Wednesday, February 29, 2012

கீழக்கரையில் அதிமுக சார்பில் பொதுகூட்டம்!


கீழ‌க்க‌ரையில் முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதாவின் 64வ‌து பிற‌ந்த‌ நாளை முன்னிட்டு புதிய‌ ப‌ஸ் நிலைய‌ம் அருகே அதிமுக‌ சார்பில் பொதுகூட்ட‌ம் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து.
இவ்விழாவில் மாவ‌ட்ட துணை பொது செய‌லாள‌ர் முனிய‌சாமி,ந‌க‌ராட்சி துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன் ,நகர செயலாளர் ராஜேந்திரன்,அம்மா பேர‌வை த‌லைவ‌ர் அப்துல்லா,த‌லைமை க‌ழ‌க‌ பேச்சாள‌ர் தென்ன‌வ‌ன்,ந‌க‌ர் சிறுபான்மை செய‌லாள‌ர் யாசின்,எம்ஜிஆர் இளைஞ‌ர‌ணி செய‌லாள‌ர் ச‌ர‌வ‌ண‌ பாலாஜி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

கீழக்கரையில் நாளை (01.03.2012) வியாழக்கிழமை மாதாந்திர மின்தடை


மின்சார வாரியம் அறிவிப்பு கீழக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (01.03.2012) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை,ஏர்வாடி,முகம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், உத்திரகோசமங்கை, களரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், காலை 9 மணி முதல் 5 .30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய உதவி செயற் பொறியாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த சுஐபு கூறுகையில் , ஏற்கெனவே அறிவிக்காமல் பல மணி நேரம் மின்வெட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.எனவே இதுபோன்ற அறிவிப்புகளை மின் இலாகா நிறுத்திவிடலாம் என்றார்
தகவல் : ஸாலிஹ் ஹுசைன்

கீழக்கரையில் ரூபாய் செலுத்தி நாண‌ய‌ம் பெறுவ‌த‌ற்கு தானிய‌ங்கி இய‌ந்திர‌ம்!




கீழக்கரையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் தானியங்கி சில்லரை நாணய இயந்திரம் நிறுவப்பட்டது.
பொதுமக்களுக்கு உதவும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா துவக்கி வைத்தார்.13,17,14 ந‌க‌ராட்சி க‌வுன்சில‌ர்கள், இந்திய‌ன் வ‌ங்கி நிர்வாகிக‌ள் உள்ளிட்ட‌ பல‌ர் இந்நிக‌ழ்ச்சியில் க‌லந்து கொண்ட‌ன‌ர்.

இந்த இயந்திரத்தின் மூலம் 10 ரூபாய்க்கான சில்லரை நாணயங்களை பெற முடியும். இதற்கென பத்து ரூபாய் நோட்டை இயந்திரத்தினுள் செலுத்த வேண்டும். இயந்திரத்தினுள் செலுத்தப்பட்ட 10 ரூபாய் நோட்டு ஸ்கேன் செய்யப்பட்டு, பின்னர் சில்லரை நாணயம் வெளியே வரும். பொதுமக்களுக்கு ஏற்படும் சில்லரை நாணய தட்டுப்பாட்டை போக்க இது உதவும்.
5, 2, 1 ரூபாய் நாணயங்கள் இந்த தானியங்கி சில்லரை நாணயம் வழங்கும் இயந்திரத்தில் இருந்து கிடைக்கும். இந்த இயந்திரத்தின் கொள்ளளவு 20 ஆயிரம் ரூபாய் ஆகும். இயந்திரம் 24 மணி நேரமும் செயல்படும்.இவ்வாறு நிர்வாக‌த்தின‌ர் த‌க‌வ‌ல் தெரிவித்த‌ன‌ர்

Tuesday, February 28, 2012

கீழக்கரை இளைஞர் மீது தாக்குதல் !ராமநாதபுரம் காவ‌ல்துறையினரின் மெத்த‌ன‌ போக்கு !



கீழக்கரையை சேர்ந்தவர் கிதிர் நய்னா முகம்மது என்பவரின் மகன் அலீம்(27) நடுத்தெரு ஜும்மா பள்ளியின் பின்புறம் இவரது வீடு அமைந்துள்ளது.சம்பவதன்று இவர் ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது இளைஞர் அலீமை ஆர்.எஸ்.மடை அருகே பஸ்சில் இருந்து கீழே தள்ளி கார்த்திக் உள்பட 10க்கும் மேற்பட்ட‌ நபர்கள் கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்தி விட்டு ஓடியதாக கூறப்படுகிறது.பலத்த காயமடைந்து கிடந்த‌ அலீமை அவ்வழியே வந்த சின்னக்கடை தெருவை சேர்ந்த ஜாஹிர் என்பவர் மருத்துவமனையில் அனுமதித்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ச‌ம்ப‌வ‌ம் ந‌டைபெற்று ப‌ல‌ நாள‌கியும் இது வ‌ரை ராமநாதபுரம் காவ‌ல்துறையினர் முழு அள‌விலான‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்காம‌ல் கால‌ம் தாழ்த்தி வ‌ருவ‌தாக‌ பொதும‌க்க‌ள் த‌ர‌ப்பில் குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌டுகிற‌து
இந்நிலையில் கீழக்கரையின் பல்வேறு தரப்பினரும் இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளனர்.மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினரிடம் நூற்றுக்கணக்கானோர் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.மாவட்ட கலெக்டரிடமும் நேற்று ஏராளமானோர் சென்று மனு கொடுத்துள்ளனர்.கீழக்கரை நகரின் பல்வேறு இடங்களில் சுவ‌ரொட்டி ஒட்டப்பட்டுள்ளளது. ஆனால் காவல்துறையினர் மெத்தனமாக இருந்து ஏனோ தானேவென்று செயல்படுவதாக என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது குறித்து செய்யது இப்ராகிம் கூறுகையில் ,
ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை வருபவர்கள் மீது இப்பகுதில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக இது போன்ற தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது.பெரும்பாலான சம்பவங்கள் வெளியே தெரியவில்லை பிரச்சனையின் முக்கியத்துவத்தை கருதி மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு நடவடிக்கை உடனடி எடுக்க வேண்டும்.

கீழ‌க்கரையை சேர்ந்த‌ ஹுசைன் கூறிய‌தாவ‌து, முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போது அனைத்து த‌ர‌ப்பின‌ரும் இணைந்து இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம்.காவ‌ல்துறை உய‌ர் அதிகாரிக‌ள் ந‌ட‌வ‌டிக்கை எடுப்ப‌தாக‌ உறுதி அளித்துள்ள‌ன‌ர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக‌ ஒருவ‌ரை கைது செய்துள்ள‌தாக‌ செய்திக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.இனி மேல் இது போல் ஒரு ச‌ம்ப‌வ‌ம் நடைபெற‌ அனும‌திக்க‌ கூடாது என்றார்.


சேகு சதக் இப்ராகிம் கூறியதாவது,ராமநாதபுரம் காவல்துறையினர் இது வரை நடவடிக்கை எடுக்காதது அவர்களின் மெத்தன போக்கையே காட்டுகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இதனால் கீழக்கரை மக்கள் ரோட்டில் இறங்கி போராடக்கூடிய சூழ்நிலையை காவல்துறையினர் உருவாக்குகிறார்கள்.உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ வேண்டும் என்றார்.

இது குறித்து ராமநாதபுரம் பி 1 போலீசார் வ‌ழ‌க்கு ப‌திவு செய்துள்ள‌ன‌ர். ஒருவ‌ரை கைது செய்து விசாரித்து வ‌ருவதாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து.மேலும் ஆர்.எஸ் ம‌டையை சேர்ந்த‌ சில‌ர் ச‌மாதான‌ பேச்சுவார்த்தை ந‌ட‌த்துவ‌த‌ற்காக‌ கீழ‌க்க‌ரையின் முக்கிய‌ பிர‌முக‌ர்க‌ளை ச‌ந்தித்து பேசி வ‌ருவ‌தாக‌ த‌க‌வ‌ல்க‌ள் வெளியாகியுள்ள‌து.

கீழக்கரை கல்லூரியில் தகவல் தொழில் நுட்ப துறை கருத்தரங்கம் !


கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கணிணித்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பாக அசோசியேசன் தொடக்க விழா மற்றும் சோர்பிங் 12 என்ற பெயரில் துறைகளுக்கு இடையிலான பல்வேறு போட்டிகள் நடைபெற்ற‌து .நிகழ்ச்சிகளுக்கு முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார்.பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்இதில் மதுரை விஜய லட்சுமி ஹைடெக் நிறுவனத்தின் இயக்குநர் விஜய லட்சுமி ஸ்டீபன் கலந்து கொண்டு பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ஜகாபர் பரிசுகளை வழங்கினார். தகவல் தொழில் நுட்பத்தலைவர் விஜய் ராஜ் நன்றி கூறினார்.

ஹமீதியா ஆண்கள் பள்ளியில் சுற்று சூழல் விழிப்புணர்வு தினம்! 100 மரக்கன்றுகள் நடப்பட்டன !


கீழக்கரை முள்ளுவாடியில் உள்ள ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்று சூழல் விழிப்புணர்வு தினம் பள்ளி தாளாளர் யூசுப் சாகிப் தலைமையில் நடைபெற்றது.தலைமை ஆசிரியர் ஹச‌ன் இப்ராகிம் வரவேற்றார்.

ஆசிரியர் நாசர் புவி வெப்பமயமாவதால் ஏற்படும் தீங்குகள்,மற்றும் அதை தடுப்பது குறித்தும் 10ம் வகுப்பு ஆசிரியர்கள் பொது தேர்வை எவ்வாறு எதிர் கொள்வது மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் வெற்றி பெறுவதற்கு சுலபமான வழிமுறைகளை குறித்தும் பேசினார்.
முன்னதாக புவி வெப்பமடைவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசால் வழங்கப்பட்ட 100 மரக்கன்றுகளை தாளாளர்,தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் நட்டனர்.

Sunday, February 26, 2012

குப்பை கொட்ட தளம் அமைக்கும் பணி ! நகராட்சி தலைவர் பார்வையிட்டார் !


கீழக்கரை அருகே தில்லையேந்தல் பஞ்சாயத்துட்பட்ட பகுதியில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கொட்டுவதற்கான குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணிகளை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் 17வது வார்டு கவுன்சிலர் ஆனா மூனா என்ற காதர் சாகிப் உள்பட பலர் உடன் சென்றனர்.இப்பபணிகள் நிறைவடைந்தவுடன் குப்பை பிரச்சனைக்கு நிரந்ததீர்வு ஏற்படும் என்பது அனைவரின் எதிர்பார்பார்ப்பாக உள்ளது.

ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மரக்கன்று நடும் விழா !



கீழக்கரை மேலத்தெரு ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி தாளாளர் ஹமீது அப்துல் காதர் தலைமையில் பள்ளி முதல்வர் சஹர் பானு முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் யூசுப்சுலைஹா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செய்யது அப்துல் காதர் மேலத்தெரு உஸ்வதுன் ஹஸனா முஸ்லீம் சங்க உறுப்பினர் இஸ்மாயில் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தரக்குறைவாக பேசியதாக நகராட்சி ஊழியர் புகார் !பொய் புகார் என‌ நகராட்சி தலைவர் மறுப்பு !


கீழக்கரை நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணி புரிந்து வரும் முருகன் சம்பவத்தன்று குப்பை கிடங்கில் வேலையை முடித்து விட்டு முருகன் நகராட்சி அலுவலகம் வந்தாராம் இவரிடம் பணி சம்பந்தமாக கேள்வி கேட்டதோடு தரக்குறைவான வார்த்தைகளில் பேசியதாக நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியாவின் கணவர் அமீர் ரிஸ்வான் மீது மேற்பார்வையாளர் முருகன் நகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

5வது வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீது கூறுகையில்,
ரிஸ்வான் ஒருமையில் தான் ஊழியரை பேசினார் நகராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையிடுவது சரியல்ல என்றார்

இது குறித்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா கூறியதாவது ,

தற்போது தனியார் கிடங்கில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.இங்கு மேற்பார்வையாளர் முருகன் பணியில் இல்லாததால் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று தகவல் வந்தது எனவே எனது கணவரை பார்த்து வருமாறு அனுப்பினேன் அவர் நகராட்சி அலுவலகம் சென்ற போது குப்பை கிடங்கில் காலை 11.30 வரை மேற்பார்வையிட வேண்டிய முருகன் காலை 10.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்துள்ளார் எனவே குப்பை கிடங்கை மேற்பார்வையிட செல்லவில்லையா என்று எனது கணவர் கேட்ட போது "நீ யாருய்ய கேட்பதற்கு" என்று முருகன் தான் மரியாதைகுறைவாக பேசியுள்ளார்.உடனே என் கணவர் எனக்கு போன் மூலம் தகவல் சொன்னார் நான் அங்கு விரைந்து அவரை பணிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினேன்.இது தான் நடந்தது. தனியார் குப்பை கொட்ட நமக்கு இடம் தந்துள்ளனர் அவற்றை முறையாக பராமரிப்பது நமது கடமை எனவே கீழக்கரையை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அனைவருக்கும் பணிக்கு ஏன் செல்லவில்லை கேட்க உரிமை உள்ளது எனவே ஊர் நலனுக்காக‌ என் கணவர் கேட்டதில் என்ன தவறு உள்ளது. இது முழுக்க ,முழுக்க உள் நோக்கத்துடன் சொல்லப்படும் பொய்யான குற்றச்சாட்டு என மறுப்பு தெரிவித்தார்.


இது குறித்து முன்னாள் கவுன்சிலர் ஹமீது கான் கூறுகையில் ,
இந்த முருகன் மீது ஏற்கெனவே பல புகார்கள் உள்ளது.பெரும்பாலான நேரம் பணிக்கு செல்லாமல் அலுவலகத்தில் தான் உள்ளனர். மேலும் இவர்கள் யாருமே யூனிபார்ம் அணிவதில்லை.மேலும் அரசு ஊழியரான அவரிடம் பணி நேரத்தில் பணிக்கு ஏன் செல்லவில்லை என்று கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. கேட்டதில் தவறு இல்லை என்றார்

Saturday, February 25, 2012

இளைஞர் தாக்குதல் சம்பவம் ! கண்டித்து ராமநாதபுரம் காவல்துறை அலுவலகத்தில் குவிந்த இளைஞர்கள் !


காயமடைந்த அலீம்
படம்: சாலிஹ் ஹுசைன்

கீழக்கரையை சேர்ந்தவர் கிதிர் நய்னா முகம்மது என்பவரின் மகன் அலீம்(27) நடுத்தெரு ஜும்மா பள்ளியின் பின்புறம் இவரது வீடு அமைந்துள்ளது.சம்பவதன்று இவர் ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது இளைஞர் அலீமை ஆர்.எஸ்.மடை அருகே பஸ்சில் இருந்து கீழே தள்ளி கார்த்திக் உள்பட 10க்கும் மேற்பட்ட‌ நபர்கள் கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்தி விட்டு ஓடியதாக கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்து கிடந்த‌ அலீமை அவ்வழியே வந்த சின்னக்கடை தெருவை சேர்ந்த ஜாஹிர் என்பவர் மருத்துவமனையில் அனுமதித்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் செய்தி கேள்விபட்டு கீழக்கரையை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் திரண்டு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி துணை சூப்பிரண்டு முரளிதரன், தனி பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஸ்ணன் ஆகியோரிடம் மனு அளித்தனர். இதில் எஸ்.டி.பி.ஐ மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது,துணை தலைவர் அப்பாஸ் அலி,தமுமுக நகர் துணை தலைவர் அபுதாகிர் உள்பட நூற்றுக்கணக்கனோர் திரண்டனர்.இரவு நேரங்களில் கீழக்கரைக்கு வருபவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெறுகிறது இதை தடுக்க வேண்டும்.இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா கூறுகையில் ,
மக்களை அச்சுறுத்தும் இது போன்ற சட்ட விரோத தாக்குதல் கண்டிக்கதக்கது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நாளை சந்திக்க உள்ளோம் கடும் நடவைக்கை எடுக்க வலியுறுத்த உள்ளேன் என்றார்.

மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் கூறுகையில் ,
தொடர்ந்து இது போல் நடப்பது வாடிக்கையாகி விட்டது இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு இரவு நேரத்தில் செல்லும் பேரூந்துகளில் பயணம் செய்யும் பள்ளவச்சேரி, திருப்புல்லானி மற்றும் கீழக்கரையை சேர்ந்த இளைஞர்களை R.Sமடை என்ற ஊரை சேர்ந்த சிலர் கூட்டாக தாக்கி காயப்படுத்தி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளோம் என்றார்.


