Sunday, April 14, 2013

கீழ‌க்க‌ரை செய்யது முகம்ம‌து அப்பா த‌ர்ஹா நிக‌ழ்ச்சி!



கீழக்கரை மகான் குத்பு செய்யது முகம்மது அப்பா ஷகீது ஒலியுல்லா தர்ஹா கந்தூரி நிக‌ழ்ச்சி நேற்று மாலை கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.
கீழக்கரையில் உள்ள மகான் குத்பு செய்யது முகம்மது அப்பா ஷகீது ஒலியுல்லா தர்ஹாவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா ந‌டைபெறும்.
இந்தாண்டு கடந்த மார்ச் 13ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கி 14 நாட்கள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தர்ஹா நிர்வாகி சதக்கத்துல்லா ஆலிமுசா தலைமையில் மாவட்ட டவுன் காஜி சலாஹூதீன், அப்துல்சலாம் ஆலிம், பீர்முகம்மது ஆலிம், முத்து அபூபக்கர் சித்திக் முன்னிலையில் மவுலீது  ஓதப்பட்டு கொடியிறக்கப்பட்டது.

இதையடுத்து ஆயிரகணக்கானவர்களுக்கு நெய்சோறு வழங்கப்பட்டது, உலக ஒற்றுமைக்காகவும் நன்மைக்காகவும் துஆ (பிராத்தனை) செய்யப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் மக்பூல்சுல்தான், அடுமை, காசிம், பாருக், ஜலால், ஹாஜா உட்பட ஏராளமானோர் செய்திருந்தனர். ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

 

Saturday, April 13, 2013

இஸ்லாமியா பள்ளியில் மழலை மாணவ,மாணவியருக்கு பட்டமளிப்பு விழா!

இஸ்லாமியா ப‌ள்ளி சார்பில் ம‌ழ‌லைய‌ரின் அழ‌கிய‌ அழைப்பித‌ழ்

இஸ்லாமியா ப‌ள்ளிக‌ளின் தாளாள‌ர் எம்.எம்.கே முகைதீன் இப்ராகிமிட‌மிருந்து உற்சாக‌த்துட‌ன் ப‌ட்ட‌ம் பெறும் ம‌ழ‌லை மாணவ‌ர்

கீழக்கரை தெற்குத்தெரு இஸ்லாமியா  மெட்ரிக் பள்ளியில் மற்றும் எல்கேஜி,யூகேஜி ,வகுப்பை நிறைவு செய்து 1ம் வகுப்புக்கு செல்லும் பிஞ்சு குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தெற்கு தெரு ஜ‌மாத் த‌லைவ‌ர் ஜாஹிர் ஹுசைன் கள‌ஞ்சிய‌ம்  தலைமை வகித்தார்.பள்ளிகளின் தாளாளர் முகைதீன் இப்ராகிம்,ஜ‌மாத் செய‌லாள‌ர் பொள‌சுல் ர‌ஹ்மான்,உறுப்பின‌ர் அப்துல் வாஹித்,க‌ல்விக்குழு தலைவ‌ர் சீனி முக‌ம்ம‌து,‌ ச‌ப் க‌லெக்டர் ர‌வீந்த‌ரன், ஆர்.டி.ஓ குண‌சேக‌ர‌ன்.ஹ‌மீதியா தொட‌க்க‌ப்ப‌ள்ளி தாளாள‌ர் சிராஜீதீன், ச‌த‌க் இன்ஞினிய‌ரிங் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ஜ‌காப‌ர்,,இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸடிஸ் முன்னிலை வகித்தனர். த‌லைமை ஆசிரிய‌ர் சார்த்தோ வ‌ர‌வேற்றார்.யு கே ஜி மாண‌வி பாத்திமா ஹாலிஷா கிராஅத் ஓதினார்.

ப‌ட்ட‌ம‌ளிப்பு விழா எத‌ற்காக‌ என்ப‌து குறித்து யு கே ஜி மாண‌வி ஆயிஷ‌த் ந‌ஃபா விள‌க்கி கூறினார்.

 இந்நிகழ்ச்சியில் ஹைராத்துல் ஜ‌லாலியா தொட‌க்க‌ப்ப‌ள்ளி த‌லைமை ஆசிரிய‌ர் சுரேஷ்குமார் முன்னாள் கவுன்சிலர்க‌ள் முகம்மது காசிம்,ஜ‌மால்,வேல்சாமி மற்றும் பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கீழ‌க்க‌ரையில் 350க்கும் மேற்ப‌ட்ட‌ மாண‌வ‌,மாண‌விய‌ர் ரத்தான‌ம்!


ராமநாதபுரம்மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம்,அரசு மருத்துவமனை மறறும் மீனாட்சி மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய இலவச இரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் தலைமை வகித்தார் இயக்குநர் ஹபீப்முகம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார் திட்டஅலுவலர் சிவபாலன் வரவேற்றார் இதில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர் ரவி தலைமையில் குழுவினர் கலந்து கொண்டு இரத்தம் சேகரித்தனர்

இம்முகாமில் 350க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு இரத்ததான செய்தனர் இறுதியில் திட்டஅலுவலர் முத்தவேல் நன்றி கூறினார் இவ்விழாவில் பேராசிரியர்கள் கார்த்திகேயன்,முகம்மதுரபி,சேக்யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்

கீழ‌க்க‌ரை ஹைராத்துல் ஜ‌லாலியா ப‌ள்ளி அறிவியில் க‌ண்காட்சி!





கீழக்க‌ரை கிழ‌க்குத்தெரு கத்துல் ஜ‌லாலியா தொட‌க்க‌ப்ப‌ள்ளி அறிவிய‌ல் க‌ண்காட்சி ந‌டைபெற்ற‌து.
ப‌ள்ளி தாளாள‌ர் செய்ய‌து இப்ராகிம் த‌லைமை வ‌கித்து க‌ண்காட்சியை துவ‌ங்கி வைத்தார்.ஜ‌வ‌ஹ‌ர் சாதிக்,முன்னாள் தாளாள‌ர் ம‌ஹ்மூது க‌ரீம்,க‌ல்விகுழு உறுப்பின‌ர் அப்துல் காத‌ர்,இஸ்லாமிய‌ மெட்ரிக் தொட‌க்க‌ப்ப‌ள்ளி த‌லைமை ஆசிரிய‌ர் ஜோச‌ப் சார்த்தோ முன்னிலை வ‌கித்த‌ன‌ர். த‌லைமை ஆசிரிய‌ர் சுரேஷ்குமார் வ‌ர‌வேற்றார்.ப‌ள்ளி மாண‌வ‌,மாண‌விக‌ள் த‌ங்க‌ளின் ப‌டைப்புக‌ளை தோட்ட‌க்க‌லை,ம‌ற்றும் லைட் ஹ‌வுஸ்,ராக்கெட் போன்ற‌ அறிவிய‌ல் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ பொருள்க‌ளை காட்சி பொருள்க‌ளாக‌ வைத்திருந்த‌ன‌ர்.
ப‌ள்ளியின் மேலாண்மை குழு உறுப்பின‌ர்க‌ள் ஹ‌ஸ்ம‌த் ஹ‌சீனா,சேக் சுபைதா,புதிய‌ த‌மிழ‌க‌ம் மாவ‌ட்ட ம‌க‌ளிர்  அணி செய‌லாள‌ர் ர‌ஹ்ம‌த் நிஷா , சுலைமான் ம‌ற்றும் ஜ‌மாத்தார்க‌ள் பெற்றோர்க‌ள் ஆசிரிய‌ர்க‌ள் உள்பட‌ பல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

Thursday, April 11, 2013

கீழ‌க்க‌ரையில் 2கிலோ க‌ஞ்சா ப‌றிமுத‌ல்!ஒருவ‌ர் கைது!


கீழ‌க்க‌ரை போலீஸ் த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவ‌தாவ‌து,

கீழ‌க்க‌ரை ஏர்வாடி முக்கு ரோட்டில் கீழ‌க்க‌ரை கீழ‌க்க‌ரை போலீஸ் எஸ்.ஐ கோட்ட‌ச்சாமி த‌லைமையில் வாக‌ன‌ ப‌ரிசோத‌னையில் ஈடுப‌ட்ட‌ போது

ராம‌நாத‌புர‌த்திலிருந்து கீழ‌க்க‌ரை நோக்கி வ‌ந்த‌ ஆட்டோ ஒன்று போலீசாரை க‌ண்ட‌தும் வேறு ஒரு பாதையில் திரும்பிய‌து போலீசார் ம‌ற்றொரு பாதை வ‌ழியாக‌ சென்று ஆட்டோவை ம‌றித்த‌ சோதனை செய்த‌ போது 2 கிலோ எடையுள்ள‌ க‌ஞ்சாவை‌ விட்டு விட்டு ஆட்டோவில் இருந்த கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌‌ சாஹீல் ஹ‌மீது(32) என்ப‌வ‌ர் த‌ப்பி ஓடினார்.

