டது.

முஸ்லிம் பஜார், வள்ளல் சீதக்காதி சாலை,இந்து பஜார், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் 28 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்ததோடு தொடர்ந்து விற்பனை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள் மனோகரன்,முருகன், அலுவலர் கார்த்திக் உடன் சென்றனர்.

கீழக்கரை ச‌த‌க் க‌ல்லூரி பேராசிரியர் ஆய்விற்கு ரூ25 லட்சத்து 75ஆயிரம் பெற்று சாதனை !


கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியராக பணி புரியும் ராஜாவுக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆய்விற்காக மானிய தொகை ரூ25 லட்சத்து 75 ஆயிரம் வழங்கியது.

சுயநிதி கல்லூரி பேராசிரியர் ஒருவர் மிகப்பெரிய தொகை பெறுவது சாதனையாக கருதப்படுகிறது.சாதனை படைத்த‌ அவருக்கு கல்லூரியில் பாராட்டுவிழா நடைபெற்றது.

க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முக‌ம்ம‌து ஜ‌காப‌ர் த‌லைமை வ‌கித்தார்.முக‌ம்ம‌து ச‌த‌க் அற‌க்க‌ட்ட‌ளை த‌லைவ‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர்,க‌ல்லூரி தாளாள‌ர் யூசுப் சாகிப்,இய‌க்குந‌ர் ஹ‌பீப் முக‌ம்ம‌து ச‌த‌க்க‌த்துல்லா ஆகியோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர். க‌ல்லூரி முத‌ல்வ‌ர் கூறிய‌தாவ‌து, இந்த‌ மானிய‌ தொகை பின் விளைவு அற்ற‌ புற்று எதிர்ப்பு ஆய்வுக்காக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் என்றார்

Sunday, July 29, 2012

கீழக்கரையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் தனியார் வாகனங்களை ஆய்வு செய்ய கோரிக்கை!



www.keelakaraitimes.com

சென்னையில் பள்ளி சிறுமி ஸ்ருதி பள்ளி வாகன ஓட்டையிலிருந்து விழுந்து உயிரழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ப‌ள்ளி வாக‌ன‌ங்க‌ளை ம‌ட்டுமே ஆய்வு செய்ய‌ப்ப‌டும் நிலையில் கீழ‌க்க‌ரையில் ப‌ள்ளி வாக‌ன‌ங்க‌ளை விட‌ த‌னியார் வாட‌கை வாக‌ன‌ங்க‌ள் தான் குழ‌ந்தைக‌ளை அதிக‌ அளவில் ப‌ள்ளிக்கு அழைத்து செல்கின்ற‌ன‌ர்.என‌வே த‌னியார் வாக‌ன‌ங்களையும் ஆய்வு செய்ய‌ வேண்டும் என்று கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

இது குறித்து கீழ‌க்கரையை சேர்ந்த‌ ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர் முச‌ம்மில் கூறுகையில்,

கீழ‌க்க‌ரையில் அதிக‌ அளவில் ஆம்னி வாக‌ன‌ங்க‌ளில் ப‌ள்ளி குழ‌ந்தைகளை மாத வாடகை அடிப்படையில் அழைத்து செல்கின்ற‌ன‌ர்.இவ‌ற்றில் ப‌ல வாடகைக்கு இயக்க முறையான‌ அனுமதி பெறவில்லை மேலும் சில‌ருக்கு இதில் ஓட்டுந‌ர் லைசென்ஸ் இல்லை.கூடுதல் வாடகைக்க்காக அதிக அளவில் ப‌ள்ளி குழ‌ந்தைக‌ளை புளி மூட்டை போல் அடைத்து ஏற்றி செல்கின்ற‌னர்.புத்தக பைகளை அதிக அளவில் மேற்கூரையில் ஏற்றுவதால் வளைவுகளில் கவிழும் ஆபத்து உள்ளது மேலும் தெருக்க‌ளிலும்,வ‌ளைவுக‌ளிலும் அசுர‌ வேக‌த்தில் செல‌வதால் அடிக்க‌டி சிறு சிறு விப‌த்துக‌ளும் ஏற்ப‌டுகின்ற‌ன‌.என‌வே அரசு அதிகாரிகள் ப‌ள்ளி வாக‌ன‌ங்க‌ளை ம‌ட்டும் ஆய்வு செய்வ‌தோடு நிறுத்தி விடாம‌ல் த‌னியார் வாக‌ன‌ங்க‌ளையும் ஆய்வு செய்ய‌ வேண்டும். ப‌ள்ளி நாட்க‌ளில் காலை 7.30 ம‌ணியிலிருந்து 9.00 ம‌ணி வ‌ரை அதிகாரிக‌ள் ப‌ல‌ குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்

Saturday, July 28, 2012

குப்பைகிடங்கு பணி தரமில்லை! மழைக்கு அழிந்து விடும்!கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு! நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி தலைவர் தரப்பில் பதில்!






பட விளக்கம்:குப்பை கிடங்கு கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் 'ஹாலோ பிளாக்" சிமெண்ட் கல் தர‌மற்ற முறையில் எளிதில் உடைய கூடியதாக உள்ளதாக சுட்டிகாட்டுகின்றனர்.

ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ நீடித்து வ‌ரும் கீழக்கரை குப்பை கிட‌ங்கு க‌ட்டுமான‌ ப‌ணி பல்வேறு இடையூறுகளை தாண்டி த‌ற்போது வேக‌மாக ந‌டைபெற்று வ‌ருகிற‌து.க‌ட்டுமான‌ ப‌ணி நிறைவ‌டைந்தால் கீழ‌க்க‌ரை குப்பை பிர‌ச்ச‌னை சீர் செய்ய‌ப்ப‌டும் என‌ ந‌ம்ப‌ப்ப‌டுகிற‌து.


இந்நிலையில் குப்பை கிட‌ங்கு ப‌ணி த‌ர‌ம‌ற்று ந‌டைபெறுவ‌தாக‌ நகர் மன்ற கவுன்சிலர்கள் ஜெயப்பிரகாஷ், இடி மின்னல் ஹாஜா, சாகுல் ஹமீது, முகைதீன் இபுறாகீம், பாவா கருணை, அன்வர் அலி, தங்கராஜ் ஆகியோர் த‌ர‌ப்பில் குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌டுகிற‌து.

ப‌ணி ந‌டைபெறும் இட‌த்திற்கு நேரில் சென்ற இக்க‌வுன்சில‌ர்க‌ள் க‌ட்டுமான‌ ப‌ணியை ஆய்வு செய்த‌ பின்ன‌ர் மிக‌ மோச‌மாக‌ த‌ர‌ம‌ற்ற‌ ப‌ணிக‌ள் ந‌டைபெறுவ‌தாக‌ குறிப்பிட்ட‌ன‌ர்.

இது குறித்து இடிமின்ன‌ல் ஹாஜா ம‌ற்றும் முகைதீன் இப்ராகிம் கூறுகையில்,

70 ல‌ட்ச‌ம் ம‌திப்புள்ள‌ இப்ப‌ணி மிக‌ மோச‌மாக‌ ந‌டைபெறுகிற‌து. சுவ‌ர் அமைக்கும் ப‌ணி,குப்பைக‌ளை பிரிக்க‌ மேடை அமைக்கும் ப‌ணி உள்ளிட்ட‌ அனைத்து ப‌ணிக‌ளும் த‌ர‌ம‌ற்ற‌வையாக‌ உள்ள‌து.

க‌ட்டுமான‌ ப‌ணிக்கு ப‌ய‌ன் ப‌டுத்த‌ப்ப‌டும் ஹாலோ பிளாக் சிமெண்ட் க‌ல் செங்க‌ளை விட‌ த‌ர‌ம் குறைந்த‌வையாக‌ உள்ள‌து. 5வ‌து வார்டு க‌வுன்சில‌ர் சாகுல் ஹ‌மீது கை வைத்து லேசாக‌ த‌ட்டி சோத‌னை செய்யும் போதே உடைந்து விட்ட‌து

ஒப்ப‌ந்தப்ப‌டி ஆற்றும‌ண் க‌ல‌ந்து செய்ய‌ வேண்டிய‌ சிமெண்ட் க‌ல‌வைக்கு குறுத்த‌ ம‌ண் க‌ல‌க்க‌ப்ப‌டுகிற‌து.

12mm கட்டுமான முறுக்கு கம்பிகள் உபயோக்கிக்க வேண்டிய இடத்தில் 8mm உபயோகப்படுத்தப்படுள்ளது.

