Wednesday, November 30, 2011

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி! நகராட்சி தலைவர் பார்வையிட்டார்!


முந்தைய‌ நகராட்சி நிர்வாகத்தால் அனுமதியளிக்கப்பட்டு தொடங்கப்பட்ட‌ ஓடக்கரை பள்ளி முதல் பெட்ரோல் பங்க் வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியை கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா பார்வையிட்டார். அவருடன் 12வது வார்டு கவுன்சிலர் சித்தீக் ,லெப்பை தம்பி (முஸ்லீம் லீக் ) உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Tuesday, November 29, 2011

கீழக்கரை நுழைவு வாயில் அருகே பயங்கர‌ விபத்து ! ஒருவர் பலிநெல்லை மாவட்டத்திலிருந்து ராமேஸ்வரம் சென்று மீன்களை வாங்கி கொண்டு திசையன்விளை நோக்கி சென்ற வழியில் கீழக்கரை நுழைவு வாயில் தூணில் சரக்கு ஏற்றும் ஜீப் ஒன்று பயங்கரமாக மோதியதில் திசையன் விளையை சேர்ந்த ஜீப் டிரைவர் ஜெயமுருகன்(25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,உடன் சென்ற திசையன்விளையை சேர்ந்த பொன் சுயம்புலிங்கம்(19), தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரை சேர்ந்த மோகன் ஆகிய இருவருடன் படுகாயமடைந்தனர்.காயமடைந்த இருவரும் 108 ஆம்புலண்ஸ் மூலம் ராமநாதபுரம் அழைத்து செல்லப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கீழக்கரையில் 3ஆயிரத்து 700 மரக்கன்றுகள் நடப்படும் ! ரோட்டரி சங்கம் உறுதி


கீழக்கரை ரோட்டரி மாவட்டம் சார்பாக மரக்கன்று நடும் விழா கிழக்குத்தெரு கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் தலைவர் செய்யது இப்ராகிம் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர் சாதிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்று நடும் விழாவை துவங்கி வைத்தார் மேலும் பட்டய தலைவர் அலாவுதீன்,செய்லாளர் பாலசுப்பிரமணியன்,மூர் ஹசனுதீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் செய்யது இப்ராகிம் கூறியதாவது. இந்த வருடம் ரோட்டரி மாவட்டம் சார்பாக மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 11 ஆயிரத்து 11 மரக்கன்றுகள் நட வேண்டும் என மாவட்ட ஆளுநர் ஆறுமுக பாண்டியன் உத்தரவிட்டதை தொடர்ந்து கீழக்கரையில் மட்டும் 3 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இது வரை 1000த்துக்கு மேல் கன்றுகள் நடப்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர் ராசிக் கூறுகையில், மரம் வளர்ப்போம் ,மழையை வரவழைப்போம் என்று சொல்வார்கள் இவர்களின் பணி பாராட்டுக்குறியது அதே நேரத்தில் மரக்கன்றுகளை நடுவதோடு இல்லாமல் அதை முறையாக பராமரித்து முழுமையாக வளர்ச்சியடைய செய்வதற்கு முழுமையாக முடியா விட்டாலும் ஓரளரவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என்றார்

Monday, November 28, 2011

கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மூவருக்கு தொழில் சார் விருது !


ப‌ட‌ விள‌க்க‌ம் :- சிறப்பாக செயல்பட்டதாக கீழக்கரை சிடிசி டிராவல்சுக்கு விருது வ‌ழ‌ங்கப்பட்டது சிடிசி சார்பாக மேலாளர் நிஜாமுதீன் விருதை பெற்று கொண்டார்

ப‌ட‌ விள‌க்க‌ம் :- பி.எஸ்.என்.எல் அலுவ‌ல‌ர் அப்துல்ச‌காப்கானுக்கு மாவ‌ட்ட‌ ஆளுந‌ர் ஆறுமுக‌ பாண்டிய‌ன் விருது வ‌ழ‌ங்கினார்

கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மூவருக்கு தொழில் சார் விருது !
கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் தொழில்சார் விருது வழங்கும் விழா முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் தலைவர் செய்யது இபுராகிம் தலைமையிலும் பட்டய தலைவர் சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையிலும் பட்டயதலைவர் அலாவுதீன் மற்றும் செயலாளர் சுப்பிரமணியன் மண்டல துணை ஆளுநர் தினேஷ் பாபு ,மாவட்ட செயலாளர் சேக் சலீம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இவ்விழாவில் மாவ‌ட்ட‌ ஆளுந‌ர் ஆறுமுக‌ பாண்டிய‌ன் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ க‌ல‌ந்து கொண்டு பேசினார்.த‌லைவ‌ர் செய்ய‌து இப்ராகிம் அனைவ‌ரையும் வ‌ர‌வேற்று பேசினார். இந்நிக‌ழ்ச்சியில் சி.டி.சி டிராவல்ஸ்,பாலிடெக்னிக் க‌ல்லூரியின் ஆசிரிய‌ர் யோசுவா,கீழ‌க்க‌ரை பி.எஸ்.என்.எல் இள‌ நிலை தொலை தொட‌ர்பு அலுவ‌ல‌ர் அப்துல் வ‌காப் ஆகிய‌ மூவருக்கு த‌ங்க‌ள் துறைக‌ளில் சிற‌ப்பாக‌ ப‌ணிபுரிந்த‌த‌ற்காக‌ தொழில் சார் விருது வ‌ழ‌ங்கப்ப‌ட்டது. நிக‌ழ்ச்சி இறுதியில் ப‌ட்ட‌ய‌ த‌லைவ‌ர் அலாவுதீன் ந‌ன்றி கூறினார்.விலை எவ்வளவு !கீழக்கரை இடம் மற்றும் மனைகளுக்கான அரசின் வழிகாட்டுதல் மதிப்புக்கான வரைவு !

தற்போது வெளியிடப்பட்டுள்ள கீழ‌க்க‌ரைக்கான இடம் மற்றும் மனைகளுக்கான வழிகாட்டுதல் மதிப்புக்கான வரைவு (Guideline Draft) இத்துட‌ன் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து
பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்

தகவல் :- http://www.tnreginet.net/DraftGuideline2011/gvaluemainpage2011.asp
இடம் மற்றும் மனைகளுக்கான அரசின் வழிகாட்டுதல் மதிப்புக்கான
(Guideline Draft) வரைவு வெளியாகியுள்ளது.ஏற்கெனவே இருந்த வழிகாட்டுதல் மதிப்பை விட நான்கு மடங்குக்கு மேல் கூடுதலாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

உதாரணத்திற்கு அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் படி ஒரு இடத்தின் மதிப்பு சதுர அடிக்கு 400 என்றால் 1000 சதுர அடிக்கு ரூபாய்400000 விலையாகிறது.இதில் 9% பத்திர செலவு மட்டும் ரூ36000 ஆகிறது. இதுவே அரசில் பழைய வழிகாட்டுதல் படி சதுர அடி ரூ200 என்று வைத்து கொள்வோம் இதன் மூலம்1000 சதுர அடிக்கு ரூ200000 ஆகிறது. இதற்கு பத்திரபதிவுக்கான செலவு ரூ 18000ம்தான் ஆகும். என‌வே புதிய‌ வ‌ழிகாட்டுத‌லின் ப‌டி ப‌த்திர‌ப‌திவுக்கான செல‌வு ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ரிக்கும் என்று கூற‌ப்படுகிற‌து.

இது குறித்து ரிய‌ல் எஸ்டே தொழில் செய்து வ‌ரும் ஜ‌குப‌ர் கூறிய‌தாவ‌து,
த‌ற்போதுள்ள‌ வ‌ரைவு மிக‌ அதிக‌ விலையில் நிர்ண‌ய‌ம் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.இத‌னால் ப‌த்திர‌ப‌திவு செல‌வு எக்க‌ச்ச‌க்க‌மாக இருக்கும் இத‌னால் இட‌த்தை வாங்குப‌வ‌ர்க‌ள் அதிக‌ ஆர்வ‌ம் காட்ட‌ மாட்டார்க‌ள்.குறிப்பாக‌ கீழ‌க்க‌ரை ப‌குதியில் அதிக அளவில் இடங்களை விற்பது,வாங்குவது நடைபெற்று வருகிறது இந்த வரைவு நடைமுறைபடுத்தப்பட்டால் இந்த வியாபாரம் குறைந்து விடும் அரசு இந்த விலை நிர்ணயத்தை மறுபரீசலனை செய்ய வேண்டும் என்றார்.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த அஹமது அப்தாகிர் கூறுகையில்,
இடத்திற்கான‌ சந்தை விலைக்கு இணையாக அரசின் விலை நிர்ணயம் இருக்க வேண்டும் என்று முயற்சித்துள்ளார்கள் ஆனாலும் இது ரெம்ப அதிகம். பத்திரபதிவு செலவு அதிகமாக இருந்தால் இடத்தின் விலையை குறைத்து வாங்க முயற்சி செய்வார்கள் இந்த மூலம் வீட்டு மனைகள் விலை கட்டுக்கும் வரும் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எது எப்படி இருந்தாலும் தற்போது வெளியிட்டுள்ள கீழக்கரைக்கான‌ வரைவை பரிசீலனை செய்து விலை நிர்ணயத்தை குறைத்து வெளியிட வேண்டும்.நமது ஊர் முக்கிய பிரமுகர்கள் இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றார்

மேலும் அதிக தகவல்களுக்கு
http://www.tnreginet.net/DraftGuideline2011/gvaluemainpage2011.asp

Sunday, November 27, 2011

கட்டுமான பொருட்களை ரோட்டில் கொட்டுவதால் பொதுமக்கள் அவதி
கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் நடுரோட்டில் கட்டுமான பொருட்களை இறக்கி வியாபாரம் செய்து வருவதாலும் , ஜூம்மா பள்ளி அருகில் வாகனங்கள் இரண்டு புறங்களிலும் நிறுத்துவதாலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் பழைமை வாய்ந்த ஜூம்மா பள்ளிவாசல் உள்ளது. இந்தப் பள்ளியை பார்ப்பதற்காக தினமும் வெளிமாநிலங்களிலிருந்து குறிப்பாக கேரளாவிலிருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பள்ளிவாசல் அருகில் இரண்டு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். மேலும் செங்கல், மற்றும் மணலை நடுரோட்டில் லாரிகளில் கொண்டு வந்து இறக்கி மாதக்கணக்கில் போட்டு வியாபாரம் செய்கின்றனர்.

