Friday, July 8, 2011

மிரட்டும் திருக்கைகள் ! வாலில் நல்லபாம்பு விஷம்



கீழக்கரை, ஜூலை 8:
கடலில் வாழும் ஆயிரக்கணக்கான உயிரினங்களில் அபூர்வமானவைகள் சில உள்ளன. இதில் அபூர்வம் மற்றும் ஆபத்து நிறைந்தது திருக்கை மீன். கீழக்கரை பகுதியில் மன்னார் வளைகுடாவில் திருக்கை மீன்கள் அதிகளவில் உள்ளதாக கடல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இவற்றினால் ஏற்படக்கூடிய அபாயங்களை பற்றி அறிந்தால் தலைசுற்றி விடும். இவ்வளவு கொடிய விஷமுடைய உயிரினங்களுக்கு மத்தியில் தான் நமது மீனவர்கள், கடலுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் கீழக்கரை அருகே உள்ள கடற்கரையில் சுமார் 1500கிலோ எடையுள்ள திமிங்கலம் திருக்கை மீன் தாக்கியதில் இறந்து கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் திருக்கை மீன்கள் மன்னார் வளைகுடா பகுதியில் இருப்பது நிரூபணமாகியுள்ளது.
கொம்பு திருக்கை, ஆடா திருக்கை, பூவாதிருக்கை, செந்திருக்கை, மணத்திருக்கை, புளியந்திருக்கை, கருவாதிருக்கை, கல்லுதிருக்கை, கண்ணாதிருக்கை, அட்டுவாணி திருக்கை, கட்டித்திருக்கை, சிறுஉளி திருக்கை, வட்ட திருக்கை, புள்ளி திருக்கை, வவ்வால்திருக்கை, பூவாளி திருக்கை, பெருங்கருவா திருக்கை, மணத்திருக்கை என, திருக்கை மீன்களில் பலவகை உண்டு. ஒவ்வொரு வகை மீனுக்கும் தனித்தனி குணாதிசயங்கள் உள்ளன.
இதில் கொம்புத்திருக்கை சேற்று பகுதியில் வாழும். கடலில் மனிதர்களை கண்டால் உடனே மேலெழுந்து கடலின் அடிப்பகுதிக்கு இழுத்து சென்று மூழ்கடித்து கொன்று விடும். மனிதர்களை கொல்வது உணவுக்காக அல்ல, தன்னை தற்காத்து கொள்ளவே இதுபோன்று திருக்கைகள் செய்கின்றன. சிறு சிறு மீன்களை மட்டுமே திருக்கைகள் உணவாக கொள்கின்றன.
அனைத்து திருக்கை மீன்களுக்கும், வாலில் பெரிய முள் ஒன்று இருக்கும். ஆடாதிருக்கை மீன்களின் வாலில் 4பெரிய முட்கள் இருக்கும். ஒவ்வொரு முள்ளிலும், நான்கு நல்ல பாம்பின் விஷம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மீன்கள் மனிதர்கள் மற்றும் திமிங்கலத்தின் வயிற்று பகுதியை குறி வைத்து தாக்கி அழித்து விடும்.
திருக்கை மீன்களின் வால்கள் அதன் உடம்பை விட நீளமாக இருக்கும். அனைத்து திருக்கைகளும் 12மாதத்திற்கு ஒருமுறை 10குட்டிகள் வரை இடும். சுமார் 15அடி வரை அகலமாக வளரக்கூடியது. இவை நீளமாக வளராது. ஆடாத்திருக்கையானது திமிங்கலத்தையே அடித்து கொன்று விடும். சங்கு குளிக்க சென்றவர்களில் ஆடாத்திருக்கை முள் அடித்து 4பேருக்கும் மேல் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.