குறைபாடுகளை அடுக்கி கொண்டே போக‌லாம்.இது போன்ற போலி கட்டுமானம் பலமாக காற்றடித்தாலே நிச்சயம் இடிந்து விழுந்து விடும் பலத்த மழை பெய்தால் கரைந்து விடுமோ என்று என்னும் அளவுக்கு உள்ளது .ப‌ல‌ குறைபாடுக‌ளுட‌ன் ந‌டைபெறும் இப்ப‌ணியை க‌ண்காணித்து த‌ர‌மாக‌ ந‌டைபெற‌ ஏற்பாடு செய்ய‌ வேண்டும். சிறப்பாக செய்யப்பட வேண்டிய இந்த குப்பை கிடங்கு பணியை இது போன்று குறைபாடுகளுடன் கட்டுமான பணியை நடைமுறைப்படுத்துவவ்து மனதுக்கு வேதனையளிக்கிறது .குறை சொல்வ‌து எங்க‌ள் நோக்க‌ம‌ல்ல‌ ம‌க்க‌ள் ப‌ண‌த்தை வீண‌டிக்க‌ கூடாது என்ப‌தே எங்க‌ள் விருப்ப‌ம்... இவ்வாறு அவ‌ர்க‌ள் கூறின‌ர்.


இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா தரப்பில் கேட்டபோது ,

கீழ‌க்கரையின் குப்பை பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அமைக்கப்படும் இந்த‌ உர‌கிட‌ங்கு ப‌ணியை வேகமாக‌ முடிக்க‌ ப‌ணிக‌ள் முடிக்கிவிட‌ப்ப‌ட்டுள்ள‌து. பல்வேறு இடையூறுகளை மீறி இப்போதுதான் பணிகள் நிறைவடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்த சமயத்தில் குப்பை கிடங்கு பணி நிறைவைடைய அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டி கேட்டு கொள்கிறேன்.பணிகள் தரமாகத்தான் நடைபெறுகிறது. க‌வுன்சில‌ர்க‌ளின் குற்றச்சாட்டு குறித்து உண்மை நிலையை ஆராய்ந்து நட‌வ‌டிக்கை எடுக்க‌ப்படும் என்றார்.


விரைவில் குப்பை கிடங்கு பணி தரமான முறையில் நிறைவடைந்து கீழக்கரையின் குப்பை பிரச்சனைக்கு நிரந்த தீர்வு வேண்டும் என்பதே கீழக்கரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நகரில் சுற்றி திரியும் பன்றிகளால் சுகாதாரகேடு !நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!



கீழக்கரையில் மீண்டும் பன்றிகள் பெருகி வருவதாகவும்.நீண்ட காலத்துக்கு பிறகு மீண்டும் அதிகரித்துள்ள பன்றிகளால் சுகாதாரகேடு அதிகரிக்கும் எனவே உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் நகர் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்,

“கடந்த சில வருடங்களுக்கு முன் இதே போல் பன்றி களின் நடமாட்டம் அதிகளவு இருந்தது.

தொடர் புகார்களையடுத்து, அப்போதைய நகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் பன்றி வளர்த்தோர், கீழக்கரையில் இருந்து வெளியே கொண்டு சென்றனர். தற்போது மீண்டும் பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே கீழக்கரையில் மலேரியா, டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல்கள் வந்து பெரும்பாலான மக்கள் அவதிபட்டு வருகின்ற சூழலில், பன்றிகள் வரவு கதிகலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரில் இப்போது 50 முதல் 70 பன்றிகள் வரை சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் முன், அதிகாரிகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றார்.

விரைவில் ராம‌நாத‌புர‌ம் மாவட்ட காவல்துறையில் சைப‌ர் கிரைம் பிரிவு துவ‌க்க‌ம்!


photo:- the hindu
படம் : திருச்சியில் கடந்த‌ பிப்ர‌வ‌ரி மாத‌ம் சைப‌ர் கிரைம் பிரிவை கமிசனர் சைலேஷ்குமார் துவ‌க்கி வைத்தார்


தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சைபர்கிரைம் பிரிவு விரைவில் துவக்கப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு சென்னையில் முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.

வளர்ந்து வரும் அறிவியல் யுகத்தில் குற்றங்களும் ஹைடெக் முறையில் அதிகரித்து வருகின்றன. போலீசாருக்கு சவாலாக விளங்கும் திருடர்கள் நவீன யுக்திகளை பயன்படுத்தி தினமும் புதுப்புது மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் போலி கிரடிட்கார்டு மோசடி, ஆன்லைன் மூலம் வங்கி கணக்குகளின் பாஸ்வேர்டுகளை திருடி பண மோசடி, பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் இணையதள குற்றங்கள்,சமூக இனையதளம் மூலம் மிரட்டல்கள், அரசின் உயர்பதவியில் இருப்பவர்களுக்கு கொலைமிரட்டல் உள்ளிட்ட கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட குற்றங்கள் பெருகி வருகின்றன.

இவற்றை தடுப்பதற்காக சென்னை மற்றும் மண்டல அளவிலான போலீஸ் தலைமையகங்களில் சைபர் கிரைம் பிரிவுகள் செயல்படுகின்றன. தற்போது மாநிலம் முழுவதும் இவ்வகையான குற்றங்கள் பெருகி வருவதால் இவற்றை தடுப்பது குறித்து மாநில அரசு, உள்துறை, போலீஸ் துறையினர் ஆலோசனை நடத்தினர். இதில் சைபர் கிரைம் பிரிவுகளை மாவட்ட அளவில் துவக்கிட முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சைபர் கிரைம் பிரிவை மாவட்ட தலைமை அலுவலகமான எஸ்பி அலுவலகத்தில் துவங்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் உள்ள போலீசாரில் பட்டம் பெற்ற, கம்ப்யூட்டரில் சிறப்பு படிப்புகள் படித்து அனுபவம் உள்ளவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன. சைபர் கிரைம் பிரிவிற்கு வரவிரும்பியவர்களுக்கு கடந்த வாரம் தேர்வு நடந்தது.

மாவட்டத்தில் ஒரு எஸ்ஐ, மூன்று போலீசார் வீதம் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட போலீசார் நேற்று பயிற்சிக்காக சென்னை சென்றுள்ளனர்.

சைபர் கிரைம் பிரிவு மூத்த அதிகாரிகள் முன்னிலையில் முதற்கட்டமாக மூன்று நாட்கள் பயிற்சிபெற உள்ளனர்’, என்றார். இதன் படி விரைவில் ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் இதன் பிரிவு துவ‌க்கப்படும் என்று தெரிகிறது.

Friday, July 27, 2012

கீழக்கரையில் 12ஆண்டுகளாக தொடரும் ராதகிருஸ்ணின் ரமலான் மாத நோன்பு !



ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், லேத் பட்டறை நடத்தி வரும்
தங்கம் ராதாகிருஷ்ணன், 12 ஆண்டுகளாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து வருகிறார். கீழக்கரையை சேர்ந்தவர் தங்கம் ராதாகிருஷ்ணன்(65). இவர், தபால் அலுவலக‌ தெருவில் சீனியப்பா ஹோட்டல் அருகில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஆறு பிள்ளைகள் உள்ளனர். சமூக நல சேவை இயக்கத்தின் செயலாளராக பணியாற்றி வரும் இவர் பல்வேறு நலப்பணிகளை ஆற்றி வருகிறார்.

இவர் கூறியதாவது:
நண்பர் ஒருவரிடம் கடந்த 2000ல் ரமலான் நோன்பு கடைபிடிப்பது தொடர்பாக போட்டி ஏற்பட்டது.போட்டிக்காக‌ அந்த ஆண்டு நோன்பு நூற்றேன்.மனதளவில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது அதன் பின் கடந்த 12 ஆண்டுகளாக‌ தொடர்ந்து ஆண்டுதோறும் முழுமையாக நோன்பு கடை பிடித்து வருகிறேன். இதற்காக அதிகாலையில், எனக்காக எனது மனைவி உணவு தயார் செய்து தருகிறார். எனது பட்டறையில், முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து நோன்பு திறந்து வருகிறேன்.நோன்பு இருப்பதால் அதன் மகிமையை என்னால் உணர முடிகிறது. இதில் மன திருப்தி ஏற்படுகிறது .உடல் ஆரோக்கியம் பெறுகிறது.இம்மாதம் நோன்பு நோற்கும் அனைத்து இஸ்லாமியா சகோதரர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த நல்ல இப்ராகிம் என்பவர் கூறுகையில் ,த‌ங‌க‌ம் ராதாகிருஸ்ண‌ன் ப‌ல‌ ஆண்டு காலமாக அனைத்து ச‌மூக‌ ம‌க்க‌ளிட‌மும் ச‌கோத‌ர‌ பாச‌த்துட‌ன் ப‌ழ‌குப‌வ‌ர். மத நல்லிணக்கத்துக்காக பாடுபடுபவர் என்றார்

Thursday, July 26, 2012

கீழக்கரை முக்கிய சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை!