இது குறித்து கீழக்கரையை சேர்ந்த சேகு சதக் இப்ராகிம் கூறுகையில் ,

ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வரும் வழியில் இரவில் கழுங்கு,RSமடை பகுதி அருகில் அடிகடி வழிப்பறி நடைபெறுகிறது. விரைவு பேருந்து,லோக்கல் பேருந்துகளில் செல்லும்பொதுமக்களை அடிக்கடிதேவையில்லாமல் வன்முறைத்தாக்குதல் நடத்துவது இதனால் அரசு மற்றும் தனியார் வாகன ஓட்டுனர்களை அச்சிருத்தியும் படியும் சம்பவம்தொடர்ந்து நடைபெற்று வருகிறது ,உடனடியாக இதற்கு காவல்துறை தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் .அந்த பகுதிகளில் திரும்பவும் போலீஸ் செக் போஸ்ட் அமைக்க வேண்டும்.

இத்தாக்குதல் கீழக்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிமிர்ந்து நின்றால் எரிமலையும் வழிகொடுக்கும் !தாசிம் பீவி கல்லூரி விழாவில் எஸ்.பி.காளிராஜ் .பேச்சு!



கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் கல்லூரி மகளிர் கல்லூரி 24வது ஆண்டு விழா சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் காலித் புஹாரி தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்று ஆண்டறிக்கை சமப்பித்தார்.கல்லூரி தாளாளர் ரஹ்மத் நிஷா அப்துல் ரஹ்மான்,சீதக்காதி அறக்கட்டளை பெண்கள் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ஷரிபா அஜீஸ் முன்னிலை வகித்தனர்.
சீதக்காதி அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆயிஷா,சாதிகா காலித்,யூசுப் சுலைகா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செய்யது அப்துல் காதர்,இருதய அறுவை சிகிச்சை நிபுணர் செய்யது அகமது(யுஎஸ் ஏ) மாவட்ட எஸ்.பி காளிராஜ் மகேஷ்குமார்,காரைக்குடி அழகப்பா யுனிவர்சிட்டி மாணிக்க வாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட எஸ்.பி காள்ராஜ் மகேஷ்குமார் பேச்சின் ஒரு பகுதி ,
உறங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறை பிடிக்கும்,நிமிர்ந்து நின்றால் எரிமலையும் வழி கொடுக்கும்,இரண்டு கைகள் இல்லை என்றாலும் தன்னம்பிக்'கை' யை வைத்து குறிகோளுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். ஆகவே மாணவிகளாகிய் நீங்கள் முயற்சி செய்து படித்து முன்னேற வேண்டும் என்றார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை கீழக்கரை துணை பொது மேலாளர் சேக் தாவூத்,கல்லூரி மேலாளர் முகம்மது அஜீஸ் ,துணை முதல்வர் நாதிர பானு கமால் ஆகியோர் செய்திருந்தனர்.மாணவி ஹீசைனியா நன்றி கூறினார்.

Friday, February 24, 2012

கீழக்கரையில் முதல்வர் பிறந்தநாளையோட்டி 64 மரக்கன்றுகள் நடப்பட்டது ! !


கீழக்கரையில் முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாள் விழாவில் 64 மரக்கன்றுகள் நடும் விழா உள்பட 2000ம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது நகரின் முக்கிய இடங்களில் 5 இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.

பஜாரில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்ச்சியில் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

மேலும் நலப்பணிகளில் ஒன்றாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. ஓஜேம் தெரு மஹ்தூமியா பள்ளி ,புதிய ஜெட்டி பாலம் உள்ளிட்ட 64 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் வனசரகர் ஜெயராமன்,வனக்காப்பாளர் பாலகிருஸ்ணன் உள்ளிட்ட வனத்துறை ஊழியர்கள்,அதிமுகவை சேர்ந்த நகரா ட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன், கவுன்சிலர்கள் செய்யது கருணை,அன்வர் அலி, இடிமின்னல் ஹாஜா,சாகுல் ஹமீது,முகைதீன் இப்ராகிம், நகர் இளைஞர் அணி செயலாளர் சரவண பாலாஜி,நகர் செயலாளர் ராஜேந்திரன் ,நகர் சிறுபாண்மை செயலாளர் மரக்கடை யாசீன்,அதிமுகவை சேர்ந்த வேல்சாமி,நாகரத்தினம்,ஹக்கீம்,ஜகுபர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Thursday, February 23, 2012

கீழக்கரையில் அரபி மொழி கருத்தரங்கம் !


கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரபித்துறை மற்றும் ஹமீதா அரபிக் கல்லூரியின் சார்பாக மாநில அளவிலான அரபி மொழி கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் அபுல் ஹசன் சாதலி தலைமையில் நடைபெற்றது.

முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் ,தாளாளர் யூசுப் சாகிப் முன்னிலை வகித்தனர். அரபி துறை தலைவர் அபுதாஹிர் வரவேற்றார்.

இதில் சென்னை பல்கலைகழக முன்னாள் அரபித்துறை தலைவர் நிசார் அகமது,சென்னை புதுக்கல்லூரி அரபித்துறை தலைவர் அப்துல் மாலிக் ,முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன்,மதுறை வக்பு வாரிய கல்லூரி ஆசிரியர் சேக் முகம்மது,திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி பேராசிரியர் அப்துல் காதர்,சென்னை புது கல்லூரி ஆசிரியர் ஹாஜா முகைதீன் மற்றும் தாசிம்பீவி அப்துல் காதார் கல்லூரி ஆசிரியர்கள் சாபிரா,நூர்ஜஹான், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
செய்யது ஹமீதா அரபிக்கல்லூரி முதல்வர் அப்துல் நாசர் ஜமாலி நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ ,மாணவியர் கலந்து கொண்டனர்.

ஆர்.எஸ் மடை அருகே கீழக்கரை இளைஞர் மீது தாக்குதல் !


கீழக்கரையை சேர்ந்தவர் மரிக்கா என்பவரின் மகன் அலீம் நடுத்தெரு ஜும்மா பள்ளியின் பின்புறம் இவரது வீடு அமைந்துள்ளது.இவர் ராமநாதபுரத்தில் உள்ள மருந்து கடையில் பணிபுரிந்து வந்தார்.
சம்பவதன்று இவர் ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது இளைஞர் அலீமை ஆர்.எஸ்.மடை அருகே பஸ்சில் இருந்து கீழே தள்ளி மர்ம நபர்கள் கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்தி விட்டு ஓடியதாக கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்து கிடந்த‌ அலீமை அவ்வழியே வந்த சின்னக்கடை தெருவை சேர்ந்த ஜாஹிர் என்பவர் மருத்துவமனையில் அனுமதித்தாக செய்திகள் வெளியாகியுள்ளது.ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது ?தாக்குதல் நடத்தியது யார் என்ற விபரங்கள் தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Wednesday, February 22, 2012

தாசிம் பீவி மகளிர் கல்லூரி 24வது விளையாட்டு விழா !



தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 24வது விளையாட்டு விழா சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் காலித் புஹாரி தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி தாளாளர் ரஹ்மத் நிஷா அப்துல் ரஹ்மான்,சீதக்காதி அறக்கட்டளை பெண்கள் கல்வி நிறுவனங்களில் இயக்குநர் ஷரீபா அஜீஸ் ,யூசுப் சுலைகா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செய்யது அப்துல் காதர்,சீதக்காதி அறக்கட்டளை உறுப்பினர் ஆயிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார். மேலும் யூஜிசி முன்னாள் பேராசிரியர் திருமலைச்சாமி ,நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் ,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை கீழக்கரை துணை பொது மேலாளர் சேக் தாவூத் கல்லூரி மேலாளர் முகம்மது அஜீஸ் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

கீழக்கரை அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்ட மீன்பிடி திருவிழா !




கீழக்கரை அருகே திருப்புல்லாணி கொட்டங்குடி ஆற்றில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இப்பகுதியில் வருடந்தோறும் மீன்பிடி திருவிழா நடைபெறும் நேற்று காலையில் தொடங்கிய இவ்விழாவில் ஒன்றியத்தின் பல கிராமங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு விலாங்கு ,கெழுத்தி,இரால் போன்ற வகை சிறிய வகை மீன்களை பிடித்து தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர். கொட்டங்குடி ஆற்றில் தொடங்கி கீழக்கரை அருகே தோணிப்பாலம் வரை மீன்களை பிடித்தனர்.

