கீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வணிக வளாகத்தின் சேதமடைந்த பகுதி உடைந்து டூவீலர் மீது விழுந்து கிடக்கிறது.
கீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் டூவீலர் ஒன்று சேதமடைந்தது. இது மக்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் விழுந்ததால் உயிர் பலி தவி்ர்க்கப்பட்டது.
கீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இது கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வளாகத்தில் தற்போது மீன், காய்கறி கடைகளும் கூட்டுறவு ரேஷன் கடையும் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த வளாகத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.
இந்த வணிக வளாகத்தின் சைன்சைடு பகுதி பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்தது. மக்கள் நடமாட்டம் உள்ள பகல் நேரத்தில் விழுந்தால் உயிர் பலி ஏற்படக்கூடும். அதனால் நகராட்சி நிர்வாகம் சைன்சைடு பகுதியை புதுப்பிக்க வேண்டும் என்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தினகரன் செய்தி வெளியிட்டிருந்தது. இதை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வணிக வளாகத்தின் சைன்சைடு பகுதி திடீர் என்று இடிந்து விழுந்தது. அதில் அங்கிருந்த டூவீலர் ஒன்று சேதமடைந்தது. இது பகல் நேரத்தில் நடந்திருந்தால் உயிர் பலி ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
21வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரகாஷ் கூறியதாவது: “நகராட்சியின் பழமையான வணிக வளாகத்தை சீரமைக்க பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளும், தலைவரும் கூறினார்கள். ஆனால் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது இரவு நேரத்தில் நடந்ததால் உயிர் பலி தவிற்க்கப்பட்டுள்ளது. இதனியாவது நகராட்சி வணிக வளாகத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, கீழக்கரையில் சேதமடைந்துள்ள நகராட்சியின் வணிக வளாகத்தை இடித்து விட்டு புதியதாக கட்டுவதற்கு வலியுறுத்தியும்,நகராட்சி திட்டப்பணிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் இவற்றை கண்டித்து ஆர்ப்பட்டம் மற்றும் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் நகர் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன் ,குருவேல் ,மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவி,கல்யாணசுந்தரம்,கண்ணகி முன்னிலை வகித்தனர். மேலும் நிர்வாகிகள் விக்டர்,கருப்பசாமி,முருகேஷ்குமார்,பழனிசாமி, உள்ளிட்ட ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.