பள்ளி வாகனங்கள் அடிக்கடி சென்று வரும் கீழக்கரை மூன்று சாலை சந்திப்பில் இருந்த வேகத்தடை அகற்றப்பட்டதால் விபத்துகள் நடைபெற வாய்ப்புள்ளது எனவே உடனடியாக மீண்டும் இங்கு வேகத்தடை அமைக்கவேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கீழக்கரையில், வள்ளல் சீதக்காதி சாலை மூன்று சந்திப்பில், பேட்டைத்தெரு முதல் சொக்கநாதர் கோயில் வரை கடந்த திமுக ஆட்சியில் தார் சாலை அமைக்கப்பட்டது. அப்போது மூன்று சந்திப்பில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்றதால், அந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டு விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது. தற்போது, புதிதாக அந்த இடத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

புதிய சாலை அமைக்கும் போது, அந்த இடத்தில் வேகத்தடை அமைக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். ஆனாலும், வேகத்தடை இல்லாமலே சாலை அமைக்கப்பட்டு விட்டது. இதனால் விபத்து எப்போ தும் நடக்கும் சூழ்நிலையில் உள்ளது. சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. ஆகவே இந்த இடத்தில் மீண்டும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் செய்யது இபுராகிம் கூறுகையில்,

“கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை சந்திப்பில் உள்ள பேட்டைதெரு அருகே தனியார் தொடக்கப்பள்ளி உள்ளது. மேலும் அதன் வழியாக உயர்நிலைப்பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் அடிக்கடி சென்று வரும். மூன்று சாலைகள் சந்திக்கும் இந்த இடத்தில் வேகத்தடை இல்லாததால் பள்ளி குழந்தைகள் விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது. பேட்டை தெருவில் இருந்து மெயின் சாலைக்கு செல்லும் வாகனங்களும் வேகமாக செல்வதால் மெயின் சாலையில் வரும் பஸ்சில் மோதி விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்க உத்தரவிடவேண்டும் என கலெக்டருக்கு மனு அளித்துள்ளோம்என்றார்.


பள்ளி வாகனங்கள், சைக்கிள்கள், பைக்குகள் அடிக்கடி சென்று வரும் கீழக்கரை மூன்று சாலை சந்திப்பு இது. புதிதாக சாலை அமைத்தபோது, இங்கிருந்த வேகத்தடை அகற்றப்பட்டு விட்டது. இதனால் சிறு, சிறு விபத்துகள் நடக்கின்றன. உடனடியாக வேகத்தடை அமைத்தால் மக்களுக்கு நல்லது.

கீழக்கரை திருட்டு வழக்கில் சிக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது !


பட விளக்கம் :- கீழக்கரை மேலத்தெருவில் (2011ல் )திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு சேக் அலாவுதீன் கைது செய்யப்பட்ட போது எடுத்த படம் !பழைய(பைல்) படம்


சேக் அலாவுதீன் (26 ) மாயகுளத்தை சேர்ந்தவர் இவர் கீழக்கரை மேலத்தெருவில் 2011ல் ஜனவரி மாதத்தில் நடைபெற்ற திருட்டிலும் மற்றும் தொடர்ந்து 2012 ஜனவரி மாதத்தில் மீண்டும் மேலத்தெருவில் நடந்த திருட்டிலும் தொடர்பு இருப்பதாக‌ போலீசாரால் கைது செய்யப்பட்டார் லட்சக்கணக்கணக்கில் மதிப்புள்ள நகைகளும் மீட்டகப்பட்டது

இந்நிலையில் இவர் கடந்த ஜூன் 13ல் புதுமடத்தில் 33 பவுன் நகைகள் உட்பட பணம் பொருட்களை திருடிச் சென்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,காளிராஜ் மகேஷ்குமார் பரிந்துரை @பரில் கலெக்டர் நந்தகுமார் உத்தரவுப்படி, நேற்று சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த சேக் அலாவுதீனை கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Wednesday, July 25, 2012

மனைக்காக அழிக்கப்படும் பனை!ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகிறது!



பட விளக்கம்:-கீழக்கரை அருகே தில்லையேந்தல் பகுதியிலிருந்து வெளிமாநிலத்துக்கு கொண்டு செல்லப்படும் வெட்டப்பட்ட பனை மரங்கள்! வெட்டிய மரங்களை ஏற்றி செல்லும் லாரியில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் "பனைசெல்வம்" என்பது குறிப்பிடதக்கது.

கீழக்கரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பனந்தோப்புகள் வெகு வேகமாக காணாமல் போய் கொண்டிருக்கின்றன. பிளாட்டுகள் போடுவதற்காகவும், செங்கல் சூளைக்கு எரிபொருளாக விற்பனை செய்வதற்காகவும் பனை மரங்கள் வெகு வேகமாக வெட்டி அழிக்கப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ஏர்வாடி, உச்சிப்புளி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மற்றும் பனைமர தோப்புகள் அதிக அளவில் உள்ளன. கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் காற்றாலை மின் இயந்திரங்கள் அமைப்பதற்காக ஏராளமான தென்னை மற்றும் பனைமர தோப்புகள் வெளிமாவட்ட தொழிலதிபர்களால் அதிக விலை கொடுத்து இப்பகுதிகளில் வாங்கப்பட்டன. பின்னர் தோப்புகள் அழிக்கப்பட்டு காற்றாலை இயந்திரங்கள் அமைக்கப்பட்டன.

இப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வளர்ந்துள்ள பனைமர தோப்புகள் பிளாட் விற்பனைக்காக அழிக்கப்பட்டு வருகின்றன. கான்கீரிட் வீடுகள் அதிகளவில் கட்டப்படுவதால் குடிசை வீடுகளும் குறைந்து வருகின்றன. “பனை மரத்தோப்புகளில் இருந்து கிடைக்கும் வருமானம், உரம் மற்றும் பராமரிப்பு செலவுக்கே சரியாகி விடுவதால் இந்தத் தொழில் நலிவடைந்து வருகிறது. அதிகம் செலவு பிடிப்பதால் பலரும் தோப்புகளை விற்றுவிட்டு புதிய சூழலுக்கேற்ப வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர்,” என தோப்பு உரிமையாளர்கள் தங்கள் செயலை நியாயப்படுத்துகின்றனர்.

பிளாட்டுகளுக் காக அழிப்பது தவிர, செங்கல் சூளைகளுக்காகவும், பனை மரங்கள் வெட்டப்பட்டு, வெறும் ரூ.2 ஆயிரத்திற்கு விற்கப்படும் அவலம் நடக்கிறது. பனை மரங்களின் விளைபொருட்களை விற்பதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் அரசு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே அழிந்து கொண்டிருக்கும் பனைமரங்களை காப்பாற்ற முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

“இந்தியாவில் சுமார் 8 கோடி பனைமரங்கள் உள்ளன. இதில் 5 கோடி பனைமரங்கள் தமிழகத்தில் உள் ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 லட்சத்திற்கும் மேற் பட்ட பனைமரங்கள் இருக்கின்றன. வெறும், 20 லட்சம் பனைமரங்கள் மட்டுமே வைத்திருக்கும் தாய்லாந்து நாடு, பனைப்பொருள் ஏற்றுமதியில் தலைசிறந்து விளங்கும் போது 5 கோடிக்கும் அதிகமான பனைமரங்கள் இருக்கும் தமிழகம், நிச்சயம் பனைப்பொருள் ஏற்றுமதியில் லாபம் அள்ளமுடியும். ஆகவே, பனைப்பொருட்கள் விற்பதற்கும், ஏற்றுமதி செய்யவும் அரசு நடவடிக்கைகளை துவக்கவேண்டும்,” என தெரிவிக்கின்றனர்.

Tuesday, July 24, 2012

"குப்பைக்கு குட்பை" சொல்ல களமிறங்கிய கைராத்துல் ஜலாலியா பள்ளி மாணவிகள் !



கீழக்கரை கிழக்குத்தெரு கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியின் சார்பில் சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதார சீர்கேட்டை அகற்றவும் வலியுறுத்தி பேரணி மற்றும் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.இதில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.இப்பேரணிக்கு பள்ளியின் தாளாளர் சாதிக் தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியர் முகம்மது மீரா முன்னிலை வகித்தார்.

