Thursday, November 21, 2013

பாலை தேசத்து கீழைவாசிகள் ...பகுதி 4 ! கட்டுரையாளர் :ராஜாக்கான் என்ற கீழை ராஸா


   பாலை தேசத்து  கீழைவாசிகள்
வெளிநாடு வாழ் கீழைவாசிகளின் வாழ்வியல் ஆய்வு..                       4
கட்டுரை மற்றும் படம் வடிவமைப்பு :ராஜாக்கான் என்ற கீழை ராஸா

வெளிநாடு என்றாலே மாடமாளிகைகள், கூட கோபுரங்கள் நிறைந்த          ஒரு சொர்க்கபுரி என்றே பெரும்பாலோனோர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்...சொகுசான வாழ்க்கை, எங்கெங்கும் ஏசி, அறுசுவை உணவு,உற்சாக பானம், இரவு நடனம், இப்படியான வெளிநாட்டு வாழ்க்கை தன் கண் முன்னே இருந்தும், அதைத் தொட்டறிய முடியாத தூரத்தில் தான் நம் ஹீரோக்கள் வாழ்ந்தார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...அப்படிப்பட்ட நம் ஹீரோக்களின் சொகுசு வாழ்க்கை முறைக்குத்தான் இந்த அத்தியாயத்தில் உங்களை நான் அழைத்து செல்லப் போகிறேன்.

நம்மில் பல பேர், எங்க வாப்பா வெளிநாட்டில் இருந்தாங்க, எங்க காக்கா வெளிநாட்டில் இருக்கிறாங்க...எங்க மாமா ஃபாரின் போயிருக்காங்கன்னு எத்தனையோ பேரிடம் பெருமிதத்துடன் கூறியிருப்போம்...ஆனால் எத்தனை பேர் அவர்கள், என்னவாக இருக்கிறார்கள்?...என்று எண்ணிப்பார்த்திருப்போம்... இதில் நம்மைச் சொல்லி குற்றமில்லை, இதற்கு முழுக்காரணம் நம் ஹீரோக்கள் தான்..ஆம் தங்களின் சந்தோசங்களை, உற்சாகங்களை பகிர்ந்து கொண்ட அளவிற்கு, அவர்கள் தங்கள் இருண்ட வாழ்க்கையை தம் சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை.

வெளிநாட்டில் செருப்பாக தேய்ந்து போதும் ஹீரோ போன்ற உடையணிந்து புகைப்படம் அனுப்புவதையும், கருகி வெந்த போதும் காருடன் நின்று படம் அனுப்புவதையுமே ஹீரோக்கள் தம் வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

இப்படித்தான் நம் ஹீரோக்களில் ஒருவரை என் நண்பன் ”நீங்க வெளிநாட்ல  என்ன 
வேலை செய்றீங்க” ன்னு கேட்க,

”நான் சுலைமானி ஆப்பரேட்டராக இருக்கிறேன்” என்றாராம்.

என் நண்பனும் என்னிடம் வந்து மச்சான் உனக்குத் தெரியுமா, அவரு சுலைமானி ஆப்பரேட்டராம்னு பெருமையா சொல்ல, எனக்கும் ஒரே குழப்பம், சுலைமானின்னா நமக்குத் தெரிஞ்சு ”வரட் டீ”...இதுலே ஆப்பரேட் பண்ண என்ன இருக்குன்னு குழம்ப, கடைசியில் அவர் டீ போடுறதைத்தான் எதோ டெக்னிக்கல் வேலை போல சுலைமானி ஆப்பரேட்டருன்னு ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு திரிஞ்சாருன்னு அப்புறமா தெரிய வந்தது...

இது நமக்கு வேடிக்கையாக இருந்தாலும், அவர் தன் சொந்தங்களுக்கு மத்தியில் தான் படும் வேதனைகளை வெளிக்காட்டிக் கொள்ள முன் வருவதில்லை. என்பதே உண்மை.

ஆனால் இதுவே நம் ஹீரோக்களின் குடும்பத்தினருக்கு மிகவும் சாதகமாக போய் விடுவது தான் பரிதாபத்திற்குரியது.

”ஏங்க, உங்க லாத்தா மாப்புளே 10 பவுனுலே ஒரு காசு மாலை அனுப்பியிருக்காங்க, அப்படியே கண்ணுக்குள்ளேயே நிக்குது...அடுத்த மாசம் எங்க காக்கா வர்றாங்களாம்...நீங்க வாங்கி கொடுத்துட்டா அவங்க எப்படியும் கொண்டு வந்துடுவாங்க...”

“மச்சான் நோக்கியாவுலே புதுசா ஒரு மாடல் போட்டிருக்கானாம், லாபிரோட காக்கா வாங்கிக்கிட்டு வந்திருக்காங்க...லாத்தா கூட மச்சாண்டே சொல்லுடான்னு சொன்னிச்சி, அதோட ஹெட்போனும், எக்ஸ்ட்ரா பேட்டரியும் வாங்கி அனுப்புங்க..”
“தம்பி, நம்ம தெருலேயே ஒரு இடம் வெலைக்கு வருது, விலை கொஞ்சம் கூடத்தான் ஆன நம்ம கௌரவத்துக்கு அதை எப்படியாவது வாங்கிடனும்..”