பஸ் நிலையத்தில் மின் கட்டண வசூல் மையம் !விரைந்து செயல்படுத்த கோரிக்கை !



கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கம் சார்பில் கூட்டம் தலைவர் அமானுல்லா தலைமையில் நடைபெற்றது.

துணை தலைவர் ராசிக்,வேலுச்சாமி ,கீழக்கரை காவல்துறை துணை ஆய்வாளர் கார்மேகம் ,ஏர்வாடி தர்ஹா மாணவர்கள் சுன்னத்துல் ஜமாத் ஆலோசகர் செய்யது அலாவி ஆலிம் முன்னிலை வகித்தனர்.

இயக்கத்தின் செயலாளர் தங்கம் ராதாகிருஸ்ணன் வரவேற்றார்.இக்கூட்டத்தில் கூடங்குளம் அனுமின்நிலையத்தை விரைவாக திறந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் ,கீழக்கரை நகராட்சி குப்பை கிடங்குக்கும் மற்றும் இந்து மயானத்திற்கும் விரைவாக சுற்று சுவர் கட்ட வேண்டும்,

கீழக்கரை பஸ் நிலையத்தில் விரைவாக மின் கட்டண வசூல் மையத்தை திறக்க வேண்டும் என்றும்,ஏர்வாடி தர்ஹா புதிய பஸ் நிலையத்தில் காவல் நிலையம்,தினசரி மார்க்கெட் துவங்க வேண்டும் என்றும்
இவற்றை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும்,மாவட்ட கலெக்டருக்கும் மனு அனுப்புவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.துணை தலைவர் அட்டப்பா என்ற நல்ல இப்ராகிம் நன்றி கூறினார்.

Tuesday, February 21, 2012

கீழக்கரை கல்லூரியில் 250க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் !


படவிளக்கம் :-கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் ரோட்டரி சங்க உறுப்பினர் ஆசாத் ரத்ததானம் செய்தார்

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்

கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார்.ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் தினேஷ் பாபு முகாமை துவங்கி வைத்தார். கீழக்கரை ரோட்டரி சங்க செயலாளர் சுப்பிரமணியன்,முன்னாள் செயலாளர் பால சிப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஆலோசகர் மரியதாஸ் வரவேற்றார்.இம்முகாமில் மதுரை மீனாட்சி மிஷன் டாக்டர் ரவி தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 20பேர் கொண்ட குழு கலந்து கொண்டனர்.

Monday, February 20, 2012

முகம்மது சதக் கல்லூரியில் பசுமை கட்டிட கலை கருத்தரங்க நிறைவு விழா !






முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பசுமை கட்டிட கலை கருத்தரங்கம் நிறைவு விழா முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.



கனி ரஹ்மான் கிராஅத் ஓதி விழாவினை துவங்கி வைத்தார்.கல்லூரி செயலாளர் யூசுப் சாகிப் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் ,கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர்,சென்னை புது கல்லூரி சுல்தான் அகமது இஸ்மாயில்,கட்டட கலை ஆலோசகர் ஹாரிஸ்,முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன்,துறை தலைவர் செல்வ பிரியா ,விஓசி கல்லூரி முதல்வர் தாமோதரன்,உள்கட்டமைப்பு துறை தலைவர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் பேசினர்



இவ்விழாவில் கட்டட மாதிரி வடிவமைப்பு கட்டுரை சமர்பித்தலில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலை கழக் கல்லூரி மாணவிகள் பெற்றனர்.மூன்றாம் பரிசை மதுரை தியாகராயர் கல்லூரி பெற்றது. இறுதியாண்டு ஆராய்ச்சி கட்டுரையில் முதல் பரிசை சென்னை மியாசி அகாடமி கல்லூரி பெற்றது. இரண்டாம் பரிசை சென்னை சத்திய பாமா கல்லூரி பெற்றது. மூன்றாம் பரிசை பெரியார் மணியம்மை பல்கலை கழக கல்லூரி பெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் ரவீந்தர் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நஜிமுதீன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

கீழக்கரையில் 3ஆயிரத்து 371குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து !














கீழக்கரையில் 11 மையங்கள் அமைக்கப்பட்டு 5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
பல் வேறு மையங்களில் கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா, துணை தலைவர் ஹாஜா முகைதீன் மற்றும் கவுன்சிலர்கள் பலரும் தமது பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தனர்.


இதில் 3 ஆயிரத்து 371 குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.முகாமில் மருந்து கொடுக்கப்படாத குழந்தைகளுக்கு வீடு,வீடாக சென்று சுகாதார பணியாளர்கள் கொடுத்தனர்.

Sunday, February 19, 2012

நகராட்சி தலைவர் - துணை தலைவர் கூட்டாக‌ பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் !


ப‌ட‌ம் : சாலிஹ் ஹீசைன்
கீழ‌க்க‌ரையில் செய்ய‌து ஹ‌மீதா க‌லை ம‌ற்றும் அறிவிய‌ல் க‌ல்லூரி மாண‌வ‌,மாண‌விய‌ர் ம‌ற்றும் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா,துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன் க‌வுன்சில‌ர் ஆனா மூனா முகைதீன் காதர் சாகிப்,கவுன்சிலர் சுரேஷ், பொதும‌க்க‌ள் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் ப‌ங்கேற்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்க‌ள் விற்பதால் ஏற்ப‌டும் தீமைக‌ள் குறித்த‌ விழிப்புண‌ர்வு ஊர்வ‌ல‌ம் ந‌டைபெற்ற‌து.

ஊர்வ‌ல‌த்தை துவ‌க்கி வைத்த‌ ந‌க‌ராட்சி த‌லைவ‌ரும் ,துணை த‌லைவ‌ரும் மாணவ,மாணவியரும் சாலைக‌ளில் கிட‌ந்த‌ குப்பைகளை அகற்றி குப்பை வாக‌ன‌ங்க‌ளில் கொட்டின‌ர். சுகாத‌ரம் குறித்து விழிப்புண‌ர்வு ஏற்ப‌டுத்தும் வ‌கையில் ந‌டைபெற்ற‌ இந்நிக‌ழ்ச்சியில் ஏராள‌மானோர் ஆர்வ‌த்துட‌ன் ப‌ங்கெடுத்த‌ன‌ர்.

படித்த பள்ளயில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க்க‌ வாய்ப்பளித்தமைக்கு நன்றி ! நகராட்சி தலைவர் !




கீழக்கரை கிழக்குத்தெரு முஸ்லீம் ஜமாத் நிர்வாகத்தில் இயங்கும் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் 31ம் ஆண்டு விழா நடைபெற்றது.

இதில் மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.பள்ளி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா கலந்து கொண்டு அவ‌ர் பேசிய‌தில் ஒரு ப‌குதி,

பிளாஸ்டிக் தீமை குறித்து மாண‌வ‌ர்களாகிய நீங்களும் விழிப்புணர்வு ஏற்ப‌டுத்த‌ வேண்டும் மேலும் இப்ப‌ள்ளி சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌ட்டு வ‌ருகிற‌து.மாண‌வ‌ர்க‌ளாகிய‌ நீங்க‌ள் நன்றாக‌ ப‌டித்து பொது தேர்வுகளில் சிற‌ந்த‌ ம‌திப்பெண்க‌ள் பெற்று இந்த ப‌ள்ளிக்கும் ,ஜ‌மாத்திற்கும் ஆசிரிய‌ பெரும‌க்க‌ளுக்கும் பெருமையை தேடி த‌ரும்ப‌டி இந்த‌ ந‌ல்ல‌ த‌ருண‌த்தில் உங்க‌ளை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவ‌ர் பேசினார்

மேலும் அவ‌ர் கூறிய‌தாவ‌து,

இந்த கைராத்துல் ஜலாலியா ப‌ள்ளியில் தான் நானும் ப‌டித்தேன் என்ப‌து பெருமையாக‌ உள்ள‌து.நான் ப‌டித்த‌ ப‌ள்ளியிலேயே ந‌க‌ராட்சி த‌லைவ‌ராக‌ சிற‌ப்பு விருந்தின‌ராக‌ க‌ல‌ந்து கொள்வேன் என்று நினைத்து பார்க்க‌வில்லை.எல்லா புக‌ழும் இறைவனுக்கே .இந்த‌ வாய்பை கொடுத்த‌ என் ஊர் ம‌க்க‌ளுக்கும்,அழைத்த நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்து மக்களுக்கான ந‌ல‌ப்ப‌ணிக‌ளை செய்து கொண்டிருப்பேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இது குறித்து முன்னாள் மாணவர் ஆசிக் கூறுகையில் ,
இன்றைய‌ மாண‌வ‌,மாணவிக‌ள் நாளைய‌ த‌லைவ‌ர் என்ற‌ க‌ருத்து வ‌லுப்பெறும் வித‌மாக‌
தான் படித்த பள்ளியில் நகராட்சி தலைவராக விழாவில் பங்கு பெற்றது பொறுத்தமான நிகழ்வாகும்

கீழக்கரை பகுதியில் மர்ம ஆசாமிகள் சுற்றி திரிவதாக பொதுமக்கள் புகார் !