"விடுத‌லை/விடுத‌லை/நோயிலிருந்து விடுத‌லை " 'குப்பைக்கு குட்பை கொடுப்போம்" "குப்பைக‌ரையாகும் கீழ‌க்க‌ரையை மீட்போம்"

உள்ளிட்ட‌ ப‌ல்வேறு வாச‌க‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ப‌தாகைக‌ளை ஏந்திய‌ மாண‌விக‌ள் ஊர்வ‌ல‌மாக‌ சென்றதோடு முக்கிய‌ இட‌ங்க‌ளில் தெருமுனை பிர‌ச்சார‌ம் செய்த‌ன‌ர். செல்லும் வழியிலுள்ள‌ வீடுக‌ளில் சுகாதார‌ம் குறித்த‌ விழிப்புண‌வு க‌ருத்துகளை விள‌க்கி கூறின‌ர்

இதில் ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ள் ப‌த்மாவ‌தி,சாபிரா பேக‌ம்,ரேனுகா தேவி, ப‌ர‌மேஸ்வ‌ரி,ஆர்த்தி, ம‌ற்றும் அலுவ‌ல‌ர் அபுதாகிர் உள்ளிட்ட‌ பல‌ர் உட‌ன் சென்ற‌ன‌ர்.

கீழக்கரையில் பாமாயில் சப்ளை இல்லை !கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக தலைவர் கோரிக்கை!



கீழக்கரை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த இரண்டு மாதங்களாக பாமா யில் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக பாமாயில் விநியோகம் தேவை என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக தலைவர் தமீம்தீன் கூறுகையில், “கீழக்கரையில் கடந்த இரண்டு மாதங்களாக பாமாயில் சப்ளை செய்யாமல் இருந்தனர். தற்போது (ரமலான்) நோன்பு மாதம் நடக்கிறது. முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளதால், இந்த மாதமாவது பாமாயில் கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றார்.

இதுகுறித்து நியாயவிலை கடை ஊழியர்களிடம் கேட்டபோது, “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் பாமாயில் இருப்பு இருந்தும் கூட, கடந்த இரு மாதங்களாக கீழக்கரைக்கு சப்ளை செய்யவில்லை. பொதுமக்கள் எங்களிடம் வந்து தகராறு செய்கின்றனர். பாமாயில் சப்ளை செய்யாதது ஏன் என மேலதிகாரிகளிடமே கேட்டு கொள்ளுங்கள்,” என்றனர்.

இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரி சுகுமாரனிடம் கேட்டபோது, “இந்த மாதம் கீழக்கரையில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் பாமாயில் சப்ளை செய்யப்படும்,” என்றார்.

வாரம் மூன்று முறை ராமேஸ்வ‌ர‌ம் - ஆந்திராவுக்கு ராமநாதபுரம் வழியாக ரயில் சேவை !


ப‌ட‌ம்:தின‌க‌ர‌ன்

மதுரையில் இருந்து திருப்பதிக்கு வாரம் இருமுறை ரயில் சேவை இயக்கப்பட்டது. இந்த ரயில் சேவை தற்போது ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் & திருப்பதி இடையே வாரம் மூன்று முறை இந்த ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்தது. புதிய ரயில் சேவையின் துவக்க விழா, ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் நந்தகுமார் தலைமை வகித்தார். தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் கோயல், உதவி கோட்ட மேலாளர் அஜித்குமார் முன்னிலை வகித்தனர். கைத்தறித்துறை அமைச்சர் சுந்தர்ராஜ், எம்எல்ஏக்கள் ஜவாஹிருல்லா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராமேஸ்வரம் & திருப்பதி ரயிலை மாலை 4 மணிக்கு அமைச்சர் சுந்தர்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதிக்கு திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் இந்த ரயில் இயங்கும்.

Sunday, July 22, 2012

கீழக்கரையில் விபரீதம்! க‌ழிவுநீராக‌ வ‌ரும் குடிநீர்!ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ கோரிக்கை!



ராமநாதபுரம் மாவட்டத்தில் பலகோடி ரூபாய் செலவில் துவங்கப்பட்ட‌ காவேரிகூட்டு குடிநீர் திட்ட‌த்தின் கீழ் கீழக்கரை நகரில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் குடிநீர் குழாய் அமைக்க‌ப்ப‌ட்டு குடிநீர் ச‌ப்ளை செய்ய‌ப்ப‌டுகிற‌து.

இந்நிலையில்‌ குடிநீர் குழாய்களில் குடிநீர் மாச‌டைந்து கறுப்பாக க‌ழிவுநீர் போல் வ‌ருவ‌தாக‌ பொதும‌க்க‌ள் குற்ற‌ஞ்சாட்டுகின்ற‌ன‌ர்.

இது குறித்து ஜலாலுதீன் என்ப‌வ‌ர் கூறுகையில்,

பூமிக்கு அடியில் பல‌ ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் பைப்புகள்தான் இன்றும் உபயோகத்தில் உள்ளன.பழையவை பழுதடைந்துள்ளதால் கழிவுநீர் கலந்து விடுகிறது. மேலும் புதிய‌ ந‌கராட்சி ப‌த‌வியேற்று புதிய‌ குடிநீர் பைப்கள் அமைப்ப‌த‌ற்கும் ,குடிநீர் சேமிப்பு தொட்டி க‌ட்டுவ‌த‌ற்கும் நிதி ஒதுக்கி தீர்மாண‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து அதை உட‌ன‌டியாக‌ செயல்ப‌டுத்த‌ வேண்டும்.

ஏற்கென‌வே டெங்கு காய்ச்ச‌ல் உள்ளிட்ட‌ நோய்க‌ளால் கீழ‌க்க‌ரை ம‌க்க‌ள் அவ‌திப்ப‌ட்டு
வ‌ரும் சூழ்நிலையில் இது போன்ற மாசடைந்த‌ குடிநீரால் சுகாதார‌ம் பாதிக்க‌ப்ப‌ட்டு பொதும‌க்க‌ள் அவ‌திப்ப‌டும் சூழ்நிலை ஏற்ப‌ட்டுள்ள‌து.உட‌ன‌டியாக‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.


பட விளக்கம்:- கீழக்கரை ஜின்னா தெருவில் குடிநீரில் மாசடைந்து வரும் குடிநீர்

Saturday, July 21, 2012

கீழ‌க்க‌ரையில் ப‌ள்ளிவாச‌ல்க‌ளில் நோன்பு க‌ஞ்சி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து!


வருடா வருடம் ரமலான் மாதம் முழுவதும் கீழ‌க்க‌ரையில் உள்ள மசூதி வளாகங்களில் மாலைநேர‌ம் பொதுமக்களுக்கு நோன்பு க‌ஞ்சி வழங்கப்படும்.இங்கு சிறுவ‌ர்க‌ள் முத‌ல் பெரிய‌வ‌ர்க‌ள் வ‌ரை ஆர்வ‌த்துட‌ம் வ‌ரிசையில் நின்று வாங்கி செல்வார்க‌ள்.

இந்நிலையில் இவ்வ‌ருட‌ ர‌ம‌லான் மாத நோன்பின் முதல் நாளான இன்று ந‌கரில் உள்ள ப‌ல்வேறு ப‌ள்ளிவாச‌ல்க‌ளிலும் நோன்பு க‌ஞ்சி வழங்கும் நிகழ்ச்சி ந‌டைபெற்ற‌து.ஏராளமானோர் வ‌ரிசையில் நின்று பெற்று சென்ற‌ன‌ர்.

கீழக்க‌ரையில் வாகனங்கள் மோதி விப‌த்து !




கீழ‌க்க‌ரை முனை ரோடு டிஎஸ்பி அலுவ‌ல‌க‌ம் அருகில் பாண்டிசேரி சென்று கொண்டிருந்த‌ குவாலிஸ் வாகனம் அவ்வழியே வந்த ஆட்டோவோடு மோதிய‌து அவ்வ‌ழியே வ‌ந்த‌ பைக்கும் இவ்விப‌த்தில் சிக்கிய‌து.

பைக்கில் மோதாம‌ல் த‌விர்க்க‌ குவாலிசை திருப்பிய‌ போது இவ்விப‌த்து ஏற்ப‌ட்ட‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து.இதனால் ஓட்டுநர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.