“ஏண்டா நீ அனுப்புற பத்தாயிர ரூபா பத்து நாளைக்கு கூட பத்த மாட்டேங்குது...அடுத்த மாசத்துலே இருந்து ஒரு இருபத்தைந்தாயிரமாவது அனுப்பு, அப்புறம் உன் சாச்சி சீட்டு போடப் போறாளாம் அதுக்கு ஒரு ஐயாயிரம் தனியே அனுப்பு”
இப்படியான அணுகுண்டுகள் தொடர்ந்து வந்து தாக்க, நம் ஹீரோக்களின் வெளிகாட்டிக் கொள்ளா குணமும் ஒரு காரணமாகி விடுகிறது.இப்படி எத்தனை அணுகுண்டுகளும், ஏவுகணைகளும் தொடர்ந்து வந்தாலும், தன் வேதனைகளை மறைத்த படி அனைத்தையும் நிறைவேற்ற அவர்கள் செய்யும் தியாகங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல..
ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம், போன்றவை அமைவதைப் பொருத்தே அவன் வாழ்க்கையின் தரம்  நிர்ணயிக்கப்படுகிறது.அந்த வகையில் நல்ல வீடு, நல்ல உணவு.மற்றும் நல்ல உடை என ஒரு செல்வந்தராக தன் சொந்த ஊரில் வாழும் நம் ஹீரோக்களின் வெளிநாட்டு வாழ்க்கை அதற்கு அப்படியே

 எதிர்மறையானது...ஒரு புழுக் கூட தனக்கென்று ஒரு கூட்டை அமைத்துக் கொள்ளும். ஆனால் இங்கே அவர்களின் வாழ்க்கை அதைவிட பரிதாபத்திற்கு உரியது.

ஆம் ஒரு பத்துக்கு பத்து அறையில் பதினைந்து பேர் இணைந்து வாழ்வது சாத்தியமா..?என்றால் அது வெளிநாட்டில் நம் ஹீரோக்களுக்கு மட்டுமே சாத்தியம்.இரண்டடுக்கு கட்டிலில், கீழே ஒரு விலை, மேலே ஒரு விலை, தரையில் படுக்க ஒரு விலை என அறைகளில் தங்குவதற்கான விலைகள் நிர்ணயிக்க பட, சொந்த மண்ணில் பஞ்சு மெத்தையில் படுத்துறங்கும் பெரும்பாலான நம் ஹீரோக்கள் தரையில் தங்கவே போட்டா போட்டி போடுகிறார்கள்...தன்னை பார்க்க வரும் நண்பர்களிடம் கூட, முதுகு வலி கட்டிலில் படுத்தா ஒத்துக்க மாட்டேங்குது என சப்பை கட்டு கட்டினாலும்..உண்மையான காரணம் அதன் மூலம் கிடைக்கும் சிறு தொகையையும் தன் சொந்தங்களின் சொகுசு வாழ்க்கைக்கு முதலீடு செய்வதற்கே என்பதே ஊரறிந்த உண்மை.
கேம்ப்களின்  நிலை இதை விட மோசம், அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட அறைகளில் வசிப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியே கிடையாது.அன்றெல்லாம் கேம்ப்களில் மின்விசிறி மட்டும் தான்.., ஏசி எல்லாம் கிடையாது. ஏசி என்பது நமக்கு சொகுசான ஒன்று ஆனால் வளைகுடா நாடுகளில் அது அத்தியாவசியம்.அங்குள்ள வெப்பத்தை தாங்குவதற்கே தனிப்பயிற்சி வேண்டும்.வெப்பகாலங்களில் மாலை ஏழு மணிக்கு வெளியே சென்றாலும் சுற்றிலும் நெருப்பால் சூழப்பட்ட பகுதியின் நடுவே செல்வது போன்று அனல் வீசும்.இரெவெல்லாம் அந்த அனல் தொடர்ந்து வீசும். குளிர்காலத்தில் பகலெல்லாம் வெயில் சுட்டெரிக்கும், இரெவெல்லாம் கடும் குளிர் வீசும்.இப்படி பாலைவன காலநிலைக்கு மத்தியில் சிக்கி மன அழுத்தத்திற்கு ஆளாகும் நம் ஹீரோக்கள் ஏராளம்.

