Sunday, June 30, 2013

கீழக்கரை பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் வேதியியல் துறை சார்பாக ஒருநாள் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் ஹபீப்முஹம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். வேதியியல் துறை தலைவர் தாவீதுராஜா வரவேற்புரையாற்றினார். இதில் ஜெர்மனி டுஸ்பர்க்-எஸ்சன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் கணேசமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வேதியியல் துறையின் பயன்பாடுகளையும் அதன் வளர்ச்சியையும் பற்றி எடுத்துரைத்ததுடன் தண்ணீரை எரிபொருளாக மாற்றும் ஆய்வுக் கட்டுரையையும் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

 இறுதியில் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் சேக்பரீது நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேதியியல் துறை பேராசிரியர்கள் மற்றும் நஜிமுதீன் ஆகியோர் செய்திருந்தனர்.  
 

கீழக்கரை அருகே ஏர்வாடியில் தலைமறைவாக இருந்த கேரளா இளைஞர் கைது!
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரைச்சேர்ந்த யூனுஸ் மகன் ரியாஸ்(32). இவர் மீது திருச்சூர் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் அவரை போலீசார் தேடி வந்தனர். ஏர்வாடியில் அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கேரள போலீசார் ஏர்வாடியில் முகாமிட்டு அவரை தேடினர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்த போலீசார் கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.

கீழக்கரையில் சேதமடைந்த மின்கம்பங்களால் தொடரும் ஆபத்து!கீழக்கரை,: கீழக்கரை புதிய பஸ்ஸ்டாண்டு அருகே வளைவில் உள்ள மின்கம்பம் வளைந்து எப்போது வேண்டுமானாலும் விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதை உடனடியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட மின்கம்பங்கள் மற்றும் மின் வயர்கள்தான் தற்போதும் உள்ளது.  மின்கம்பங்கள் பல இடங்களில் சேதமடைந்தும், மின்வயர்கள் பல இடங்களில் ஜாயின்டுகள் போட்டும் அறுந்து விழும் நிலையில் உள்ளது.

புதிய பஸ்ஸ்டாண்டு வளைவில் 10 நாட்களுக்கு முன்பு மணல் லாரி மோதியதில் இரும்பு மின்கம்பம் பலத்த சேதமடைந்து வளைந்து கிழே விழும் நிலையில் உள்ளது. இப்பகுதியில் மக்கள் நடமாட்டமும் வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் நடந்து செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றதோடு சரி. மின்கம்பத்தை மாற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து நகராட்சி துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன் கூறுகையில்,

அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர், உடனடியாக மின்கம்பத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்றார்

கீழக்கரையில் சிறுவர் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த அரசு விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க தொடரும் கோரிக்கை


.
100 மீட்டருக்கும் அதிகமாக தூரம் வேனை இழுத்து உடல் வலிமையை நிரூபித்த கீழக்கரையை சேர்ந்த பியர்ல் மாண்டிச்சோரி பள்ளி மாணவர்கள்  (பழைய படம்)
 
 கீழக்கரை மற்றும் சுற்று வட்டார கிராமப்புற மாணவ, மாணவியர் மத்தியில் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் கீழக்கரையில் அரசு விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விளையாட்டை மேம்படுத்த  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் அரசு பல கோடி ரூபாய் செலவழித்து வருகிறது. மாவட்டம்தோறும் விளையாட்டு அரங்கம், விடுதிகள் அமைத்து வெயிட் லிப்ட், பவர் லிப்ட், பெஞ்ச் பிரஷ், ஸ்கேட்டிங், நீச்சல், டென்னிஸ், தடகளம், வாலிபால், கால்பந்து, ஹாக்கி, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

  கடந்த ஆட்சியின்போது வட்டார அளவில் மாணவ, மாணவியரின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் தாலுகா வாரியாக ஸ்டேடியம் துவக்கப்பட்டன.

  கீழக்கரை நகர் சுற்றியுள்ள கிராமங்களின் மத்திய பகுதியாக விளங்கி வருகிறது. எனவே சுற்று வட்டார கிராம மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் கீழக்கரையில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் விளையாட்டுப் பயிற்சி அரங்கம் அமைத்து மாணவர்கள் பயிற்சி பெற ஆணையம் சார்பில் உபகரணங்களும் வழங்க வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

 கீழக்கரையில் இளைஞர்கள் ஏராளமானோர் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். மார்னிங் ஸ்டார், சவுத் ஸ்டார்  தங்கள் அணிகளுக்குப் பெயர்களை சூட்டியுள்ளனர். அல் ஜதீத், மூர்அணி, மைபாஅணி எனக் கைப்பந்து விளையாட்டு கிளப்களும் உள்ளன.

  இந்த அணிகளில் அதி வேகத்தில் துல்லியமாக, நேர்த்தியாகப் பந்து வீசுபவர்களும் உள்ளனர். அதேபோல்கீழக்கரையில் சிறுவர் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த அரசு விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க தொடரும்  கோரிக்கை!

இப்பகுதியில் ஏராளமான சின்னஞ்சிறு மாணவர்கள் உடல் வலிமையிலும்,தடகளம்,கால்பந்து உள்ளிட்டவிளையாட்டு துறைகளில் பல்வேறு திறமைகளுடன்  சிறந்து விளங்குகின்றனர்.

  இப்பகுதியில் அரசு சார்பில் விளையாட்டுப் பயிற்சி மையம் அமைத்தால் திறமையான வீரர்களை உருவாக்க முடியும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Friday, June 28, 2013

கீழக்கரை நகருக்குள் வராமல் செல்லும் பஸ்கள்! சிரமத்துக்குள்ளாகும் மக்கள்!
கீழக்கரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வெளியூரைச் சேர்ந்த பலர் இங்கு வேலைக்காக வந்து செல்கின்றனர்.வெளியூர் பஸ்கள் ஊருக்குள் உள்ள பஸ் ஸ்டாண்டுக்கு வராமல் 2 கிமீ தூரம் உள்ள ஏர்வாடி விலக்கு ரோட்டில் திரும்பி செல்கின்றன. இதனால் நள்ளிரவில் பஸ்சில் வந்திறங்கும் பயணிகள் ஊருக்குள் வருவதில் கடும் சிரமப்படுகின்றனர்.

 இங்குள்ள பஸ் ஸ்டாண்ட் உரிமம் 2009ல் முடிவடைந்தது. பஸ் நிலைய உரிமத்தை நகராட்சி நிர்வாகம் இதுவரை புதுப்பிக்காததால்தான் பஸ்கள் ஊருக்குள் வருவதில்லை எனவே உரிமத்தை நகராட்சி நிர்வாகம் உடனடியாக புதுபித்து மக்களின் சிரமம் போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுகுறித்து கீழக்கரை நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழக பொருளாளர் செய்யது இபுராகிம் கூறுகையில்,

கீழக்கரை பஸ் ஸ்டாண்டில் கட்டண கழிப்பறை, பஸ்கள் வந்து செல்லும் விபரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் போக்குவரத்து அதிகாரிகள் உரிமம் வழங்க முன்வருவதில்லை. இதனால் பொதுமக்கள் வெளியூர் செல்ல 2 கிமீ தூரம் உள்ள ஏர்வாடி விலக்கு ரோடு சென்று பஸ்சை பிடிக்க ரூ.60 கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டியுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி கீழக்கரை பஸ் ஸ்டாண்டில் போதிய அடிப்படை வசதிகள் செய்து உரிமத்தை புதுப்பிக்க கீழக்கரை நகராட்சிக்கு உத்தரவிட மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்றார்.

இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தரப்பில் கேட்ட போது ,

இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்து விட்டது.விரைவில் இப்பிரச்சனை தீரும் என்றார்.

Thursday, June 27, 2013

கீழக்கரையில் மூதாட்டியை 'காணவில்லை' ! தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டுகோள் !


கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் வசிக்கும் காலம் சென்ற மர்ஹூம். முஹம்மது இபுனு அவர்களின் மனைவி,  'முத்து ஆமினா உம்மாள்' (வயது 70) அவர்களை இன்று அதிகாலை முதல் காணவில்லை. 
 
காணாமல் போன சமயம் பச்சை நிறத்தில் கைலியும், மஞ்சள் நிற சட்டையும், ஆரஞ்சு நிறத்தில் தாவணியும் அணிந்திருந்தார். கடந்த 20 நாள்களுக்கு முன்னர் தான் இவர்களுடைய கணவர் வபாத்தானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சற்று மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மூதாட்டி காணாமல் போயுள்ளது குடும்பத்தார்களை கடும் மன உளைச்சளுக்கு ஆளாக்கியுள்ளது. 

இது குறித்து கீழக்கரை காவல் துறையினரிடமும், கண்டுபிடித்து தருமாறு மனு அளிக்கப்பட்டு உள்ளது. காணமல் போனவர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனடியாக கீழ் காணும் அலைப்பேசி எண்ணுக்கு தகவல் தருமாறு  கேட்டுக் கொள்கிறோம்.

கீழக்கரை காவல் நிலையம் - 04567 241272
 
கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை (இஸ்மாயில்) - 90034 35377
மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் (சாலிஹ் ஹுசைன்) - 9791742074

கீழக்கரையில் காணவில்லை தேடப்பட்ட
மூதாட்டி முத்து ஆமினா உம்மாள் அவர்கள் பல்வேறு இடங்களில் தேடப்பட்டு சற்று சற்று முன்னர், முத்து ஆமினா உம்மாள் அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு, அவர்கள் குடும்பத்தர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டு உள்ளார்கள்.
அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சியும், காணாமல் போன தகவலை பகிர்ந்தும் கொண்ட முக நூல் நண்பர்கள் அனைவருக்கும், முத்து ஆமினா உம்மாள் அவர்களின் குடும்பத்தார்கள் சார்பில் சாலிஹ் ஹுசைன் நன்றி தெரிவித்து கொண்டார் 
தகவல்:சாலிஹ் ஹுசைன்


 
 
 

கீழக்கரையில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த நகராட்சிக்கு எஸ்.டி.பி.ஐ கோரிக்கைகீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் கழிவு நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு  சாக்கடை வெளியேறி சாலையில் ஓடுவதை நிறுத்தி கால்வாய் அடைப்புகளை  சீர்செய்ய கோரியும் கீழக்கரை நகரில் நகராட்சி சார்பாக வழங்கப்படு குடி நீர் விநியோகம் கீழக்கரை நகர் முழுவதும் சீராக  அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய கோரியும் எஸ்.டி.பி.ஐ சார்பில் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கீழக்கரை எஸ்டிபிஐ நகர்  தலைவர் இஸ்ஹாக் தலைமையில்  நிர்வாகிகள் உபைதுல்லாஹ்,சித்தீக் முர்சல்,முஜீப் ரஹ்மான் உள்ளிட்டோர்  உடன் சென்றனர்
 

கீழக்கரையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!நூற்றுக்கணக்காண மாணவ,மாணவியர் பங்கேற்பு!கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டுநலப்பணி திட்டம் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அபுல் ஹசன் சாதலி தலைமை வகித்தார்.கீழக்கரை காவல்துறை இன்ஸ்பெக்டர் கனேசன் முன்னிலை வகித்து பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இதில் போதை பொருள் உபயோக படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கி பதாகைகள் கேந்தி சுமார் 450க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி டி.ஏஸ்.பி. அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு கீழக்கரை கடற்கரை வரை சென்றது..
இதில் பேராசிரியர்கள் மருதாலசமூர்த்தி,சாஹுல் ஹமீது,பாலமுருகன்,விமலி,உடன் சென்றனர்.ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ஆனந்த் செய்திருந்தார்

Wednesday, June 26, 2013

கீழக்கரை அரசு மருத்துவமனையில் 25 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் உள்ளதை வெளிபடுத்தவும் பிரசவத்திற்கு தேவையான மருத்துவர்கள் மருத்துவ வசதிகள்,மருத்துவர்கள்,பிரசவ கால முன் பின் பராமரிப்புபொன்றவற்றையும்,தொற்றில்லா நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தலைமை மருத்துவர் கலா துரைசாமி தலைமை வகித்தார், மருத்துவர்கள் ராஜ் மோகன்,ஜவாஹிர் உசைன்,ஷாஹுல் ஹமீது,ஹசீன்,முத்தமிழ் அரசி முன்னிலை வகித்தனர்.

இதில் கீழக்கரை ,காஞ்சிரங்குடி,மாயாகுளம் உள்பட சுற்று வட்டார கிராமங்களிலிருந்து வந்திருந்த 25 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.மருத்துவமனை மேற்பார்வையாள ராணி மற்றும் ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞான லீலாவதி ஆகீயோர் வளைகாப்பு  பணிகளை செய்தனர்.
இதனை தொடர்து தொற்றில்லா நோய் கண்டறிந்து சிகிச்சை குறித்து டாக்டர் ஜவாஹிர் Hஉசைன் விளக்கம் அளித்தார்.

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் அவசிசியமாக தொற்றில்லா நோய்களான சக்கரை ரத்த அழுத்தம் கர்ப்ப வாய் புற்று நோய் உள்பட பல்வேறு நோய்க்ளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து வசதிகளும் கீழக்கரை அரசு மருத்துவ மனையில் உள்ளது அனைவரும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்

Tuesday, June 25, 2013

கீழக்கரையில் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து வருகிறது!வீடுகளில் மழை நீர் சேகரிப்பை முறைபடுத்த கமிஷனர் வேண்டுகோள்


சில மாதங்களுக்கு முன் கீழக்கரை வந்திருந்த அரசு அதிகாரிகள்
 நவீன‌ கருவிகள் மூலம கீழக்கரையில் காற்றின் ஈரப்பதம் ,மழையின் அளவு,ஆக்சிஜென் அளவு ,போன்ற பல் வேறு கணக்கெடுப்புகள் செய்து ஆய்வு செய்தார்கள்.