காய‌மடைந்தவ‌ர்க‌ள் ம‌ருத்துவ‌ம‌னை கொண்டு செல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

கீழக்கரை மேலத்தெருவில் முபல்லிகா பட்டமளிப்பு விழா



கீழக்கரை மேலத்தெரு சீனா தானா அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் கண்ணாடிவாப்பா பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கண்ணாடிவாப்பா மன்டபத்தில் நடைபெற்றது.

சீனா தானா செய்யது அப்துல்காதர் தலைமை வகித்தார். அப்துல்மாலிக், அப்பாஸ் ஆலிம், ஜஹாங்கீர் அருஸி, ஆரிப்ஆலிம், டாக்டர் செய்யது அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக முபல்லிகா பட்டம் பெறும் மாணவி முஹம்மது ராபியத் ஷமா கிராத் ஓதி விழாவை துவக்கி வைத்தார். மாணவி முப்லிகா வரவேற்றார். அன்வர் மகளிர் அரபிக்கல்லூரி தலைமை உஸ்தாது பாத்திமுத்து ஜூஹரா, முஜமீல் ஆலிம், ஹாஜாமுகைதீன் ஆலிம், யாஸீன் ஆலிம், செய்யது முகமது ஆலிம் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சீனாதானா அறக்கடளையின் நிறுவனர் செய்யது அப்துல்காதர் பேசுகையில், ‘எங்கள் அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை மற்றும் உலமாக்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம். எங்கள் கல்லூரியில் மார்க்க கல்வியுடன் பள்ளி படிப்பையும் கற்றுக் கொடுக்கிறோம். உதவிக்கு 9047710890, 9626499042 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் முஹம்மது ராபியத்ஷமா, ரஹ்மத்மாயம், நஸ்மின் பாத்திமா, சீன்சிஹானா, சுஜீதாபர்வின், ஆயிசத்மர்லியா, தவ்பீக்குல் ஜன்னா ஆகியோருக்கு முபல்லிக்கா பட்டம் வழங்கப்பட்டது.

கீழக்கரை கிழக்குத் தெரு பள்ளியில் கல்விவளர்ச்சி நாள் விழா!



கீழக்கரை கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

கிழக்குத்தெரு முஸ்லீம் ஜமாத் துணைத்தலைவர் முகைதீன் அப்துல்காதர் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் டாக்டர் சாதிக், கல்விக்குழு உறுப்பினர்கள் சுஐபு, ஹூசைன் அப்துல்காதர், ஆரிபின், சிகாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் முகம்மது மீரா வரவேற்றார். விழாவில் தேவையான‌ மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகளையும் மேலும் மாணவ மாணவியருக்கு பரிசுகளையும் பள்ளியின் தாளாளர் சாதிக் வழங்கினார்.

தொடக்கப்பள்ளி தாளாளர் செய்யது இப்ராகிம், தமிழாசிரியர் சையது அபுதாஹிர் பேசினர். உதவி தலைமை ஆசிரியர் சவுகர்சாதிக்அலி நன்றி கூறினார்.

கீழக்கரை மாவிலாதோப்பு நடுநிலைப்பள்ளி விழா !



கீழக்கரை மாவிலாதோப்பு நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

விழா கிராம கல்விக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அன்புசெல்வன் முன்னிலை வகித்தார், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி ஆசிரியர் விக்டர் ஸ்டான்லி நன்றி கூறி னார்.

Friday, July 20, 2012

ர‌ம‌ளான் துவ‌க்க‌ம் !கீழ‌க்க‌ரை ம‌சூதிக‌ளில் திராவிஹ் தொழுகை !ஏராள‌மானோர் ப‌ங்கு பெற்ற‌ன‌ர்!


ரமளான் மாதம் துவங்கியதையடுத்து கீழக்கரை நகரில் பல்வேறு மசூதிகளில் திராவிஹ் தொழுகை ந‌டைபெற்ற‌து. ஏராளாமானோர் தொழுகையில் க‌ல‌ந்து கொண்ட‌னர்

ரமளான் மாதத்தையோட்டி கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடு ம‌ற்றும் வெளியூர்க‌ளிலிருந்து விடுமுறையில் கீழ‌க்க‌ரை வ‌ந்துள்ள‌ன‌ர்.

ரமளான் துவ‌க்க‌ம்! கீழ‌க்க‌ரை ட‌வுன் காஜி அறிவிப்பு !


தமிழகத்தின் செய்யாறு என்ற ஊரில் பிறை பார்க்கப்பட்ட தகவல் அடிப்படையாகக் கொண்டு, சென்னையிலுள்ள தமிழ்நாடு தலைமை காஜீ உறுதி செய்து அறிவித்து இத்தகவலை முறைப்படி அறிவிப்புச் செய்து விடுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க , இன்று ரமளான் இரவு 1 ஆம் பிறை(20-07-12)தொடங்குகிறது என்றும், நாளை(21-07-12 )முதலாவது நோன்பு என்ற‌ அறிவிப்பை கீழக்கரை டவுன் காஜி காதர் பக்‌ஷ்ஹுஸைன் ஸித்தீகி ஆலிம் வெளியிட்டுள்ளார்.

கீழக்கரையில் கலெக்டர் ஆய்வு! வாகனத்தை சூழந்து பொதும‌க்க‌ள் கோரிக்கை!



கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக சுகாதாரத்துறை,நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கீழக்கரையில் ஆய்வு செய்து சென்றனர். இந்நிலையில் ராமநாதரம் மாவட்ட கலெக்டர் கீழக்கரை வருகை தந்து பல் வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.


தெற்குதெரு பகுதியில் கலெக்டரின் வாகனம் நிறுத்தப்பட்டது அப்பகுதியில் உள்ளோர் வாகனத்தை சூழ்ந்து சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அங்கு வந்த கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கலெக்டரிடம் "புதிய கமிஷனர் நியமிக்க வேண்டும் என்றும் நகராட்சி கூட்டத்தில் தீர்மாணங்களை விவாதிக்காமல் நகராட்சி தலைவர் நிறைவேற்றியதாக அறிவித்தார் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து மனுக்களை அளித்தார் மேலும் சிலரும் மனு அளித்தனர்.

ப‌த்திரிக்கையாள‌ர்க‌ள் ப‌ட‌ம் எடுப்ப‌தை க‌லெக்ட‌ரின் உத‌வியாள‌ர் த‌டுத்ததற்கு ப‌த்திரிக்கையாளர்க‌ள் எதிர்ப்பு தெரிவித்துடன் தொட‌ர்ந்து ப‌ட‌ம் எடுத்த‌ன‌ர்.

கீழக்கரையில் மத்ரஸத்துல் இஸ்லாமியா ஆண்டு விழா !


கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் நிர்வாகத்தின் கீழ் நடைபெறும் மத்ரஸத்துல் இஸ்லாமியாவின் ஆண்டு விழா இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தெற்குதெரு ஜ‌மாத் தலைவர் ஜாஹிர் ஹுசைன்,துணை த‌லைவ‌ர் சைய‌து முஹ‌ம்ம‌து புஹாரி,செயலாளர் பவுசுல் அலியுர் ரஹ்மான்,தெற்கு தெரு ஜ‌மாத் டிர‌ஸ்டி ந‌ல்ல‌ முக‌ம்ம‌து கள‌ஞ்சிய‌ம்,நிர்வாக‌ குழு உறுப்பின‌ர் வாஹிது , மூத்த உறுப்பினர் ஹ‌க்க‌லா ம‌ரிக்கா ,சீனி,முன்னாள் கவுன்சிலர் காசிம் உள்ளிட்ட பலர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.

இமாம் செய்ய‌து முக‌ம்ம‌து வ‌ர‌வேற்றார்.காய‌ல்ப‌ட்டிணம் ஜாவியா அர‌பி க‌ல்லூரி துணை முத‌ல்வ‌ர் அர‌பிக்க‌ல்லூரி துனை முத‌ல்வ‌ர் ஹாஜா முகைதீன் காஷிபி க‌ல‌ந்து கொண்டு பேசினார். இதில் குர்ஆன் ம‌ன‌ப்பாட‌ம் செய்த‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு ப‌ரிசு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

நிகழ்ச்சியில்‌ ஜமாத்தார்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பெண்கள் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்

அமெரிக்க படையின் துப்பாக்கி சூட்டில் பலியான சேகர் குடும்பத்திற்கு எஸ்டிபிஐ ஆறுதல்!