ஆட்டோவை ஓட்டி வ‌ந்த‌ ராம‌நாத‌புர‌ம் பேராவூரை சேர்ந்த‌ முனிய‌சாமியை(23) கைது செய்து 2 கிலோ க‌ஞ்சாவையும்,ஆட்டோவையும் ப‌றிமுத‌ல் செய்த‌ன‌ர். த‌ப்பி ஓடிய‌ சாஹுல் ஹ‌மீதை தேடி வருகின்ற‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை அருகே க‌டற்க‌ரையில் இற‌ந்த‌ நிலையில் டால்பின் !



கீழ‌க்க‌ரை அருகே தோப்பு வ‌ல‌சை க‌ட‌ற்க‌ரையில் டால்பின் மீன் இற‌ந்த‌ நிலையில் க‌ரை ஒதுங்கிய‌து.


தோப்பு வ‌ல‌சை க‌ட‌ற்க‌ரையில் 2மீட்ட‌ர் நீள‌மும் 1 மீட்ட‌ர் சுற்ற‌ள‌வும் சுமார் 40 கிலோவுக்கும் மேல் அதிக‌ எடை கொண்ட‌‌ டால்பின் வாய் ப‌குதியில் காய‌த்துட‌ன் உயிர‌ழ‌ந்து கிட‌ந்த‌து.உட‌ன‌டியாக‌ வ‌ன‌த்துறையின‌ருக்கு த‌க‌வ‌ல் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.அப்ப‌குதியை சேர்ந்த‌ சிறுவ‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் அங்கு குவிந்த‌ன‌ர்.

இது குறித்து அங்கு வ‌ந்து பார்வையிட்ட‌ வ‌ன‌ச்ச‌ர‌க‌ர் ஜெய‌ராம‌ன் கூறிய‌தாவது, இந்த‌ டால்பின் க‌ட‌லில் ‌துள்ளி குதிக்கையில் பாறைக‌ளில் மோதி இறந்து இருக்க‌லாம் என‌ தெரிவித்தார்.


இற‌ந்த‌ டால்பின் மீனை ரெகுநாத‌புர‌ம் கால்ந‌டை ம‌ருத்துவ‌ர் சித்தி ஹ‌ர்ஜிதா பிரேத‌ ப‌ரிசோத‌னை செய்தார்.பின்ன‌ர் ப‌ள்ள‌ம் தோண்டி புதைக்க‌ப்ப‌ட்ட‌து.

ராமநாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் க‌ட‌ல்நீரை குடிநீராக்கும் நிலைய‌ங்க‌ள்!முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா அறிவிப்பு!




முதல்-அமைச்சர் ஜெயலலிதா  சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கட்தொகைக்கேற்ப குடிமைப் பணிகளை உயர்ந்த அளவில் நிறைவேற்றிக் கொடுப்பதும், நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதும் உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமை என்றாலும், மாநில அரசுக்கும் இதில் பொறுப்பு உள்ளது.

இதனை உணர்ந்த எனது தலைமையிலான அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்ல சுற்றுப்புற சூழலை ஏற்படுத்துவதிலும், பொது சுகாதாரத்தை பராமரிப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதிலும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் 3.80 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் எனது ஆட்சிக் காலத்தில்தான் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 3.80 மில்லியன் லிட்டர் குடிநீரை பெறமுடியும்.

இதேபோன்று, ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில்தான் வடிவமைக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் உள்ளூர் நீராதாரங்களின் தரமும், நம்பகத்தன்மையும் தற்போது குறைந்து வருவதால், இம்மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க நிரந்தரத் தீர்வு காணவேண்டியது அவசியமாகிறது.

எனவே, சென்னை மாநகரத்தின் நீர்த் தேவையை சமாளிக்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்ததுபோல், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நிலவும் நிலத்தடி நீரின் நிலையற்ற தன்மை மற்றும் குடிநீர் தர பிரச்சனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து காலங்களிலும் நிரந்தரமாக மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் வகையில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், தலா 100 மில்லியன் லிட்டர் குடிநீர் திறனுடைய கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்


கீழக்க‌ரை க‌ட‌ல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செய‌ல்ப‌டுத்த‌ வேண்டும் என‌ கீழ‌க்க‌ரை டைம்ஸ் இணைய‌த‌ள‌த்தில் செய்தி வெளியிட‌ப்ப‌ட்டிருந்த‌து.

பார்க்க‌ ...  http://keelakaraitimes.blogspot.ae/2013/03/blog-post_11.html

இது தொட‌ர்பாக‌ த‌மிழ‌க‌ அர‌சிட‌ம் கோரிக்கை வைத்துள்ளதாக‌ ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ நிருப‌ர்க‌ளிட‌ம் தெரிவித்திருந்தார்.

பார்க்க‌ ...  http://keelakaraitimes.blogspot.ae/2013/04/blog-post_6.html

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ க‌ட‌லோர‌ ஊர்க‌ளின் நீண்ட கால‌ கோரிக்கையான‌ க‌ட‌ல்நீரை குடிநீராக்கும் திட்ட‌ம் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌‌ வேக‌த்தோடு உட‌ன‌டியாக‌ செய‌ல‌ப‌டுத்த‌ப்ப‌டுமானால் க‌ட‌லோர‌ ஊர்க‌ளான‌ கீழ‌க்க‌ரை,பெரிய‌ப்ப‌ட்டிண‌ம், ம‌ற்றும் அருகிலுள்ள‌ ஊர்க‌ளுக்கு  மிகுந்த‌ ப‌ய‌ன‌ளிக்கும் என்று ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

Wednesday, April 10, 2013

கீழ‌க்க‌ரை அருகே எஸ்.டி.பி.ஐ சார்பில் ம‌துக்க‌டைக்கு பூட்டு போடும் போராட்ட‌ம்!



கீழக்க‌ரை அருகே வ‌ண்ணாங்குண்டு ஊராட்சியில் ஊரின் ந‌டுவில் மூன் ம‌ழைய‌ர் ப‌ள்ளி எதிரே அர‌சு டாஸ்மாக் ம‌துக்க‌டை உள்ள‌து.இதை அக‌ற்ற‌ க்கோரி அப்ப‌குதி மக்க‌ளுட‌ன் இணைந்து எஸ். டி .பி .ஐ ப‌ல்வேறு போர‌ட்ட‌ங்க‌ள் நட‌த்தியும் எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கையும் இல்லை.

இத‌னால் இன்று எஸ் டி பி  ஐ சார்பில் டாஸ்மாக் கடையை மூடி பூட்டு போடும் போராட்ட‌ அறிவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. இத‌னால் அங்கு கீழ‌க்க‌ரை டிஎஸ்பி சோம‌சேக‌ர் த‌லைமையில் இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன் உள்ளிட்ட‌ ஏராள‌மான போலீசார் குவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ர்.இத‌னால் அப்ப‌குதியில் ப‌ர‌ப‌ர‌ப்பு நில‌வி வ‌ந்த‌து.

இந்நிலையில் போராட்ட‌த்திற்கு வ‌ண்ணாங்குண்டு எஸ்டிபிஐ ந‌க‌ர் தலைவ‌ர் அஸ்க‌ர் அலி த‌லைமை வ‌கித்தார்.மாவ‌ட்ட‌ தொகுதி த‌லைவ‌ர் அப்பாஸ் ஆலிம்,தொகுதி செயலாள‌ர் சேகு முக‌ம்ம‌து,மாவட்ட‌ செய‌லாள‌ர் செய்ய‌த் இப்ராகிம்,ந‌க‌ர் செய‌லாள‌ர் தாஹா,மாவ‌ட்ட‌ துனை த‌லைவ‌ர்க‌ள் பைரோஸ்கான்,சோமு மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ர் கார்மேக‌ம் மு‌ன்னிலை வ‌கித்த‌ன‌ர்.