கடுமையான வெப்பம் என்று வாயால் சாதாரணமாக சொன்னாலும் அதன் வீரியம் மிகவும் கொடூரமாக இருக்கும். சாதரணமாக நமது ஊரில் 35 டிகிரி செண்டி கிரேட்டையே தாங்க முடியாது, ஆனால் பாலை தேசங்களில் 50 டிகிரி வெப்பம் வரை தாங்க வேண்டி வரும். அந்த நேரங்களில் குளிர்சாதன அறைக்குள் வேலை செய்பவர்களே மிகவும் சிரமப்படுவார்கள்.நம் ஹீரோக்களின் கதி அதோகதி தான்..இதில் மிகவும் கொடுமையாக பாதிக்கப் படுவர்கள், சாலை மற்றும் கட்டுமான பணியில் ஈடுபடும் ஹீரோக்களே...

50 டிகிரி வெப்பத்தில் காருக்குள் வைக்கப்பட்ட பொருட்களே உருகிக் கொண்டிருக்கும் போது, பாலைவனத்தின் மத்தியில் நிழல் என்பதே தென்படாத இடத்தில் சூரியக்கதிர்களின் நேரடி தாக்குதலில் பணிபுரியும் அந்த ஹீரோக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்...

சர்க்கஸ்களில் கயிற்றை பற்றிக்கொண்டு அந்தரத்தில் தொங்குபவர்களை பார்த்து ஆ வென்று வாயை பிளந்திருப்போம். ஆனால் நம் சொந்தத்தில் ஒரு ஹீரோ எங்கோ கண்காணாத தேசத்தில், அதைவிட உயரமான கட்டிடத்தில் கயிற்றில் தொங்கியபடி வேலை செய்வது நம்மிடமிருந்து சுத்தமாக மறைக்கப் பட்டதை அறியாமல், நம் ஹீரோக்களை அவர்கள் தகுதிக்கு மீறி பணம் பணமென்று நச்சரிப்பது தான் உச்சகட்ட பரிதாபம்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்றார்...போன ஒரே வாரத்தில் ஓடி வந்து விட்டார். அவர் டிகிரி வரை படித்தவர், அவருக்கு கிடைத்த வேலையோ கட்டிடங்களில் லிப்ட் நிறுவும் வேலை, அதற்கும் அவர் படிப்பிற்கும் சம்பந்தமில்லை.வேலைக்கு சென்ற முதல் நாள், அவர் வேலை செய்ய வேண்டிய லிப்ட் கிணற்றை காட்டி இருக்கிறார்கள்...கிட்டத்தட்ட முப்பது மாடி உயரமுள்ள அந்த லிப்ட் கிணற்றின் ஆழத்தை மேலிருந்து பார்த்து விட்டு ஓடி வந்த அவர் இன்று வரை வெளிநாடு செல்ல துணியவில்லை. ஆனால் இதில் பரிதாபம் என்ன வென்றால், எதோ போருக்கு சென்று புறமுதுகிட்டு ஓடி வந்த வரைப் போல அவரை எள்ளி நகையாடியவர்கள் ஏராளம். வெளிநாட்டு வாழ்க்கையில் இதுவெல்லாம் வெகு சாதாராணம் என்பதே நம் ஹீரோக்களின் கருத்து. திரும்பி வந்த நண்பர் படித்தவர்...படிக்காமல் சென்ற எத்தனையோ நண்பர்கள், அதைப் பழகி விட்டார்கள்...


வீட்டில் காலையில் முழிச்சதும் பசியாற, இடியப்பம், கறி, முட்டாப்பம்,கறியடை,  வட்டலப்பம், சவ்வரிசி கஞ்சி இப்படி வித விதமான டிபனுடன் ஆரம்பித்து, பகல் இரவு என்று தொடரும் சாப்பாடுகளில் திக்கு முக்காடி போகும் நம் ஹீரோக்களின், வெளிநாடு உணவு பழக்கம் தெரியுமா..? காலையில் குப்பூஸ் எனப்படும் அரேபியன் ரொட்டியும், பருப்பும் தான். இன்னும் சிலர், விரும்பி உண்பது (வேறு வழி..??)  பாலை தேசங்களில் அதிக பேமஸான மலபாரி சான்விட்சான, பரோட்டாவுடன் சுருட்டப்பட்ட ஆம்லெட்டைத்தான்.. ஆனால் பெரும்பாலான ஹீரோக்கள் வெறும் குப்பூஸ் மற்றும் பரோட்டாவை டீயில் தொட்டு தான் சாப்பிடுவார்கள்.

என்ன இது..? வெளிநாடுகளில் அவ்வளவு உணவு தட்டுப்பாடா..? என்று எண்ணிவிடாதீர்கள்...உணவு தட்டுபாடு அல்ல பணத் தட்டுப்பாடு...ஹீரோக்கள் ஒரு போதும் சுவைகளை பார்ப்பதில்லை, குறைந்த விலையை மட்டுமே பார்க்கிறார்கள்...கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் இந்திய ரூபாயில் மாற்றி பார்த்து, ஒரு பெப்ஸியை கூட இவ்வளவு ரூபாயா..? என்று இன்றுவரை  பெப்சி குடிக்காமல் இருக்கும் ஹீரோக்கள் ஏராளம்..