 ஆய்வுக்கு பின் அவர்கள் கூறியதாவது ,கீழக்கரையில் பசுமை அளவு 38 % இருக்க வேண்டும் ஆனால் இருப்பது 21 % மட்டு
ம் இது மிகவும் குறைவாகும் பசுமை அளவு மிக குறைந்த பட்சம் 33 % இங்கு அமைந்திருக்க வேண்டும் எனவே கீழக்கரை பகுதிகளில் பசுமை அளவை அதிகரிக்க வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் அல்லது வீட்டின் மாடியில் ஆக்சிஜென் தரக்கூடிய சிறிய மரம் அல்லது செடியை வளர்க்க வேண்டும்.

இது போன்ற முறைகளை பின்பற்றவில்லை என்றால் பிற்காலத்தில் மழையளவு குறையும்,நிலத்தடி நீர் குறையும் ,இயற்கை மாற்றத்தால் மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை உண்டாகலாம்.இயற்கை சீற்றம் நிகழவும் வாய்ப்பு உள்ளது   என தெரிவித்து சென்றார்கள்

இந்நிலையில், கீழக்கரை நகராட்சி கமிஷனர்முகம்மது முகைதீன் கூறியதாவது:

ஆயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்படாமல், நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை கூறி, மறு சீரமைப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது வரை அமைக்காதவர்களின் வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க வலியுறுத்தி வருகிறோம், என்றார்.

இது குறித்து சமூக நல அர்வலர் செய்யது இப்ராஹிம் கூறுகையில்,
கீழக்கரை  உள்ள சமூக நல அமைப்புகள்,நகராட்சி நிர்வாகம்  பொதுமக்கள் ஆகியோர் இஅணைந்து இப்பிரச்ச்னை தீர்க்க செயல்பட வேண்டும்.அதிக அளவில் மரங்கள் நடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.

மானாமதுரை - சென்னை புதிய "சிலம்பு" ரயில்! ராமேஸ்வரம் வரை நீட்டிக்க கோரிக்கை


photo >Dinakaran news

மானாமதுரை&சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வர
ம் வரை நீட்டிக்க வேண்டும் என ராமநாதபுரம் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மானாமதுரை& சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை கடந்த 22ம் தேதி மானாமதுரையில் இருந்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் துவக்கி வைத்தார். இவ்விழாவில் ராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர், மத்திய நிதியமைச்சரை பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் சென்னை செல்ல தற்போது ராமேஸ்வரத்திலிருந்து தினசரி இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களே இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்கள் போதுமானதாக இல்லை.ராமநாதபுரம் ,ராமேஸ்வரம்,ராமநாதபுரம்,கீழக்கரை,பரமக்குடி பகுதி மக்கள்சென்னை செல்ல போதிய ரயில்கள் இல்லாமல் பஸ்களில் செல்கின்றனர்.

பயணிகளின் வசதிக்காக மானாமதுரை& சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து ஆவணம் செய்வதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் ரயில்களை நிறுத்தி சர்வீஸ் செய்யும் வசதிகள் கிடையாது. பிட்லைன் இருந்தால்தான் கழிவறைகளை சுத்தம் செய்வது, ரயில் பெட்டிகளில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் சரி செய்வது உட்பட பணிகளை செய்ய முடியும். ரயில் பைலட்டுகள், கார்டுகள் தங்குவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை.

மானாமதுரையுடன் நிறுத்தப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் ராமேஸ்வரம் அல்லது காரைக்குடிக்குதான் கொண்டு செல்ல வேண்டும்.

இதனால் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்தால் ரயில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், ராமநாதபுரம் மாவட்ட மக்கள், யாத்ரீகர்களுக்கு வசதியாக இருக்கும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கீழக்கரையில் ஏராளமான அணிகள் பங்கேற்ற வாலிபால்!


கீழக்கரை வடக்குத் தெரு மணல் மேட்டில் அல் ஜதீத் விளையாட்டு கிளப் (JVC) சார்பில் இரண்டு நாட்களாக நடைபெற்ற (சனி மற்றும் ஞாயிறு) 1 4 ஆம் ஆண்டு  மின்னொளி கைப்பந்து போட்டி நடை பெற்றது. 
40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற இந்த வாலிபால் போட்டியில்,

முதல் பரிசை AVC ஸ்போர்ட்ஸ் கிளப்பும், இரண்டாம் பரிசினை JVC ஸ்போர்ட்ஸ் கிளப்பும், மூன்றாம் பரிசினை CVC ஸ்போர்ட்ஸ் கிளப்பும் தட்டிச் சென்றது.

விளையாட்டு போட்டியினை அல் ஜதீத் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவர் ஆபித் அலி  ஏற்பாடு செய்து இருந்தார்.

இந்த நிகழ்வில் வடக்குத் தெரு ஜமாஅத் துணை தலைவர் அஹமது மிர்ஷா,கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர். பசீர் அஹமது, பொருளாளர். ஹாஜா அனீஸ், மற்றும் ஜமாத் பிரமுகர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.ஏராளமான பொதுமக்கள் விளையாட்டை காண குவிந்தனர்.

தகவல் : கீழை இளையவன்

 

Monday, June 24, 2013

கீழக்கரையில் தமுமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்!
கீழக்கரை நகர் தமுமுக சார்பில் வள்ளல் சீதக்காதி சாலையில்  ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ தமுமுக கொடியை ஏற்றிவைத்தார். மேலும் ஜூலை 6 பேரணி ஏன்? என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் மாவட்டத் தலைவர் சாதிக் தலைமையில் நகர் தலைவர் முகம்மது சிராஜுதீன் வரவேற்புரை ஆற்றினார்.  ஜூலை 6 பேரணி ஏன்? என்ற தலைப்பில் தலைமை கழக பேச்சாளர் கோவை. ஜெய்னுல் ஆப்தீன் சிறப்புரையாற்றினார்

நன்றியுரையை நகர் மூத்த தலைவர் அன்பின் அசன் நிகழ்தினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் நகர் தமுமுக மமக நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சி ஏற்பாட்டினை நகர் துணை தலைவர் கௌஸ் செயலாளர் அமீன் இக்பால் துணை செயலாளர் சலீம் அமீன் Pசுழு நாசர் ஓன்றிய செயலாளர். சாதிக் மற்றும் வளைகுடா நிர்வாகி கீழை. இர்பான் ஆகியோர் செய்திருந்தனர்.

கீழக்கரை அருகே கடற்கரையில் பெண் பிணம்!போலீஸ் விசாரணை!