எஸ் டி பி ஐ க‌ட்சியின‌ர் ம‌ற்றும் பொதும‌க்கள் ஏராள‌மானோர்
 ம‌துக்க‌டைக்கு பூட்டு போடுவ‌த‌ற்கு ஊர்வ‌ல‌மாக‌ வ‌ந்த‌ போது போலீஸ் அவ‌ர்க‌ளை  த‌டுத்து நிறுத்தி டிஎஸ்பி சோம‌சேக‌ர் பேச்சு வார்த்தை ந‌ட‌த்தின‌ர்.பேச்சுவார்த்தையில் இர‌ண்டு மாத‌த்திற்குள் க‌டையை அங்கிருந்து அக‌ற்றுவ‌தாக‌ உறுதிய‌ளித்த‌தை தொட‌ர்ந்து ஆர்ப்பாட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ அனைவ‌ரும் க‌லைந்து சென்ற‌ன‌ர்.


ஏராள‌மான‌ எஸ்டிபிஐயை சேர்ந்த‌வ‌ர்க‌ள, நூற்றுக்க‌ண‌க்கான‌ பெண்க‌ள் உள்ளிட்ட‌ பொதும‌க்க‌ள் 300க்கும் மேற்ப‌ட்டோர் இப்போராட்ட‌த்தில் க‌லந்து கொண்ட‌ன‌ர்.

 

தென் த‌மிழ‌க‌ வ‌ளைகுடா வாழ் தொழில் வ‌ர்த்த‌க‌ர்க‌ளுக்கு கீழ‌க்க‌ரையே முன்னோடியாக‌ விள‌ங்குகிற‌து! துபாயில் தென் தமிழ‌க‌ வ‌ர்த்த‌க‌ர்க‌ள் பாராட்டு!







திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, விருது நகர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய தென் தமிழக மாவட்டங்களை சேர்ந்த‌ ப‌ல்வேறு வ‌ர்த்த‌க‌ர்க‌ளையும் ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ளையும் கொண்ட ரோட்டரி இண்டர்னேஷனல் மாவட்டம் 3212ன் சார்பாக, E.T.A. ASCON STAR குரூப் நிர்வாக இயக்குநர்  செய்யது M. சலாஹூத்தீனுக்கு பாராட்டு விழா மற்றும் “ THE PRIDE OF INDIA” விருது வழங்கும் விழா துபையில் மணியளவில் நடைபெற்றது.

ஈமான் விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹ்யித்தீன் இறைவசனங்களைத் தொடர்ந்து டாக்டர் பிரேமச் சந்திரன் இறை வணக்கப் பாடல் பாட, அமீரகத் தமிழ் மன்றம் ஆசிஃப் மீரான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த 44 ரோட்டரி நிர்வாகிகளையும் ரோட்டரி செயலாளர்  சரவணன் அறிமுகப்படுத்தி பேச, அவர்கள் அனைவரும் சலாஹூத்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

அமீரக அமைப்புகளின் சார்பாக, ஈமான் பொதுச் செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் கீழை ராஸா, அமீரகத் தமிழ் மன்றம் ஜெசீலா ரியாஸ், அமீரா அமீன், ரிதம் ஈவெண்ட்ஸ் சபேசன், அமீரகத் தமிழர்கள் அமைப்பு சிம்ம பாரதி, ,காயிதே மில்லத் பேரவை ஹமீது யாஸீன், முத்தமிழ் சங்கம் ஷாஹூல் ஹமீது, யு.ஏ.இ. தமிழ்ச் சங்கம் ரமேஷ், துபை தமிழ்ச் சங்கம் முஹம்மது தாஹா, மற்றும் ஏர் இந்தியா துபை ஏர் போர்ட் மேலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் விருது பெற்ற சலாஹூத்தீன் அவர்களை வாழ்த்தி மற்றும் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த ரோட்டரி விருந்தினர்களை வரவேற்றும் பேசினர்.

2013-2014 ரோட்டரி கவர்னர் ஜோசைய்யா வில்லவராயர், முன்னாள் கவர்னர்கள் ஜோ வில்லவராயர், டாக்டர் ஷண்முகம், ஆகியோர் சலாஹூத்தீன் அவர்களின் சிறந்த சேவையைப் பாராட்டி பேசினர்.தொடர்ந்து சலாஹூத்தீன் அவர்களுக்கு விருது வழங்கி பேசிய முன்னாள் கவர்னர் ஆறுமுகப் பாண்டியன், தன் உரையில், சலாஹூத்தீன் மற்றும் ஈடியே குழுமத்தின் சாதனைகளை மேற்கோள் காட்டி சுமார் 70,000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வரும் சேவையை வியந்து பாராட்டினார், மேலும் தன் உரையில் ரோட்டரி கிளப்பின் சேவைகளையும் சாதனைகளையும் பட்டியலிட்டார்.

மேலும் தொழில் வ‌ர்த்த‌க‌ர்க‌ள் பேசும் போது, த‌மிழ‌க‌த்தின் க‌டை கோடியில் கீழ‌க்க‌ரை இருந்தாலும் ப‌ல்வேறு தொழில் ஆர்வல‌ர்க‌ள் இப்ப‌குதியில் உருவாகி வ‌ளைகுடாவில் சாத‌னைக‌ள் ப‌டைத்து வ‌ருவ‌தால்  வ‌ளைகுடாவில் தென் த‌மிழ‌க‌ வ‌ர்த்த‌க‌ர்க‌ளின் முன்னோடியாக‌‌ கீழ‌க்க‌ரை விள‌ங்குகிற‌து என்ப‌தில் மாற்ற‌மில்லை என்ற‌ன‌ர்.


பின் ஏற்புரையாற்றிய சலாஹூத்தீன்,

ரோட்டரி அமைப்பின் உல‌க‌லாவிய‌  மற்றும் அதன் சேவைகளை தன் அனுபவங்களை முன் வைத்து வியந்து பாராட்டினார்.ரோட்டரி கிளப்பின் பணிகளுக்கு மத்தியில் தம் சேவை மிகக்குறைவே என்றவர், தனக்கு கிடைத்த பாராட்டுக்களை, ஒரு அறிவுரையாக எடுத்து கொள்வதாக கூறி, ரோட்டரி அமைப்பின் சேவைகளுக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். மேலும் விழாவிற்கு வந்த ஏர் இந்தியா துபை ஏர் போர்ட் மேலாளர் ராதா கிருஷ்ணனிடம் மதுரை – துபாய் நேரடி விமான சேவையை துரிதப்படுத்த வேண்டியதுடன், பன்னாட்டு விமான சேவைக்கு தூத்துக்குடியை தயார் படுத்தவும் ரோட்டரி கவ்ர்னர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சியை கீழக்கரை ஹமீது ரஹ்மான் தொகுத்து வழங்க,உலக நகைச்சுவையாளர் சங்கம் துபை கிளை நெல்லை முகைதீன் பிச்சை நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி இண்டர்நேஷனல் நிர்வாகிகளுடன் இணைந்து, நெல்லை S.S. மீரான், மற்றும் அம்பை ஸ்பர்ஜன் சுகுமார் ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்
.
செய்தி தொகுப்பு : கீழை ராஸா என்ற‌ ராஜாக்கான்

ரேச‌ன் க‌டைக‌ளில் ப‌ருப்பு கேட்டால் இருப்பில்லை என‌ ப‌தில்!ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வ‌லியுறுத்த‌ல்

file(old) picture

கீழக்கரையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு 9 ரேஷன் கடைகள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் இந்த கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இங்குள்ள ரேஷன் கடைகளில் பருப்பு, மண்ணெண்ணெய், சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கார்டுதாரர்களுக்கு முறையாக விநியோகம் செய்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக பருப்பு வகைகள், மண்ணெண்ணெய் ஆகியவை ரேஷன் கடைகளுக்கே போதிய அளவு சப்ளை செய்யப்ப‌டாத‌தால் இருப்பில்லை இதனால் வேறு வழியின்றி கார்டுதாரர்களுக்கு ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் இவை விற்பனை செய்யப்படுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்பது குறித்தும், ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கும் இப்பகுதி மக்கள் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே ரேஷன் விநியோகம் குறித்த குறைதீர் கூட்டத்தை கீழக்கரையிலும் நடத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து கீழக்கரை நகராட்சி துணைத் தலைவர் ஹாஜாமுகைதீன் கூறுகையில்,

கீழக்கரையில் பெரும்பாலான ஆண்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர்.