கேம்ப்களில் வசிப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம், காலையில் நான்கு மணிக்கே பார்சல் கட்டிக் கொண்டு வேலைக்கு கிளம்பும் இவர்களின் உணவை மதிய வேளையில் திறந்ததும் வரும் துர்நாற்றத்தை தாங்கிக் கொண்டு சாப்பிடுவதும், தூர எறிந்து விட்டு தண்ணீரை குடித்து அன்றைய பொழுதை கழிப்பதும், ஹீரோக்களின் அன்றாடம் நிகழ்வு என்றாலும், சொந்த மண்ணில் சாப்பாடு சிறிது சூடு ஆறிப் போனதுக்கு, தன் உம்மாவை, தங்கச்சியை. பொண்டாட்டியை படுத்திய பாட்டை அவர்களால் நினைத்து பார்க்காமல் இருக்க இயலாது.

15 பேருடன் ஒரு அறையில் வசித்து, கிடைத்த உணவை சாப்பிட்டு, ஒரு பைசா, இரண்டு பைசாக்களுக்கு கணக்கு பார்த்து, உச்ச கட்ட வெப்பத்திலும், கடும் குளிரிலும் கஷ்டப்பட்டு, தான் படும் இந்த வேதனையை என் பிள்ளை படக்கூடாதென்று பாலைவன மணலில் தன்னைப் புதைத்து இன்று தன் தலைமுறையை தூக்கிப்பிடித்திருக்கும் நம் ஹீரோக்கள் நிச்சயம் போற்றப் பட வேண்டியவர்களே...ஆனால் உண்மை நிலை..??


தொடர்ந்து பேசுவோம்....

பகுதி 1 காண.... http://keelakaraitimes.blogspot.ae/2013/10/blog-post_432.html

பகுதி 2 காண.. http://keelakaraitimes.blogspot.ae/2013/10/2_23.html

பகுதி 3 காண.. http://keelakaraitimes.blogspot.ae/2013/11/3.html

தொடரும் சாலை விபத்துகள்! வேதனை தவிர்க்க தேவை வேக மதிப்பீடு கருவி!

ராமநாதபுரம் மாவட்டம் ஒரு பக்கம் வறட்சி  மாவட்டமாக இருந்தாலும் மறு பககம்  ஆன்மீக தலங்களும் சுற்றுலா தலங்களும் ஏராளமாக உள்ளன. இவற்றுக்கு தினமும் நூற்றுக்கணக்கான  சுற்றுலாபயணிகள் வெளியூர்களிலுருந்தும், வெளி மாநிலங்களிலுருந்தும் பஸ்,வேன்,கார் போன்ற வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
 இந்நிலையில் சமீப காலமாக   
ராமநாதபுரம் - கீழக்கரை - ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில்  அதிக அளவில்  வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்படுகிறது இவற்றில்   பெரும்பாலான விபத்துக்கள் அதிக வேகமாக வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பாக மாயகுளம் பகுதியில் சிறுமி ஒருவர் சாலை விபத்தில் சிக்கினார்.
சாலை விபத்துகளை தடுக்கவும்,  குறிப்பாக அதிகவேகமாக வாகனங்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தவும் ,அத்தகைய வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க நவீன தொழில்நுட்ப (ஸ்பீடு ரேடார்) முறை புகுத்தப்பட வேண்டும். 
 மேலும்,  மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதை கண்காணிக்க ரோந்து பணியில் உள்ள காவலர்களுக்கு நவீன கருவி வழங்கப்பட வேண்டும் 
.இத்தகைய நவீன கருவிகள் பயன்பாட்டுக்கு வந்தால் வாகன ஓட்டுநர்களும் எச்சரிக்கையுடன் செயல்படுவர். குறிப்பிட்ட வேகத்திலேயே வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் குறையும்.தமிழகத்தில் ஏறகெனவே சில இடங்களில் நவீன தொழில் நுட்ப(ஸ்பீடு ரேடார்) நடைமுறைக்கு வந்து விட்டது குற்ப்பிடதக்கது.


Tuesday, November 19, 2013

கீழக்கரையில் பட்டமரம் அகற்ற நடவடிக்கை!


 அகற்றப்படும் பட்டமரம்

   தினகரன் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி

கீழக்கரை முஸ்லிம்பஜார் பகுதியில் நீண்ட காலமாக பட்ட மரம்  முறிந்து விழும் நிலையில் இருந்தது.சில மாதங்கள் முன் இதன் கிளை விழுந்து தொழிலாளி ஒருவர் காயமடைந்தார்.

மரமே அகற்ற சொல்வது போல் கற்பனையான வாசகம் எழுதி மரத்தின் மேல் வைக்கப்பட்டிருந்தது.தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தோர் நகராட்சியிடம் அகற்றுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.ஊடகங்களிலும் செய்தி வெளியானது.

இந்நிலையில் கீழக்கரை நகராட்சி தலைவர் நடவடிக்கையின் பேரில் இம்மரத்தை அகற்றும் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது

தனி தாலுகா உள்ளிட்ட கிடப்பில் உள்ள கீழக்கரை நகருக்கான திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை!