கீழக்கரையில் இரவு நேரங்களில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆசாமிகள் திரிவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

கீழ‌க்க‌ரையில் க‌ட்டுமான‌ தொழிலில் ஆயிர‌க்க‌ண‌க்கானோர் ஈடுபட்டு வ‌ருகின்ற‌ன‌ர்.உள்ளூர் தொழிலாள‌ர்க‌ளை விட‌ கூலி குறைவாக‌ பெறுவ‌தாக‌ கூறி வ‌ட‌ மாநில‌ங்க‌ளிலிருந்து ஏஜெண்ட்கள் கட்டிட தொழிலாள‌ர்க‌ளை இப்ப‌குதிக்கு காண்ட்ராக்ட‌ர்களிடம் அழைத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் க‌ட்டிட‌ தொழிலாள‌ர்க‌ள் என்ற‌ போர்வையில் வ‌ட‌ மாநில‌ங்க‌ளை சேர்ந்த‌ ச‌மூக‌ விரோதிக‌ளும் கீழ‌க்க‌ரை ப‌குதியில் ஊடுருவியிருக்கலாம் என்று‌ பொதும‌க்க‌ள் அச்சம் தெரிவிக்கின்ற‌ன‌ர்.


சேகு ச‌த‌க் இப்ராகிம்
இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ இளைஞ‌ர் சேகு ச‌த‌க் இப்ராகிம் கூறுகையில்,

கீழக்கரையில் க‌ட‌ந்த‌ 6 மாத‌ கால‌மாக வீட்டு வாசல்களில் செருப்புகள்,பல்புகள்,கால்நடைகள்(ஆடு,கோழி) திருடுவது என்று சிறு சிறு திருட்டுக்க‌ள் அதிகளவில் ந‌டைபெற்று வ‌ருகிற‌து.சிறு திருட்டுக்களாக இருப்பதினால் பெரும்பால‌ன‌வ‌ர்க‌ள் இதை காவ‌ல்துறைக்கு எடுத்து செல்வ‌தில்லை.த‌ற்போது இர‌வு நேர‌ங்க‌ளில் மின்சார‌ இல்லாம‌ல் இருப்ப‌து இந்த‌ திருட‌ர்க‌ளுக்கு மிகுந்த‌ வ‌ச‌தியாக‌ அமைந்து விட்ட‌து.மேலும் இர‌வு ச‌ந்தேக‌த்தை ஏற்ப‌டுத்தும் வ‌கையில் நேர‌ங்க‌ளில் அடையாள‌ம் தெரியாத‌ சில‌ர் ஊரினுல் சுற்றி திரிகிறார்க‌ள்.

மேலும் ‌ வ‌ட‌ மாநில‌ங்க‌ளை சேர்ந்த‌ ஏராள‌மான கட்டிட‌ தொழிலாள‌ர்க‌ள் கீழ‌க்கரையில் ஊருக்குள் வீடுக‌ளை வாட‌கைக்கு அம‌ர்த்தி த‌ங்க‌ வைக்கப்ப‌ட்டுள்ளார்க‌ள் இவ‌ர்களோடு ஊரின் ந‌ல‌னுக்கு அச்சுறுத்தும் வித‌மாக ஒரு சில‌ ச‌மூக‌ விரோதிக‌ளும் ஊடுருவி இருக்க‌லாம் என்ற‌ ச‌ந்தேக‌ம் எழுகிற‌து.என‌வே காவ‌ல்துறையினர் உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்து ஏஜெண்ட்களை அழைத்து வெளி மாநில‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரின் முக‌வ‌ரிக‌ளை பெற்று தொழிலாள‌ர்க‌ளுக்கான‌ அடையாள‌ அட்டையை ஏற்பாடு செய்ய‌ வேண்டும்.இத‌ன் மூல‌ம் ப‌ல்வேறு பிர‌ச்ச‌னைக‌ளுக்கும் முடிவு க‌ட்ட‌ப்ப‌டும் என்றார்.

Saturday, February 18, 2012

கீழக்கரையில் சட்டவிரோதமாக‌ மது விற்ற இருவர் கைது !


இன்ஸ்பெக்டர் இளங்கோவன்

கீழக்கரை சுடுகாட்டில் காலை மற்றும் இரவுநேரங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக நீண்ட கால குற்றச்சாட்டு நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவனுக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் உத்தரவின் பேரில் எஸ்.ஐ.கார்மேகம் தலைமையில் போலீசார் சுடுகாட்டில் திடீர் சோதனை செய்ததில் கருப்பையா மகன் ராஜிவ் காந்தி(24),முனியான்டி மகன் குமார்(31) ஆகிய இரண்டு சுடுகாட்டின் அருகே மது விற்றதை தொடர்ந்து இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். 8மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

கீழக்கரையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 76 பேர் பணியில் நியமனம் !




கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கனரக உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான அசோக் லேய்ல‌ண்ட் நிறுவனம் சார்பில் பிளஸ் 2 ,ஐடிஐ ,டிப்ளமா தேர்வு பெற்றவர்கள்,தேர்வு பெறாதவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அலாவுதீன் முன்னிலை வகித்தார்.சேக்தாவூத் வரவேற்று பேசினார்.

இத்தேர்வில் மொத்தம் 180 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் பிளஸ் 2 மற்றும் ஐடிஐ படித்த 25 மாணவர்களும்,டிப்ளமா படித்த 51 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட பிளஸ் 2 மற்றும் ஐடிஐ மாணவர்களுக்கு ரூ6940ம் இதர படிகளும்,டிப்ளமா மாணவர்களுக்கு ரூ8400ம் இதர படிகளும் சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் அசோக் லேய்லாண்ட் ஓசுர் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுதுறை துணை மேலாளர் சுந்தர்ராஜன் மற்றும் பயிற்சியாளர் வசந்த் ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் விதிமுறைகளை எடுத்து கூறினர்.

Friday, February 17, 2012

கீழக்கரை கல்லூரியில் அரசின் இலவச தொழில் பயிற்சி ! 125 பேர் தேர்வு!


த‌மிழ்நாடு அர‌சு ம‌க‌ளிர் மேம்பாட்டு நிறுவ‌ன‌ம் சார்பாக‌ ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்டம் கிராமபுறங்களை சேர்ந்தவர்களுக்கு இல‌வ‌ச‌ தொழில் திற‌ன் மேம்பாட்டு ப‌யிற்சி துவ‌க்க‌ விழா முக‌ம்ம‌து ச‌த‌க் பாலிடெக்னிக் க‌ல்லூரியில் ந‌டைபெற்ற‌து.

க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அலாவுதீன் த‌லைமை தாங்கினார். ப‌யிற்சி க‌ண்காணிப்பாள‌ர் பாஸ்க‌ர‌ன் வ‌ர‌வேற்றார். ம‌க‌ளிர் திட்ட‌ இணை இய‌க்குந‌ரும் திட்ட‌ அதிகாரியுமான‌ சுகுமார் ப‌யிற்சியை துவ‌ங்கி வ‌த்தார் மாவ‌ட்ட‌த்தின் கிராம‌புற‌ங்க‌ளிலிருந்து டீச‌ல் மெக்கானிக்,வெல்டிங்,ம‌ற்றும் பேப்ரிகேஷ‌ன்,கார்,ஜேசிபி,ஓட்டுந‌ர் ப‌யிற்சிக‌ளுக்கு 125 பேர் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

மூன்று மாத‌ கால‌ ஊக்க‌தொகையுட‌ன் ந‌டைபெறும் இப்ப‌யிற்சியின் நிறைவில் உரிய‌ ப‌ணி நிய‌ம‌ன‌ம் செய்திட‌ புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌ம் த‌னியார் நிறுவ‌ன‌த்துட‌ன் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌து. மேலும் பாலிடெக்னி திட்ட‌ அலுவ‌ல‌ யேசுவா,ம‌க‌ளிர் மேம்பாட்டு நிறுவ‌ன‌த்தின் உத‌வி திட்ட‌ அலுவ‌ல‌ர் பொன்குமார் ஆகியோர் ப‌யிற்சியின் நோக்க‌ம் ம‌ற்றும் திட்டம் ப‌ற்றி பேசினர்.பயிற்றுந‌ர் நாதர்ஷா நன்றி கூறினார்.