துபாயில் அமெரிக்க கடற்படையால் சுடப்பட்டு இறந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே திருப்புல்லாணி தோப்புலவலசையைச் சேர்ந்த மீனவர் சேகரின் குடும்பத்திற்கு சோஷியல் டெமாக்கரடிக் கட்சி (எஸ்டிபிஐ) சார்பில் மாநில பொதுச்செயலாளர் அப்துல்ஹமீது ஆறுதல் கூறினர். அவருடன் மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன், துணைத் தலைவர் அப்துல்வஹாப், பொதுச்செயலாளர் இஸ்ஹாக், பொருளாளர் சோமு, அமைப்பாளர் கார்மேகம் ,அப்பாஸ் ஆலிம் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின் மாநில பொதுச்செயலாளர் அப்துல்ஹமீது கூறுகையில், ‘அப்பாவி மீனவரை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையை வன்மையாக கண்டிக்கிறோம். சேகரின் உடலை துரிதமாக இந்தியா கொண்டு வந்து அவரது குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.என்றார்

Thursday, July 19, 2012

நகராட்சி மண்டல இயக்குநர் நடவடிக்கை!கீழக்கரை கடற்கரை சுத்த‌மாகிற‌து !




நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் குபேந்திரன் கீழக்கரைக்கு திடீர் வருகை தந்து பல் வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் மேலும் கடற்கரை சென்ற அவர் கடற்கரையில் குவிந்து கிடக்கும் கோழி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து மண் அள்ளும் எந்திரம்(ஜெசிபி), லாரி வரவ‌ழைக்கப்பட்டு குப்பைகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் புதிதாக கட்டப்படும் உரக்கிடங்கு, தற்போது குப்பை கொட்டப்படும் தனியார் தோப்பு, புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை பார்வையிட்டார். கமிஷனர் முஜிபுர் ரஹ்மான், தலைவர் ராவியத்துல் கதரியா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.



இதே போன்று தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு நகரை சுத்தமாக்க அரசு உதவ‌ வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Wednesday, July 18, 2012

கீழக்கரையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியருக்கு சென்னை உயர் நீதிமன்ற‌ நீதிபதி பரிசு!


கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் விளையாட்டு மற்றும் ஆண்டுவிழா பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தெற்குதெரு ஜமாத் டிரஸ்டி நல்ல முகம்மது களஞ்சியம் தலைமை வகித்தார். கல்வி அபிவிருத்திகுழு பொருளாளர் புஹாரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் வரவேற்றார்.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமநாதன்,மற்றும் அவரது மனைவி மற்றும் தெற்குத்தெரு ஜமாத் தலைவர் ஜாஹிர் ஹீசைன் களஞ்சியம்,கல்வி அபிவிருத்தி குழு உறுப்பினர் உமர் களஞ்சியம் முன்னிலை வகித்தனர்.


பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே முகைதீன் பேசுகையில் ,
கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்த மாணவியின் +1 மற்றும் +2விற்கான அனைத்து கல்வி செலவுகளையும் பள்ளி நிர்வாகமே ஏற்று கொள்வதாக அறிவித்தார்.

பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவியருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரிசு வழங்கி பாராட்டினார்.

இஸ்லாமியா மெட்ரிக் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் சார்த்தோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கீழக்கரை தெற்கு தெரு பைத்துல்மால் அலுவ‌ல‌க‌ திற‌ப்பு விழா !




: சேகு ச‌த‌க் இப்ராகிம்

தெற்கு தெரு ஜமாஅத் பைத்துல்மால் புதிய அலுவலகம் தெற்கு தெரு பள்ளிவாசல் எதிரில் அமைக்கப்பட்டு செய்ய‌து முஹம்மது புஹாரி (துணை தலைவர் தெற்கு தெரு ஜமாஅத் )திறந்து வைத்தார். இதன் நிர்வாக குழு உறுப்பினர் அப்துல் வாஹித் பைத்துல்மால் செய்துவரும் உதவிகளை விளக்கி கூறினார் .இந்த திறப்பு விழாவில் தெற்கு தெரு ஜமாத் தலைவர் ஜாஹிர் ஹுசைன் களஞ்சியம் உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ‌ தெற்கு தெரு ச‌ங்க‌த்தின் இளைஞர்கள் உள்பட‌ ஏராள‌மானோர் கல‌ந்து கொண்ட‌ன‌ர்.

கீழக்கரை நகராட்சியை கண்டித்து கவுன்சிலர்கள் ராமநாதபுரம் வரை நடை பயணம் !



படம்:- சாலிஹ் ஹுசைன்

நகராட்சிக்கு புதிய கமிஷனர் நியமனம், ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் நடைபயணம் வந்து மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கீழக்கரை நகராட்சிக்கு இதுவரை கமிஷனர் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால், வளர்ச்சிப்பணிகள் மற்றும் சுகாதாரத் திட்டங்கள் கடுமையாக பாதிக்கின்றன. கீழக்கரை நகராட்சிக்கு தனியாக கமிஷனர் நியமிக்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் பயனில்லை. இதைக் கண்டித்தும், ஊழல் குற்றச்சாட்டுகளை களையக் கோரியும் கீழக்கரை நகராட்சிக் கவுன்சிலர்கள் ஏழு பேர், கீழக்கரை & ஏர்வாடி முக்கு ரோட்டில் இருந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் நேற்று நடைபயணம் சென்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த நடைபயணத்தில் கவுன்சிலர்கள் சாகுல்ஹமீது (5வது வார்டு) தங்கராஜ் (6வது வார்டு) அன்வர் அலி (7வது வார்டு) முகைதீன் இபுராகிம் (18வது வார்டு) அருஸியா பேகம் (19வது வார்டு) இடிமின்னல் ஹாஜா (20வது வார்டு) ஜெயபிரகாஷ் (21வது வார்டு) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன், நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான், கீழக்கரை மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்றச் சங்க செயலாளர் இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள், கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை நிர்வாகிகள், புதிய தமிழகம் மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ரஹ்மத் நிஷா மற்றும் நகர் நிர்வாகி அசீனா, சுலைமான், ஜஹாங்கிர் அருஸி, முன்னாள் கவுன்சிலர் வேல்சாமி, மக்கள்நல பாதுகாப்பு கழக தலைவர் தமீமுதீன் இணைச்செயலர் சாகுல்ஹமீது, பொருளாளர் முகமது சாலிஹ் ஹூசைன் உள்பட ஏராளமானோர் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.

அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் சென்ற இந்தக் குழுவினர், கீழக்கரை நகராட்சிக்கு உடனடியாக கமிஷனர் நியமனம் செய்யவேண்டும். நகராட்சியில் நீண்டகாலம் பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்யவேண்டும். நகராட்சியில் நிலவும் ஊழல் குற்றச்சாட்டுகளை களையவேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில், பெண் பிரதிநிதிகளின் கணவர் மற்றும் உறவினர் தலை யீட்டை தடுக்கவேண்டும். உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கீழக்கரை நகராட்சிக்கு கமிஷனர் நியமனம், ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் தலைமையில் பொதுமக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு நடைபயணம் சென்றனர்.

இவ‌ர்க‌ளுக்கு ராமநாத‌புர‌ம் ர‌யில்வேகேட் அருகில் எஸ்டிபிஐ மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர் ஜியாவுதீன் ம‌ற்றும் அப்பாஸ் ஆலிம் த‌லைமையில் ஏராள்மானவ‌ர்க‌ள் வ‌ர‌வேற்பு அளித்த‌ன‌ர்.
க‌வுன்சில‌ர்க‌ள் கூறுகையில் ,ந‌கராட்சியை சீர்ப‌டுத்தும் வ‌ரை ம‌க்க‌ள் ஆத‌ர‌வுட‌ன் போராட்ட‌ம் தொட‌ரும் என்ற‌ன‌ர்.

Tuesday, July 17, 2012

அர‌பி ப‌ல்க‌லைக‌ழ‌க‌ம் அமைக்க‌ வேண்டுகோள்!கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா !


கீழ‌க்க‌ரை செய்ய‌து ஹ‌மீதா அர‌பி க‌ல்லூரியின் 25வ‌து ப‌ட்ட‌ம‌ளிப்பு விழா ந‌டைபெற்ற‌து.10 மாணவர்களுக்கு ஆலிம் பட்டம் வழங்கப்பட்டது.இவர்கள் ஆலிம் பட்டத்தோடு சதக் பாலிடக்னிக் கல்லூரியில் இன் ஜினியரிங் டிப்ளமா படிப்பை முடித்துள்ளது குறிப்பிடதக்கது.

இதில் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ மொள‌லான‌ அப்துல் ஹ‌மீது பாகவி,சென்னை புதுக்க‌ல்லூரி முத‌ல்வ‌ர் டாக்ட‌ர் அப்துல் மாலிக், உள்ளிட்டோர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்புரை ஆற்றினார்க‌ள்.