 கீழக்கரை நகருக்கு அரசால் அறிவிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கிடப்பில் உள்ளது,இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.தி.மு.., ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டை நெருங்கும் சூழ்நிலையில் தி,மு.., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, கீழக்கரை தனித்தாலுகா திட்டம், தொடர்ந்து கிடப்பில் உள்ளதால் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்

கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும், அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். தாலுகா அலுவலகம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு, 17 கி.மீ.,தூரத்தில் உள்ள ராமநாதபுரம் சென்று வருகின்றனர். பணம், நேர விரையத்துடன், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

கீழக்கரையை தனித் தாலுகாவாக்க, மக்கள் நீண்ட காலமாக கோரி வந்தனர். கடந்த 2010ல் தனித் தாலுகாவாக ஆக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. கீழக்கரை முள்ளுவாடி அருகே, தாலுகா அலுவலகம் கட்ட, கீழக்கரை சதக் அறக்கட்டளையினர் இலவசமாக நிலம் வழங்க முன் வந்தனர். அந்த இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்தனர்.சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதால் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது.


வேட்பாளர்களும் வாக்குறுதியில் தனித்தாலுகா திட்டத்தை முதன்மைப்படுத்தி ஓட்டு சேகரித்தனர். .தி.மு.., அரசு பொறுப்பேற்றதும், கீழக்கரை தனித்தாலுகா அமைக்கும் பணி துவங்கிவிடும் என மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

 இரண்டு ஆண்டுகளை கடந்தும், அரசு தரப்பில் எவ்வித ஆயத்தப்பணிகளும் துவங்கவில்லை. இதனால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதி  எம்.எல்.., ஜவாஹிருல்லா இது குறித்து தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருவதாக தெரிவித்திருந்தார் ஆனால் இது வரை எவ்வித முன்னேற்றமும் தெரியவில்லை.

பாதாள சாக்கடை திட்டம் :- கீழக்கரையில் 21 வார்டு கள் உள்ளன, இங்கு 300க் கும் அதிகமான குறுகிய தெருக்கள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். குறு கிய தெருக்களிலும் ஏராள மான அடுக்கு மாடி வீடுகள் உள்ளன. பல ஆண்டுகளாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத் திகரிக்கப்படாமல் கடலில் கலக்கிறது. இதனால் கீழக் கரை கடல் பகுதி மாசடை ந்து வருகிறது. இதனால் மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரனங்கள் அழிந்து வருவதாக கடல்சார் ஆர்வலர்கள் எச்சரித்த வண்னம் உள்ளனர்.
மேலும் நகரின் பல பகுதிகளில் கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலைகளில் தே ங்கி நிற்கிறது. பெரும்பா லான இடங்களில் தற்போது கழிவுநீர் கால்வாய்களுக்கு மூடிகள் போடப்பட்டாலும் கழிவு நீர் சீராக ஓடாமல் தேங்கி நிற்பதால் சீர்கேடு ஏற்பட்டு, மலேரியா, டெங்கு உள் ளிட்ட நோய்கள் பரவ காரணமாகி விடுகிறது.

மழை காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து பல நாட்களாக சாலையில் தேங்கி நிற்கிறது. பல்லாண்டுகளாக   கீழக்கரையில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என கீழக்கரையின் சமூக நல அமைப்புகளை சேர்ந்தோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். 

கடந்த திமுக ஆட்சி காலத்தில் கீழக்கரையில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து பா தாள சாக்கடை திட்டத்திற் கான ஆய்வு பணிகள் நடந் தன.  பாதாள சாக்கடை அமைக்க ரூ.24 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் பங்களிப்பு 10 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டது. கீழக்கரை யில் 5 இடங்களில் சுத்திகரி ப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வும் நடந்தது. 

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இத்திட்டம் கிடப் பில் போடப்பட்டது. தற்போது திட்ட மதிப்பீடும் பல மடங்காக உயர்ந்துள்ளது.ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா இத்திட்டம் குறித்து சட்டமன்றத்தில் வலியுறுத்தியதாகவும் கூறினார். இருப்பினும் இன்று வரை இத்திட்டம் துவங்குவதற் கான எவ்வித அறிகுறியும் இல்லை.