கீழக்கரை அருகே திருப்புல்லாணியில் அமைச்சர்கள் ஆய்வு !





கீழக்கரை அருகே திருப்புல்லாணியில் கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன் ,அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்புல்லாணியில் ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.அமைச்ச‌ர்க‌ளுட‌ன் மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் ந‌ந்த‌குமார்,அதிமுகவின் மாவ‌ட்ட‌ செயலாள‌ர் ஆணிமுத்து,துணை செய‌லாள‌ர் முனிய‌சாமி ,மாவ‌ட்ட‌ சேர்ம‌ன் சுந்த‌ர‌பாண்டிய‌ன் மாவ‌ட்ட‌ க‌வுன்சில‌ர் ச‌ர‌ஸ்வ‌தி பாக்கிய‌நாத‌ன் ,ஊராட்சி ஒன்றிய‌ த‌லைவ‌ர் ராஜேஸ்வ‌ரி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் உட‌னிருந்த‌ன‌ர்.


கடல் அட்டை தடையை நீக்க கீழக்கரை மீனவர் சங்கம் கோரிக்கை! ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ கவனிப்பாரா ?


(பைல் படம் )


கீழக்கரை சிறுதொழில் மீனவர்கள் சங்கத்தின் தலைவர் முகம்மது அலியார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்திற்கு செயலாளர் அட்டப்பா நல்ல இப்ராகிம் முன்னிலை வகித்தார். இதில் கடல் அட்டை தடையை நீக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்புவதென்று முடிவு செய்யப்பட்டது.

அம்மனுவில் கூறியிருப்பதாவது, கடல் அட்டைகள் எளிதில் அழியக்கூடிய இனம் அல்ல என ஜெனிவா சர்வதேச ஆய்வு மையம் கூறுகிறது.ஒரு கடல் பெண் அட்டை 6 மாதத்திற்கு 10 லட்சம் குஞ்சுகள் வீதம் வருடத்திற்கு 20 லட்சம் குஞ்சுகள் பொறித்து இனவிருத்தி செய்கிறது. என மத்திய கடல் மீன் ஆராய்ச்சி கழகம் கூறுகிறது.

மேலும் கடல் அட்டையில் வெள்ளை,சிகப்பு ,கருப்பு என மூன்று வகைகள் உண்டு இவை சிறந்த சத்தான உணவாகும் மருத்துவ குணம் உடையது.போதை தன்மை கிடையாது ஆகவே மத்திய அரசு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 40 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு கடல் அட்டையின் தடையை நீக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதே போல் மாநில அரசுக்கும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




இது குறித்து சிறுதொழில் மீனவர் சங்க செயலாளர் அட்டப்பா என்ற நல்ல இப்ராகிம் கூறுகையில்,


உலகில் 86 நாடுகள் கடல் அட்டையை ஏற்றுமதி செய்து பலகோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது.ஆனால் இந்தியா மட்டும் இந்த லாபத்தை இழந்து வருகிறது.மேலும் சட்டமன்ற தேர்தலின் போது கடல் அட்டைக்கான தடையை நீக்குவேன் என்று ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ வாக்குறுதி அளித்திருந்தார்.எனவே இது குறித்து அவர் உடனடியாக கவனித்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கைராத்துல் ஜலாலியா பள்ளியின் 31ம் ஆண்டு விழா !



கீழக்கரை கிழக்குத்தெரு முஸ்லீம் ஜமாத் நிர்வாகத்தில் இயங்கும் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் 31ம் ஆண்டு விழா நடைபெற்றது.


விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சாதிக் தலைமை தாங்கினார்.பள்ளியின் தலைமை ஆசிரியர் முகம்மது மீரான் வரவேற்றார். டாக்டர் ஜவாஹிர் ஹுசைன் ,நிஜாமுதீம்,அஸ்ஹர்,சேகு அபுபக்கர் சித்தீக், கொடி ஏற்றினர். கல்விக்குழு உறுப்பினர் ஹீசைன் அப்துல் காதர் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். முன்னாள் தாளாளர் மஹ்மூது கரீம் விளையாட்டு போட்டியை துவங்கி வைத்தார்.


இதில் மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன .கிழக்கு தெரு ஜமாத் தலைவர் முகைதீன் அப்துல் காதர் ,கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி தாளாளர் செய்யது இப்ராகிம் ,ஆசிரியர் சையது அப்தாகிர்,ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா,மற்றும் தாளாள‌ர் சாதிக் ஆகியோர் வெற்றி பெற்ற‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு ப‌ரிசுக‌ளையும்,சான்றித‌ழ்க‌ளையும் வ‌ழ‌ங்கினார்.உத‌வி த‌லைமை ஆசிரிய‌ர் சாதிக் அலி ந‌ன்றி கூறினார்.

Thursday, February 16, 2012

கீழக்கரை நகராட்சியின் ம‌க்க‌ள் ந‌ல‌ப்ப‌ணிக‌ளை நான் த‌டுக்க‌வில்லை .. க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகீம் !


நகராட்சியில் தற்போது நிலவும் ஒற்றுமையின்மைக்கும், பிரச்சனைகளுக்கு என்ன காரணம்? மக்கள் நலப்பணிகள் நடைபெறாமல் தடுக்கும் கவுன்சிலர்களில் 18-வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் முக்கிய பங்கு வகிப்பதாக குற்றச்சாட்டு குறித்து க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகீமிட‌ம் கீழக்கரை டைம்ஸ் சார்பாக‌ கேட்ட‌ போது அவ‌ர் பதிலளித்தார்.

கேள்வி: கீழக்கரையில் மக்கள் நலப்பணிகள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக நீங்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறதே?

பதில்: நமது ஊரில் மக்கள் நலப்பணிகள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என பாடுபடும் உண்மையான சமூக நலனில் அக்கறை உள்ளவன் நான் என்பதை பொதுமக்களுக்கும் நான் கூறி தெரிய வேண்டியதில்லை.
கடந்த காலங்களில் ஊழலே தலையாய நிலைபாடாக கொண்டு அந்த நகராட்சி நிர்வாகத்தால் நமது நகர் மக்கள் அடைந்த வேதனைகள் ஏராளம்.கடந்த காலங்களில் மக்கள் பிரதிநிதிகளை நாம் எந்த அளவு விமர்சனம் செய்திருகின்றோம் என்பதையும் அறிவோம். கடந்த ஆட்சியில் பல கோடி ஒதுக்கப்பட்டு நமது கீழக்கரையில் எந்த உருப்படியான திட்டமும் நடைபெறவில்லை. இதை உணர்ந்த மக்கள் நங்கு சிந்தித்து எங்களை தங்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்திருக்கிறார்கள். தேர்வு செய்த பொது மக்களின் சாபத்திற்க்கு ஆளாக கூடாது என்பதால்தான் இந்த நகர் மக்களுக்கு முதலில் என்ன தேவையோ அதை செயல்படுத்துங்கள் என்று எங்களது கோரிக்கைகளை முன் வைக்கின்றோம் என்பதுதான் உண்மை.

கேள்வி: சேர்மன் அவர்களுடன் அவருடைய கணவரும் அவருடைய உறவினர்களும் உடன் வரக்கூடாது என துணைச்சேர்மன் ,நீங்கள் உள்பட சில கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவிப்பதாக சொல்லப்படுகிறதே ?ஏன் கணவர் உடன் வரக்கூடாதா ?