இதனால், கீழக்கரை நகருக்குள் வரும் அரசு டவுன் பஸ்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. ஒரு சில வியாபாரிகள் மற்றும் வாடகை வாகன உரிமையாளர்களின் சுயலாபத்திற்காக பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். போலீசார் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்புக்கழக பொருளாளர் செய்யது இபுராகிம் கூறுகையில், ‘கீழக்கரையில் வி.ஏ.ஓ சாவடியிலிருந்து பழைய பஸ்ஸ்டாண்டு வரையும், அதேபோல் லிட்டரரி கிளப்பிலிருந்து முஸ்லிம் பஜார் வரையும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிகளை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதேபோல் கட்டுமானப் பொருட்கள் இறக்குவதற்கு நகராட்சியில் அனுமதிபெற்று கட்டணம் செலுத்தித்தான் இறக்க வேண்டும். ஆனால் மாதக்கணக்கில் போட்டு பொருட்களை விற்பனை செய்கின்றனர். ஊருக்கு வெளியில்தான் செங்கல், மணல், விற்பனை செய்ய வேண்டும் என மாசுகட்டுப்பாட்டுதுறை உத்தரவு இருந்தும் விதிமுறை மீறி ஊருக்குள் விற்பனை செய்யப்படுகிறது. இதைதடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

கீழக்கரை நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான்(பொ) கூறுகையில், “இதுகுறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

நுக‌ர்வோர் ச‌மூக‌ ந‌ல நுகர்வோர் சேவை இயக்க‌‌ நிக‌ழ்ச்சி !
கீழ‌க்க‌ரை நுக‌ர்வோர் ச‌மூக‌ ந‌ல‌ நுக‌ர்வோர் சேவை இய‌க்க‌ நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து. இவ்விழாவில் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா உள்ளிட்டோர் க‌ல‌ந்து கொண்டு சிற‌பித்த‌ன‌ர்.

விபத்து ஏற்படுத்தியது யார் ? விசாரணை மந்தம் !

கீழக்கரையை சேர்ந்த இளம்பெண் செய்யது அலி பாத்திமா ராமநாதபுரம் அருகே கணவருடன் டூவீலரில் சென்ற போது பஸ் மோதி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.கணவரும் ,கைகுழந்தையும் காயத்துடன் உயிர் தப்பினார்கள்.விபத்து ஏற்படுத்திய பஸ் மின்னல் வேகத்தில் மறைந்தது. இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய பஸ் மற்றும் டிரைவர் இது வரை கண்டுபிடிக்கபடவில்லை.இவ்வழக்கரை ராமநாதபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விபத்து ஏற்படுத்தியது டூரிஸ்ட் பஸ் என்ற தகவலின் அடிப்படையில் போலீசார் கர்நாடக மாநிலத்தின் பஸ் டிரைவரை விசாரணை செய்ததாகவும் பின்னர் அவர் இல்லை என்று விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இது வரை யாரும் இது தொடர்பாக கைது செய்யப்படவில்லை என்பது கீழக்கரை பகுதி மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ஹ‌மீது பைச‌ல் என்ப‌வ‌ர் கூறுகையில், இது போன்ற‌ விபத்து வேறு இடங்களில் நடைபெற்று விப‌த்துக‌ள் ஏற்ப‌டுத்திய‌வ‌ர்க‌ளை கைது செய்யப்படாம‌ல் இருந்திருந்தால் இதை கண்டித்து சாலை ம‌றிய‌ல் ,உள்ளிட்ட‌ போராட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு க‌ளேப‌ர‌மாகியிருக்கும்.ந‌மதூர் ம‌க்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் ,போராட்ட‌ம் போன்ற‌வ‌ற்றில் ஈடுபடவில்லை என்பதை சாதகமாக எடுத்து கொண்டு போலீசார் இச்ச‌ம்ப‌வ‌ம் குறிந்து மந்தமாக விசாரித்து வருகிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது. டூரிஸ்ட் ப‌ஸ்சாக‌ இருக்கும் என்று ச‌ந்தேக‌ம் இருப்ப‌தால் அவ்வ‌ழியே உள்ள‌ உள்ள‌ சோத‌னை சாவ‌டிக‌ளிலும்,வாகன நுழைவு வ‌ரி வ‌சூல் மைய‌ங்க‌ள் மூல‌ம் த‌கவ‌ல்க‌ளை பெற்று துரித‌மாக‌ விப‌த்து ஏற்ப‌டுத்திய‌து யார் என்று க‌ண்டுபிடித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.சில மாதங்களுக்கு முன் அமைச்ச‌ர் ம‌ரிய‌ம் பிச்சை கார் விபத்தில் உயிரிழந்தார் அப்போது காரை இடித்த‌ வாக‌ன‌த்தின் ஓட்டுநரையும்,வாகனத்தையும் மேற்கு வ‌ங்க‌ம் சென்று போலீசார் பிடித்து வ‌ந்த‌ன‌ர்.அதே போல் போலீசார் ந‌ட‌வ‌டிக்கை எடுத்து குற்ற‌வாளியை கைது செய்ய‌ வேண்டும் என்றார்.

Saturday, November 26, 2011

நம்மூரப் போல வருமா ? வெளிநாட்டிலிருந்து திரும்பி உள்ளூரில் தொழில் புரிவோர் !


இந்தியன் ஸ்டோர் நடத்தி வரும் ரவூப் பாட்சா


காதர் சுல்தான்
படம் மற்றும் தகவல் : அசாருதீன் மற்றும் ஜகுபர் ஹமீது இப்ராகிம்
கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிந்து புரிகின்றனர்.இன்னும் ஏராளமானோர் வெளிநாடு சென்ற வண்ணம் உள்ளனர் .இவர்களில் வெளிநாட்டு பணியை விட்டு ஊர் திரும்பி கீழக்கரையிலேயே தொழில் செய்பவர்களும் உள்ளனர் அவர்கள் ரியல் எஸ்டேட்,வீட்டு உபயோக பொருட்களின் கடைகள்,கோழி இறைச்சிகடை உள்ளிட்ட பல் வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
இவர்களில் ஒரு சிலரை சந்தித்து வெளிநாட்டிலிருந்து திரும்பி உள்ளூரில் வியாபாரம் செய்வது குறித்து கேட்ட போது

சீனியப்பா ஹோட்டல் எதிரில் கடை வைத்து வியாபாரம் செய்து வரும் காதர் சுல்தான் கூறியதாவது,
நான் பல ஆண்டு காலம் குடும்பத்தை விட்டு புரிந்து வெளிநாட்டில் பணிபுரிந்தேன்.உள்ளூரிலேயே ஏன் தொழில் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த கடை தொடங்கி நடத்தி வருகிறேன்.பெரிய அளவில் வியாபாரம் இல்லாவிட்டாலும் அன்றாட தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு உள்ளது. சொர்க்கமே என்றாலும் நம்மூரப்போல வருமா என்ற கருத்துதான் என் நினைவுக்கு வருகிறது என்றார்.

வள்ளல் சீதக்கதி சாலையில் இந்தியன் ஸ்டோர் நடத்தி வரும் ரவூப் பாட்சா கூறியதாவது,
நானும் நீண்ட காலம் வெளிநாட்டில் இருந்தேன் தற்போது சொந்தமாக கடை நடத்தி வருகிறேன் சொந்தமாக தொழில் செய்வதில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும் ஆண்டவன் கிருபையால் நல்லமுறையில் உள்ளூரிலேயே தொழில் செய்து வருகிறேன்.இதெல்லாம் சரிவருமா என்று கேட்டவர்கள் இன்று பாராட்டிவிட்டு செல்கிறார்கள்.சொந்த வியாபாரத்தில் தடைகற்கள் பல வரும் அவற்றையேல்லாம் கடந்து சென்றோமானால் சொந்த வியாபரத்தில் நிச்சயம் பலன் இருக்கும். வெளிநாட்டில் சம்பாத்தியத்தில் இல்லாத மன திருப்தி குறைந்த வருமானமானலும் உள்ளூரில் கிடைக்கும் பொருளாதாரத்தில் இருக்கும்.

இது குறித்து கீழ்க்கரை ஜகுபர் ஹமீது கூறுகையில் ,வெளிநாட்டில் வேலை செய்தால் தான் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று கீழக்கரையில் நம்மை அறியாமல் பின்னபட்டிருக்கும் மாயையை உடைத்தெறிந்து இளைஞர்கள் வெளிநாடு செல்லாமல் இங்கேயே தொழில் செய்ய முயற்சிக்க வேண்டும்.அரசாங்கமும் வெளிநாட்டில் வேலை செய்பவ்ர்களுக்கென்று நிதியை ஒதுக்கி ஊர் திரும்புபவர்களுக்கு தொழில் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். ந‌ம‌தூரில் வேளிநாட்டில்தான் வேலை செய்ய‌ வேண்டும் என்ற இப்பகுதியிலுள்ளோரின் எதிர்பார்ப்பு என்ற தங்கள் மீதுள்ள அழுத்தங்களை உடைத்தெறிந்து கீழ‌க்க‌ரையிலேயே தொழில் செய்யும் இவ‌ர்க‌ளும் ஒரு வ‌கையில் சாத‌னையாள‌ர்க‌ள்தான் என்றார்.

Friday, November 25, 2011

நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் கணினி துறையில் பயின்றவர்களுக்கு சான்றிதழ்!கீழக்கரை நகராட்சி பொன்விழா ஆண்டு நகர்புற வேலைவாய்ப்பு திட்டம் சார்பில் திமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட‌ 10 மற்றும் 11 படித்தவர்களுக்கான‌ கணினி பயிற்சியில் ஆறுமாத காலம் சி.எஸ்.சி கம்ப்யூட்ட சென்டரில் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா தலைமையில் நடைபெற்றது.
இது குறித்து சமுதாய அமைப்பாளர் முத்துலட்சுமி கூறியதாவது, அரசு ஆணைப்படி சொர்ணா ஜெயந்தி திட்டத்தில் படித்த ஏழை மாணவர்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி ,கணினி பயிற்சி, அளிக்க வேண்டும்.இதனடிப்படையில் சென்ற வருடம் 12 பேர்களுக்கு கணினி பயிற்சி நடைபெற்றது.இந்த வருடம் 25 பேர்கள் தேர்வு செய்யப்பட்டு நேற்று முதல் பயிற்சி துவங்கப்பட்டது.தற்போது பயிற்சி முடித்தவர்களில் 10 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

Wednesday, November 23, 2011

பஸ் டூவீலரில் மோதி கீழக்கரையை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் உயிரழப்பு !

கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த காய்கறி வியாபாரி சேனா என்பவரின் மகன் முகம்மது ஹனிபா இவரின் மனைவியான செய்யது அலி பாத்திமா(30) இவர் சம்பவத்தன்று அவருடைய கணவர் முகம்மது ஹனிபாவுடன் ராமநாதபுரம் மருத்துவமனையில் பரிசோதனை செய்வதற்காக டூவீலரில் அவரது பெண் குழந்தையுடன் ஆர்.எஸ் மடை அருகே உள்ள பால்கரை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் அசுர‌ வேகத்தில் வந்த பஸ் ஒன்று இவர்கள் பயணம் செய்த டூவீலரில் மோதியது.இதனால் டூவீலரில் பயணம் செய்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் செய்யது அலி பாத்திமா விழுந்தார் இதில் அவருடை இடுப்பு பகுதியில் பஸ் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பாத்திமா உயிரழந்தார். இறந்த பாத்திமாவின் உடலை ராமநாதபுரம் பி1 காவலர்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்த விபத்துகுள்ளாக்கிய பஸ்சையும்,டிரைவரையும் தேடி வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனைக்கு சென்ற செய்யது அலி பாத்திமா உயிரற்ற உடலாக‌ பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பபட்டது அப்பகுதியில் உள்ளோர் நெஞ்சை உறைய வைத்தது.இச்சம்பவம் கீழக்கரை பகுதியில் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, November 22, 2011

ஆட்டம் போடும் ஆட்டோ மற்றும் மினி வேன் டிரைவர்கள் மீது நடவடிக்கை


அதிக சுமையுடன் மினி வேன்கள் படங்கள் :நன்றி:-ஜ‌குபர் ஹமீது இப்ராகிம்


அதிகமான குழந்தைகளுடன் ஆட்டோ :நன்றி:-ஜ‌குபர் ஹமீது இப்ராகிம்
கீழக்கரையில் 500க்கும் மேற்பட்ட வாடகை ஆட்டோக்களும் 300க்கும் மேற்பட்ட மின் வேன்களும் இயக்கப்பட்டு வருகிறது.இவைகளில் பெரும்பாலானவை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ ,மாணவிகளை மாத வாடகை அடிப்படையில் ஏற்றி செல்கின்றனர்.இந்த வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் பலருக்கு முறையான ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும் சிறுவர்களும் வாகனங்களை ஓட்டுகிறார்கள் என்றும் சிலர் குடிபோதையில் ஓட்டுகிறார்கள் என்றும் நீண்ட காலமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது.இது தொடர்பாக போக்குவரத்துறையும் ,காவல்துறையும் பாராமுகமாக இருந்து வருவாதாக பொது மக்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

அதிக வாடகை ஆசையில் மினிவேன் மற்றும் ஆட்டோக்கள் பள்ளி மாணவ,மாணவிகளை உப்பு மூட்டை ஏற்றுவது போல் அதிகப்படியான எண்ணிக்கையில் ஏற்றுகின்றனர்.இதனால் அவர்களின் புத்தக பைகள்,உணவு பைகளை மினி வேன் போன்ற வாகனங்களின் உட்புறம் வைப்பதற்கு இடமில்லாமல் வாகனங்களின் மேற்புறத்தில் எவ்வித பாதுகாப்புமின்றி வைத்து செல்கிறார்கள் இதனால் வாகனம் வளைவுகளில் திரும்பும் போது பைகள் கீழே விழுந்து பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் கீழக்கரையில் உள்ள சிறிய சந்துகளிள் அதிக வேகத்துடன் வாகனங்களை ஓட்டுவதால் உயிரழப்புகளுக்கு வாய்ப்பு உள்ளது.பல இடங்களில் சிறிய அளவிளான விபத்துகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.சில ஆட்டோக்களில் முன் இருக்கையிலும் 2 பள்ளி குழந்தைகளை அமர்த்தி செல்கிறார்கள் மேலும் மாணவ,மாணவிகளை கல்விகூடங்களுக்கு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை எதையுமே இவர்கள் கடைபிடிப்பதில்லை.மாவட்ட நிர்வாகம் உடனடியாக இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த ஹசன் ஜலால் கூறிய‌தாவ‌து, ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்த‌ குற்ற‌ச்சாட்டு இருந்து வ‌ருகிற‌து மேலும் வாட‌கை வாக‌ன‌ங்க‌ளின் ஓட்டுந‌ர்களாக உள்ள சில வாலிபர்கள் மாண‌விக‌ளை க‌ல்வி கூட‌ங்க‌ளுக்கு அழைத்து செல்லும் போது உதவியாளர் என்ற‌ பெய‌ரில் த‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் யாரையாவ‌து ஒருவ‌ரை வாக‌ன‌ங்களின் ஏற்றி செல்வ‌தாக‌வும் இவ‌ர்க‌ள் வாகனங்களில் உள்ள மாண‌விக‌ளிட‌ம் கேலி,கிண்ட‌லில் ஈடுப‌டுகிறார்கள்.ஒரு சில ஓட்டுநர்கள் என்ற போர்வையிலுள்ள சமூக விரோதிகள் மாணவிக‌ளின் இருப்பிடங்களின் செல்போன் நம்பரை தெரிந்து கொண்டு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது,தொலைபேசியில் தொல்லை செய்வது போன்ற செயலிலும் ஈடுபடுகிறார்கள்.பல பெற்றோர்கள் வெளியே தெரிந்தால் தங்கள் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்று அஞ்சி பலரும் இது குறித்து புகார் அளிக்க தயங்குகிறார்கள் .எனவே இது போன்ற புகார்களை பெறுவதற்கு கீழக்கரை காவல் நிலையத்தில் ஹெல்ப்லைன் இணைப்பை தர வேண்டும் புகார்களை ரகசியமாக விசாரிக்க வேண்டும்.

இப்திகார்
இது குறித்து மாசா அமைப்பின் நிறுவனர் இப்திகார் கூறியதாவது, இது மாணவ,மாணவிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை எனவே அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது தொடர்பாக மாசா சார்பில் ஏற்கெனவே காவல் துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முகைதீன் இப்ராகிம்
இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம் என்ற சின்ன ராஜா கூறியதாவது, எங்கள் பள்ளிக்கு மாணவ,மாணவிகளை ஏற்றி வரும் டிரைவர்களின் விபரங்களை பள்ளி நிர்வாகத்திடம் தர வேண்டும் என்ற வேண்டுகோளை பெற்றோர்களிடம் வைத்தோம்.ஆனால் இது போன்ற தகவல்களை பெற்றோகளிடமிருந்து பெறுவதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் நான் பள்ளிக்கு வரும் போது மாணவ,மாணவிகளை வாகனங்களில் ஏறி செல்வதை நானே முன்நின்று கண்காணிப்பேன் ஓட்டுநர்களிட உரிமம் உள்ளதா என்று சோதனை செய்துள்ளேன்.அதே போல் ஒவ்வொருமுறையும் எங்களது பள்ளி ஆசிரியர்களும் வாகனங்களில் மாணவ,மாணவிகள் செல்லும் வரை மேற்பார்வையிடுகிறார்கள் ஆனால் பள்ளிக்கு வெளியே எப்படி ஏற்றி செல்கிறார்கள் என்பதை நம்மால் கண்காணிக்க முடியாது இது போன்ற பிரச்சனையை தவிர்ப்பதற்காக எங்கள் பள்ளி சார்பாக மாணவ,மாணவிகளை ஏற்றி செல்ல பெண் உதவியாளருடன் வாடகை வாகனங்களை ஏற்பாடு செய்வதாக அறிவித்திருந்தோம்.ஆனால் இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை இன்று வரை பெரும்பாலான பெற்றோர்கள் தனியார் வாகனங்களில் தான் தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர். என்னதான் பள்ளிகள் மாணவ,மாணவிகளின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுத்தாலும் பெற்றோர்கள் மனது வைத்தால் தான் செயல்படுத்த முடியும்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது. இது குறித்து விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Monday, November 21, 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 40க்கும் அதிகமானோர் ரத்ததானம் !ப‌ட‌ விள‌க்க‌ம் : ர‌த்த‌தான‌ முகாமை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா தொட‌ங்கி வைத்தார்.ர‌த்த‌ தான‌ம் செய்ப‌வ‌ர் அவ‌ர‌து க‌ண‌வ‌ர் ரிஸ்வான்
கீழக்கரை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெற்குதெரு கிளை மற்றும் 500 பிளாட் கிளையும் இணைந்து இரத்ததான முகாம் நடத்தியது.இம்முகாமை மாவட்ட தலைவர் அணீஸ் ரஹ்மான் முன்னிலையில் கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில் 40க்கும் அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.மேலும் 2 கிளை நிர்வாகிகளும் ,கீழக்கரை சப் இண்ஸ்பெக்டர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரபரப்பாக நடைபெற்ற கீழக்கரை நகராட்சி கமிட்டி தேர்தல் முடிவுகள் !

பட விளக்கம் :-கீழக்கரை நகராட்சியில் புதியதாக பதவியேற்ற நிர்வாகத்தின் முதல் கூட்டம் தலைவர் ராபியத்துல் காதரியா தலைமையில் நடைபெற்றது.
கீழக்கரை நகராட்சி தலைவராக‌ ராபியத்துல் காதரியா (அதிமுக )இருந்து வருகிறார். அதிமுக சார்பில் ஆறு கவுன்சிலர்களும்,திமுக சார்பில் நான்கு கவுன்சிலர்களும்,காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும் ,10 சுயேட்சை கவுன்சிலர்களும் மொத்தம் 21 பேர்கள் உள்ளனர்.

இநிலையில் இன்று நடைபெற்ற புதியதாக பதவியேற்ற நிர்வாகத்தின் முதல் நகராட்சி கூட்டத்தில் போட்டியின்றி கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என செய்திகள் வெளியான நிலையில் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி நடைபெற்றது கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகராட்சி கமிட்டி தேர்தலில் ,போட்டியிட்டவர்களை அனைத்து கவுன்சிலர்களும் ஒட்டு பதிவு செய்து தேர்வு செய்தனர்.

கீழக்கரை நகராட்சி வரிமேல் முறையீட்டு கமிட்டிக்கு 4 உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட கவுன்சிலர்கள் பெற்ற ஓட்டுக்கள்
சாகுல் ஹமீது(திமுக), 20 ஓட்டுக்கள்
மீரா பானு (திமுக) 18 ஓட்டுக்கள் ,
சித்திக் அலி (சுயே) 19 ஓட்டுக்கள்,
தங்கராஜ் (சுயே) 16 ஓட்டுக்கள்,
முகம்மது ஜரினா பானு(அதிமுக)14 ஓட்டுக்கள்
பெற்றனர் இதில் குறைவான ஓட்டுக்கள் பெற்று தோல்வியுற்ற‌ ஜரினா பானுவை(அதிமுக)தவிர‌ மற்ற நான்கு கவுன்சிலர்கள் வரி மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

ஒரு உறுப்பினர் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டிய ஒப்பந்த(டெண்டர்) கமிட்டிக்கு போட்டியிட்ட 3 கவுன்சிலர்களில்
அன்வர் அலி(சுயே)8ஓட்டுக்கள்,
சுரேஷ்(அதிமுக) 10ஓட்டுக்கள்
முகைதீன் இப்ராகிம் 4ஓட்டுக்கள்
பெற்றனர்.இதில் சட்ட விதிகளின்படி குறைவான வாக்குகள் வாங்கிய முகைதீன் இப்ராகிமை போட்டியிலிருந்து நீக்கி விட்டு அன்வர் அலி மற்றும் சுரேஷ் ஆகியோருக்கிடையே நேரடி போட்டி நடைபெற்றது
அன்வர் அலி(சுயே) 12 ஓட்டுக்களும்
சுரேஷ் (அதிமுக)10 ஓட்டுக்களும் வாங்கினர்
ஒரு ஓட்டு செல்லாதவை என அறிவிக்கப்பட்டது இதில் முந்தைய சுற்றில் 8ஓட்டுக்கள் மட்டுமே பெற்றிருந்த அன்வர் அலி இம்முறை கூடுதலாக 4 ஓட்டுக்கள் பெற்று 2 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.முந்தைய சுற்றில் 4 ஓட்டுக்களை முகைதீன் இப்ராகிம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

நியமன‌(அப்பாயிண்மெண்ட்) கமிட்டி உறுப்பினருக்கான தேர்தலில் துணை தலைவர் ஹாஜா முகைதீன்(அதிமுக) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Sunday, November 20, 2011

நாளை கீழக்கரை நகராட்சி கூட்ட‌ம் !டெண்ட‌ர் க‌மிட்டி உள்ளிட்ட‌வை யாருக்கு ?