கீழக்கரை அருகே மங்களேஸ்வர் நகர் கடலோரத்தில் 50 வயது மதிக்கத்த பெண்ணின் பிரேதம் கரை ஒதுங்கியது. தோடு, மூக்குத்தி அணிந்த அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தனர் எப்படி இறந்தார் போன்ற விபரம் தெரியவில்லை.  மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

Sunday, June 23, 2013

கீழக்கரை கல்லூரியில் 630 மாணவ,மாணயவிருக்கு விலையில்லா லேப்டாப்!


 பட விளக்கம் :அமைச்சர் சுந்தர்ராஜ் மாணவர் விலையில்லா மடிகணிணியை வழங்குகிறார்

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் மடிகணிணி வழங்கும் விழா முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாஹிப் தலைமையில் நடைபெற்றது.

கைத்தறி மற்றும் நெசவுத்துறை அமைச்சர் சுந்தராஜ் ,பொறியல் கல்லூரி முதல்வர் ஜகாபர்,சென்னை சதக் கல்லூரி இயக்குநர் ஹாமிது இப்ராஹிம்,தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரியத்த்லைவரும் அதிமுகவின் ராமனாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சுந்தரபாண்டியன்,தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கு பெற்றனர்.

முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில் 630 மாணவ,மாணவியர்களுக்கு மடிகணிணி வழங்கப்பட்டது
 

கீழக்கரை நகராட்சியில் "மெகா ஊழல்" என குற்றச்சாட்டு! போராட்டம் நடத்த ஆலோசனை (25-06-13 செவ்)கவுன்சிலர் அழைப்பு!

கீழக்கரை நகராட்சியை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஏற்கெனவே நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஆலோசனை கூட்டம் வரும் 25 ஜீன் செவ்வாய் கிழமை மாலை 4.30 மணியளவில் வள்ளல் சீதக்காதி சாலை ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் இயங்கும் காம்ப்ளக்ஸ் முதல் மாடியில் நடைபெற உள்ளதால் அனைவரையும் கலந்து கொள்ள கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளார்

கத்தி முனையில் கொள்ளை! கீழக்கரை அருகே 4பேர் கைது!


கீழக்கரையை அடுத்துள்ள திருப்புல்லாணி அருகே உள்ள சின்னாண்டிவலசையைச்  சேர்ந்தவர் மாயழகு. இவரது மனைவி கலா (25). மாயழகு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

  ஏப்ரல் 17 ஆம் தேதி கலா வீட்டில் குடும்பத்தினருடன் இருந்தபோது வீட்டிற்குள் புகுந்த 4 மர்ம நபர்கள் கலா அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.

  இது குறித்து திருப்புல்லாணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
  இந் நிலையில் நேற்று முன்தினம் ரெகுநாதபுரம் பகுதியில் திருப்புல்லாணி காவல் ஆய்வாளர் கணேசன், துணை காவல் ஆய்வாளர் ஜேசுதாஸ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரைப் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
  விசாரணையில் அவர்கள் சித்தார்கோட்டை லட்சுமணன் மகன் தெய்வேந்திரன் (36), ராசு மகன் அசோக்குமார் (32), தேனி மாவட்டம் கடமலைகுண்டு பாலூத்துவிலக்கு  பகுதியைச் சேர்ந்த சுருளியாண்டி மகன் ராஜா (40) என்பது தெரியவந்தது. இவர்கள்  தான் கலாவிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரிய வந்தது.

  இவர்கள் அளித்த தகவலின் பேரில் ஆற்றாங்கரை பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் மகன் சரவணன் (40) என்பவரை போலீஸார் ராமநாதபுரம் பஸ் நிலையம் பகுதியில் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தெய்வேந்திரனும், அசோக்குமாரும் 2011 ஆம் ஆண்டு தேவிபட்டினத்தில் கமலேஸ்வரி என்ற பெண்ணை கொலை செய்து 70 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்று கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  அங்கு தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் கெப்பனா என்பவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்று கைதான ராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

  சிறையிலிருந்து வெளியே வந்த இவர்கள் செலவுக்குப் பணம் இல்லாததால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இவ்வாறு இவர்கள் அழகன்குளத்தில் ஒரு கடையிலும், சித்தார் கோட்டையில் ஒரு செல்போன் கடையிலும் 11 செல்போன்களை கொள்ளையடித்துள்ளதும் தெரியவந்தது.

  இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 7 செல்போன்களையும், கலாவிடம் பறித்துச்  சென்ற 5 பவுன் தங்கச் சங்கிலியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
  கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


 

Saturday, June 22, 2013

கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டம் , நகராட்சியை கலைப்பது குறித்த தீர்மானம் உள்ளிட்டவைகள் குறித்து ஜவஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ பேட்டி


கீழக்கரை மேலத்தெரு உஸ்வதுன் ஹஸனா முஸ்லீம் சங்கத்தினரை ஜவஹிருல்லா.எம்.எல்.ஏ சந்தித்து பேசினார்


கீழக்கரை நகருக்கு வருகை தந்த ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ கீழக்கரையில் பல்வேறு இடங்களுக்கு சென்று  பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கீழக்கரையில் நிலவும் சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு குறைகளை பற்றி அவரிடம் புகாரளித்தனர்.

கீழக்கரையை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் மீது நில மோசடி தொடர்பாக பெண் ஒருவர் புகார் மனு அளித்தார். புகார் மனுக்களை பெற்று கொண்ட ஜவஹிருல்லா.எம்.எல்.ஏ. விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டம் ,கீழக்கரை  நகராட்சியை கலைப்பது குறித்த தீர்மானம்,கீழக்கரையில் திறந்து ஒரே நாளில் மூடி கிடக்கும் மின் கட்டண அலுவலகம்,கடல் அட்டை தடை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஜவஹிருல்லா.எம்.எல்.ஏ கீழக்கரையில்  பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது,

கீழக்கரை நகராட்சி செயல்பாடு குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளது ஏற்கெனவே கீழக்கரை நகராட்சியை கலைக்க நகர் தமுமுக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இதை பற்றி அரசிடம் வலியுறுத்துவது குறித்து ஆய்வு செய்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

கீழக்கரை பேருந்து நிலையத்தில் மின் கட்டண அலுவலகம்  அமைக்கப்பட்டு அவசர,அவசரமாக நகராட்சி நிர்வாகத்தால் திறப்பு விழா நடத்தப்பட்டு தற்போது மூடப்பட்டு கிடக்கிறது இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கடல் அட்டையை பிடிக்க தடை விதித்துள்ளது தேவையில்லாதது.கடல் அட்டை அழியும் இனமல்ல  கடல் அட்டை தடையை நீக்கம் குறித்து முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் பேசியுள்ளேன்.மத்திய அமைச்சரிடம் பேசியுள்ளேன்.தொடர்ந்து கடல் அட்டை தடையை நீக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.விரைவில் இதற்கு தீர்வு காண்போம்.


