திருவனந்தபுரத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு கேரளாவை சேர்ந்தவர்கள் வேனில் பயணம் மேற்கொண்டனர்.கீழக்கரை வண்ணாந்துறை பகுதியில் அமைந்துள்ள துணை மின் நிலையம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இதனால் வேனில் பயணம் செய்தவர்களில் இரண்டும் பேர் காயமடைந்தனர்.இரவு நேரமானாலும் சம்பவ இடத்திற்கு வந்த கீழக்கரையை சேர்ந்தோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.காயமடைந்த பயணிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்திவிட்டு சிலர் குறுக்கே வந்ததால் விபத்து நடைபெற்றதாக சிலரும்,இரவு நேரமானதால் டிரைவரின் தூக்கத்தினால் ஏற்பட்ட கவன குறைவால் இந்த விபத்து நடைபெற்றதாகவும் சிலர் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கனரக வாகனம் மூலம் விபத்துக்குள்ளான வேன் அகற்றப்பட்டது.
பல ஆண்டுகளாக இப்பகுதி யில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.
2009ம் ஆண்டு நடைபெற்ற விபத்து
சாலையின் ஓரத்தில் வீசப்படும் வேக தடுப்பு வேலி
கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் வண்ணாந்துறை அருகே சாலை வளைவில் அடிக்கடி விபத்து நடைபெற்று வந்ததால் ரோட்டரி சங்கத்தின் உதவியுடன் காவல்துறை சார்பில் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக சாலையில் இரும்பு தடுப்பு வளைவு வேலிகளை அமைத்திருந்தனர்.ஆனால் லாரிகளில் வருபவர்கள் தடுப்புகளை சாலையோரம் வீசி விட்டு லாரிகளை வேகமாக ஓட்டி செல்வதாகவும் இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உடைத்து எடுக்கப்பட்டுள்ள ஒளிரும் விளக்கு
கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் வண்ணாந்துறை அருகே வளைவில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. இதனையடுத்து அரசு சார்பில் விபத்துகளை தவிர்க்கும் விதமாக வளைவுகளில் ஏராளமான கற்கள் பதித்து இரவு நேரங்களில் ஒளிரும் பிளாஸ்டிக் ஸ்டிக்கர் விளக்குகளை பொருத்தியிருந்தார்கள். இதன் மூலம் ஒளிரும் விளக்குகள் இரவு நேரம் வாகன ஒட்டிகளுக்கு மிகவும் உதவியாக இருந்து வந்தது .அதையும் சிலர் உடைத்து எடுத்து விட்டதை காணலாம்.
வண்ணாந்துறை அருகே உள்ள மதுக்கடைதான் விபத்துக்களுக்கு காரணம் என சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே அதை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இப்பகுதியில் போக்குவரத்து காவலரை நிறுத்த வேண்டும்.அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்தி இப்பகுதியை விபத்து பகுதியாக அறிவித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்