இதனால் ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம் போன்றவைகளுக்கு ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்திற்கு பெண்களே செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளையும் தெரிவிக்க ராமநாதபுரத்திற்கு செல்ல வேண்டும்.
எனவே கீழக்கரையிலும் உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



இது தொட‌ர்பாக‌ ந‌க‌ராட்சி தலைவ‌ர் ராவிய‌த்துல் க‌த‌ரியா கூறிய‌தாவ‌து,

கீழ‌க்க‌ரையில்‌ ப‌ச்ச‌ரிசி , பாமாயில் உள்ளிட்ட‌ ரேச‌ன் பொருட்க‌ள் விநியோக‌ம் சீராக‌ ந‌டைபெற‌ வேண்டுமென‌  மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ரிட‌ம் ம‌னு கொடுத்துள்ள‌தாக‌ தெரிவித்துள்ளார்

Tuesday, April 9, 2013

கீழ‌க்க‌ரை அருகே காய‌த்துட‌ன் புள்ளிமான் மீட்பு!


கீழ‌க்க‌ரை அருகே காய‌த்துட‌ன் புள்ளிமான் மீட்பு!

கீழ‌க்க‌ரை அருகே உள்ள‌ திருப்புல்லாணி ஒன்றிய‌த்திற்குட்ப‌ட்ட‌ நைனார் மரைக்கான் ஊராட்சி எரிக‌ல‌ம்ப‌ட்டி கிராம‌த்தில் புள்ளிமான் நாயால் துர‌த்த‌ப்ப‌ட்டு காய‌த்துட‌ன் மீட்க‌ப்ப‌ட்ட‌து.

எரிக‌ல‌ம்ப‌ட்டி கிராம‌த்தை சேர்ந்த‌ பாண்டி த‌ன‌து தோட்ட‌த்தில் வேலை செய்து கொண்டிருந்த‌ போது நாய் ஒன்று புள்ளிமானை துர‌த்தி கொண்டு வ‌ந்துள்ள‌து.நாயிட‌மிருந்து த‌ப்பிப‌ப‌த‌ற்காக‌ பாண்டியின் தோட்ட‌த்திற்குள் மான் பாய்ந்த‌ போது வேலியில் சிக்கி காய‌ம் ஏற‌ப்பட்ட‌து உட‌ன‌டியாக‌  பாண்டி ஓடி சென்று மானை காப்பாற்றி ஊராட்சி த‌லைவ‌ர் வெள்ளையம்மாளுக்கு த‌க‌வ‌ல் கொடுத்தார்.அவர் அர‌சு அதிகாரிக‌ளுக்கு த‌க‌வல‌ளித்த‌த‌ன் பேரில் மான் ம‌ருத்துவ‌ம‌னை எடுத்து செல்ல‌ப்ப‌ட்டு சிகிச்சைய‌ளிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிறது.வ‌ன‌த்துறையின‌ரிட‌ம் ஒப்படைக்க‌ப்ப‌ட்ட‌து

இது குறித்து வ‌ன‌ச்ச‌ர‌க‌ர் ஜெய‌ராம‌ன் கூறிய‌தாவ‌து,
 இந்த‌ மான் காட்டிலிருந்து திசை மாறிவ‌ந்த‌தா ? அல்ல‌து வேட்டைக்கார‌ர்க‌ளால் க‌ட‌த்தி வ‌ர‌ப்ப‌ட்ட‌தா ? என‌ விசார‌ணை செய்து வ‌ருகிறோம்.காய‌ம‌டைந்துள்ள‌தால் சிகிச்சைய‌ளிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.சிகிச்சை முடிந்த‌வுட‌ன் காட்டில் விட‌ப்ப‌டும் என்றார்.
 

கீழ‌க்க‌ரையில் அ.தி.மு.க‌ சார்பில் த‌ண்ணீர் ம‌ற்றும் நீர் மோர் ப‌ந்த‌ல் திற‌ப்பு!



 இவ்விழாவிற்கு  நகர் எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சுல்தான் செய்யது இபுராஹீம் தலைமை வகித்தார்.

மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் முனியசாமி,நகர் செயலாளர் ராஜேந்திரன்,நகர்மன்ற துணை தலைவர் ஹாஜா முகைதீன்,சிறுபாண்மை பிரிவின் ந‌க‌ர் செய‌லாள‌ர் யாசீன்,விவ‌சாய‌ அணி செய‌லாள‌ர் பாரூக்,நகர் மாணவரணி செயலாளர் சுரேஸ்,நகர் துணைசெயலாளர் குமரன்,நகர் அம்மா பேரவை செயலாளர் சரவணபாலாஜி,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர் செல்வகணேஸ்,நகர் எம்ஜிஆர் துணை செயலாளர் சங்கர் கணேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் சதன் பிரபாகரன் வரவேற்புரையாற்றினார்.

நீர் மோர் பந்தலை மாநில இளைஞரணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். 

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ்,சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா,மாவட்ட செயலாளர் முனியசாமி,முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முருகன்,முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் முஹம்மது உசேன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இவ்விழாவில் தர்பூசனி,ஆப்பிள்,ஆரஞ்ச் போன்ற 9வகையான பழவகைகளும்,இளநீர்,மோர்,சர்பத் போன்ற குளிர்பானங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக காஞ்சிரங்குடி,இதம்பாடல்,ஏர்வாடி ஆகிய பகுதிகளிலிருந்து 32 உலமாபெருமக்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக பிரார்த்தனை செய்தனர்.

மேலும் வானவேடிக்கைகள்,தாரைதப்பட்டை,குதிரை நடனம் ஆகியவைகளும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் எஸ்.டி. அர‌சு,லியாக‌த்கான்,க‌வுன்சில‌ர் சுரேஷ் பாவா க‌ருணை நகர்மன்ற உறுப்பினர்கள் மீனாள்,தங்கராஜ்,செய்யது கருணை,காஞ்சிங்குடி பக்கிரப்பா கமிட்டி தலைவர் அன்வர்,அமானுல்லா உட்பட ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இறுதியில் மாவட்ட பிரதிநிதி ஜகுபர்உசேன் நன்றி கூறினார்.

Monday, April 8, 2013

பேஸ்புக்கில் ந‌ண்ப‌ர‌து போட்டோவை ப‌ய‌ன்ப‌டுத்தி அவ‌தூறு!கீழ‌க்க‌ரையில் ஒருவ‌ர் கைது!


 கீழ‌க்க‌ரை கிழ‌க்குத்தெருவை சேர்ந்தவ‌ர் முத்து இப்ராகிம் ம‌க‌ன் சித்திம‌ரைக்கா(22) தொழில் நுட்ப‌ இன்ஜினிய‌ரிங் ப‌டித்துள்ளார் இவ‌ரின் புகைப்ப‌ட‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி பேஸ்புக்கில் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ஆபாச‌ குறுந்த‌க‌வ‌ல்க‌ள்,புகைப்ப‌ட‌ம் ,அவ‌தூறு க‌ருத்துக்க‌ள் அனுப்ப்ப‌ட்டுள்ள‌து.

இத‌னால் ஒரு வ‌ருட‌மாக‌  சித்திம‌ரைக்கா ப‌ல்வேறு அவ‌தூறுக‌ளுக்கு ஆளாகி மிகுந்த‌ ம‌ன‌ உளைச்ச‌லுக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டார்.இது குறித்து கீழ‌க்க‌ரை காவ‌ல் நிலைய‌த்தில் புகார் அளித்தார்.இது குறித்து வ‌ழ‌க்கு ப‌திவு செய்து பேஸ்புக் க‌ண‌க்கினையும் அந்த‌ த‌க‌வ‌ல் யார் மூல‌ம் அனுப்பபடுகிற‌து என‌ப‌த‌னையும் சைப‌ர் கிரைம் மூல‌ம் விசார‌ணை செய்த‌ன‌ர்.

விசார‌ணையில் முடிவில் போலீஸ் த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவ‌தாவ‌து,

கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ராசித் என்ப‌வர் சித்தி ம‌ரைக்காவின் புகைப்ப‌ட‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்க‌ளை அனுப்பிய‌து தெரிய‌ வ‌ந்த‌து.அவ‌ர் கைது செய்ய‌ப்ப‌ட்டார்.ந‌ண்ப‌ர்க‌ளான‌ இருவ‌ரும் த‌ங்க‌ளுக்குள் க‌ருத்து வேறுபாடு ஏற்ப‌ட்ட‌தால் ப‌ழிவாங்கும் ந‌ட‌வ‌டிக்கையாக‌ இச்செய‌லில் ஈடுப‌ட்ட‌தாக‌ ராசித் தெரிவித்த‌தாக‌ போலீஸ் த‌ர‌ப்பு தெரிவிக்கிற‌து.

 

Sunday, April 7, 2013

அதிமுக‌வின் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ செய‌லாள‌ராக‌ முனிய‌சாமி நிய‌ம‌ன‌ம்!கீழ‌க்க‌ரை சேர்ம‌ன் நேரில் வாழ்த்து!