கீழக்கரை நகராட்சி தலைவராக‌ அதிமுக சார்பில் ராபியத்துல் காதரியா தேர்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நாளை புதியதாக பதவியேற்றுள்ள நகராட்சி நிர்வாகத்தின் முதல் கூட்டம் நடைபெறுகிறது.
நகராட்சி நிர்வாகத்தின் டெண்டர் கமிட்டி,அப்பாயின்ட்மெண்ட் கமிட்டி,வரி விதிப்பு கமிட்டி உள்ளிட்ட‌ பொறுப்புகளுக்கு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கபட உள்ளனர்.

டெண்ட‌ர் க‌மிட்டி - வார்டு 1 சுரேஷ்(அதிமுக), ,

அப்பாயின்ட்மெண்ட் க‌மிட்டி - வார்டு 8 செய்யது கருனை(அதிமுக)

வ‌ரிவிதிப்பு க‌மிட்டி - வார்டு11 மீரா பானு(திமுக),வார்டு16 முகம்மது ஜரினா பேகம்(அதிமுக), வார்டு12 -சித்திக் அலி(சுயே), வார்டு6 - தங்கராஜ் (சுயே) ஆகியோர் மேற்க‌ண்ட‌ க‌மிட்டிக‌ளுக்கு உறுப்பின‌ர்க‌ளாக‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட‌ உள்ள‌தாக‌ த‌க‌வல்கள் தெரிவிக்கினற‌ன‌.பட்டியல் இறுதி செய்யும் போது ஒரு சில‌ மாறுதல்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது

கீழக்கரை நகராட்சி துணை தலைவர் தலைமையில் உழவார பணி!

பட விளக்கம் :- கோவில் வளாகத்தில் முட்புதர்களை அகற்றும் பணியில் கீழக்கரை நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் அருகில் அதிமுக நகர் செயலாளர் ராஜேந்திரன் உள்பட மற்றும் பலர்
திருப்புல்லாணி ஒன்றிய சேவா பாரதி மற்றும் கீழக்கரை பிரதோஷ கமிட்டி இணைந்து நடத்திய கீழக்கரை சொக்கநாதர் கோவில் உழாவரப்பணி கீழக்கரை நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இந்நிக‌ழ்ச்சியை கீழ‌க்க‌ரை காவ‌ல்துறை டி.எஸ்.பி முனிய‌ப்ப‌ன் தொடங்கி வைத்தார்.இதில் நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன், அதிமுக‌ ந‌கர் செய‌லாள‌ர் ராஜேந்திர‌ன் ம‌ற்றும் சேவாபாராதி நிர்வாகிகள் உள்ப‌ட‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்டு ப‌ட‌ர்ந்திருந்த கோவில் வளாகத்தில் முட்புத‌ர்க‌ளை அக‌ற்றி துப்புர‌வு செய்த‌ன‌ர்.

200க்கும் மேல் தெருவிளக்குகள் எரியவில்லை ! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி ?

கீழக்கரையில் உள்ள தெருக்களில் மொத்தம் சுமார் 1050 தெரு விளக்குகள் உள்ளன.இதில் 200க்கு மேற்பட்ட தெரு விளக்குகள் எரியாமல் காட்சி பொருளாக உள்ளது.இதனால் ஒரு சில பகுதிகள் இருளில் முழ்கியுள்ளன.

இது குறித்து பாரூக் கூறுகையில் ,கீழக்கரையில் உள்ள ஒரு சில பகுதிகளில் தெரு விளக்குகள எரியததால் அப்பகுதியில் இரவில் நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரு பக்கம் தெரு விளக்கு எரியவில்லை இன்னொரு பக்கம் அதற்கு நேர் மாறாக ஒரு சில இடங்களில் புதியதாக பொருத்தப்பட்ட‌ ஹைமாஸ் விளக்கு பளீரென எரிந்து கொண்டிருக்கிறது அதன் அருகிலேயே அதற்கு முன்பதாக பொருத்தப்பட்ட சோடியம் விளக்கும் யாருக்கும் பலனில்லாமல் எரிந்து கொண்டிருக்கிறது.இது போல் வீணடிக்கப்படும் செயலையும் நிறுத்த வேண்டும் மேலும் தெரு விளக்குகள் எரியாதது குறித்து பல‌ முறை மக்கள் நகராட்சியில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை புதிய நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Saturday, November 19, 2011

கீழக்கரையில் விண்னை நோக்கி வீட்டு மனை விலை !

கீழக்கரையில் 13000த்திற்க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. திருமணமானால் ஒரு பெண்ணுக்கு ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற நடைமுறை இப்பகுதியில்` மிகுதியாக இருந்து வருவதால் அதிகளவில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.நாளொன்று இப்பகுதியில் 2000த்திற்கும் மேற்பட்டோர் கட்டிட தொழிலில் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.இநிலையில் ஊருக்குள் வீட்டு மனைக‌ள் கிடைப்பது என்பது அரிதாகி வருகிறது இதனால் கீழக்கரையின் புறநகர் பகுதிகளில் வீடுகளை கட்டுவது அதிகரித்து வருகிறது.இதன் மூலம் ஏராளமான நில புரோக்கர்கள் இப்பகுதியில் உருவாகியுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இத்தொழிலில் முறையாக ஈடுபட்டு வருகிறார்கள்.ஆனால் ஒரு சிலர் சொத்துக்களில் உள்ள பிரச்சனைகளை மறைத்து தங்கள் சுய லாபத்துக்காக(கமிசனுக்காக) வில்லங்க சொத்துக்களை வாங்குபவர் தலையில் கட்டி விடுவதாக கூறப்படுகிறது.இதனால் சிலர் வாழ்நாள் சேமிப்பான பணத்தை கொடுத்து நில புரோக்கர்களை நம்பி வாங்கும் சொத்துக்கள் வாங்கிய பின் கோர்ட்,கேஸ் என்று பிரச்சினையில் சிக்கி விடுவதால் மிகவும் மனம் உடைந்து போய் விடுகின்றனர்.


மேலும் சில வீட்டு மனைகளை நில‌ புரோக்க‌ர்க‌ளே வாங்கி வைத்து கொண்டு செய‌ற்கையான‌ முறையில் விலையே ஏற்றி விற்பதாக‌வும் கூற‌ப்ப‌டுகிற‌து.இதனால் குறிப்பிட்ட இடங்களின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளது. மாநாக‌ராட்சி,நக‌ராட்சி,பேரூராட்சி என்று அந்த‌ ந‌க‌ர‌ங்கள் ம‌ற்றும் ஊர்க‌ளின் சுற்றுப்புற சூழ்நிலைக்கு த‌க்க‌வாறு(இடத்தின் அருகில் தொழிற்சாலைகள்,சாலை வசதி,பள்ளிகள்,பேருந்து நிலையம்,அரசு அலுவலகங்கள்,) அதற்கு தகுந்தவாறு வீட்டு ம‌னைக‌ளின் விலைக‌ள் அமைந்திருக்கும் ஆனால் கீழ‌க்க‌ரையில் ம‌ட்டும் எந்த அடிப்படையும் இல்லாமல் பெரிய‌ ந‌க‌ர‌ங்க‌ளுக்கு ச‌மமாக‌ வீட்டு மனைக‌‌ளின் விலைக‌ள் விண்ணை தொடும் அளவுக்கு அமைந்துள்ளதாக‌ க‌ருத‌ வேண்டி உள்ள‌து. இத‌னால் கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அத‌ன் சுற்றுப்புற‌ ப‌குதிக‌ளில் இட‌ம் வாங்குவ‌து என்ப‌து ந‌டுத்த‌ர‌ ம‌ற்றும் அத‌ற்கு கீழ் உள்ள மக்களுக்கு எட்டாக்க‌னியாக‌ போய்விடும் சூழ்நிலை ஏற்ப‌ட்டுள்ளது.

இது குறித்து ரிய‌ல் எஸ்டேட் தொழில் செய்து வ‌ரும் ஜ‌குப‌ர் சாதிக் கூறுகையில்,ஒரு சில புரோக்கர்கள் வீட்டு மனை காலி இடங்களை தாங்களே வாங்கி வைத்து கொண்டு போலியான டிமாண்டை உருவாக்கி விலையை அதிகரிக்க செய்கிறார்கள். ஒரு சிலர் ரிய‌ல் எஸ்டேட் பிஸிண‌ஸ் செய்கிறேன் என்ற பெயரில் அதை ப‌ற்றிய‌ அடிப்ப‌டை அறிவு இல்லாம‌ல் ஏமாற்றுவ‌தை ம‌ட்டுமே குறிக்கோளாக‌ கொண்டு சில‌ர் செயல்ப‌டுகிறார்க‌ள். இப்ப‌குதியில் போலி ப‌த்திர‌ம் மூல‌ம் ஏமாற்றுதல்,ஒருவர் பெயரில் உள்ள சொத்துக்களை வேறு ஒருவர் பெயரின் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தல் உள்ப‌ட‌ ப‌ல் வேறு ஏமாற்று வேலைக‌ளில் சில‌ர் ஈடுப‌ட்டு அத‌னால் ப‌ல‌ரும் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள்.இது குறித்து அர‌சு க‌வ‌ன‌ம் செலுத்தி கீழ‌க்க‌ரை முழுவ‌து இது போல் யார்,யார் ஏமாற்றியுள்ளார்க‌ள் என்று க‌ண்ட‌றிந்து ந‌ட‌வ‌டிக்கை ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.மாவ‌ட்ட‌ நிர்வாகம் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டால் ஏராள‌மான‌வ‌ர்க‌ள் புகார் செய்ய‌ முன்வருவார்க‌ள். மேலும் உயர்ந்து வரும் வீட்டும‌னைக‌ளின் விலையை க‌ட்டுப்ப‌டுத்துவ‌து என்ப‌து மிக‌வும் சிர‌ம‌மான விச‌ய‌ம் ஆனால் இட‌த்தை வாங்குப‌வர்க‌ள் விழிப்புட‌ன் இருந்தால் இந்த‌ விலை உய‌ர்வை ஓர‌ள‌வு க‌ட்டுக்குள் கொண்டு வ‌ர‌லாம்.