ச‌த‌க் டிர‌ஸ்டின் த‌லைவ‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர் பேசிய‌தாவ‌து,

இந்தியாவிலேயே இன்ஜினிய‌ரிங் ப‌டித்து கொண்டே அர‌பி க‌ல்லூரியில் ப‌டித்து ப‌ட்ட‌ம் பெற‌லாம் என்ற‌ வ‌ச‌தி இங்கு ம‌ட்டும் தான் என்ப‌தை தெரிய‌ப‌டுத்துகிறேன் என்றார்.

க‌ல்லூரி இய‌க்குந‌ர் யூசுப் சாகிப் கூறுகையில் , தமிழக அரசு தமிழ‌க‌த்தில் உள்ள‌ அனைத்து அர‌பி க‌ல்லூரிக‌ளையும் ஒருங்கினைத்து அர‌பி ப‌ல்க‌லைக‌ழ‌க‌ம் அமைக்க‌ வேண்டும் என்ற‌ வேண்டுகோளை ச‌த‌க் டிரஸ்ட் சார்பாக‌ வ‌லியுறுத்தி வ‌ருகிறோம்.


நிகழ்ச்சியில் கீழ‌க்க‌ரை ட‌வுன் காஜி காத‌ர் ப‌க்ஸ் ஹுசைன் உள்ளிட்ட கீழக்கரையை சேர்ந்த‌‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்

கீழக்கரை சுகாதாரம் குறித்து" ஜீ தமிழ்" டிவியில் பரபரப்பு ஏற்படுத்திய‌ விவாதம்!



விவாத‌த்தை இதில் காண‌லாம்.. http://www.rajtamil.com/2012/07/solvathellam-unmai-16-07-2012-zee-tamil-tvshow/

ஜீ தமிழ் தொலைகாட்சியின் 'சொல்லுதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சி ஜீ டிவியில் பிரபலமான நிகழ்ச்சியாகும்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு பிர்ச்சனைகள் குறித்து அலசி ஆராயப்பட்டு பிரச்சனைகள் சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கு எடுத்து செல்லப்படுகிறது.ச‌மீப‌த்தில் கொலை வ‌ழ‌க்கில் இந்நிக‌ழ்ச்சி மூல‌ம் கொலை ச‌ம்ப‌வ‌ம் வெளியில் தெரிய‌ வ‌ந்தது.

நேற்று ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில் கீழக்கரையின் சுகாதார சீர்கேடு குறித்து விவாதம் நடத்தப்பட்டது.இதில் கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கீழக்கரையின் சுகாதார கேடுகள் படம் பிடிக்கப்பட்டு ஒளிபரப்பியதோடு விவாதம் நடத்தப்பட்டு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முத‌ல்முறையாக ஒரு ஊரின் சுகாதார‌ம் குறித்து ஒளிப்ப‌ர‌ப்ப‌ட்ட‌து குறிப்பிட‌ த‌க்க‌து.


Monday, July 16, 2012

கீழக்கரையில் மர்ம காய்ச்சலுக்கு ஒன்றரை மாத‌ குழந்தை உயிரிழந்தது!



கீழக்கரையில் நிலவி வரும் சுகாதார கேடினால் மலேரியா,டைபாய்டு,டெங்கு மற்றும் மர்மகாய்ச்சல்களால் பலரும் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் கீழக்கரை தெற்குதெருவை சேர்ந்த அப்துல் வாஹிதுவின் ஒன்றரை மாத குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அக்குழந்தை உயிரிழந்தது.இச்செய்தி அப்ப‌குதி ம‌க்க‌ளிடையை மிகுந்த‌ வ‌ருத்த‌த்தையும் ,அதிர்ச்சியையும் ஏற்ப‌டுத்தியுள்ள‌து.


க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாக‌ டெங்கு காய்ச்ச‌ல் கீழ‌க்க‌ரையில் வேக‌மாக‌ ப‌ர‌வி பலரும் பாதிக்கப்பட்ட‌ சூழ்நிலையில் அர‌சு த‌ர‌ப்பில் இருந்து காய்ச்சலுக்கான தடுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ள் ம‌ந்த‌ நிலையிலேயே இருந்து வ‌ருவ‌தாக‌ பொதும‌க்க‌ள் குற்றஞ்சாட்டுகின்ற‌ன‌ர்.உட‌ன‌டியாக‌ அரசு தரப்பு விரைந்து செயல்பட்டு கீழக்கரை முழுவதும் தெரு வாரியாக‌ மருத்து குழுவை அமைத்து தேவையான‌ நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

பள்ளி விழாவில் கீழக்கரையின் முதல் சப் இன்ஸ்பெக்டர் கொடியேற்றி பேசினார்!


கீழக்கரையிலிருந்து முதல் முறையாக காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர் பொறுப்புக்கு தேர்வு பெற்று கோவை காவல்துறை (ஆயுதபடை) உதவி ஆய்வாளராக பணியாற்றும் முகமது அன்ஸ் இஸ்லாமியா பள்ளிகளில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார்

விழாவில் பேசிய அனஸ் - இது தான் எனது முதல் மேடை பேச்சு என்றும்,வாய்ப்பளித்த‌ பள்ளி நிர்வாகத்துக்கு குறிப்பாக தாளாளர் முகைதீன் இப்ராகிம அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.


இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம் கூறியதாவது,

இவரை போன்ற இளைஞர்களை பாராட்டுக்குறியவர்கள்.கீழக்கரையிலிருந்து முதல் இளைஞராக சப் இன்ஸ்பெக்டர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டு நமது ஊரிலிருந்து அரசு பணிக்கு தயாராகும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். அந்த அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் அனசை எங்களின் பள்ளி விழாவில் கொடியேற்ற அழைப்பு விடுக்கப்ப‌ட்டு அவரும் மகிழ்வோடு கலந்து கொண்டு சிறபித்தார்.இன்னும் நமதூரை சேர்ந்த‌ ஏராளாமான இளைஞர்கள் அரசு பணிகளில் இடம் பெற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா




நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்பு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

ராமநாதபுரம், பாரதி நகரில் நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா வக்கீல் நாகராஜன் தலை மையில் நடந்தது. விழா வுக்கு கீழக்கரை நகர்மன்ற முன்னாள் தலைவர் பசீர் அகமது, சக்கரகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நூர்முகம்மது,

வண்ணாங் குண்டு ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் லத்தீபு, ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தலைவர் ரமேஷ்பாபு, ராமநாதபுரம் தமிழ்சங்கத் தலைவர் புலவர் அப்துல்சலாம், பொறியாளர் காதர்மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிழக்கரையை சேர்ந்த கடை உரிமையாளர் ஹிதாயத்துல்லா முதல் வியாபாரத்தை துவங்கி வைக்க, சென்னை பவர் செக்யூரிட்டி நிறுவனத்தின் இயக்குநர் முகமது காசிம் அனீஸ் பெற்று கொண்டார். விழாவில் கீழக்கரை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கீழக்கரை நகராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் !



கீழக்கரையில் நகராட்சி நிர்வாகத்தின் மக்கள் விரோத போக்கு மற்றும் கீழக்கரையில் நிலவும் சுகாதார சீர்கேடு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவிப்பதாக‌ எஸ்டிபிஐ கீழக்கரை நகர் கிளை சார்பாக அறிவிக்கப்பட்டு இன்று காலை கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


எஸ்டிபிஐ நிர்வாகிகள் அப்துல் ஹமீது, செய்யது அபுதாகிர், அப்துல் ஹாதி அப்பாஸ் ஆலிம்,ஜஹாங்கிர் அரூஸி மற்றும் சமூக ஆர்வலர்கள் உஸ்மான்,முஜீப் சேட் கண்மணி சீனி ,கவுன்சிலர்கள் இடிமின்னல் ஹாஜா,ஜெயபிராகாஷ்,முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இஸ்லாமியா பள்ளி ஆண்டு விழா !அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியருக்கு பாராட்டு !