அதிமுக‌வின் ராமநாத‌புர‌ம்  மாவ‌ட்ட‌ செய‌லாள‌ரான‌ கே.சி.ஆணிமுத்து மாற்ற‌ப்ப‌ட்டு புதிய‌ மாவ‌ட்ட‌ செய‌லாள‌ராக‌ ஜி.முனியசாமி நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.அவ‌ருக்கு கீழ‌க்க‌ரை அதிமுக‌ ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் வாழ்த்து தெரிவித்த‌ன‌ர்.

 

கீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாணவர் உயிர‌ழ‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் !பேராசிரிய‌ர் கைது!






கீழ‌க்க‌ரை தனியார் கல்லூரி மாடியில் இருந்து, மாணவர் விழுந்து இறந்த வழக்கில், ஆங்கில துறை தலைவர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மேலப்புதுக்குடி சீனி அப்துல் மஜிது மகன் சமீமுதீன், 24. கீழக்கரை தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

 நேற்று முன்தினம் மதியம், 2:40 மணிக்கு மாணவர், கல்லூரி மாடியில் இருந்து விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.த‌ற்கொலை செய்து கொண்ட‌தாக‌ த‌க‌வ‌ல் வெளியான‌ நிலையில் இது குறித்து மாண‌வ‌ரின் உற‌வின‌ர் ந‌சீர் ஹுசைன் கொடுத்த‌ புகாரில்... மாணவருக்கும், ஆங்கில துறை தலைவர் டேனியல் நெல்சனுக்கும், முன் விரோதம் இருந்ததாகவும் இது கொலை என‌வும் இத‌ற்கு கார‌ண‌ம் டேனிய‌ல் நெல்ச‌ன் தான் என்‌ற‌ புகாரின் பேரில் டேனியல் நெல்சனை கீழக்கரை போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.






Saturday, April 6, 2013

சாலையின் ந‌டுவே ப‌ஸ்சை நிறுத்துவ‌தால் போக்குவ‌ர‌த்து இடையூறு!


கீழ‌க்க‌ரை ந‌க‌ருக்குள் வ‌ரும் பேருந்துக‌ள் ப‌ழைய‌ காவ‌ல் நிலைய‌ம் அருகே உள்ள‌ நிறுத்த‌த்தில் ப‌ய‌ணிக‌ளை ஏற்றி செல்வ‌து வ‌ழ‌க்க‌ம் இந்நிலையில் ஒரு சில‌ பேருந்துக‌ள் சாலையின் ந‌டுவே  நிறுத்தி ப‌ய‌ணிக‌ளை ஏற்றுவ‌தால் போக்குவ‌ர‌த்து இடையூறு ஏற்ப‌டுவ‌தாக‌ பொதும‌க்க‌ள் புகார் கூறுகின்ற‌ன‌ர்.


இது குறித்து செய்ய‌து இப்ராகிம் என்ப‌வ‌ர் கூறுகையில் ,

கீழ‌க்க‌ரை ப‌ழைய‌ காவ‌ல் நிலைய‌ அருகே  ஆட்டோ நிறுத்த‌ம் உள்ள‌து அத‌ன் அருகே ப‌ஸ் நிறுத்துவ‌த‌ற்கு இட‌ம் உள்ளது அங்கே  ப‌ஸ்க‌ளை நிறுத்தி ப‌ய‌ணிக‌ளை ஏற்றாலாம்.ஆனால் பேருந்து ஓட்டுந‌ர்க‌ள் புதிய‌ பேருந்து நிலைய‌ம் செல்லும் வ‌ளைவில் சாலையின் ந‌டுவே பேருந்தை நிறுத்தி ப‌ய‌ணிக‌ளை ஏற்றுவ‌தால் பெரும் போக்குவ‌ர‌த்து இடையூறு ஏற்ப‌டுகிற‌து.என‌வே ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அதிகாரிக‌ள் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ கேட்டு கொள்கிறேன் என்றார்.

 கீழ‌க்க‌ரை முஜீப் கூறுகையில்

கீழ‌க்க‌ரை நெடுஞ்சாலையில் சாலையோர‌ம் வாக‌ன‌ங்க‌ள் மாத‌க்க‌ண‌க்கில் நிறுத்த‌ப்ப‌டுகிற‌து.இதனால்  போக்குவ‌ர‌த்து இடையூறு ஏற்ப‌டுகிற‌து.சில‌ நாட்க‌ளுக்கு முன் மெயின் ரோட்டில் த‌னியார் ப‌ள்ளியின் தாளாள‌ர் ஒருவ‌ர் த‌ன‌து வாக‌ன‌த்தை ஓர‌மாக‌ நிறுத்தி க‌டைக்குள் சென்று திரும்புவ‌த‌ற்குள் அவ்வ‌ழியே வ‌ந்த‌ போலீஸ் டிஎஸ்பி தாளாள‌ரிட‌ம் க‌டுமையான் வார்த்தையில்  வாக‌ன‌த்தை எடுக்க‌ சொன்னார் இதனால் தாளாள‌ருக்கும் டிஎஸ்பிக்கு நேர‌டி வாக்குவாதம் ஏற்ப‌ட்ட‌து.இத‌னால் அப்ப‌குதியில் போக்குவ‌ர‌த்து பாதிக்க‌ப்ப‌ட்ட‌து பின்ன‌ர் ச‌ம‌ர‌ச‌ம் செய்ய‌ப்ப‌ட்டு போக்குவ‌ர‌த்து சீராகிய‌து.

சிறிது நேர‌ம் வாக‌ன‌த்தை நிறுத்தி க‌டைக‌ளுக்கு செல்லும் த‌னி ந‌ப‌ர்களிட‌ம் ச‌ட்ட‌த்தை க‌டுமையான‌ முறையில் பிர‌யோகிக்கும் காவ‌ல்துறை வாக‌ன‌ங்க‌ள் நிறுத்த‌ த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ ப‌குதியில் வாக‌ன‌ங்க‌ள் நிறுத்த‌ம‌ல் இருக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.குறிப்பாக‌ வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலை,அஞ்ச‌ல‌க‌ வீதி ஆகிய‌வ‌ற்றில் மிக‌வும் அதிக‌ள‌வில் வாக‌ன‌ங்க‌ள் நிறுத்தி வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ இத‌னால் பொது ம‌க்க‌ள் ந‌டு ரோட்டில் ந‌ட‌ந்து செல்லும் சூழ்நிலைதான் உள்ள‌து.என்றார்

கீழக்க‌ரையில் க‌ட‌ல்நீரை ந‌ன்னீர‌க்கும் திட்ட‌ம் ம‌ற்றும் பாதாள‌ சாக்க‌டை திட்ட‌ம் நிறைவேற்ற‌ ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ வ‌லியுறுத்த‌ல்!



ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:
 201314ம் நிதி யாண்டுக்கான நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சமூக நலன் மற்றும் சத்துணவு  திட்டத்துறை ஆகியவற்றின் மானி யக்கோரிக்கையின் போது கீழக்கரை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை இந்த நிதியாண்டில் தொடங்க வேண்டும் என்றும், மாவட் டத்தில் உள்ள 4 நகராட்சி களில் காலியாக உள்ள துப்பு ரவு பணியாளர் பணியிடங் களை உடனே நிரப்ப வேண் டும் என்று வலியுறுத்தி உள் ளேன்.

இதேபோல ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நிலவும் அசுத்தங்களை அப் புறப்படுத்தி தூய்மையாக பராமரிக்க வேண்டும். ராம நாதபுரத்தில் பாதாள சாக்க டையை விரைவில் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அனைத்து சாலை களையும் சீரமைக்க வேண் டும்.