கீழக்கரை கடலோர பூங்கா :
கீழக்கரை நீண்ட கடற்கரையை உள்ளடக்கிய நகராகும் சிறுவர் சிறுமியர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அரசு சார்பில் பூங்கா கீழக்கரையில் இல்லை. கீழக்கரை கடற்கரையில் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதியாக அனைவரும் அள்ளி தருவது கீழக்கரைக்கு பூங்கா அமைப்போம் என்பது தான்.
 புதிய ஜெட்டி பாலம் அமைக்கப்பட்ட பின் மீன் துறைக்கு சொந்தமான இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாலை நேரத்தில் கடலின் அழகை ரசிக்க ஏராளமான மக்கள் திரண்டு வருகின்றனர்.
 மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலையில் கடல் பாலத்தில் அமர்ந்து வருகின்றனர். 
பாலம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் காலி இடம் உள்ளது. அந்த இடத்தை கையகப்படுத்தி சிறுவர்களுக்கான பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து சமூக நல அமைப்புகளும் கோரிக்கை விடுத்தனர். நகராட்சிதலைவர் ராவியத்துல் கதரியா விரைவில் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்து சென்னையில் அப்போதைய அமைச்சர் கோகுல இந்திராவை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அரசு சார்பில் இதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதற்கான இடம் தேர்வு செய்யப்படும் என்றும், 
அருகில் உள்ள இடத்தை பயன்படுத்தி கொள்ள நகராட்சி சார்பில் மீன் வளத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டது. ஆனால் மாதங்கள் கடந்தும் இதற்கான பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: 
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு கீழக்கரை நகர் குடிநீர் தேவை தீர்க்கப்படும் என என பல ஆண்டுகளாக அறிவிப்புகள் வந்தமயமாக உள்ளது.

சமீபத்தில் அரசு ராமநாதபுரம் மாவட்டத்துக்கென பலகோடி ரூபாயில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது.இத்திட்டமும் கிடப்பில் போடப்படாமல் செயல்படுத்த வேண்டும் என கீழக்கரை சமூக நல  அமைப்புகளின்  நிர்வாகிகளான தங்கம் ராதாகிருஸ்னன்,செய்யது இப்ராஹிம் போன்றோர் ஏற்கெனவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் மீன் பதனிடும் நிலையம்,தென்னை தொடர்பான தொழிற்சாலை என்று பல்வேறு அரசு சார்ந்த தொழில் பேட்டைகள் அமைக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் உள்ளது.

தமிழக அரசு கீழக்கரை நகராட்சிக்கு புதிய சாலை அமைப்பது,குடிநீர் குழாய் பதிப்பது உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளுக்கு நிதிகளை ஒதுக்கி செயல்படுத்தி வந்தாலும்  மக்கள் பிரதிநிகள்  கீழக்கரைக்கு தனி தாலுகா உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளையும் உடனடியாக செயல்படுத்த அரசை வலியுறுத்த வேண்டும்.
அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கீழக்கரை நகராட்சியை அதிமுக கைப்பற்றியது. எனவே ஓட்டளித்த மக்களின் நம்பிக்கையை காக்கும் விதமாக உடனடியாக கீழக்கரையில் நலதிட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். 

Monday, November 18, 2013

வபாத் அறிவிப்பு (காலமானார்) !தெற்கு தெரு ஜமாத்தை சேர்ந்த...



 மர்ஹூம் வெள்ளப்பா சேகு அப்துல் காதர் அவர்களின் மருமகனும்,மர்ஹூம் கொந்த கருணை அவர்களின் மகனும்,
சீனி முஹம்மது,முஹைதீன் கருணை முக்தார் தகப்பனாரும்,

அட்வகேட் ஹசன் அலிகான்,அப்துல் மஜீத்,சீனி முஹம்மது காமில் ஆகியோருடைய மாமனாரும்,
செய்யது முஹம்மது அலிகான்,சாஹிப் இப்ராஹிம் இவர்களின் மச்சானுமாகிய

 கீழக்கரை தெற்குதெரு ஜமாத்தை சேர்ந்த  அல்ஹாஜ் முஹம்மது இப்ராஹிம் அவர்கள் இன்று காலை வபாத்தானார்கள்(காலமானார்). அன்னாரின் நல்லடக்கம் நாளை(19/11/2013) சேகு அப்பா மையவாடியில் நடைபெறுகிறது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிவூன்.

அன்னாரின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அவ‌ர‌து குடும்பத்தினர் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

தகவல் : சுஃபியான்

Sunday, November 17, 2013

பள்ளி அருகில் ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை!


கீழக்கரை அருகே வேன் மோதியதில் பழுதடைந்துள்ள பயணிகள் நிழற்குடையை புதுப்பிக்க வேண்டுமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முள்ளுவாடி ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இசிஆர் சாலையில் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது 6 மாதங்களுக்கு முன்பு வேன் மற்றும் ஆட்டோ மோதியதில் நிழற்குடையின் சுவர் இடிந்து விழுந்துவிட்டது. மீதமுள்ள இரண்டு சுவர்கள் மட்டும் நிழற்குடை தாங்கி நிற்கிறது. இதுவும் எப்போது விழும் என்று கூற முடியாத நிலையில் உள்ளது.