இஸ்லாமியா பள்ளிகளின் ஆண்டுவிழாவை முன் னிட்டு, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கீழக்கரை தெற்குத்தெரு இஸ்லாமியா துவக்கப்பள்ளியின் 34ம் ஆண்டு விழாவும், உயர்நிலைப்பள்ளியின் 16ம் ஆண்டு விழா வும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற் றன. தெற்குத்தெரு ஜமாத் தலைவர் ஜாகிர்ஹூசைன் களஞ்சியம் தலைமை வகித் தார். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி வரவேற்றார். தெற்குத்தெரு ஜமாத் டிரஸ்டி நல்லமுகமது களஞ்சியம், துணைத்தலைவர் புகாரி, கல்வி அபிவிருத்திக்குழு உறுப்பினர் உமர் களஞ்சியம், இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் முகைதீன் இபுராகிம், வழக்கறிஞர் நாகராஜன், கீழக்கரை நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் முகமது காசிம், முகமது ஜமால் முன்னிலை வகித்தனர்.

பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்ற. பள்ளியில் கடந்த ஆண்டு படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளியின் தாளாளர் முகைதீன் இபுராகிம் பரிசு வழங்கி பாராட்டினார். முன்னதாக, கோவை காவல்துறை (ஆயுதபடை) உதவி ஆய்வாளர் முகமது அனஸ் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார். இஸ்லாமியா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்.

Sunday, July 15, 2012

கீழக்கரை அருகே பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா !



கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் ஊராட்சியை சேர்ந்த பள்ளமோர்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை பொங்கல் வைத்து நலதிட்டங்கள் வழங்கி கொண்டாடினர்.

தில்லையேந்தல் ஊராட்சி மன்ற 1வது வார்டு கவுன்சிலரும் கிராம கல்விக்குழு தலைவருமான விஜயலட்சுமி தலைமை வகித்தார். இதில் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் முன்னிலை வகித்தார்.பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷா வரவேற்றார் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பள்ளி ஆசிரியர் சுதர்ஷன் நன்றி கூறினார்.

கீழக்கரையில் தொடரும் கைது !கடல் அட்டை தடை குறித்த ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ வாக்குறுதி செயல்படுத்தப்படுமா?




மத்திய அரசால் கடல் அட்டை பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் அட்டை வைத்திருந்தார்கள் என பலரும் கைது செய்யப்படும் நிலையில் கீழக்கரையில் 10 கிலோ கடல் அட்டை வைத்திருந்தாதாக‌ கீழக்கரை சிறு தொழில் மீனவர் சங்க நிர்வாகி அட்டப்பா என்ற நல்ல இப்ராகிம் கைது செய்யப்பட்டுள்ளார்.

க‌ட‌ல் அட்டை த‌டை குறித்து மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் கடல் அட்டை தொடர்பாக தொடரும் கைது குறித்து சமூக நல அமைப்பை சேர்ந்த தங்கம் ராதாகிருஸ்னன் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.



இது குறித்து ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் நிர்வாகி த‌ங்க‌ம் ராதா கிருஸ்ண‌ன் கூறுகையில்,


க‌டல் அட்டை த‌டையை நீக்குவ‌து தொட‌ர்பாக‌ சென்ற‌ திமுக‌ ஆட்சியில் அமைச்ச‌ர் சாமி முய‌ற்சிக‌ள் மேற்கொண்டு வ‌ந்தார்.த‌ற்போது உள்ள‌ எம் எல் ஏ ஜ‌வாஹிருல்லாவும் த‌டையை நீக்குவ‌தாக‌ தேர்த‌ல் வாக்குறுதி அளித்த‌தோடு அத‌ற்கான‌ ஏற்பாடுக‌ளை செய்து வ‌ந்தாதாக அறிந்தோம்.த‌ற்போது என்ன‌ ஆயிற்று என்று தெரிய‌வில்லை.கடல் அட்டை வைத்திருப்பது கிரிமினல் குற்ற‌மாக‌ க‌ருத‌ப்ப‌ட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்ய‌ப்ப‌டுவ‌து மிக‌வும் வேத‌னைய‌ளிக்கிற‌து.அர‌சாங்க‌ம் உட‌ன‌டியாக‌ க‌ட‌ல் அட்டைக்கான‌ த‌டையை நீக்க‌ வேண்டும்


கீழக்கரை சிறுதொழில் மீனவர்கள் சங்கத்தின் சார்பாக‌ அர‌சுக்கு விடுத்துள்ள‌ கோரிக்கையில் கூற‌ப்ப‌டுவ‌தாவ‌து,


கடல் அட்டைகள் எளிதில் அழியக்கூடிய இனம் அல்ல என ஜெனிவா சர்வதேச ஆய்வு மையம் கூறுகிறது.ஒரு கடல் பெண் அட்டை 6 மாதத்திற்கு 10 லட்சம் குஞ்சுகள் வீதம் வருடத்திற்கு 20 லட்சம் குஞ்சுகள் பொறித்து இனவிருத்தி செய்கிறது. என மத்திய கடல் மீன் ஆராய்ச்சி கழகம் கூறுகிறது.

மேலும் கடல் அட்டையில் வெள்ளை,சிகப்பு ,கருப்பு என மூன்று வகைகள் உண்டு இவை சிறந்த சத்தான உணவாகும் மருத்துவ குணம் உடையது.போதை தன்மை கிடையாது ஆகவே மத்திய அரசு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 40 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு கடல் அட்டையின் தடையை நீக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதே போல் மாநில அரசுக்கும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Saturday, July 14, 2012

கீழக்கரை பகுதியில் வணிக ரீதியிலான ஹெலிகாப்டர் தளம் அமைக்க‌ கோரிக்கை !


மதுரையிலிருந்து, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடைக்கானல், காரைக்குடிக்கு, ஹெலிகாப்டர் சேவை வழங்கவும், ஏற்பாடு நடந்து வருவதாகவும் இதற்காக, அந்த பகுதிகளில், "ஹெலி பேட்' அமைக்க உள்ளதாக‌ செய்திக‌ள் வெளியாகியுள்ள‌து.இத்திட்ட‌ம் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌டுமானால் ராமநாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தின் க‌டற்கரையோர‌ ப‌குதியான‌ கீழ‌க்க‌ரை பகுதியில் அர‌சு ஹெலிகாப்ட‌ர் த‌ள‌ம் அமைக்க‌ முய‌ற்சி செய்யலாம் என்றும் ஹெலிகாப்டர் தளம் அமைவதின் மூலம் இப்பகுதியில் சுற்றுலா உள்ளிட்ட தொழில் வளம் பெற வாய்ப்பு ஏற்படும் என‌ இப்ப‌குதியை சேர்ந்தோர் க‌ருத்து தெரிவித்துள்ள‌ன‌ர்.


இது தொட‌ர்பாக‌ ஏற்கெனவே கீழ‌க்க‌ரைடைம்ஸில் வெளியான‌ செய்தி :-

கீழக்கரை அருகே ஏராளமான சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளன.
குறிப்பாக மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள முக்கிய தீவுகள் கீழக்கரை அருகே அமைந்துள்ளன.இதனால் இக்கடல் பகுதிக்கு வெளிநாட்டை சேர்ந்த கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் ஏராளமானோர் வருகின்றனர்.மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.மேலும் இப்பபகுதியில் பூமிக்கடியில் இயற்கை எரிவாயு அதிகப்படியாக கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால் முன்னணி தொழில் நிறுவனங்களின் பார்வை வானம் பார்த்த பூமி என்று அறியபட்ட இப்பகுதியை நோக்கி திரும்பியுள்ளது.ஏராளமான தொழில் அதிபர்கள் இப்பகுதிக்கு வருகை புரிவதற்கு வாய்ப்புள்ளது.தற்போது பெரும்பாலான முண்ணனி தொழில் நிறுவன அதிபர்கள் கார்,ரயில் போன்ற பயணத்தை விட தனியார் ஹெலிகாப்டர்களில் அதிகளவில் பயணம் செய்வதை விரும்புகின்றனர்.தற்போதே அரசாங்கம் இப்பகுதியில் ஹெலிகாப்டர் நிரந்தர தளம் அமைப்பதற்கான ஈடுபட வேண்டும்.
ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்கு கீழக்கரையை விட பாதுகாப்பான இடம் வேறு இருக்க முடியாது. ஏற்கெனவே பல்லாண்டுக்கு முன் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜாபர் சரீப் வரை கீழக்கரையில் தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் ஹெலிகாப்டர் மூலம் வந்து சென்றிருக்கின்றனர்.

எனவே இப்பகுதியில் வணிக ரீதியிலான ஹெலிகாப்டர் சேவைக்கான ​ நிரந்தரமான ஹெலிகாப்டர் தளம் அமைக்க தடையில்லா சான்று வழங்குவதற்கு ஆய்வு நடத்தப்பட்டு தளம் அமைப்பற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.இதன் மூலம் எதிர்காலத்தில் இப்பகுதிக்கு தொழில் வாய்ப்புகள் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.