 ராமநாதபுரம் நகரை ஒட் டியுள்ள பட்டணம் காத்தான், சக்கரக்கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவு படுத்த வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கீழக்கரை யில் கடல் நீரை நன்னீராக் கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மண்டபம் யூனியன் பெருங்குளம் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தண்ணீர் தொட்டி வரை உள்ள 15 கிலோ மீட் டர் சாலையையும், திருப்புல் லாணி யூனியன் கோரைக்குட் டம் கிராம சாலையையும், நொச்சியூரணி பால்குளம் சாலையையும், கீழக்கரை நெடுஞ்சாலையில் இருந்து காஞ்சிரங்குடி கிராமத்திற் கான சாலையையும், பாம்பன் தெற்குவாடி முதல் முந்தல் முனை வரையுள்ள சாலை யையும் செப்பனிட நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியமும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியமும் வழங்க வேண்டும். தொண்டி பேரூராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளி வளாகத்திலேயே சத்ததுணவு சமையல் கூடம் அமைக்க வேண்டும். தேர்தலின் போது பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்களுக்கு இது வரை படித்தொகை வழங்கப் படவில்லை. அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை

இதேபோல சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட சத் துணவு ஊழியர்களுக்கு அதற் கான படித்தொகை ஓராண் டாகியும் வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடி யாக வழங்க வேண்டும். மாவட்டத்தில் பல யூனியன் அலுவலகங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு பணி பதிவே டுகள் பராமரிக்கப்படாமல் உள்ளது. 2010ம் ஆண்டு முதல் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படா மல் உள்ளது. இந்த குறை களை உடனடியாக போக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Friday, April 5, 2013

தெற்கு தெரு க‌ழிவு நீர் குழாய் சீர‌மைப்பு ப‌ணியை விரைந்து முடிக்க‌ கோரிக்கை!


கீழக்கரை தெற்குத்தெரு பகுதியில் க‌ழிவுநீர் குழாய்களில் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி பள்ளி மாணவர்களுக்கும்,மசூதி மற்றும் பெண்கள் மசூதி ஆகியவற்றிற்கு செல்லும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ பொதும‌க்க‌ள் ந‌க‌ராட்சிக்கு கோரிக்கை விடுத்து வ‌ந்த‌ன‌ர்.
இந்நிலையில் கீழக்கரை நகராட்சி நிர்வாக‌ம் அப்பகுதியில் அடைப்புக‌ளை ச‌ரி செய்து புதைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ 4 இன்ச் அள‌வுள்ள‌ கழிவுநீர் குழாய்களை அக‌ற்றி விட்டு 8 இன்ச் பெரிய கழிவுநீர் குழாய்கள் அமைப்ப‌த‌ற்கு கடந்த சில தினங்களாக ஜெசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு ப‌ணிக‌ள் நடைபெற்று வந்த‌ன‌ .


இதனிடையே வியாழக்கிழமை தனியார் பள்ளி வாகனம் கழிவுநீர் குழாய்க்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் இற‌ங்கி சிக்கிய‌து.உட‌ன‌டியாக‌ மாணவர்கள் பாதுகாப்பாக‌ வாக‌னத்திலிருந்து கீழிற‌க்க‌ப்ப‌ட்டு அழைத்து செல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். வேன் சிக்கிய‌தால் அப்ப‌குதியில் போக்குவ‌ர‌த்து நெரிச‌ல் ஏற்ப‌ட்ட‌து.

இது குறித்து தெற்குத்தெருவைச் சேர்ந்த முசம்மில் கூறியதாவது,
தெற்குத்தெரு பகுதியில் கழிவுநீர் குழாய் விரிவுபடுத்தும் பணியை கூடுதல் பணியாளர்களை நியமித்து போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும். மேலும் இரவு நேரங்களிலும் பள்ளி விடுமுறை நாட்களிலும் இப்பணிகளை செய்தால் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறும் இதுபோன்ற அசம்பாவிதங்களும் ஏற்படாது என்று கூறினார்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ரிட‌ம் கேட்ட‌ போது,
இப்பிர‌ச்ச‌னையின் அவ‌சிய‌ம் க‌ருதி ப‌ணிக‌ள் விரைவாக‌ ந‌டைபெற்ற‌து.த‌ற்போது ந‌டைபெறும் ப‌ணிக‌ளால் ப‌ள்ளி மாண‌வ‌,மாண‌விக‌ளுக்கு சிர‌ம‌ம் ஏற்ப‌டும் என‌ க‌ருதி ப‌ணிக‌ள் நிறுத்த‌ப்ப‌ட்டு விட்ட‌து.தோண்ட‌ப்ப‌ட்ட‌ குழிக‌ளையும்  மூட‌ சொல்லி விட்டேன் ப‌ள்ளி விடுமுறை தொட‌ங்கிய‌வுட‌ன் ப‌ணிக‌ள் விரைந்து முடிக்க‌ப்ப‌டும் என்றார்.

 

கீழ‌க்க‌ரை நக‌ராட்சி உர‌க்கிட‌ங்கை ப‌ல ல‌ட்ச‌ம் செல‌வில் மேம்ப‌டுத்தும் ப‌ணிக‌ள் !ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் பார்வையிட்டு ஆய்வு!





கீழ‌க்க‌ரை நக‌ராட்சி உர‌க்கிட‌ங்கை ப‌ல ல‌ட்ச‌ம் செல‌வில் மேம்ப‌டுத்தும் ப‌ணிக‌ள் !ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் பார்வையிட்டு ஆய்வு!

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி குப்பைக‌ளை கொட்டுவ‌த‌ற்கு இட‌ம் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டு உர‌க்கிட‌ங்காக‌ செய‌ல்ப‌ட்டு வருகிற‌து.இதை மேம்ப‌டுத்தும் வித‌மாக‌ இங்கு ப‌ல‌ ல‌ட்ச‌ம் ம‌திப்பீட்டில் உள்புற‌ சாலை அமைத்த‌ல்,ம‌ழை நீர் வ‌டிகால் கால்வாய்  உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌ணிக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌.
இவ‌ற்றை கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவர் ராவிய‌த்துல் கத‌ரியா நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் அவ‌ர் கூறிய‌தாவது,

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சிக்கு க‌ழிவு நீர் உறிஞ்சும் லாரி,குடிநீர் பைப்க‌ள் இல்லாத இட‌ங்க‌ளில் குடிநீர் ச‌ப்ளை செய்வ‌த‌ற்கு குடி நீர் லாரி,குப்பைக‌ளை அக‌ற்ற‌ ட‌ம்ப‌ர் பிளேச‌ர் லாரி ஆகியவை புதிய‌தாக‌ வாங்க‌ப்ப‌ட்டுள்ளது.இவை அனைத்தும் அடுத்த‌ வார‌ம் ப‌ய‌ன்பாட்டுக்கு வ‌ருகிற‌து என்றார்.

 

ஏப் முத‌ல் மே வ‌ரை 2மாத‌ம் க‌ட‌ல் பாசி சேக‌ரிப்பு இல்லை!க‌ட‌ல் சார் தொழிற்ச‌ங்க‌ங்க‌ள் முடிவு!


ஏப் முத‌ல் மே வ‌ரை 2மாத‌ம் க‌ட‌ல் பாசி சேக‌ரிப்பு இல்லை!க‌ட‌ல் சார் தொழிற்ச‌ங்க‌ங்க‌ள் முடிவு!

அக‌ர் ம‌ற்றும் அல்ஜினேட் உற்ப‌த்தியாள‌ர்க‌ள் ச‌ங்க‌ம்(மோஸ‌ஸ்),ம‌துரை,க‌ட‌ல் பாசி வியாபாரிக‌ள் ச‌ங்க‌ம்,கீழ‌க்க‌ரை(உசைன் பாரூக்), ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ மீன் பிடி தொழிலாள‌ர் யூனிய‌ன்(பால்சாமி) ஆகிய‌வ‌ற்றின் சார்பில் வெளியிட்டுள்ள‌ செய்தி குறிப்பில்,

ந‌ம‌து ம‌ன்னார் வ‌ளைகுடா ப‌குதியில் அமைந்துள்ள‌ தீவுக‌ளைச் சுற்றியுள்ள‌ ப‌குதிக‌ளில் விளைய‌க்கூடிய‌ க‌ட‌ல் பாசி வ‌கைக‌ளின் விளைச்ச‌ல் அதிக‌ரிக்க‌ வேண்டும் என்ற‌ நோக்க‌த்துட‌ன் வ‌ருட‌ந்தோறும் இர‌ண்டு மாத‌ கால‌ம் க‌டல் பாசி சேக‌ர‌ம் செய்வதை நிறுத்த‌ வேண்டும் என்று ம‌ன்னார் வ‌ளைகுடா உயிர்கோள‌ பாதுகாப்பு அற‌க்க‌ட்ட‌ளை சி எம் எப் ஆர் ஐ,சி எஸ் எம் சி ஆர் ஐ,அக‌ர் ம‌ற்றும் அல்ஜினேட் உற்ப‌த்தியாள‌ர் ச‌ங்க‌ உறுப்பின‌ர்க‌ள மற்றும் க‌ட‌ல் பாசி வியாபாரிக‌ள் க‌ல‌ந்து உரையாடி முடிவெடுத்த‌த‌ன் பேரில் இந்த‌ வ‌ருட‌ம் 2013 ஏப்ர‌ல் 1 முத‌ல் மே 31 வ‌ரை இர‌ண்டு மாத‌ கால‌த்திற்கு க‌ட‌ல் பாசி சேக‌ர‌ம் செய்ய‌ வேண்டாம் என‌ கேட்டு கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.
க‌ட்டுப்பாட்டை மீறுவோர் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும்
இவ்வாறு தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ராம‌நாதபுர‌ம் டிஜஜி ப‌த‌வி உய‌ர்வு பெற்று திருச்சிக்கு மாற்ற‌ம்!