நான் படித்த சில குறிப்புகளை உங்களுக்கு தருகிறேன் ...
ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை நிலத்தின் மீதுள்ள உரிமைகள் போலியானதாக இருக்கும், புரோக்கர்களில் சிலர் போலிகளாக இருப்பார்கள், மனை அல்லது வீட்டை வாங்கும்போது மிகக் குறைந்த காலகட்டத்துக்குள்ளாகவே பலமுறை சொத்து கைமாறியிருக் கிறதா என பாருங்கள். அப்படி இருந்தால் உஷாராகி, தாய் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் உரிமையாளரைச் சந்தித்து உண்மையில் அவர் சொத்து விற்றாரா அல்லது பாகப் பிரிவினை செய்து தந்தாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
தாய் பத்திரம் அல்லது கிரயப் பத்திரம் தொலைந்துவிட்டது என்று சொன்னால் கூடுதலாக உஷாராகுங்கள்.
வீட்டை நேரில் பார்க்காமல் வாங்காதீர்கள். அதில் யாராவது குடியி ருந்தால் அவர்களிடம் நீங்கள் வீட்டை வாங்கும் விஷயத்தைச் சொல்லுங்கள். சில இடங்களில் வீட்டின் உரிமையாளரிடம் வாடகைக்கு ஆள் கூட்டி வருவதாகச் சொல்லி வீட்டைக் காட்டி, போலிபத்திரம் மூலம் வீட்டை விற்கும் வேலையும் நடந்து வருகிறது!
புரோக்கர்கள் அவசரப்படுத்தினால் ஒரு முறைக்கு நூறு முறை விசாரியுங்கள்.
சொத்தின் உரிமையாளரை கண்ணில் காட்டாமலே விலை பேசிக் கொண்டிருந்தால் அந்த புரோக்கரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
புரோக்கர் நல்லவர்தானா என்பதை அறிய அப்பகுதி சார் பதிவாளர் அலுவலக பணியாளர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே தெரிந்துவிடும்.
இது போன்று பல் வேறு விசயங்களை தெரிந்து கொண்டுதான் சொத்தை வாங‌க‌ வேண்டும் என்றரார்

இத்துடன் சகோதரர் ரஸீன் அனுப்பிய குறிப்புகளும் இணைக்கப்பட்டுள்ளது


பத்திரப் பதிவு - அரசு வழிகாட்டி மதிப்புக்கான வரைவு திருத்தம்- சி.சரவணன்தமிழ்நாட்டில் கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு வழிகாட்டி மதிப்பு என்கிற கைடு லைன் வேல்யூ அதிகரிக்கப்படாமல் இருந்தது. புதிய அரசு, அதன் பல்வேறு திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை வரவே... இப்போது சுறுசுறுப்பாக மாநிலம் முழுக்க உள்ள ஒரு கோடி சர்வே எண்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது. மனை மற்றும் வீட்டை பத்திரப் பதிவு செய்பவர்கள் அதன் அரசு வழிகாட்டி மதிப்பில் (8 சதவிகிதம் முத்திரைத் தாள் கட்டணம், ஒரு சதவிகிதம் பதிவுக் கட்டணம்) 9 சதவிகிதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். பெரும்பாலும் சந்தை மதிப்புக்கும் அரசு வழிகாட்டி மதிப்பும் இடையே வித்தியாசம் இருக்கும்.தற்போது சந்தை மதிப்பு மற்றும் அரசு வழிக்காட்டி மதிப்பு இணையாக இருக்கும்படி அரசு புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. பல இடங்களில் தற்போதுள்ள வழிகாட்டி மதிப்பை விட சுமார் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இப்போது ஒருவர் பத்திரப் பதிவுக்காக 20 ஆயிரம் ரூபாய் செலவிட்டால், இனி 2 லட்ச ரூபாய் செலவிட வேண்டி வரும்..!இதற்கான வரைவு வழிகாட்டி மதிப்பு, புத்தகமாக தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுக்க பத்திரப் பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படிருக்கிறது. மேலும், தமிழக அரசின் பதிவுத் துறை இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது. (இணைப்பு : http://www.tnreginet.net:80/DraftGuideline2011/gvaluemainpage2011.asp )இதில், சந்தை மதிப்பை விட அதிகமாக அரசு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதை குறைக்கச் சொல்லி அரசுக்கு மனு கொடுக்கலாம். சாலை, குடிநீர், தெரு விளக்கு, பஸ் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடத்துக்கு அதிகமாக மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அரசு வழிகாட்டி மதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரைவு வழிகாட்டி மதிப்பு டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்பட இருக்கிறது. இந்த வழிகாட்டி மதிப்பை பார்த்து சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது சொத்து வைத்திருக்கும் மற்றும் விரைவில் வாங்கப் போகும் அனைவரின் கடமையும் கூட..!ஏன் சரிபார்க்க வேண்டும் என்பதற்கான விளக்கம் சிறிய உதாரணமாக தருகிறேன். ஒரு ஏரியாவுக்கு தவறுதலாக அரசு வழிகாட்டி மதிப்பு, மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டால் பாதிப்பு அந்த பகுதில் சொத்து வைத்திருக்கும் மற்றும் வாங்கப் போகிற இருவருக்கும்தான். எடுத்துக்காட்டாக ஒரு இடத்தின் அரசு வழிகாட்டி சதுர அடிக்கு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உள்கட்டமைப்பு வசதி எதுவும் இல்லாத அந்த இடத்தின் மார்க்கெட் விலை 1000 ரூபாய்தான். இந்த ஒரிஜினல் மதிப்புபடி 1,000 ச.அடி மனையின் விலை 10 லட்ச ரூபாய். இதற்கு முத்திரை மற்றும் பதிவு கட்டணம் 9% என்பது 90,000 ரூபாய். ஆனால், அரசு வழிகாட்டி மதிப்பு 3000 ரூபாய் என்கிற போது, 1000 ச.அடி. மனைவின் மதிப்பு 30 லட்ச ரூபாயாகிவிடுகிறது. இதற்கான பத்திரப் பதிவு செலவு 4.5 லட்ச ரூபாயாக இருக்கும். அதவாவது, 10 லட்ச ரூபாய் இடத்துக்கு 4.5 லட்ச ரூபாய் பதிவு கட்டணம் என்றால் என்ன செய்வது?இடத்தை விற்பவர் கணிசமாக விலையை குறைத்து கொடுத்தால் மட்டுமே வாங்குவார்கள். அப்படி நடக்கவில்லை என்றால், கடைசி வரைக்கும் சொத்து கைமாறுவது என்பதே இருக்காது. எனவே, அரசு வழிகாட்டி மதிப்பு இறுதி செய்யப்படுவதற்குள், அனைவரும் அவர்களின் சர்வே எண் அல்லது தெருவுக்கு என மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து மறுப்பு தெரிவித்து சரிசெய்வதே செய்ய வேண்டிய காரியம்.எனவே, மறந்தும் இருந்துவிடாதீர்கள். இருந்தும் மறந்துவிடாதீர்கள்..!நன்றி: அமீரக பதிவர்கள் குழுமம்

Thursday, November 17, 2011

முஸ்லீம் பொது நல சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் ந‌டைபெற்ற‌து!


கீழக்கரை தெற்குதெரு முஸ்லீம் பொது நல சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் தெற்குதெரு தனியார் வளாகத்தில் சங்கத்தின் தலைவர் ஹாலீது சுல்தான் தலைமையிலும் பொருளாளரும் 17வது வார்டு கவுன்சிலருமான காதர் சாகிபு மற்று நிர்வாகிகள் முன்னிலையிலும் இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
இம்முகாமில் கண் பரிசோதனை ,ரத்த அழுத்தம் ,சக்கரை நோய், மற்றும் பொது மருத்துவம் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை கேம்ப் மேலாளர் ஜானி உதயகுமார் தலைமையில் டாக்டர்கள் விஜயலக்ஷ்மி,விஜயராஜன்,மதன் உள்பட 12 செவிலியர்கள் கலந்து கொண்டு சிகிச்சை மேற்கொண்டனர். இம்முகாமில் 300 மேற்பட்டோர் பயன் பெற்றனர். முகாமுக்கான ஏற்பாடுகளை ஆலோசகர் ஷேக் யூசுப் செய்திருந்தார்.இந்நிகழ்ச்சி நடைபெற தெற்குதெரு ஜமாத் தலைவர் ஜாஹிர் ஹுசைன் களஞ்சியம் இடத்திற்கான ஏற்பாடையும் ,மேஜை ,மைக் போன்ற உபகரணங்களை இஸ்லாமியா பள்ளி தாளாளர் சின்னராஜா என்ற முகைதீன் இப்ராகிம் ஆகியோர் ஏற்பாடு செய்து தந்தனர்.

க‌ந்து வ‌ட்டி வ‌சூலில் வாலிப‌ர் மீது தாக்குத‌ல்


காய‌ம‌டைந்த‌ ப‌ர‌க்க‌த் அலி
ஏர்வாடி த‌ர்காவை சேர்ந்த‌வ‌ர் ப‌ர‌க்க‌த் அலி வாடகை ஆட்டோ டிரைவராக உள்ளார்.இவரது தாயார்,, ப‌வானியின் க‌ணவ‌ர் ச‌க்திவேல் என்ப‌வ‌ரிடம் ரூ 30000 ஆயிர‌ம் வ‌ட்டிக்கு வாங்கியிருந்தார் கந்து வட்டிக்காரரான சக்திவேல் ப‌ண‌ம் கொடுக்கும் போதே ரூ 1000த்திற்கு ரூ200 வட்டி என்ற கணக்கில் ரூ 6000 ஆயிரத்தை வ‌ட்டியாக‌ பெற்று கொண்டாராம்.மீதமுள்ள பணத்திற்கு தின‌மும் ரூ 300 கொடுக்க‌ வேண்டும் என்ற‌ அடிப்ப‌டையில் ப‌ரக்க‌த் அலியின் தாயார் ப‌ண‌ம் க‌ட்டி வ‌ந்துள்ள ச‌ம‌ய‌த்தில் அவ‌ருக்கு ப‌ண‌ம் க‌ட்ட முடியாத‌ சூழ்நிலை ஏற்ப‌ட்ட‌ போது அத‌ற்கான‌ பொறுப்பை அவ‌ர‌து ம‌க‌ன் பரக்கத் அலி ஏற்று தின‌மும் ரூ300 க‌ட்டி வ‌ந்தாராம் .

ச‌ம்ப‌வ‌த்த‌ன்று வ‌சூலுக்கு சென்ற கந்து வ‌ட்டிக்கார‌ர் ச‌க்திவேலிடம் இன்று ஆட்டோவில் வாட‌கை வ‌சூல் குறைந்த‌ அள‌வே ஆகியுள்ள‌து பிறகு ரூ 300 த‌ருகிறேன் என்று ப‌ர‌க்க‌த் அலி கூறியுள்ளார் உட‌னே ஆத்திர‌ம‌டைந்த‌ ச‌க்திவேல் ப‌ர‌க்க‌த் அலியை த‌காத‌ வார்த்தையில் திட்டி முகத்தில் க‌டுமையாக‌ தாக்கி விட்டு சென்றாராம். இத‌னால் முகத்தில் காயம்பட்ட ப‌ர‌க்கத் அலி ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இச்ச‌ம்ப‌வ‌ம் இப்ப‌குதியில் பெரும் ப‌ர‌ப‌ர‌ப்பை ஏற்ப‌டுத்தியுள்ள‌து.