கீழக்கரை பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.சட்டசபையில் இது பற்றி பேசியுள்ளேன்.விரைவில் இத்திட்டம் செயல்படுத்துவதற்கான அறிவிப்பு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்


 

Thursday, June 20, 2013

கீழக்கரை கடல் பாலத்தில் கடலோர பாதுகாப்பு ஒத்திகையால் பரபரப்பு!

 கீழக்கரை கடல் பாலத்தில் ஒத்திகையின் போது பிடிபட்டவர்களை போலீசார் விசாரிக்கின்றனர்

கடலோர மாவட்டங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழகத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படும் அம்லா ஆப்ரேஷன்  தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், கடற்கரைப் பகுதிகள் முழுமையான பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களின் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் கடல் வழி ஊடுருவலை முறியடிக்கும் நோக்கில், தமிழகத்தில் அம்லா ஆப்ரேஷன் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஒத்திகை தொடங்கியது. கடலோர பாதுகாப்புப் படையும், காவல்துறையும் இணைந்து இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. பயங்கரவாதிகளைப் போல் கடல் வழியாக ஊடுருவ முயலும் சீருடை அணியாத பாதுகாப்பு அதிகாரிகளை கண்டுபிடிப்பதும், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக உறுதிப்படுத்துவதுமே இந்த ஒத்திகையின் நோக்கம்.

இந்நிலையில் ஏர்வாடி, கீழக்கரை கடல் பகுதியில்  நடந்த ஒத்திகையின்   போது   தீவிரவாதிகள் போன்று பாப்பாத்தி என்ற பெயர் கொண்ட படகில் வந்த மூன்று பேர்  கடல் பகுதியில்  ஊடுருவினர்.இவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்றனர் .


பிடிபட்ட  மூவரில் தலைமை காவலர் ராமசந்திரன்,கோஸ்ட் கார்ட் செல்லப்பா,இந்தியன் நேவியை சேர்ந்த கவுதம் யாதவ்  கடலோர பாதுகாப்பு ஆப்பரேசனில் பங்கேற்றவர்கள் என தெரிய வந்தது.

கீழக்கரை ஜெட்டி பாலம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆப்ரேஷன் நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒத்திகை என்று அறியப்படாததால் தீவிரவாதிகள் பிடிபட்டதாக  செய்திகள் பரவியது


 

கீழக்கரையில் டெங்கு மற்றும் மலேரியாவால் பாதிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி!

கீழக்கரையில் சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு கல்லூரி மாணவர் ,மாணவி  உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் உயிரழந்துள்ளனர்.

உயிரழப்பு ஏற்பட்டவுடன் விரைந்து நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் பின்னர்  நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்துவதில்லை.இதனால் தற்போது மீண்டும் கீழக்கரையில் டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் அதிகரித்து வருவதாக பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும்  நோய்கிருமிகள் உற்பத்தி ஆகி பரவும் வகையில் நகரில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் சரியாக தூர் வாரப்படாமல் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சீர்படுத்த  வேண்டுமென கேட்டு கொண்டுள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் அபு சாலிஹ் கூறுகையில் ,

நல்ல தண்ணீரிலிருந்து உருவாகும் டெங்கு கொசுக்கள் அதிகளவில் உள்ளது.இதனால் கீழக்கரை பகுதியில் பல இடங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படோர்  அதிகரித்து வருகின்றனர்.அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்றார்.


கீழக்கரை ஆடறுத்தான் தெரு பகுதியை சேர்ந்த லெப்பை தம்பி கூறுகையில் ,
எங்கள் பகுதியில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு  கழிவு நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.பல முறை நகராட்சி நிர்வாகத்திடம்  புகார் தெரிவித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை.இதனால் மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி வருகிறது.உடனடி நடவடிக்கை தேவை என்றார்.

இது செய்யது இப்ராஹிம் என்பவர் கூறுகையில்,

கீழக்கரையிருந்து டெங்கு,மலேரியா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் மதுரை ,ராமநாதபுரம் உள்ளிட்ட மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.அரசு நிர்வாகம் டெங்கு இல்லை ,மலேரியா இல்லவே இல்லை என்று அறிக்கை வெளியிடுவதில் காட்டும் ஆர்வத்தை நோய் தடுப்பு நடவடிக்கையில் காட்ட வேண்டும் என்றார்.

 

Wednesday, June 19, 2013

கீழக்கரை சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் தொடரும் போக்குவரத்து நெரிசல்!

மக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த தெருக்களின் இருபுறமும் சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைப்பதால், கீழக்கரை பகுதியில் விபத்து அபாயம், வீண் நெரிசல் ஏற்படுகிறது.
 
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகரில் வள்ளல் சீதக்காதி சாலை, தபால் நிலையச்சாலை உள்ளிட்டவை மக்கள், வாகன போக்குவரத்து நிறைந்த பிரதானச் சாலைகள். எப்போதும் பரபரப்பாக காணப்படும் வள்ளல் சீதக்காதி சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் அதிகம் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும்.
 
நெரிசல் மிகுந்த இந்த நேரங்களில், சாலைகளின் இருபுறமும் கனரக வாகனங்களை நிறுத்தி வைத்து சரக்குகளை இறக்குகின்றனர். தபால்நிலைய சாலையில் இரு வங்கிகள் உள்ளன. அந்தச் சாலையில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை வங்கிகளுக்கு வரும் மக்களே நடமாடமுடியாத அளவிற்கு இரு புறமும் ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களை அகற்ற, போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
 
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் கீழக்கரை நகர் தலைவர் சிராஜூதீன் கூறுகையில், “கீழக்கரையில் பள்ளி மற்றும் கல்லு�ரிகள் அதிகளவில் உள்ளன. அங்கு பயிலும் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் சென்று திரும்ப முடியாத அளவுக்கு சாலைகளின் இருபுறமும் சரக்கு வாகனங்களை நிறுத்தி வைக்கிறார்கள். இதனால் பள்ளி கல்லு�ரிகளுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகிறது. வீண் நெரிசல், விபத்து அபாயமும் ஏற்படுகிறது. பள்ளி திறக்கும் மற்றும் பள்ளி விடும் நேரங்களில் இப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றார்.

கீழக்கரையில் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ பிரச்சாரம்!


சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் சார் பில் யுஏபிஏ (சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம்) சட் டத்தை ரத்து செய்ய வேண் டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கீழக்கரையில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

கீழக்கரை நகர் தலைவர் செய்யது இஸ்ஹாக் தலை மை வகித்தார். தொகுதி தலைவர் அப்பாஸ் ஆலிம், தொழிற்சங்க அமைப்பாளர் கார்மேகம், மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட செயலாளர் அப் துல் ஜமீல் மற்றும் நகர் நிர்வாகிகள் முன்னிலை வகித்த னர்.

