Monday, November 11, 2013

கீழக்கரையில் படகு கட்டும் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை!

கீழக்கரை நகராட்சி பகுதியில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களில் 25 சதவீதம் பேர் கடல் சார் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக மீன்பிடி தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.

 மேலும் பாசி சேகரித்தல், வலை பின்னுதல், சிப்பி பொறுக்குதல் போன்ற கடல் சார்ந்த தொழிலில் மீனவர்களும் மீனவ பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர். 

இப்பகுதி இளைஞர்கள் மரைன் போன்ற பட்டபடிப்பு, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு படித்து விட்டு இங்கு வேலை வாய்ப்பில்லாமல் சென்னை, விசாகபட்டினம், தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்குச் சென்று பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கீழக்கரை பகுதியில் வாய்ப்பிருந்தால் இவர்கள் இங்கு தங்கி தங்கள் திறமைகளையும், அறிவையும் இப்பகுதி வளர பயன்படுத்துவார்கள். கல்வி நகரமாக திகழும் கீழக்கரை பகுதியில் தொழில் பேட்டை அமைக்க அரசோ அல்லது தனியாரோ முன்வருவதில்லை. அகன்ற கடற்கரை பகுதியைக் கொண்ட கீழக்கரையில் கடல் சார்ந்த தொழில் துவங்க அரசு முன்வரவேண்டும் என்று பொதுமக்கள் குறிப்பாக மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து கீழக்கரை சமூக நல அமைப்பை சேர்ந்த தங்கம் ராதாகிருஸ்ணன் கூறுகையில்,

கீழக்கரை மட்டுமில்லாமல் ஏர்வாடி, பெரியபட்டணம், எஸ்பி பட்டணம், தொண்டி, காஞ்சிரங்குடி போன்ற கடலோர ஊர்களில் மீன்பிடி தொழிலில் ஏராளமான நாட்டு படகுகள், விசைப்படகுகள் ஈடுபடுகின்றன. இவைகளுக்கு பழுது ஏற்பட்டால் சிறு, சிறு மராமத்து மட்டுமே செய்யப்படுகிறது. கீழக்கரை போன்று மற்ற கடலோர ஊர்களிலும் அந்தந்த பகுதியில் உள்ள தச்சு தொழிலாளர்களைக்கொண்டு நாட்டு படகுகள் செய்து வருகிறார்கள். ஒரு படகு கட்டுவதற்கு மாதக்கணக்கில் ஆகிறது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே அரசு முயற்சி மேற்கொண்டு இப்பகுதியில் படகு கட்டும் தொழிற்சாலை ஏற்படுத்தினால் பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் தொழில் முன்னேற்றமடையும் என்றார்.

1 comment:

  1. Thats,correct.......really appreciate the above news.........that above scheme will be executed in kelakkarai the economic will be rise...........

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.