இது குறித்து ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர் சுல‌தான் இப்ராகிம் கூறுகையில் , ஏர்வாடி ம‌ற்றும் அத‌ன் சுற்றுப்புற‌ ப‌குதிக‌ளில் க‌ந்து வ‌ட்டிகாரார்க‌ளின் அட்ட‌காச‌ம் பெருகிவிட்ட‌து.ஏழை ம‌க்க‌ளின் வ‌றுமையை ப‌ய‌ன்ப‌டுத்தி இவ‌ர்க‌ள் அட்டை போல் ர‌த்த‌த்தை உறிஞ்சுகிறார்க‌ள்.இவ‌ர்க‌ளால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ஏராளமானோர் வெளியே சொல்வ‌த‌ற்க்கு அஞ்சுகிறார்க‌ள்.ஒரு சில‌ர் இவ‌ர்க‌ளுக்கு பய‌ந்து ஊர் திரும்பாம‌ல் உள்ளார்க‌ள்.மாவ‌ட்ட‌ நிர்வாக‌ம் இது குறித்து க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்

நவ 21ல் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை கீழக்கரை வழியாக ராமநாதபுரம் வருகை
பாப‌ரி ம‌ஸ்ஜிதை மீட்க‌ கோரி இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் விழிப்புணர்வு ரத யாத்திரை வரும் நவம்பர் 19ஆம் தேதி மேலப்பாளையத்திலிருந்து துவங்கி டிசம்பர் 6ஆம் தேதி சென்னையை அடைய இருக்கிறது.

இது குறித்து கீழக்கரை ஜமீல் கூறுகையில் ,
தமிழகம் முழுவதும் சுற்றி வர இருக்கும் இந்த ரத யாத்திரை இன்ஷா அல்லாஹ் 21, 22ஆம் தேதிகளில் கீழக்கரை வழியாக இராமநாதபுரம் மாவட்டம் வர இருக்கிறது.

21ஆம் தேதி இராமநாதபுரம் சந்தை திடலில் மாபெரும் விளக்க பொதுக் கூட்டமும், அடுத்த நாள் 22ஆம் தொண்டி பாவோடி திடலில் விளக்கப் பொதுக் கூட்டமும் நடைபெற இருக்கிறது. என்ப‌தாக‌ தெரிவித்தார்

பாபரி மஸ்ஜித் விழிப்புணர்வு ரத யாத்திரை சம்பந்தமாக பேனர்கள்,கட்வுட்கள், ஆட்டோ விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் இராமநாதபுரம் மாவட்ட‌த்தில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் செய்ய‌ப்ப‌ட்டு உள்ள‌து.

அரிதாகிய‌ முட்டுதேங்காய் விளையாட்டு !


(பழைய)பைல் ப‌ட‌ம்

கம்ப்யூட்டர் யுகத்தில் அரிதாகி போன விளையாட்டுக்களில‌ ஒன்று "முட்டு தேங்காய் பந்தயம்" என்றைழைக்கப்படும் விளையாட்டு போட்டி, இபோட்டியானது தென்னைம‌ர‌ங்க‌ள் மிகுதியாக‌ உள்ள கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புற‌ ப‌குதியில் ஒரு காலத்தில் இளைஞர்க‌ள் ம‌த்தியில் பிர‌ப‌ல‌மாக‌ இருந்தது இன்று "அப்ப‌டின்னா என்ன " என்று கேட்க்கும் நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டு விட்டது.

இந்த முட்டு தேங்காய் பந்தயத்தில் பங்கேற்கும் இருவர் கையில் ஆளுக்கொரு தேங்காய் வைத்து தேங்காயோடு தேங்காய் மோத செய்வர் யாருடைய தேங்காய் உடைகிறதோ அவர் தோற்றவராக கருதப்பட்டு உடைந்த தேங்காயை வெற்றிபெற்றவருக்கு கொடுத்து விட வேண்டும் என்பதாக இப்போட்டி நடைபெறும்.

இது குறித்து தேங்காய் வியாபாரி நாசர் கூறியதாவது,
இன்றைய தலைமுறையினர்ன் பெரும்பாலான விளையாட்டுக்களை வீட்டில் உட்கார்ந்து கொண்டே கம்ப்யூட்டரில் விளையாடி விடுகிறார்கள்.இது போன்ற விளையாட்டுக்களில் ஆர்வமில்லை.இவ்விளையாட்டானது சுவராசியமாக இருக்கும் தற்போது இவ்விளையாட்டு அரிதாகி விட்டது . ஆனாலும் வெகு அரிதாக ஒரு சிலர் இந்த முட்டு தேங்காய் பந்தயத்துக்காக தேங்காயை வாங்கி செல்கிறார்கள்.இந்த முட்டுதேங்காய் விளையாட்டுக்கு ப‌ய‌ன் ப‌டுத்த‌ப்ப‌டும் தேங்காய் மூடி கடினமாக இருக்கும் உடைப்ப‌து ச‌ற்று சிர‌மம்.என‌வே இத‌ற்கான மற்ற ரக தேங்காயை விட‌ விலை ச‌ற்று கூடுத‌லாக‌ இருக்கும். மேலும் அர‌சு இந்த‌ ப‌குதியில் தென்னை விளை பொருட்க‌ளுக்கான‌ க‌ண்காட்சியை இது போன்ற‌ விளையாட்டுக‌ளை அங்கு ந‌டைபெற‌ செய்ய‌லாம் என்றார்.

Wednesday, November 16, 2011

மகளிருக்கு உபயோகமில்லாத மகளிர் சுகாதார வளாகம்
கீழக்கரை ஜின்னா தெருவில் கடந்த 2004ல் பொதுமக்கள் உபயோகத்திற்க்காக சொர்ணா ஜெயந்தி திட்டத்தின் கீழ் மகளிர் சுகாதார வளாகம் (கழிப்பறை) கட்டப்பட்டு அதில் மின்சார மோட்டார் மற்றும் தண்ணீர் தொட்டி வசதியுடன் செயல்பட்டு வந்தது.பொது மக்களுக்கு பெரும் பயனாக இருந்தது அதன் பிறகு ஆறு வருடங்களாக உபயோகமில்லாமல் சுகாதார சீர்கேடுடன் பூட்டியே உள்ளது.
இது குறித்து இப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது, கடந்த 7 வருடங்களுக்கு முன் திறக்கப்பட்ட இந்த கழிப்பறை ஒரு வருடம் மட்டுமே செயல்பட்டது பின்னர் திடீரென அங்கிருந்த மின்சார மோட்டரும்,பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியும் காணமல் போனது. இது குறித்து முந்தைய‌ நகராட்சியில் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .தற்போது பொறுப்பேற்று உள்ள புதிய நகராட்சி நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து 7 வருடங்களுக்கு முன் செயல்பட்டது போல் மோட்டார் இணைப்புடன் தண்ணீர் வசதி செய்து கழிப்பறை செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
இது குறித்து நகராட்சி சுகாதார அதிகாரியிடம் கேட்ட போது, இந்த புகார் பற்றி எனக்கு தெரியாது மேலும் பயன்பாடில்லாமல் உள்ள கழிப்பறைகள் குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளோம் நீங்கள் குறிப்பிட்டுள்ள கழிப்பறையையும் சரி செய்து மக்கள் பயன்பாடிற்கு விட ஏற்பாடு செய்வோம் என்றார்.

Sunday, November 13, 2011

‌பணிகள் நிறைவடையும் நிலையில் கடல்(ஜெட்டி) பாலம்!

‌பணிகள் நிறைவடையும் நிலையில் புதிய கடல்(ஜெட்டி) பாலம்! படம் : எஸ்.ரமீஸ்

சேதமடைந்த பழைய பாலம்


கீழக்கரையில் பல்லாண்டு காலமாக இருந்து வந்த கடல்(ஜெட்டி) பாலம் சேதமடைந்து விட்டதால் முந்தைய திமுக ஆட்சி காலத்தில் புதிய பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின.தற்போது புதிய‌ பாலம் கட்டும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஹசன் இப்ராகிம் கூறுகையில்,முந்தைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பணிகள் தானே கிடப்பில் போட்டு விடாமல் தற்போதைய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தின் இறுதிகட்ட பணிகளை விரைந்து முடித்து விரைவில் இதை மக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்றார்.

பெரியபட்டிணத்தில் 11.11.11 அன்று பிற‌ந்த குழ‌ந்தைக்கு ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ ப‌ரிசு

பெரியபட்டிணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 11.11.11ம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு சிறப்பு பரிசாக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அரசின் திட்டத்தின் கீழ் 700 ரூபாய்க்கான காசோலையை குழந்தையின் தாய் சித்தி ரகுபியாவிடம் வழங்கினார்.

துவக்க விழா நடந்தும் உரிய அளவில் பயன்பாடுக்கு வராத‌ ஆரம்ப சுகாதார நிலையம் குறித்து டாக்டர் வெங்கடேஸ்வரனிடம் கேட்டறிந்தார் .முத்துப்பேட்டையிலிருந்து பெரியபட்டிணம் வரை புதிய சாலை அமைத்தல், ஆரம்ப சுகாதார நியைத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுதல்,நிரந்தர டாக்டர் நியமிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி தலைவர் எம்.எஸ்.கபீர் மனு அளித்தார்.

Saturday, November 12, 2011

அதிமுக நகர் செயலாளர் முதலமைச்சரா? நகராட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வர் படத்தில் பெயர் குழப்பம் !

அதிமுகவின் கீழக்கரை நகர் செயலாளராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன் அவரது பெயரில் ,கீழ‌க்க‌ரை ந‌க‌ர் ம‌ன்ற அரங்கத்தின் சுவரில் மாட்டப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தின் கீழ் "தமிழக முதலமைச்சர் ராஜேந்திரன் "என்று பெரிய எழுத்திலும் நகர் செயலாளர் என்று சிறிய எழுத்திலும் சுவர் படத்தில் அச்சிட்டு இருப்பதால்
அதை காண்ப‌வ‌ர்க‌ள் ப‌ல‌ரும் தமிழக முதலமைச்சர் ராஜேந்திரன் என்பது போல் உள்ளதே என்று குறை கூறினர்.

இது குறித்து அப்பகுதியில் கடை நடத்தி வரும் சிதம்பரம் கூறியதாவது, கீழக்கரை நகராட்சி தலைமையிடமான அலுவலகத்தில் இது போல் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் உள்ள முதல்வர் படத்தில் பெயரை அச்சிட்டு இருப்பது நகராட்சிக்கு அழகல்ல ராஜேந்திரன் அந்த படத்தை இலவசமாக தந்தார் என்பதற்காக அவர் படத்தையே நகராட்சி அரங்கத்தில் மாட்டி விடுவார்கள் போலும் எனவே உடனடியாக அதை நீக்கி விட்டு சரியான முறையில் முதல்வர் படத்தில் பெயரை அச்சிட வேண்டும் என்றார்.