 முன்னதாக நகர் இணை செயலாளர் அபூபக்கர் சித் திக் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அப் துல் ஜமீல் பேசுகையில், ‘இந்த சட்டம் கொடூருமானது. இதனால் சிறுபான் மை சமூகத்தினரும், தாழ்த்தப்பட்டவர்களும் பாதிக்கப்படுவார்கள். தடா, பொ டா சட்டங்களை விட மோ சமான யுஏபிஏ சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்’ என்றார். தெரு முனை பிரசாரத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

கீழக்கரை கடலில் பல்லாண்டுகளாக கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கடலில் கலப்பதால் மீன் வளம் குறையும் அபாயம்!

(பைல்)பழைய படம்
(பைல்)பழைய படம்

கீழக்கரையில் 21 வார்டுகள் உள்ளன. சுமார் 50000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.கீழ‌க்க‌ரையில்  வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நகராட்சியால் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் மூலமாக‌ சுத்திகரிக்கப்படாமல் சாக்க‌டையாக‌ கடலில் கலக்கின்றன.இதனால் கடலின் நிறம் மாறி மாசடைந்து காணப்படுகிறது.பல ஆண்டுகளாக எத்தனையோ நகராட்சி  மாறி விட்டாலும் இப்பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது
ஏற்கேனவே பவள பாறைகளை வெட்டி எடுப்பது உள்ளிட்ட‌ பல்வேறு காரணங்களால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் இது போன்ற சாக்கடை கலப்பதால் கடலின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு கடல் நீர் மாசடைந்து மீன் வளம் குறைந்து வருவதாக கடல் வாழ் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து சமூக நல அமைப்பின் நிர்வாகி செய்யது இப்ராகிம் கூறுகையில்

 பல இடங்களில் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டால் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. மழை காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.அரசு நிர்வாகம் கால்வாய் அடைப்பை சரி செய்வது,மருந்து தெளிப்பது உள்ளிட்ட‌ நடவடிக்கை எடுத்து வந்தாலும் தற்காலிக தீர்வாகவே உள்ளது.


கழிவு நீர் கலப்பதால் கடல் வாழ் உயிரனங்கள் அழிவதற்கு வாய்ப்புகள் அதிகள் ஏற்கெனவே குறிப்பிட்ட மீன் இனங்கள் இப்பகுதியில் குறைந்து விட்டது.சாக்கடை நீரை சாலையில் ஓடாமலும் ,கடலில் கலப்பதையும் தடுப்பதென்றால் நிர‌ந்த‌ர‌ தீர்வாக கீழக்கரை நகரில் பாதாள‌ சாக்க‌டை திட்ட‌த்தை அம‌ல் ப‌டுத்தினால் ம‌ட்டுமே ச‌ரி செய்ய‌ முடியும். இதன் மூலம் சாக்கடை தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீரை விவசாய‌ பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் .ஆய்வு ப‌ணிக‌ளெல்லாம் முடிக்க‌ப்பட்ட இத்திட்டம் ப‌ல‌ ஆண்டுக‌ளகாக விரைவில் துவ‌ங்கும் என‌ அறிவிப்பு ம‌ட்டுமே உள்ள‌து.ஆண்டுக‌ள் க‌ட‌க்கும் போது இத‌ற்கான‌ திட்ட‌ ம‌தீப்பீடும் அதிக‌ரிக்கும்.என‌வே விரைந்து செய‌ல்ப‌டுத்த‌ வேண்டும்.இத்திட்டம் செயல்படுத்துவதில்  சிரமம் ஏற்பட்டு தாமதாமகும் பட்சத்தில் தற்போது உடனடி நடவடிக்கையாக  கடலில் கலக்கும்  கழிவுநீரை சுத்திகரித்து கடலில் விடுவதற்கோ அல்லது விவசாய பணிகளுக்கு பயன்படுத்த  ஏறபாடு செய்து கடல் வழ் உயிரனங்களை காப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்

Saturday, June 15, 2013

கீழக்கரை நகருக்குள் மின்சார கட்டண அலுவலகம் திறக்கப்பட்டது! நகராட்சிக்கான வரியும் அங்கேயே செலுத்த ஏற்பாடு!கீழக்கரையில்  பல்லாண்டுகளாக தனியார் கட்டத்தில் இயங்கி வந்த மின் கட்டண அலுவலகம் சென்ற நகராட்சி நிர்வாகத்தின் போது ஊருக்கு வெளியே வண்னாந்துரை  அருகே மாற்றப்பட்டது.

இதனால் கீழக்கரை மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.இது குறித்து பல்வேறு தரப்பினரும் மீண்டும் ஊருக்குள் அமைக்க கோரிக்கை விடுத்தனர்

தற்போதைய நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையின் பேரில் பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டு அலுவலகத்துக்கான கட்டுமான பணிகள்
நிறைவடைந்து நீண்ட கால காத்திருப்புக்கு பின்  இன்று மின் கட்டண அலுவலகம் மற்றும். நகராட்சி வரி வசூல் மையமும்  திறக்கப்பட்டுள்ளதுஇந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முஹைதீன்,கமிஷனர் முஹம்மது முகைதீன்,மின்சார துறை உயர் அதிகாரி அசோக்குமார், கவுன்சிலர்கள்,அதிமுக,எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும்,மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கூறியதாவது,

மின் கட்டண அலுவலகம்  திறக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


எஸ்டிபிஐ சேர்ந்தவர்கள் கூறியதாவது,

தாமதமாவதை கண்டித்து எஸ்டிபிஐ சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. திறக்க உதவிய அனைவருக்கும் எஸ்டிபிஐ சார்பில் நன்றி

மேலும் தமுமுகவை சேர்ந்த இர்பான் கூறியதாவது ,

சில  நாட்களுக்கு முன் பேராசிரியர் ஜவஹிருல்லா அவர்களிடம் கட்டண நிலையம் தாமதம் குறித்து தெரிவித்தோம். ஏற்கெனவே பேசியுள்ளதாக தெரிவித்தோடு உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசினார்.நகராட்சியுடன் வாடகை ஒப்பந்தம் சம்பந்தமாக தாமதாமாவதாக தெரிவித்தார் உடனடியாக தீர்வு காணப்படும் என்றார் அதன்படி ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ மற்றும் நகராட்சியின் முயற்சியோடு தற்போது திறக்கப்பட்டுள்ளதால் மிக்க மகிழ்ச்சி என்றார்.

ஒருவழியாக ஊருக்குள் மின் கட்டண அலுவலகத்தை கொண்டு வரமுயற்சி செய்த அனைவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
 

Friday, June 14, 2013

கீழக்கரையில் விரைவில் கடலோர காவல் நிலையம்! தமிழக காவல்துறையின் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்!


2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் கீழக்கரையில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனத்தின் மேலான்மை இயக்குநர் சலாஹுதீன்,கீழக்கரை கோல்டன் பீச் பகுதியில் கடலோர காவல் நிலையம் அமைக்க 30 சென்ட் இடத்தை அரசாங்கத்திற்க்கு இலவசமாக வழங்கி அதற்கான ஆவனங்களை கடலோர பிரிவு எஸ்பி முகம்மது ஹனிபாவிடம்  ஒப்படைத்தார்.ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் மேலும் 30 இடங்களில் கடலோர காவல் பிரிவு நிலையங்கள் அமைக்கப்படும் என தமிழக காவல்துறை கூடுதல் தலைவர் சைலேந்திரபாபு கூறினார்.

