Thursday, April 7, 2011

கீழக்கரை பகுதியில் வாகன சோதனையால் பெண்கள் கடும் அவதி

கீழக்கரை பகுதியில் வாகன சோதனையால் பெண்கள் கடும் அவதி கீழக்கரை, ஏப்.7: கீழக்கரை பகுதியில், தொடரும் வாகன சோதனையால் முஸ்லீம் பெண்கள் அவதிக்குள்ளாகின்றனர். கீழக்கரையில் கோஷா அணியும் முஸ்லீம் பெண்கள், மளிகைப்பொருட்கள் மொத்தமாக கொள்முதல் செய்யவும், மருத்துவ சிகிச்சை மற்றும் பிற அலுவல்களுக்கு ராமநாதபுரம் சென்று வருகின்றனர். இவர்கள், கீழக்கரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு வேன், ஆட்டோ, கார் ஆகிய வாடகை வாகனங்களை பயன்படுத்துகின்றனர். தற்போது தேர்தல் ஆணைய உத்தரவின்படி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம் சாலையில் தொடர்ந்து வாகனச்சோதனை நடத்தப்படுகிறது. வாகனங்களில் இருக்கும் பெண்களை கீழே இறக்கி வாகனங்களை சோதனை செய்கின்றனர். இதனால் பெண்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். முஸ்லீம் கோஷா பெண்கள் வாகனத்தில் பயணிப்பதையே தவிர்த்து வருகின்றனர். இதனால் வாடகை வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாடகை வாகன ஓட்டுனர் காதர் கூறுகையில், ‘கடுமையான வாகன சோதனைகளால், முஸ்லீம் பெண்கள் வாகன பயணத்தையே தவிர்த்து வருகின்றனர். இம்மாதம் முழுவதும் எங்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார். பெண்கள் பயணிக்கும் வாகனங்களில் நடைபெறும் சோதனைகளை சிறிது தளர்த்திக் கொள்ள வேண்டும், அல்லது பெண் போலீசாரை சோதனை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.