பதில்: இந்த கேள்வியை தாங்கள் கேட்பது வேதனையாக உள்ளது. இப்படி ஒரு தவறான செய்தியை மக்கள் தன்மீது அனுதாபம் அடைய வேண்டும் என்பதற்காகவே இதை அவர்கள் தரப்பு கூறி வருகின்றார்கள். சேர்மன் அவர்களுடன் இன்னும் ஏழு பெண் கவுன்சிலர்கள் இருகின்றார்களே அவர்களை பற்றி இவர்கள் ஏன் கவலை படவில்லை. எந்த இஸ்லாமிய பெண்ணும் வெளியில் வரும்போது தக்க துணையுடன் வரவேண்டும் என்பது இறைக்கட்டளை. இதற்கு மாற்றமாக யார் கூறினாலும் உண்மையான மூஃமினாக இருக்க முடியாது. அவர் துணையாக வருவதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. நாங்கள் கூறுவதையெல்லாம் நிர்வாகத்தில் அவர்களுடைய கணவரோ, உறவினறோ நேரிடையாக தலையிட கூடாது என்பது மட்டும்தான். இப்படிபட்ட சம்பவம் கடந்த நான்கு மாத காலமாக நகராட்சி நிர்வாகத்தில் பலமுறை நடந்துள்ளது என்பதை தாங்களும் பொது மக்களும் அறிந்ததே. இனி வரும் காலங்களில் இப்படிபட்ட தலையீட்டை எந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டோம்.

கடந்த கால ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பகுதிகளில் ஊழல் மலிந்து இருந்ததுடன் மக்கள் திட்டங்கள் உருப்படியாக சென்று அடையவில்லை என்பது வரலாறு.இதை உணர்ந்த மாண்புமிகு முதல்வர் அவர்கள் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் கணவன், உறவினர்கள் தலையிட கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.


கேள்வி: தங்கள் 18வது வார்டை முறையாக கவனிப்பது இல்லை என கூறப்படுகின்றதே?

பதில்: கடந்த காலங்களில் எங்கள் வார்டில் பல தெருவிளக்குகள் எறிவது இல்லை. தற்போது அனைத்து விளக்குகளும் எறிந்து கொண்டு இறுக்கின்றது. இதற்காக நகராட்சி தெருவிளக்கு பராமரிப்பாளர் திரு. ரமேஷ் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கின்றேன். தங்கள் கீழக்கரை டைம்ஸ் சுட்டிக்காட்டிய சின்னக்கடை தெரு பகுதியில் காணப்பட்ட குப்பைகளை அகற்றி இன்று வரை சுத்தமாக வைக்க முயற்சி செய்கின்றேன். விரைவில் சுகாதாரத்தை வலியுறுத்தி அறிவிப்பு பலகை வைக்க ஆவண செய்ய இருக்கின்றேன். வார்டு மக்கள் நலன் கருதி சுமார் 8 இடங்களில் குடிநீர் குழாய் அமைக்க நகராட்சி நிர்வாகத்தை கேட்டு இருக்கின்றேன். அரசு அறிவித்துள்ள முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை, திருமண உதவித் தொகை மற்றும் மருத்துவ உதவித் தொகை தகுதி உள்ள நபர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்கின்றேன்.

கேள்வி: தற்போது பல நல்ல திட்டங்களை நகராட்சி நிர்வாகம் செய்து வருகின்றது. குறிப்பாக கீழக்கரையில் பூங்கா அமைக்க நடவடிக்கை என்று பல்வேறு நலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றதே இதை பற்றி உங்கள் கருத்து?

பதில்: கடந்த முறை கீழக்கரை கடற்கரையில் பூங்கா அமைப்போம் என்று பதவிக்கு வந்தவர்கள் கீழக்கரையையே குப்பை நகராக மாற்றி தன் நிலைகலை உயர்த்திக் கொண்டார்கள். தற்போது கீழக்கரைக்கு முறையான குடிநீர் வினியோகம், குப்பைகளை முழுமையாக நீக்க ஆக்கபூரவமான நடவடிக்கை, வாருகால்களில் மூடி அமைத்தல் இதை தான் தற்போது நகர் மக்கள் எதிர்பார்கின்றார்கள். மலேரியா மருந்து மற்றும் புகை அடிக்கப்பட்டு பல நாட்களாகி விட்டது. இதனால் மக்கள் நோய்களால் அவதி படுகிறார்கள். நகராட்சி நிர்வாகம் இதில்தான் கவனம் செலுத்த வேண்டும். இந்நகர் மன்றம் பதவி ஏற்று 4 மாதம் ஆகியும் சுகாதாரத்தில் பழைய நிலையே நீடிக்கின்றது என்பது வேதைனையாக இருக்கின்றது.


கேள்வி: கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சிறப்புக் கூட்டத்தை புறக்கணித்த காரணம் என்ன?

பதில்: கீழக்கரை வாழ் நண்பர்களுக்கும், நடுநிளையாலர்களுக்கும் உங்கள் இணையதளம் மூலம் என் கருத்தை வெளியிட்டிருந்தீர்கள். இந்தியாவை பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை நாளாக உள்ளது. ஆனால் கீழக்கரை போன்ற இஸ்லாமியர்கள் பெரும்பானையாக வாழும் நகரங்களில் கல்விக்கூடங்களும், வியாபார நிறுவனங்களும் வெள்ளிக்கிழமைதான் விடுமுறையாக இருகின்றது. வெள்ளிக்கிழமை காலையில் நகர்மன்ற கூட்டம் நடத்தினால் ஜும்மா தொழுகைக்கு செல்ல வேண்டும் என்பதால் முழுமையான விவாதத்தில் கலந்து கொள்ள முடியாது. மாலை நேரம் கூட்டம் நடத்தினால் இந்த விடுமுறை நாளை குழந்தைகளுடன் கழிக்க முடியாது. கவுன்சிலர்களான எங்களுக்கும் உணர்வு இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த நகர் மன்ற கூட்டங்களில் அனைத்து கவுன்சிலர்களும் வெள்ளிக்கிழமை கூட்டம் நடத்த வேண்டாம் என்று கூறினார்கள் இதை மரியாதைக்குரிய சேர்மன் அவர்களும் புரிந்து கொண்டார்கள். ஆனால் கடந்த நகர்மன்ற கூட்டம் கவுன்சிலர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதனால் ஜனநாயக வழியில் என்னுடைய எதிர்ப்பை தெரிவித்து முறையாக நகர்மன்ற கவனத்திற்க்கு எழுத்து பூர்வமாக தெரிவித்து புறக்கணிப்பு செய்தேன். என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்பெரும்பான்மையான கவுன்சிலர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதால் தான் புறக்கணிப்பு செய்தேன். இப்படிபட்ட ஜனநாயக வழி போராட்டம் தொடரும்.


கேள்வி: கடந்த முறை நகராட்சி கூட்டத்தில் விடப்பட்ட டெண்டரை ஏன் எதிர்த்தீர்கள்? திட்டம் நிறைவேறவில்லை என்றால் அரசு நிதியை திரும்ப பெற்று விடும் என்று கூறப்படுகிறதே?இதனால் கீழக்கரையின் நலனுக்கு பாதிப்பு ஏற்படாதா?

பதில்: நாங்கள் கூறுவது எல்லாம் இந்த நகருக்கு தேவையான அடிப்படை வசதிகளை முதலில் செய்யவேண்டும் என்பதுதான். கீழக்கரைக்கு சாலைகள் மட்டும் அமைப்பதால் பெரும் அளவில் முறை கேடுகள் மட்டுமே நடைபெறும். எனவே முதலில் குடிநீர் குழாய் பதிக்க வேண்டும் கழிவு நீர் வாய்கால்களை சீரமைக்க வேண்டும். அதன்பின் தான் சாலை அமைக்க வேண்டும் என்பதால் தான் இந்த டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தினோம். மேலும் டெண்டர் அவசர கதியில் விடப்பட்டதால் முறையாக விதிகள் பின்பற்றபடவில்லை என்பதும் ஒரு காரணம். இதனால் நிதி திரும்ப சென்றுவிடும் என்பது எல்லாம் கிடையாது . காரணம் நகராட்சிக்கு ஒதுக்கப்படும் எந்த நிதியும் எக்காரணம் கொண்டும் திரும்ப அரசு பெறாது. அது நமது நகராட்சியின் பொது நிதியில் சேர்த்துக் கொள்ள நகர்மன்றம் நடவடிக்கை எடுக்கலாம். எங்கள் நோக்கம் எல்லாம் மக்கள் வரிப்பணம் உண்மையாக மக்களை சென்று அடைய வேண்டும் என்பது மட்டுமே.

கேள்வி: நகராட்சியில் நிலவும் ஒற்றுமையின்மைக்கு என்னதான் தீர்வு? உங்கள் கருத்து என்ன?