இந்த நிழற்குடையின் கீழ் நாள்தோறும் நூற்றுக்கணக்கான கிராம மக்களும், பள்ளி மாணவ, மாணவர்களும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இவர்கள் இந்த ஆபத்தை உணர்ந்து நிழற்குடையை புதுப்பிக்க வேண்டுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இந்த நிழற்குடை விழுந்து உயிர் பலி வாங்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இதுபற்றி வேல்சாமி என்பவர் கூறுகையில்

பள்ளி முடிந்ததும் பஸ்சுக்காக மாணவர்கள் இந்த நிழற்குடையின் கீழ் காத்திருக்கின்றனர். அண்மையில் பெய்த மழையால் நிழற்குடையின் தூண்கள் மேலும் மோசமடைந்துள்ளது. அதனால் அதிகாரிகள் உடனடியாக இதை அப்புறப்படுத்தி புதிய நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கீழக்கரையில் புதிய கடை திறப்பு நிகழ்ச்சி!


கீழக்கரை வடக்குதெரு பகுதியில் முன்னாள் சேர்மன் பசீர் அலுவலகம் அருகில் அஜ்மல் ரபான் என்ற பெயரில் புதிய ஹார்ட்வேர் கடை திறக்கப்பட்டது.இக்கடை திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கடையின் உரிமையாளர் ஜாஹிர் ஹிசைன் கூறுகையில்
கட்டுமான பணிக்கு தேவையான ஹார்டுவேர் பொருள்கள்,அரசு சான்றிதழ் பெற்று இரும்ப் முறுக்கு கம்பிகள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.என்றார்.

காலமானார் (வபாத் அறிவிப்பு) !



கீழக்கரை வடக்குத்தெருவைச் சேர்ந்தஇந்தியன் சூப்பர் மார்ட்” அன்வர்தீன், அப்துல் ஸமது, ஸர்புதீன், முஹம்மது அனீஸ், இஸ்மாயில் , ரசூல்தீன், உசைனாபீவி, சித்தி ரபிக்கா 
ஆகியோரின் தாயாரும் முஹம்மது ஹனீபாவின் மனைவியுமான முஹம்மது மீரான் பீவி அவர்கள் நேற்று வபாத்(காலமானார்கள்) ஆனார்கள்.

 இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிவூன்.

அன்னாரின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அவது குடும்பத்தினர் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Friday, November 15, 2013

கீழக்கரையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் பிணம்!

பலரின் உதவியுடன் எடுத்து வரப்படும் உடல்




கீழக்கரை மறவர் தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் ராஜா ஜெகதீஷன்(30) இவர்  கீழக்கரை சுடுகாட்டில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார் என கூறப்படுகிறது.

இது குறித்து அவரது அண்ணன் ஞான முருகன்(36) காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளார் 

இறந்து போன தியாகராஜன் மகன் ராஜா ஜெகதீஷன் பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்த ரேவதி என்பவரை திருமணம் செய்து அதே ஊரில் தொழில் செய்து வந்தார்.இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்  கீழக்கரைக்கு வந்தவர் மீண்டும் திரும்பி செல்லவில்லை .இந்நிலையில் அவரது மாமியார் நேற்று மருமகனிடம் சமாதனம் பேசி அழைத்தற்கு இவர் வர  முடியாது என மறுத்து  விட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது . குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு . இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது

Thursday, November 14, 2013

கீழக்கரையில் எரியாத தெரு மின்விளக்குகளை சீர் செய்ய கோரிக்கை!

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட சொக்கநாதர் கோயில் பகுதியில் 15க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் மாதக்கணக்கில் எரியாமல் உள்ளன. இதனால் இப்பகுதி இருளில் மூழ்கி விடுவதால், பெண்கள் வெளியில் நடமாட முடியாத நிலை இருப்பதாக சீர்செய்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சொக்கநாதர் கோயில் பின்புறம் உள்ள மையானத்தில் இருந்து வெள்ளை மாளிகை செல்லும் வழி, புது தெருவிற்கு செல்லும் வழி ஆகியவற்றில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சுமார் 15 தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இப்பகுதி இரவு நேரங்களில் இருளில் மூழ்கிவிடுகிறது. பொது மக்கள், பெண்கள் வெளியில் நடந்து செல்ல பயப்படும் நிலை உள்ளது.
கீழக்கரை சொக்கநாதர் கோயில் பின்புறத்தில் மயானப்பகுதி அருகே மின்சார ஒயர்களை தொடும் அளவிற்கு வளர்ந்துள்ள கருவேல மரங்கள்.
சொக்கநாதர் கோயில் பின்புறம் உள்ள மையானத்தில் இருந்து வெள்ளை மாளிகை செல்லும் வழி, புது தெருவிற்கு செல்லும் வழி ஆகியவற்றில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சுமார் 15 தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இப்பகுதி இரவு நேரங்களில் இருளில் மூழ்கிவிடுகிறது. பொது மக்கள், பெண்கள் வெளியில் நடந்து செல்ல பயப்படும் நிலை உள்ளது.
மேலும், சொக்கநாதர் கோயில் பின்புறத்தில் உள்ள ஒரு மயானம் அருகே கருவேல் மரங்கள் வளர்ந்து மின் கம்பங்களில் செல்லும் ஒயர்களில் படுவதால், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இதனால் பொதுமக்களின் வீடுகளும் பாதிக்கப்படுகிறது. இது குறித்து மின்வாரியம் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அப்பகுதியை சேர்ந்த சங்கர் கூறியதாவது, சொக்கநாதர் கோயில் பின்புறம் உள்ள மின்கம்பத்தின் அருகே கருவேல் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து மின்கம்பிகளில் படுவதால் மின்தடை ஏற்படுகிறது. கீழக்கரை நகராட்சி எரியாத தெருவிளக்குகளை மாற்றி சீர்படுத்தி கொடுக்க வேண்டும் என்றார்.