கீழக்கரையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்! நகராட்சி தலைவர் கலந்து கொள்ளவில்லை!
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் உள்ள அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது .இந்நிகழ்ச்சிக்கு ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ தலைமை வகித்தார். இம்முகாமில் கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை அதிகார் அங்காளரெட்டி,டாக்டர் அசின் ,ராமநாதபுரம் வட்ட வழங்கல் தாசில்தார் செழியன்,மின் வாரியத்துறை போர்மேன் ரிச்சார்ட்,நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,காவ‌ல்துறை இன்ஸ்பெக்ட‌ர் இள‌ங்கோவ‌ன்,சுகாதார‌த்துறை அதிகாரி ச‌ர‌வ‌ண‌ன் ம‌ற்றும் அதிகாரிக‌ளும் ஏராள‌மான‌ பொது ம‌க்க‌ளும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.இதில் பொது ம‌க்க‌ள் த‌ர‌ப்பில் 40க்கும் மேற்ப‌ட்ட‌ ம‌னுக்க‌ள் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து.இதில் பெரும்பாலான‌வை சுக‌தார ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்ட‌ புகார்க‌ள் என கூற‌ப்ப‌டுகிற‌து.
இது குறித்து ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ கூறிய‌தாவ‌து, அனைத்து ம‌னுக்க‌ளையும் க‌லெக்ட‌ரின் பார்வைக்கு எடுத்து சென்று போர்க்கால‌ அடிப்ப‌டையில் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வ‌லியுறுத்துவேன் என்றார்.

புதிய‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் பொறுப்பேற்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் முத‌ல் முக்கிய‌ நிக‌ழ்வான‌ குறை தீர்க்கும் முகாமிற்கு ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா வ‌ருகை த‌ராத‌து பொதும‌க்க‌ளுக்கு பெரும் ஏமாற்ற‌த்தை அளித்த‌து.
இது குறித்து கீழ‌க்க‌ரை டைம்ஸ் சார்பாக நகராட்சி தலைவரிடம் கேட்ட‌போது , இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து என‌க்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. அத‌னால்தான் க‌ல‌ந்து கொள்ள‌ முடிய‌வில்லை என்றார்

மாவட்ட அளவிலான‌ வாலிபால் போட்டியில் இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் வெற்றி !


கீழக்கரை இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மண்டல அளவில் போட்டியிட தகுதி பெற்றனர்.

Friday, November 11, 2011

துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமம் மேலாண்மை இயக்குநர் சலாஹீதீனுக்கு யுனெஸ்கோ விருது !துபாய் தமிழ்ச் சங்க பத்தாம் ஆண்டு விழாவின் போது ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துபாய் ஈடிஏ அஸ்கான் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம் ஸலாஹுத்தீனின் மனிதநேயப்பணிகளுக்காகவும், 70,000 க்கும் மேற்பட்டோருக்கு ஈடிஏ நிறுவனத்தில் வேலை வாய்ப்பளித்து அவர்களும் குழுமத்தில் இணைந்து செயல்பட வழி வகுத்து ஏழ்மை என்ற கொடுமையை நீக்க பாடுபட்டதற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டது.


இவ்விருதை செய்யது எம் ஸலாஹுத்தீன் அவர்களுக்கு யுனெஸ்கோவின் மௌலானா ஜலாலுதீன் ரூமி விருதினை யுனெஸ்கோவின் முன்னாள் இயக்குநரும், மொரிஷியஸ் முன்னாள் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமன் வழங்கி கௌரவித்தார்.

கீழக்கரையில் டிராக்டர் பறிமுதல் !

கீழக்கரையில் உரிமம் இல்லாமல் டிராக்டர்கள் மணல் எடுப்பதாக ஆர்.டி.ஓ முத்துகுமாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரி உத்தரவின் பேரில் தாசில்தார் தலைமையில் கல்யானகுமார்,கீழக்கரை ஆர்.ஐ.செல்வராஜ், காஞ்சிரங்குடி விஏஓ பாலையா மாயாகுளம் விஏஓ கிருஸ்ணமூர்த்தி ஆகியோர் பாலிடெக்னிக் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கீழக்கரை சீனி செய்யது இப்ராகிம் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் மணல் எடுத்து வந்து கொண்டிருந்தனர்.வாகனத்தை வழி மறித்து சோதனை செய்த போது உரிமல் இல்லாமல் மணல் எடுத்து வந்தது இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து கீழக்கரையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Wednesday, November 9, 2011

துபாயில் நாளை(10.11.11) தாசிம் பீவி முன்னாள் மாணவியர் பேரவை தொடக்கம்!

துபாய் வ‌ருகை த‌ந்துள்ள‌ க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா


துபாய் : துபாயில் நாளை(10.11.11) கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவியர் பேரவை துவக்க‌ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.இந்நிகழ்வில் அமீரகத்தில் வாழ்ந்து வரும் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவியர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிக‌ழ்ச்சியில் ப‌ங்கு கொள்ள‌ இந்தியாவிலிருந்து க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா இன்று அதிகாலை துபாய் வ‌ந்தார்.இது குறித்து துபாய் வந்துள்ள‌ க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா கூறிய‌தாவ‌து,
கீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியை தலைமையிடமாக கொண்டு முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது அமீரகத்தில் உள்ள தாசிம் பீவி கல்லூரியின் முன்னாள் மாணவியர்களையும் இணைத்து செயல்பட உள்ளது.துபாயில் நாளை ஈடிஏ ஸ்டார் ஹவுஸ் 8வது தளத்தில் உள்ள‌ கூட்ட அரங்கில்( நவம்பர் 10ந்தேதி ,வியாழக்கிழமை)இரவு 8மணியளவில் "முன்னாள் மாணவியர் பேரவை - துபாய் பிரிவு" துவக்கப்பட உள்ளது.

நிச்ச‌ய‌ம் இந்த‌ பேர‌வையின் மூல‌ம் பல்வேறு ஆக்க‌ ப‌ணிக‌ளையும்,மாண‌விக‌ளின் முன்னேற்ற‌த்திற்கான‌ ப‌ல்வேறு திட்ட‌ங்க‌ளையும் செய‌ல்ப‌டுத்துவோம். முன்னாள் மாணவிக‌ளான நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்கி தர வேண்டும் மேலும் உங்க‌ளின் வ‌ருகையை நாளை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறேன் என்றார்.

குறிப்பு :கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரியின் பயின்றவர்களுக்கு தகவல் தெரிவித்து நிகழ்ச்சி சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.இரவு உணவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.மேலதிக விபரங்களுக்கு 050 1877 634 மற்றும் 055 327 6861 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது வருகையினை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday, November 8, 2011

கீழக்கரை பெருநாள் கண்காட்சி(மணல் மேடு) திடல் !

கீழக்கரையில் பெருநாள் தினங்களில் வடக்கு தெருவில் ஒவ்வொரு வருடமும் மணல் மேடு திடல் என்றழைக்கப்படும் இடத்தில் கண்காட்சி நடைபெறும். இங்கு சிறுவர் சிறுமியர் பங்கு பெறக்கூடிய ராட்டினங்கள் மற்றும் ஏராளமான விளையாட்டு சாதனங்கள் , சிறிய கடைகள்,உணவு விடுதிகள்,புத்தக நிலையம் போன்றவை தற்காலிகமாக செயல்படும்.
இந்நிலையில் நேற்று பக்ரித் பண்டிகையையோட்டி
தொடங்கிய இந்த கண்காட்சி திடலில் மாலையிலிருந்து இரவு வரை ஏராளமான சிறுவர்,சிறுமிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கீழக்கரை நகராட்சி தலைவிக்கு ஒரு மடல்! கட்டுரையாளர் :- கீழை ராஸா
அன்புள்ள கீழக்கரை நகராட்சி தலைவி சகோதரி ராபியத்துல் காதரியா அவர்களுக்கு,எத்தனையோ ஆட்சியாளர்களை பார்த்து, பார்த்து வெறுத்து, என்றாவது நமதூருக்கு ஒரு விடிவுகாலம் வராதா..? என்ற கடைசித் துளி நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு கீழக்கரை வாசியின் ஏக்க மடல்...உங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சின்ன வயசுலே படிச்ச முயல், ஆமை கதை தான் ஞாபகம் வருகிறது. தி.மு.க வைச் சார்ந்த பல முயல்கள் தேர்தல் ஓட்டப் பந்தயத்திற்கு தயாராக காத்திருந்த வேளை, அ.தி.மு.க சார்பாக ஆமையாக நீங்கள் களத்தில் குதித்தீர்கள்! இந்தப் பிள்ளைக்கு ஏன் இந்த்த் தேவையில்லாத வேலை..? என்று சொந்தத்தில் பலரே, உங்கள் காது பட பேச, அவர்கள் அனைவரும் வாயடைக்கும் விதமாக, தி.மு.க வின் அசைக்க முடியாத கோட்டையை தகர்த்தெறிந்து, வரலாற்றில் முதல் முறையாக அ.தி.மு.க ஆட்சி அமைத்து, பெரும் அரசியல் பிண்ணனி இல்லாமல் ஒரு சாதாரண பெண்மணியாக இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறீர்கள்..! வாழ்த்துகள்..வெற்றி பெற்று விட்டீர்கள்..! வரலாறு படைத்து விட்டீர்கள்..!! இது போதுமா? உங்களை இந்த ஏற்றத்த்தில் தூக்கி நிறுத்தி, வழக்கம் போல் கீழே காத்திருக்கும் எம் மக்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..??
உங்களுக்குக் கிடைத்த இந்த பதவி சுகமா..? இல்லை சுமையா..?? இந்த கேள்வியை முன்னிறுத்தி வரலாற்றைத் திருப்பிப்பாருங்கள்..

எப்படி ஒரு ஆட்சி இந்தியாவிற்கு வேண்டுமென்று, மாகாத்மா காந்தி ஆசைபட்டாரோ, எந்த ஆட்சியை பொற்கால ஆட்சி என்று உலக வரலாறு இன்றும் கொண்டாடுகின்றதோ, அப்படி ஒரு ஆட்சியை அரேபியாவில் தந்த கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற அந்த நொடியில், அப்படியொரு மகத்தான பதவி கிடைத்ததை நினைத்து அவர் மகிழவில்லை..! மாறாகத் தேம்பித் தேம்பி அழுதார்கள்.. “ அபுபக்கரே உம்மால் சுமக்க முடியாத ஒரு பாரத்தை, அல்லாஹ் என் மீது சுமத்தி விட்டான், இந்த சோதனையை நான் எப்படி கடக்க போகிறேன்..?..” என்ற உமர் (ரலி) அவர்களின் நிலைபாட்டை ஒரு பாடமாக்கிக் கொள்ளுங்கள்...

பதவி, அதிகாரம், அந்தஸ்து இவை எல்லாம், வல்ல இறைவனின் சோதனை தவிர வேறில்லை, மறுமையில் அவன் தந்த சோதனைக்கு கண்டிப்பாக கேள்வி பதில் உண்டு, அதற்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள் சகோதரி...!