தமிழகத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 17 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. எட்டு பேர், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, தமிழக உள்துறை செயலர்  வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிற‌து.

இதில் ராம‌நாத‌புர‌ம் ச‌ர‌க‌ டிஐஜி ராம‌சுப்பிர‌ம‌ணி ஐஜியாக‌ ப‌த‌வி உய‌ர்வு பெற்று திருச்சி ம‌த்திய‌ ச‌ர‌க‌ ஐஜியாக‌ ப‌த‌வி ஏற்பார் என‌ தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ளது

Thursday, April 4, 2013

முஸ்லீம்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி இந்திய‌ன் யூனிய‌ன் முஸ்லிம் லீக் சார்பில் ராம‌நாத‌புர‌த்தில் ஆர்ப்பாட்ட‌ம்!



கல்வி, வேலைவாய்ப்பில் சிறுபான் மை முஸ்லிம்களுக்கு 10 சத வீத இடஒதுக்கீடு மத்திய அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ் லிம் லீக் சார்பில் த‌மிழ‌க‌ம் முழுவ‌தும் மாவ‌ட்ட‌ தலைந‌க‌ர‌ங்க‌ளில்  ஆர்பாட் டம் நடந்தது.

இந்நிலையில் இந்திய‌ன் யூனிய‌ன் முஸ்லிம் லீக் சார்பில் ராம‌நாதபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணி மனை முன்பு நடந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு சிராஜூ தீன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வருசைமுகம்மது, மாவட்ட செய லாளர் ஷாஜகான், நகர் செ யலாளர் சாதுல்லாகான், கடலாடி ஒன்றிய அமைப் பாளர் அப்துல்லத்தீப், மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மதுயாகூப், லியாக்கத்அலி, மற்றும் சீனிமுகம்மது பேசினர்.

நீதியரசர் ரங்கநாத் மிஸ் ரா ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று கல்வி, வே லைவாய்ப்பில் சிறுபான் மை முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடு மத் திய அரசு வழங்க வேண்டும். தமிழகத்தில் முஸ்லீம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரு க்கு நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7 % தமிழக அரசு உயர்த்த வேண்டும்.

மக்களின் பண்பட்ட கலாச்சரத்தை வாழ்வாதாரத்தையும் பெருமளவு பாதி த்து வரும் மதுவை ஒழிக் கும் வகையில் பூரண மதுவிலக்கு மத்திய, மாநில அரசு அமுல்படுத்த வேண் டும். விசாரணை கைதி களாக நீண்டகாலமாக பல் வேறு மாநிலங்களில் சிறை யில் அடைபட்டுள்ள அப் பாவி முஸ்லீம் கைதிகளை மத்திய, மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

கீழக்கரை நகர் இளைஞ ரணி மற்றும் மாணவரணி அமைப் பாளர் எஸ்.ஏ. முஹம்மது அஃப்ரோஸ் கான் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் கீழ‌க்க‌ரையிலிருந்து ராம‌நாத‌புர‌ம் சென்று ஆர்ப்பாட்ட‌த்தில் ப‌ங்கு பெற்ற‌ன‌ர்.

பெண்க‌ல்வியில் இந்தியாவிலேயே த‌மிழ‌க‌மே சிற‌ந்த‌ மாநில‌மாக‌ திக‌ழ்கிற‌து!தாசிம்பீவி க‌ல்லூரி ப‌ட்ட‌ம‌ளிப்பு விழாவில் துணைவேந்த‌ர் பேச்சு!



ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா செவ்வாய்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
 இவ்விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் ரஹ்மத்நிசா ரஹ்மான் தலைமை வகித்தார். சீதக்காதி அறக்கட்டளை துணை பொதுமேலாளர் சேக்தாவூத்,யூசுப்சுலைஹா மருத்துவமனை இயக்குநர் செய்யது அப்துல்காதர்,மருத்துவமனை என்.ஜி.ஒ.புரவலர் குர்ரத்ஜெமிலா,கல்லூரி துறைத்தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்புரையாற்றினார்.
 சிறப்பு விருந்தினராக கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழக துணைவேந்தர் மணிமேகலை கலந்து கொண்டு பேசியதாவது,
 இந்தியாவிலேயே தமிழகம் பெண்கள் கல்வியில் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. ஆண் பெண் விகிதாசாரத்தில் இந்திய அளவில் 50 ஆண்களுக்கு 48 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் 50 ஆண்களுக்கு 49.88 என்ற விகித்ததில் பெண்கள் உள்ளனர். இந்த வகையில் ஆண் பெண் விகிதாசாரத்தில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
 இந்தியாவில் 504 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 59 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இந்தியாவில் உயர்கல்வி கற்ற பெண்களின் எண்ணிக்கை 13சதவீதமாகும். ஆனால் தமிழகத்தில் உயர்கல்வி கற்ற பெண்களின் எண்ணிக்கை 18சதவீதமாக உள்ளது.
 தமிழ்நாட்டில் தான் உயர்கல்வி துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. படித்த பெண்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 73.86சதவீதம் உள்ளது. இந்த வகையில் பெண்கள் கல்வியில் தமிழ்நாடு இந்திய அளவில் முன்னனியில் உள்ளது. பெண்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 அதிகளவில் பெண்கள் உயர்கல்வி கற்றாலும் அதிகளவில் வேலை வாய்ப்புகளை பெறுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். சாதனை படைத்த பெண்களை முன்மாதிரியாக மனதில் வைத்து பட்டம் பெற்ற பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்.
 ஆண் பெண் வித்தியாசம் மறைந்தால் தான் அனைத்து துறைகளிலும் இந்தியா வல்லரசாக மாறும். இதற்கு ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
 பின்னர் கல்லூரியில் இளங்கலை பயின்ற 423 மாணவிகள்,முதுகலை பயின்ற 77மாணவிகள்,ஆய்வியல் நிறைஞர் பயின்ற 8மாணவிகள் உட்பட 508 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

அர‌பி பாட‌ திட்ட‌த்தில் 189 மாண‌விக‌ள் முப‌ல்லிகா ப‌ட்ட‌ம் பெற்ற‌ன‌ர்

முன்ன‌தாக‌ காலையில் ந‌டைபெற்ற‌ இர‌ண்டாவ‌து ஆண்டு அர‌பி(முப‌ல்லிகா)ப‌ட்ட‌ம‌ளிப்பு விழாவில் ந‌ர்கீஸ் ஆசிரியை அணீஸ் பாத்திமா ப‌ட்ட‌ங்க‌ளை மாண‌விக‌ளுக்கு வ‌ழ‌ங்கினார்.இந்நிக‌ழ்ச்சியில் இமாம்க‌ள் செய்ய‌து அக்ப‌ர் ஜ‌மாலி, ஹ‌க்கீம் சுல்தான் காசிபி,ம‌ற்றும் யூசுப் சுலைகா ம‌ருத்துவ‌ம‌னை இய‌க்குந‌ர் டாக்ட‌ர் செய்ய‌து அப்துல் காத‌ர்,குர்ர‌த் ஜ‌மிஆ,சீத‌க்காதி அற‌க்க‌ட்ட‌ளை கீழ‌க்க‌ரை துணை பொது மேலாள‌ர் சேக் தாவுது ஹாங்காங் த‌மிழ் ப‌ண்பாட்டு க‌ழ‌க‌ உதவி த‌லைவ‌ர் ஜ‌மால் ம‌ற்றும் ஏராளமானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.
 

இந்திய‌ மாண‌வ‌ர்க‌ள் க‌டின உழைப்பாளிக‌ள்!கீழ‌க்க‌ரை ச‌த‌க் க‌ல்லூரி விழாவில் அமெரிக்க‌ தூத‌ர‌க‌ அதிகாரி பேச்சு!