பதில்: நாங்கள் முன் வைக்கும் அனைத்து காரணங்களும் நியாயமானவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இங்கு நிலவும் ஒற்றுமையின்மையை போக்க உண்மையான சமூக நலனில் ஆர்வம் கொண்டவர்கள் முன்னிலையில் அனைவரும் அமர்ந்து பேசி ஒரு சிறப்பான நகராட்சி நிர்வாகம் அமைய நாம் அனைவரும் திட்டமிட்டு செயல்பட முயற்சி செய்யலாம் என்பது எனது கருத்தாகும். இதற்காக உங்களை போல பத்திரிக்கையாளர்கள் முயற்சி மேற்கொள்ளலாம். மரியாதைக்குரிய சேர்மன் அவர்கள் நகராட்சி நிர்வாகம் பற்றி ஆலோசனை கேட்க தகுதி உள்ளவர்களையும், நல்லவர்களையும் ஆலோசகர்களாக தேர்வு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இருபாலருக்கும் த‌னி ,த‌னி தேர்வு அறை !கீழக்கரை பள்ளி கோரிக்கை குறித்து அர‌சு ப‌ரிசீல‌னை.


கொடுக்கப்பட்ட மனு

அரசு தரப்பில் பதில் கடிதம்
பள்ளிகளில் அரசு பொது தேர்வின் போது மாணவர்களையும் ,மாணவிகளையும் ஒரே இடத்தில் தேர்வு எழுத செய்வதினால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க மாணவர்களையும்,மாணவிகளையும் தனி தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்க கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் மனு அனுப்பியிருந்தார்.

இது குறித்து அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியிருந்த‌ கோரிக்கை மனுவில் ......
அரசு பொது தேர்வுகளில் மாணவ மாணவியரை ஒரே இருக்கையில் அமர வைத்து தேர்வுகளை எழுத கடந்த முறை இருந்த அரசு நடைமுறைத்தியது.இவ்வாறு ஒரே இருக்கையில் மாணவ மாணவியரை தேர்வு எழுத வைப்பதால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதுடன் அவர்களின் தேர்ச்சி சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது மேலும் விரும்பதகாத விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் வருத்தமும் கவலையும் அடந்துள்ளனர் குறிப்பாக முஸ்லீம் கோஷா மாணவியர் அதிகமுள்ள எங்களை போன்ற பள்ளிகளில் அதிக அளவில் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது.இதுகுறித்து தமிழக அரசுக்கும் மாநில கல்வித்துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் பள்ளியின் சார்பாகவும் பெற்றோர்களின் சார்பாகவும் எழுத்து பூர்வமாக முறையிட்டும் எந்த தீர்வும் ஏற்படாமல் உள்ளது.

எனவே தாங்கள் இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு மாணவ ,மாணவியரின் நலனின் பாதிப்பு ஏற்படாதவாறு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இந்த‌ கோரிக்கை குறித்து ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ க‌ல்வி அலுவ‌ல‌ருக்கு, ந‌ரேஷ் (இணை இய‌க்குந‌ர் ,அர‌சு தேர்வுக‌ள் இய‌க்க‌க‌ம்) இந்த‌ ம‌னு குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ உத்த‌ர‌விட்டுள்ளார்.

அரசின் க‌டித‌ ந‌க‌ல் மேலே த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.

இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம் கூறுகையில்,
இந்த கோரிக்கை குறிந்து நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறோம்.இது வரை நல்ல பதில் கிடைக்காத சூழ்நிலையில் தற்போது தான் மாநில கல்வித்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்விதுறைக்கு அறிவுறுத்தியுள்ளது. விரைவில் இதற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

Wednesday, February 15, 2012

மாநில அளவில் கீழக்கரை மாணவி மூன்றாம் இடம் !



கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த மஹ்தூமியா உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி முபாரக் நிஷா உலக திருக்குறள் பேரவை நடத்திய திருக்குறள் மனனம் செய்து எழுதும் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்று கேடயம் பரிசாக பெற்றார்.

இவரை பள்ளி தாளாளர் ஹமீது சுல்தான்,தலைமை ஆசிரியர் கிருஸ்ணவேனி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

17-02-12(வெள்ளிக்கிழமை)கீழக்கரையில் வேலை வாய்ப்பு முகாம் !ச‌ம்பளம் மற்றும் விப‌ர‌ங்க‌ள்!



கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை மறுதினம் 17-02-12ல் டிப்ளமா,ஐடிஐ,+2 படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

மேலே நோட்டீசில் குறிப்பிட்டுள்ள தகுதிகள் உள்ள ஆண்கள் தங்களது விண்ணப்பங்களோடு கல்வி மற்றும் வயது சான்றிதழ்களோடு 17-02-12 வெள்ளிக்கிழமை நேரில் செல்ல‌ வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்க‌ள் :009500048105,9790015262,04567 - 244392

சேது எக்ஸ்பிரஸ் தப்பியது !சென்னை அருகே தண்டவாளத்தில் விரிசல் !



விபத்தில் இருந்து தப்பிய சேது எக்ஸ்பிரஸ். அடுத்த படம்: தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரி செய்யப்படுகிறது.
மறைமலைநகர் சாமியார் கேட் அருகே நேற்று காலையில் கேங் மேன் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். 6.30 மணியளவில் தண்டவாளத்தின் இணைப்பு பகுதியில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தார். அந்த நேரத்தில் ராமநாதபுரத்தில் இருந்து சேது எக்ஸ்பிரஸ் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், கையில் வைத்திருந்த சிவப்பு கொடியை காட்டி ரயிலை நிறுத்தி னார்.

உடனே தாம்பரம், மறைமலைநகர் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு, விரிசல் சரி செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன. நேற்று மதியம் 30 கி.மீ வேகத்தில் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டன. மாலையில் தண்டவாளம் முழு வதுமாக சரி செய்யப்பட்டு வழக்கம் போல் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டன.

இதனால் தென் மாவட்டத்தில் இருந்து வந்த அனைத்து ரயில்கள், புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. அரசு, தனியார் ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். கடந்த 3 வாரங்க ளுக்கு முன்பு மறை மலைநகரிலேயே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட் டது குறிப்பிடத்தக் கது.
நன்றி : தினகரன்

Tuesday, February 14, 2012

போலி பெயரில் விஷமம்! காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்ப‌தாக‌ அறிவிப்பு !


இன்ஸ்பெக்டர் இளங்கோவன்


தொலைபேசியில் மிரட்டல்,செல்போனில் மிரட்டல் என்றெல்லாம் புகார்கள் கூறப்படும் தற்போது சமூக இணையதளங்களில் போலி முகவரிகளில் மிரட்டுவதாக பல்வேறு இடங்களில் குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கீழக்கரையை சேர்ந்தவர் முகம்மது சாலிஹ் என்ற கீழை இளையவன் சமூக சேவையில் ஆர்வமுள்ள இவர் மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் பொருளாளராக இருந்து வந்தார் சில நாட்களுக்கு முன் அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் கூறியதாவது,

தற்சமயம் சமூக வலைதளத்தில், எந்தவித முகவரியும் இல்லாத சில விசமிகள், ஊர் நலனில் திடீர் அக்கறை கொண்டு உண்மைகள் சொல்ல முனைந்திருப்பதாக கூறிக் கொண்டு, என்னை பற்றி தவறான நச்சுக் கருத்துக்களை கூறிக் கொண்டு வலம் வருவதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இது போன்று முகவரி இல்லாமல் குறை கூறித்திரியும் இவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தாங்களும் முயற்சிக்க வேண்டுகிறேன். இது போன்ற செய்திகளை மறுபடியும், இவர்கள் வெளியிட்டால், 'சைபர் கிரைம்' போலீசாரிடம் முறைப்படி புகார் தெரிவித்து, அந்த மர்ம ஆசாமிகள் பயன்படுத்தும் அவர்களுடைய IP முகவரிகள், புதிய தொழில் நுட்பம் மூலம் கண்டு பிடிக்கப்படும் போது, அவர்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்ற மாதம் இதே போல் எழுந்த வேறு ஒரு குற்றச்சாட்டு குறித்து கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது,
இது தொடர்பாக இதுவரை புகார்கள் எதுவும் வரவில்லை மேலும் இது போன்ற‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ள் மீது க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்கப்ப‌டும். இது தொட‌ர்பான‌ புகார்க‌ளை எங்க‌ளிட‌ம் அளிக்க‌லாம் அந்த புகார்கள் உரிய‌ முறையில் சைப‌ர் கிரைம் பிரிவுக்கு அனுப்ப‌ப்ப‌ட்டு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ த‌யாராக‌ இருக்கிறோம் என்றவாறு அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.