கீழக்கரை, ஏப்.17:
வீடுகளில் விநியோகிப்பதற்காக, கீழக்கரையில் குடியிருப்பு பகுதியில் மொத்தமாக குவித்து வைக்கப்படும் காஸ் சிலிண்டர்களால் விபத்து அபாயம் நிலவுகிறது.
கீழக்கரை நகரில், 6 ஆயிரத்து 900க்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர் இணைப்புதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு ஐஓசி டீலர் மூலம் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுகிறது. இங்கு, காஸ் நிரப்பிய சிலிண்டர்களை குடோன்களில் பாதுகாப்பாக வைப்பதற்கு பதிலாக குடியிருப்புகள் நிறைந்த தெருக்களில் மொத்தமாக ஏஜென்சியினர் இறக்கி விட்டு செல்கின்றனர். குறிப்பாக வீடுகள் நெருக்கம் மிகுந்த கீழக்கரை சின்னக்கடை தெரு சாலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அதிகளவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலிண்டர்களை விநியோகித்து முடிக்க ஒரு வாரம் ஆகிவிடும். அதற்குள் அடுத்த சிலிண்டர்கள் கொண்டு வந்து அதே இடத்தில் அடுக்கி வைக்கப்படுகின்றன. எப்பொழுதும் இங்கே சிலிண்டர் குவியலை காணமுடிகிறது.
கேட்பாரற்று கிடக்கும் இந்த சிலிண்டர்கள் மீது அவ்வழியே செல்லும் வாகனங்கள் மோதி விட்டால் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள இப்பகுதி மக்கள், இதுகுறித்து ஏஜென்சியினரிடம் வலியுறுத்தியும் பலனில்லை. குடோனை ஏற்பாடு செய்து, அங்கிருந்து சிலிண்டர்களை விநியோகிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
அப்பகுதியில் கடை நடத்துவோர் சிலர் கூறுகையில், ‘கடந்த நான்கு வருடமாக இங்கேதான் காஸ் சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்படுகின்றன. பொதுவாக எந்தவொரு விபத்தும் நேரிடும் வரை விழிப்புணர்வு பிறப்பதில்லை. எனவே பெரும் ஆபத்து நேரிடும் முன்பு, குடியிருப்புவாசிகளின் நலன்கருதி, காஸ் சிலிண்டர்களை பாதுகாப்பாக வைப்பதற்கு குடோன் வசதியை ஏஜென்சியினர் ஏற்படுத்த வேண்டும்‘ என்றனர்.