கீழக்கரை பொறியியல் கல்லூரியில் நிறுவனர் நினைவு தினவிழா ந‌டைபெற்ற‌து.
இவ்விழாவிற்கு முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் நந்தகுமார்,ராமநாதபுரம் மாவட்ட சரக காவல்துறை துணை தலைவர் ராமசுப்ரமணி,கல்லூரி இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா,அறக்கட்டளை உறுப்பினர் ஹமீது இபுராஹீம் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி தலைவ‌ர் ராவிய‌த்துல் கத‌ரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 பொறியியல் கல்லூரரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் வரவேற்புரையாற்றினார். முஹம்மது சதக் அறக்கட்டளை உறுப்பினர் சர்மிளா கல்லூரி குறித்த அறிக்கையை வாசித்தார் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி அமெரரிக்க தூதரக அதிகாரியின் பேச்சை மொழிபெயர்த்தார்.  
இதில் அமெரிக்க தூதரக அதிகாரி மெக் இன்டைய‌ர் பேசியதாவது,

 21ம் நூற்றாண்டில் இந்தியா அமெரிக்கா ஆகிய‌ இரு தூண்க‌ளும் இணைந்து ஒவ்வொரு ம‌னித‌ருக்குள்ளும் ந‌ட்புண‌ர்வை ஏற்ப‌டுத்தும் சிற‌ப்பான‌ க‌ல்வியை அளித்து வ‌ருகிற‌து.
கல்வியில் உலகஅளவில் முதலிடத்தை நோக்கி இந்தியா அபார வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தியாவின் அந்த கனவு விரைவில் நிறைவேறும். இந்திய அளவில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி மற்றும் அறிவியல் கல்வியில் வளர்ச்சியடைந்த மாநிலமாக விளங்கி வருகிறது. கல்வி வளர்ச்சியில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்திய மாணவர்களின் கடின உழைப்பு அவர்களை உயர செய்கிறது. தரமான கல்வி தான் மாணவர்களின் எதிர்கால வாழ்வை வழி நடத்தும். இந்திய மாணவர்கள் அமெரிக்காவிற்கும்,அமெரிக்கா மாணவர்கள் இந்தியாவிற்கும் பெருமளவில் வருகை தந்து உயர்கல்வி கற்று வருகின்றனர். இந்திய மாணவர்கள் கற்கும் கல்வி அவர்களது கிராமபுறங்களை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும்.
தற்போது அமெரிக்காவில் 1லட்சம் இந்திய மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அதில் இந்த முஹ‌ம்ம‌து ச‌த‌க் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் பலர் உள்ளனர். அறிவியல் தொழில் நுட்பத்தில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சி பெற்றுள்ளது. அமெரிக்காவுக்கு வரும் இந்திய மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் தாமதமின்றி வழங்கப்படும்.

கல்வி வளர்ச்சிக்காக அமெரிக்க அரசு அமெரிக்காவிலும் வேறு பல நாடுகளிலும் பல லட்சம் மில்லியன் டாலர்களை செலவு செய்து வரருகிறது. இந்திய ஆசிரியர்களுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கல்வி,மருத்துவம்,சுற்றுலாவிற்காக 8 லட்சம் அமெரிக்கர்கள் இந்தியா வருகின்றனர்.  2009ல் அமெரிக்க ஜ‌னாதிப‌தி ஒபாமா ம‌ற்றும் இந்திய‌ பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங் ஆகியோர் த‌ங்க‌ள் நாடுக‌ளின் எல்லா துறைக‌ளிலும் க‌ருத்து ப‌றிமாற்ற‌ம் க‌ல்வித்துறையில் ஒருவ‌ருக்கொருவ‌ர் ஒத்துழைட்து கொள்வ‌து என்ற‌ ஒப்ப‌ந்த‌ம் செய்து கொண்ட‌த‌ன் அடிப்ப‌டையில் என‌ர்ஜி,ச‌மூக‌ மேம்பாடு,சுற்றுசூழ‌ல்,க‌ல்வி,பொது சுகாதார‌ம் ,புதிய‌ க‌ண்டுபிப்புக‌ள் ஆகிய‌வ‌கைக‌ளுக்காக‌ 5 மில்லிய‌ன் டால‌ர் வழ‌ங்க‌ப்ப‌டும் என்று அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்ன‌ர் முத‌ல்க‌ட்ட‌மாக‌ தென்னிந்தியாவை சேர்ந்த‌ 8 க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு உத‌வி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து.ந‌ட‌ப்பாண்டில் முஹ‌ம்ம‌து ச‌த‌க் க‌ல்லூரி உள்ளிட்ட‌ த‌மிழ‌க‌ க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ள்  ஓ எஸ் ஐ திட்ட‌த்தின் கீழ் நிதி பெற‌ விண்ண‌ப்பிக்க‌லாம்.

பின்தங்கிய கீழக்கரை போன்ற சிறிய நகரத்தில் மிகப் பெரிய கல்வி நிறுவனங்களை நிறுவி கல்வி சேவையை அளித்து வரும் முஹம்மதுசதக் அறக்கட்டளையின் பணி பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார். 
பின்னர் பல்கலைக் கழக அளவிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் சாதனை படைத்த மாணவர்களுக்கு அமெரிக்க தூதரக அதிகாரி பரிசுகளை வழங்கினர். இறுதியில் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜிமுதீன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள்  செய்திருந்தனர்.
 

Tuesday, April 2, 2013

கீழக்கரையில் துப்பாக்கி வைத்திருந்த இருவரிடம் போலீஸார் விசாரணை!


  கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த  செய்யது இஸ்ஹாக்கான் (20), கிழக்குத் தெருவைச் சேர்ந்த  ஹமீதுகான்(21). இருவரும் துப்பாக்கி வைத்திருப்பதாகப் போலீஸாருக்கு தக‌வ‌ல் கிடைத்தது.

  உடனே கீழக்கரை காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையில் போலீஸார்  சென்று இருவரையும் அழைத்து விசாரணை செய்தனர்.

  அப்போது இருவரும் உரிமம் தேவையில்லாத சிறிய ரக(வேட்டைக்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும்) துப்பாக்கி வைத்திருந்ததாக தெரிய வந்தது.
  இதைத் தொடர்ந்து இருவரையும் ராமநாதபுரம் வருவாய் அலுவலர் லாரன்ஸ் முன்பு ஆஜர் செய்யப்பட்டனர்.

  பின்னர் இருவரிடமும் உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கப்பட்டு திருப்பி அனுப்ப‌ட்ட‌ன‌ர்.

Monday, April 1, 2013

கீழ‌க்க‌ரைடைம்ஸ் இணைய‌த‌ள‌த்திற்கு கீழ‌க்க‌ரை ரோட்ட‌ரி ச‌ங்க‌ம் சார்பில் விருது !


கீழ‌க்க‌ரை ரோட்ட‌ரி ச‌ங்க‌ம் சார்பில் கீழ‌க்க‌ரையில் ப‌ல்வேறு துறைக‌ளில் சிற‌ப்பாக‌ செயல்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை ஊக்க‌ப்ப‌டுத்தும் வ‌கையில் பாராட்டி விருது வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.மாவ‌ட்ட‌ க‌வ‌ர்ன‌ர் ஷாஜ‌ஹான் விருதுக‌ளை வ‌ழ‌ங்கினார். ச‌த‌க் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அலாவுதீன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.ரோட்ட‌ரி ச‌ங்க‌ கீழ‌க்க‌ரை தலைவ‌ர் ஆசாத் ,செய‌லாள‌ர் சுப்பிர‌ம‌ணிய‌ன்,மாவ‌ட்ட‌ துணை க‌வ‌ர்ன‌ர் சின்ன‌த்துரை அப்துல்லா,தினேஷ் பாபு,ஹ‌ச‌னுதீன் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் கத‌ரியா,க‌மிஷ‌ன‌ர் முக‌ம்ம‌து மைதீன் உள்ளிட்டோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை ர‌சீனா அற‌க்க‌ட்ட‌ளை அக்ப‌ர் கான்,கீழ‌க்க‌ரை ந‌க‌ர் ந‌ல‌ இய‌க்க‌ம்,குயின் டிராவ்ல்ஸ்,கீழ‌க்க‌ரை டைம்ஸ் இணைய‌த‌ள‌ம் ,சுகாதார‌ ஆய்வாள‌ர் திண்ணாயிர‌மூர்த்தி,த‌ங்க‌ம் ராதாகிருஸ்ண‌ன்உள்ளிட்ட‌ 8 பேருக்கு விருதுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

கீழ‌க்க‌ரை ச‌த‌க் க‌ல்லூரியில் ந‌டைபெற்ற‌ இந்நிக‌ழ்ச்சியில் ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.பேராசிரிய‌ர் ம‌ரிய‌தாஸ் ந‌ன்றி கூறினார்