தமிழக கடலோர பகுதிகளில் சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவும், சூறவாளி, புயல் போன்ற ஆபத்துகளில் சிக்கிக் கொள்ளும் மீனவர்களை மீட்பதற்காகவும், கடல் வழி கடத்தல்களை தடுப்பதற்காக தமிழக அரசால் கடலோர காவல் பிரிவு அமைக்கப்பட்டது. இவர்களுக்கு, கடலில் ரோந்து செல்வது பற்றிய பயிற்சி ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை பார்வையிட தமிழக காவல்துறையின் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு மண்டபம் வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம்

‘‘தமிழ்நாட்டில் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மேலும் 30 இடங்களில் கடலோர பாதுகாப்பு பிரிவு (கோஸ்டல் விங்) அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை, தொண்டி, வாலிநோக்கம் உள்ளிட்ட 6 இடங்களும் இதில் அடங்கும். இங்கு துவங்கப்பட உள்ள கடலோர காவல் பிரிவுகளுக்காக 20 ரோந்து படகுகள் புதிதாக வாங்கப்பட உள்ளன.

     
இப்பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு கடலில் ஏற்படும் சூழலை சமாளிக்க தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. நீச்சல் பயிற்சி, வாட்டர் ஸ்கூட்டர் பயிற்சி, கடலின் 60 அடி ஆழம் வரை சென்று வரும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் இதில் உள்ளன. தற்போது 58 காவலர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக மண்டபம் கடலோர காவல் படை மையத்தில் 3 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக சென்னையில் இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தற்போது தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்த இப்பயிற்சிகள் உதவும்’’ என்றார்.

2011ம் ஆண்டே கீழக்கரையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது
2011ம் ஆண்டு கீழக்கரையில்  கடலோர பாதுகாப்பு அலுவலகம் அமைக்க இடம் தேடப்பட்டு வந்தது.இதற்கான இடவசதி அளிக்குமாறு ஈடிஏ நிறுவனத்தின் மேலான்மை இயக்குநர் சலாஹுதீனிடம் அப்போதைய ஊட்டி பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றிய தியாகராஜன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து மேலத்தெருவில் செய்யது முகம்மது அப்பா தர்ஹா செல்லும் வழியில் கோல்டன் பீச் பகுதியில் இலவசமாக 30 சென்ட் இடத்தை ஒதுக்கி அதற்கான் பத்திரத்தை கடலோர பிரிவு எஸ்பி முகம்மது ஹனிபாவிடம் சலாஹுதீன் அப்போது ஒப்படைத்தார்..

வபாத் அறிவிப்பு!(காலமானார்கள்)!பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த.....


 

 
 
பழைய குத்பா பள்ளி ஜமாத் மொட்டப்பிள்ளை தெரு மர்ஹூம் சேனா மூனா முஹம்மது சதக் தம்பி,மர்ஹூம் ஹபீப் முஹம்மது,மர்ஹூம் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் சகோதரரும்,ஜனாப் நூர்தீன், பழைய குத்பா பள்ளி ஜமாத் செயலாளர்,ஜனாப் இஸ்மாயில்,ஜனாப் ரபீக் அவர்களின் தகப்பானாரும் ஜனாப் அபுல் ஹசன் ,ஜனாப் உமர்கான் ,ஜனாப் ஹக்,ஜனாப் அஹமது உசைன் அவர்களின் மாமானராருகிய சே.மு ஹாஜியார் என்ற நூர் முஹம்மது அவர்கள் சென்னையில் வபத்தாகி நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ அனைவ‌ரும் துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

தகவல் : பரக்கத் அலி

Thursday, June 13, 2013

கீழக்கரையில் திமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்!


கீழக்கரையில் திமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் நகர் செயலாளர் பசீர் அஹமது தலைமை வகித்தார்..

துணை செயலாளர்கள் நயினார்,ஜமால் பாரூக்,தொழிலதிபர் சதக் இல்யாஸ் மற்றும் சுல்தான் செய்யது இப்ராகிம்  என்ற ராஜா மாவட்ட பிரதிநிதி ஏவிடி தாஹிர்,கென்னடி முன்னிலை வகித்தனர்.இதில் இலக்கிய அணி செயலாளர் அறிவரசன்,தலைமை கழக பேச்சார்கள் சைதை சாதிக் கலந்து கொண்டு பேசினர்.

மேலும் லாபிர்,சித்தீக்,அமீர்,தவ்பீக், பஞசவர்ணம் கவுன்சிலர்கள் சாஹுல் ஹமீது,ரபியுதீன்,ஹாஜா நஜிமுதீன், மீனவர் அணி சுஐபு உள்ளிட்ட  ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

கீழக்கரையில் இரங்கல் கூட்டம்! ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்!


கீழக்கரை முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் டாக்டர்.அல்ஹாஜ் ஹமீது அப்துல் காதர் ஜூன் 6ம் தேதி டில்லியில் காலமானார். அவர்களுக்கு முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில் கல்லூரிகளின் முதல்வர்கள் முஹம்மது ஜகாபர்,அலாவுதீன்,அபுல் ஹசன் சாதலி, மற்றும் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்  மேலும் செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவுலவி முகம்மது அனிபா  த்லைமையில் தொழுகை நடத்தி அன்னாரின் மஃபிரத்துக்காக துஆ செய்யப்பட்டது..

Tuesday, June 11, 2013

துள்ளி செல்லும் பள்ளி குழந்தைகளை அள்ளி அடைத்து செல்லும் வாகனங்கள்! ஆபத்து ஏற்படும் முன் முறைப்படுத்த தமுமுக கோரிக்கை!இது  குறித்து தமுமுக நகர் தலைவர் சிராஜுதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது
தற்போது பள்ளிகள் தொடங்கி விட்டதால் பள்ளி மாணவ மாணவியர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் செயல்பட  தொடங்கி விட்டது.

கீழ‌க்க‌ரையில் அதிக‌ அளவில் ஆம்னி வாக‌ன‌ங்கள் மற்றும் ஆட்டோக்கள் ப‌ள்ளி குழ‌ந்தைகளை மாத வாடகை அடிப்படையில் அழைத்து செல்கின்ற‌ன‌ர்.இவ‌ற்றில் ப‌ல வாடகைக்கு இயக்க முறையான‌ அனுமதி பெறவில்லை மேலும் சில‌ருக்கு ஓட்டுந‌ர் லைசென்ஸ் இல்லை.சிலர் கூடுதல் வாடகைக்காக அதிக அளவில் ப‌ள்ளி குழ‌ந்தைக‌ளை புளி மூட்டை போல் அடைத்து ஏற்றி செல்கின்ற‌னர்.புத்தக பைகளை அதிக அளவில் மேற்கூரையில் ஏற்றுவதால் வளைவுகளில் கவிழும் ஆபத்து உள்ளது .