எந்த வெற்றிக்கு முன்னும், பின்னும் பல சோதனைகள் காத்திருக்கும்... அப்படித்தான் உங்களுக்கும், ஆட்சியேற்ற மறு நொடியே உங்கள் முன் எண்ணற்ற சவால்கள்...அளவுக்கதிமான எதிர்பார்ப்பு.. என்ன செய்யப் போகிறீர்கள்..?
குப்பை, கழிவு நீர் பிரச்சனை, சுகாதார சீர்கேடு, சாலை சீரமைப்பு, இப்படி எத்தனையோ பிரச்சனைகள் கனவில் கூட வந்து பயமுறுத்தும்...எதிலிருந்து ஆரம்பிக்க, எதை முதலில் முடிக்க என்ற ஏராளமான குழப்ப நிலை நிலவும். ”நீங்க விடுங்க தங்கச்சி நாங்க பார்த்து கொள்கிறோம்”..என்ற இடையூறுகள் கூட அவ்வப்போது நிகழும்...நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?
உங்கள் முன்னிற்கும் பிரச்சனைகளில் பாதி சுத்தத்தைச் சார்ந்தது... இதில் பாதி வேலையை நீங்கள் செய்ய வேண்டும், மீதி வேலையை மக்கள் செய்ய வேண்டும். பாதி வேலையை கூட செய்ய முயலாத முந்தைய ஆட்சியாளர்களைப்போல் தயவு செய்து நீங்களும் இருந்து விடாதீர்கள். குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண ஊர் பெரியவர்கள், செல்வந்தர்கள் பொதுநலவாதிகள், அரசியல் வாதிகள், சமூக அமைப்பாளர்கள், கல்வியாளர்கள் இவர்களில் முக்கியமானவர்களை ஒன்று கூட்டுங்கள், ஈகோவை கலைந்து எல்லோருடனும் கலந்து பேசி பொதுவான முடிவுகளை எடுங்கள்..முடிந்தால் அவர்களை வைத்து ”அட்வைஸ் கமிட்டி” ஒன்று அமைத்து அவர்களின் ஆலோசனைகளையும், உதவிகளையும் பெற்று ஊர் நலத்திற்கு அவர்களின் மதிப்பு மிக்க பங்கினை உங்கள் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.

அடுத்து சாலை சீரமைப்பு மற்றும் கழிவு நீர் தேக்கம்... இவை பொறியியல் துறையைச் சார்ந்தது. அரசு வேலைகளை காண்ட்ராக்ட் எடுக்கும் நிறுவனங்கள் ஏனோ தானோ வென்று வேலை செய்வதும் அதை கண்காணிக்க நியமித்திருக்கும் நபர்களும் அதற்கு துணை போவதுமே காரணம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஊரில் படித்த, இந்தத் துறைகளில் கைதேர்ந்த எத்தனையோ நபர்கள் உள்ளனர். அவர்களை ஒன்று கூட்டி அவர்களிடமிருந்து, ஆலோசனைகளை பெறுங்கள்...ஒரு சாலை, வேலை செய்யும் வேளை, கவனிக்க வேண்டிய விடயங்களை பட்டியலிடுங்கள்...நமதூர் தொழில் கல்வி அறிவை சிறிதேனும் ஊர் நலத்திற்கு பயன்படுத்த உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி தரும். இந்த வகையான ஆலோசனைகளில் வார்டு உறுப்பினர்களை பங்கேற்க செய்து வார்டு வாரியாக இந்த வேலைகளை பிரித்துக் கொடுத்து, இறுதி கட்ட வேலை முடுக்கத்தை உங்கள் கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.

இது போன்ற விசங்களால் உங்களால் ஆரம்ப கட்ட சவால்களை தகுதியான ஆலோசனைகளின் மூலம் சமாளித்து விட முடியும்.

அடுத்து அரசு திட்டங்கள்...
அரசு திட்டமா..? அப்படி என்றால் என்ன..? இது தான் நம் சமூகத்தின் நிலை. நம்மில் பெரும்பானோர் அரசு திட்டங்களைப் பற்றி அறியாதவராகவே உள்ளனர். அதைத் தெரிந்தவர்கள் கூட அரசு திட்டங்களைப் பெருவது ஒருவகையான அவமானமென்று எண்ணுபவராகவே உள்ளனர். உண்மையில் அரசு வழங்கும் சலுகைகள்..நமக்கான உரிமைகள்..அதை ஏன் நாம் உதாசீனப் படுத்த வேண்டும்..? நிலவரி, வீட்டுவரி என்று அரசிற்கு எத்தனையோ வரிகளை கட்டும் நாம், அரசாங்கம் தரும் சலுகைகளை ஏன் வீணடிக்க வேண்டும்..?
• முதியோர் ஆதரவெற்றோர் உதவித்திட்டம் – மாதம் ஆயிரம் ரூபாய்.

• ஏழைப் பெண் திருமணம் – ரூபாய் 25000 ரொக்கம், 45 கிராம் தங்கம், இதுவே பட்டம் / மற்றும் பட்டயம் பெற்றோருக்கு –ரூபாய் 50000 ரொக்கம்.

• மீன் பிடி தடைக்கால மீனவர்களுக்கு – ரூ 2000 உதவித்தொகை

• மீன் பிடி அல்லாத கால மீனவர்களுக்கு – ரூ 4000 உதவித்தொகை

• கல்வி, மற்றும் மருத்துவ உதவித்தொகை.

• தொழில் துவங்குவதற்கான கடன் உதவிகள்இவை எல்லாம் எனக்கு தோன்றிய கற்பனை விசயம் அல்ல...தமிழ்நாடு பட்ஜட் 2011-12 –ல் குறிப்பிடப்பட்ட எண்ணற்ற திட்டங்களில் ஒரு சில உதவிகள் தான் இது.

இப்படி மக்களின் பார்வைக்கு எட்டாத அரசு திட்டங்களை ஆராய்ந்து அதை நமது மக்களுக்கு சென்றடையும் வகையில் ”அரசு திட்ட விழிப்புணர்வு” கூட்டங்களை வார்டு வாரியாக நடத்துவதுடன், அது அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் செய்தல் வேண்டும்.

இவையல்லாது நமதூருக்கென்று பிரத்தேகமாக பொருந்தக் கூடிய , வெளிநாடு திரும்பியோர் மறுவாழ்வு, தொழில் உதவி திட்டம் இவை சார்பாக அரசிடமிருந்து சிறப்பு திட்டங்களின் மூலம் உதவித்தொகை பெற முயற்சித்து, அதில் நீங்கள் வெற்றி பெற்று விட்டால் நீங்கள் கீழக்கரை மக்களின் மனதில் மறக்க முடியாத பாகத்தில் பதிவாகி விடுவீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை...

பாதாள சாக்கடை திட்டம் இந்த வார்த்தையை, வாக்குறுதியை கடந்த இருபது வருடங்களாக கேட்டு வருகிறோம் இது என்ன ஆனது...?
ஒரு மாநில பட்ஜட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம், நமதூர் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், அடையாளம் தெரியாமல் போன கடந்தகால வரலாறுகளை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு பட்ஜெட் - 2009-2010-லிருந்து அந்த திட்ட்த்திற்கான வரிகள் உங்கள் பார்வைக்கு


69. மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் பாதாளச் சாக்கடைத் திட்டங்களைச் செயல்படுத்துவதென்ற இந்த அரசின் முடிவின்படி, முதற்கட்டமாக தற்போது ஆறு மாவட்டத் தலைநகரங்களில் இப்பணிகள் முடிக்கப்பட்டு, எஞ்சியுள்ள மாவட்டத் தலைநகரங்களில் இப்பணிகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக முக்கிய நகராட்சிகளிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்கீழ், வரும் நிதியாண்டில் காரைக்குடி, சாத்தூர், மன்னார்குடி, பொள்ளாச்சி, கொடைக்கானல், பெரியகுளம், பழனி, கீழக்கரை, சிவகாசி மற்றும் மேலூர் ஆகிய நகராட்சிகளில் ரூபாய் 408 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இப்படி கைக்கு வந்து இழக்கப்பட்ட, இது போன்ற திட்டங்களை, ஆளும் கட்சி என்ற அடிப்படையில் அதை மீட்டுத்தர நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழக்கரையை சிங்கப்பூராக்க வேண்டும், ஜப்பானாக்க வேண்டும் என்று ஆசைப்படும் நம் மக்களுக்கு அப்படி அந்த நாட்டை மாற்ற அந்த மக்களின் ஒத்துழைப்பு எவ்வகையானது என்பதை நம் மக்கள் அறியும் வகை செய்தல் வேண்டும். ஒதுக்கப்பட்ட இடத்தை மீறி கண்ட இடத்தில் குப்பை கொட்டுவோருக்கு நகராட்சி சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகை அபதாரம் விதிக்க வேண்டும். சட்டம் கடுமையாக இருக்கும் பட்சத்தில் தான் குற்றங்கள் குறையும்.
கடைசியாக ஒரு கோரிக்கை, ”ஆயிரம் பேரிடம் அறிவுரை கேளுங்கள் ஆனால் முடிவை மட்டும் நீங்களே எடுங்கள்” என்ற பொன் மொழிக்கிணங்க எல்லா அறிவுரைகளையும் ஆராய்ந்து நீங்களே ஒரு நல்ல முடிவெடுத்து ஊரை தலைநிமிர செய்ய வேண்டும், செய்வீர்கள்..! என்ற நம்பிக்கையுடன் இன்னும் இன்னும் எத்தனையோ எதிர்பார்ப்புகள் இருந்தாலும், அத்தனையையும் ஒரே நாளில் உங்கள் முன் சுமத்த முயலாமல், நீங்களாவது எதாவது செய்வீர்கள் என்ற எதிர்பார்புடன் காத்திருக்கும்...

.-கீழக்கரை வாசி

கீழக்கரையில் நடைபெற்ற பக்ரித் பெருநாள் தொழுகை(ப‌ட‌ங்க‌ள்)

பட விளக்கம் - மேலே உள்ள‌ படங்கள்):-கேஈசிடி சார்பில் நடைபெற்ற பெருநாள் தொழுகைபட விளக்கம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கீழக்கரையில் நடைபெற்ற பக்ரித் பெருநாள் தொழுகை
கீழக்கரையில் தியாக திருநாளம் பக்ரீத் பெருநாள் தொழுகை அனைத்து ஜமாத்களிலும், இயக்கங்கள் சார்பிலும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

கிழக்குத்தெரு ஜமாத்தில் ஹூமாயூன்கபீர் ஆலிம், குளக்கரை பள்ளியில் சம்சூதீன் ஆலிம், மேலத்தெரு புதுப்பள்ளியில் கத்தீபு மன்சூர் ஆலிம், ஓடக்கரை பள்ளியில் அப்துல் சலாம் ஆலிம், வடக்கு தெருவில் ஜமாத் தலை வர் பஷீர் தலைமையில் செய்யது முகம்மது பதவி ஆலிம், மின்ஹாஜியார் பள்ளியில் சாகுல்ஹமீது ஆலிம், பழைய குத்பா பள்ளியில் தலை வர் முகம்மது சதக்கம்பி தலை மையில் ஹைதர்அலி ஆலிம், தெற்குத்தெருவில் இக்பால் பிர்தௌசி ஆலிம், நடுத்தெரு ஜூம்மா பள்ளியில் டவுன் ஹாஜி காதர்பக்ஸ் பெருநாள் தொழுகை நடத்தினர்.கீழக்கரை கேஈசிடி சார்பில் திடலில் தொழுகை நடைபெற்றது அதில் கீழை ஜமீல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கீழக்கரை கிழக்கு தெரு திடலில் கிளைத்தலைவர் பசுல்முகம்மது தலைமையில் நடந்தது. பொருளாளர் சித்தீக் தொழுகை நடத்தினார்.