மேலும் தெருக்க‌ளிலும்,வ‌ளைவுக‌ளிலும் அசுர‌ வேக‌த்தில் செல‌வதால் அடிக்க‌டி சிறு சிறு விப‌த்துக‌ளும் ஏற்ப‌டுகின்ற‌ன‌.அரசு அதிகாரிகள் பள்ளி மாணவ,மாணவியர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை முறைப்படுத்த வேண்டும்.   ஓட்டுநர்களும் பொறுப்புணர்ந்து பாதுகாப்பான முறையில் அழைத்து செல்ல வேண்டும்.பெற்றோர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்
 இவ்வாறு அவர் கூறியுள்ளார்..

 

கீழக்கரையில் மூடப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் !மீண்டும் திறக்க கோரிக்கை


கீழக்கரையைச் சேர்ந்த பெரும்பாலானோர் வெளிநாடுகளிலும், டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களிலும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள் எனவே இப்பகுதியில் பயணிகள் போக்குவரத்து அதிகளவில் இருக்கும் . ராமநாதபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களிலும் கீழக்கரையைச் சேர்ந்தவர்கள் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர்.இப்பகுதியில் பயணிகள் ரயிலுக்கு அதிக வருமானம்  ஈட்டி தரும் நகரமாக கீழக்கரை விளங்குகிறது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் கீழக்கரை கடற்கரை அருகே உள்ள பழைய சினிமா திரையரங்கில் டிக்கெட் கவுண்டர் செயல்பட்டு வந்த நிலையில் அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற சமயம் மூடப்பட்ட  ரயில் முன்பதிவு மையத்தை தற்போது  கணினி மயமாக்கப்பட்ட பயணசீட்டு முன்பதிவு மையமாக ஏற்படுத்தி மீண்டும் திறக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Monday, June 10, 2013

கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இல்ல திருமண நிகழ்ச்சி!கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஏ.அலாவுதீன் மகள் சஹானா பாத்திமாவுக்கும் முஹம்மது சையது  இப்ராகிம் மகன் ஹாரிஸ்
மீரானுக்கும் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொணடு வாழ்த்து தெரிவித்தனர்.முன்னாள் அமைச்சர் ரஹ்மான் கான்,திமுக நகர் செயலாளார் பசீர் அஹமது, திமுக பிரமுகர் மேலத்தெரு இல்யாஸ் ,சுல்தான் என்ற ராஜா,லாபிர்,கீழக்கரை ந்!அகராட்சி துணை தலைவர் ஹாஜா முஹைதீன்,மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் லுக்மான் ஹக்கீம்,சதக் பொறியில் கல்லூரி முதல்வர் ஜகாபர்,பிஆர் ஓ நஜிமுதீன் உடன் உள்ளனர்.

 

Sunday, June 9, 2013

கீழக்கரை பொது நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர்- சேர்மன் கணவர் மோதலால் பரபரப்பு! தொடரும் போஸ்டர் யுத்தம்!
நகராட்சி ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தும் கமிஷனர் முஹம்மது முஹைதீன்


கீழக்கரை மேலத்தெருவில்  மக்கள் நல இயக்கம் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இலங்கை தூதரக துணை கமிஷனர்,கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கமிசனர் முகம்மது முகைதீன் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நிகழ்வுக்கு வந்திருந்த கீழக்கரை சேர்மணின் கணவர் ரிஸ்வான் அங்கு இருந்த நகராட்சி கமிஷனர் முகம்மது முகைதீனிடம் நகராட்சி அலுவலகத்தில் கேமரா பொருத்தும் பணி என்னாயிற்று என்றார் அதற்கு பதிலளித்த கமிஷனர் அலுவலகத்தில் வைத்து கேட்க வேண்டிய கேள்வியை பொது நிகழ்ச்சியின் போது கேட்கலாமா? என்றார்.இதனை தொடர்ந்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கமிசனரை நோக்கி சத்தமிட்டார் சேர்மணின் கணவர் இதனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலர் அதிர்ச்சியடைந்தனர்.

அன்று காலை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்ததால் வெறிச்சோடிய நகராட்சி அலுவலகம்
 
இது குறித்து நகராட்சி கமிஷனர், சேர்மணின் கணவர் ரிஸ்வானின் செயலை  சக அதிகாரிகளிடம் தெரிவித்ததை தொடர்ந்து 2 நாட்களக்கு முன் காலை 10.30 மணி வரை அலுவலக பணிகளை துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பணிகளை புறக்கணித்தனர். கமிஷனர் அனைவரிடமும் ஆலோசனை செய்து மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம் செய்யலாம் தற்போது பணியை செய்யுங்கள் என்று கேட்டு கொண்டதற்கிணங்க அனைவரும் பணிக்கு திரும்பினர்.கவுன்சிலர்களும் கமிஷனரை சந்தித்து ஆலோசனை செய்தனர்.இதனால் நகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

துணை சேர்மன் ஹாஜா முஹைதீன் மற்றும் கவுன்சிலர்கள் கமிஷனரை சந்தித்தனர்

அன்று சேர்மன் தரப்பில் கீழக்கரை காவல்நிலையத்தில் ,நகராட்சி கமிஷனர்,நகராட்சி துணை தலைவர் ,கவுன்சிலர்,பத்திரிக்கையாளர் உள்ளிட்ட சிலர் மீது புகாரளிக்கப்பட்டது

அன்று மாலை நகராட்சி தலைவரின் கணவர் ரிஸ்வானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் சேர்மன் தரப்பில், நடைபெற்ற சம்பவத்துக்கு கமிஷனரிடம் மன்னிப்பு  கோரப்பட்டதால் அன்று நடைபெற  இருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக கமிஷனர் தெரிவித்தார்.

சேர்மன் தரப்பில் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரும் வாபஸ் பெறப்பட்டது

.


சேர்மனி கணவர் ரிஸ்வானை கண்டித்து  நகரெங்கும் கம்ப்யூனிஸ்ட்,காங்கிரஸ்ட்,துணை சேர்மன் உள்ளிட்டோர் சார்பில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.


இது குறித்து நகராட்சி தலைவரிடம் கேட்ட போது ,

இப்பிரச்சனை தீர்ந்து விட்டது . ஆனால் சிலர் வேண்டுமென்றே பெரிதாக்குகிறார்கள்.
என் கணவர் என்னுடன் வருவது சிலருக்கு பிடிக்கவில்லை இது பொன்ற பிரச்சனைகளை பெரிதுபடுத்தி நிர்வாகத்தை  சீர்குலைக்க முயல்கிறர்கள்  .துணை சேர்மன் ஹாஜா முஹைதீன் தூண்தலின் பேரில் இது நடைபெறுவதாக கருத வேண்டியுள்ளது.