Wednesday, November 13, 2013

நவ23ல் மதுரை - துபாய் நேரடி விமானம்! மகிழ்ச்சி வெளிப்படுத்திய அமீரகத்தில் வாழும் தென் மாவட்ட மக்கள்!




 ஜனவரி மாதம் துபாய் ஈடிஏ ஸ்டார் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் மேலாண்மை இயக்குநர் செய்யது எம் சலாஹீதீன் நேரடி விமான சேவையை வலியுறுத்தி பேசினார்.அருகில் மதுரை முன்னாள் எம்பி ராம்பாபு உள்ளார்.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மதுரை- துபை விமான சேவை வரும் 23ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நேரடி தினசரி சேவையை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் நவம்பர் 23ம் தேதி துவங்குகிறது. அதிகாலை 3.50 மணிக்கு துபையிலிருந்தும், நள்ளிரவு 11.35 மணிக்கு மதுரையிலிருந்தும் இந்த விமானம் புறப்படும்.தங்களது நீண்ட நாள் கனவான இச்சேவை துவங்கும் செய்தியால் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் தென் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பல்லாண்டுகளாக பல்வேறு தரப்பினரும் இக்கோரிக்கையை தமிழகத்தில் வலியுறுத்தி வந்தனர் இது தொடர்பாக  ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனம் சார்பில் துபாயிலும் தொடர்ச்சியாக பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.இக்கூட்டங்களில் தென் தமிழகத்திலிருந்து தொழில் முனைவோர்,சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேரடி விமான சேவை தொடங்குவது குறித்து தங்கள் ஆதரவையும் ஆலோசனையும் தெரிவித்தனர்.
   துபை ETA ASCON STAR குழும நிர்வாக இயக்குநர் செய்யத் எம். சலாஹூத்தீன் அறிவுறுத்தலின் படி அமீரகத்தின் பல்வேறு தமிழ்ச் சங்கங்களும் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான் தலைமையில், மத்திய அரசுக்கு இவ்விமான சேவையை துவங்க வலியுறுத்தி வந்தனர்.


சில மாதங்களுக்கு முன்னால் துபைக்கு வந்திருந்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை  இக்குழுவினர் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தியதன் பயனாக இந்தியாவிற்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான விமான நிலையங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையமும் சேர்க்கப்பட்டது.


இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையம் சேர்க்கப்பட்டதனால் தான், மதுரை- வளைகுடாநாடுகளுக்கான நேரடி விமான சேவை சாத்தியமானது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன் துபை வந்திருந்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத் சிங்கைச் சந்தித்தும் மதுரை- துபை நேரடி விமான சேவையைத் துவங்க கோரிக்கை வைத்தனர்.


 சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலி வந்திருந்த மத்திய இணையமைச்சர் நாராயண சாமியிடம், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் திருநெல்வேலி அமீர் கானுடன் சென்று இவ்விமான சேவை துவங்க கோரிக்கை மனு அளித்த மீரான், அமீரக அனைத்து தமிழர் சங்கங்களின் சார்பில் டெல்லியிலும் அவரைச் சந்தித்து இது சம்பந்தமாக வலியுறுத்தினார். தென் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ராம சுப்பு மற்றும் மாணிக் தாக்கூர் ஆகியோரும் தொடர்ந்து இது சம்பந்தமாக மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

 அமீரகத்தின் அனைத்து தமிழ்ச் சங்கங்களும் தங்களது கோரிக்கையை ஏற்று மதுரை- துபை நேரடி விமான சேவையைத் துவக்க ஆவன செய்த மத்திய அரசாங்கத்திற்கும், குறிப்பாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத் சிங்கிற்கும், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

நீண்ட நாள் கழித்து விடுமுறையில் தங்களது உறவினர்களைப் பார்ப்பதற்கு தாயகம் வரும் தென் தமிழக மக்கள் இது வரை தொலை தூர விமான நிலையங்களுக்கு வந்து, ரயில், பஸ்களைப் பிடித்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர். இதனால் கால விரயமும், அதிகமான பொருளாதார செலவும் ஏற்பட்டு வந்தது. மதுரை- துபை நேரடி விமானச் சேவை மூலம் இச்சிரமங்கள் பெருமளவு குறையும்.
 குறிப்பாக தொழிலாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும் என்று துபாயில் வாழும் தமிழகத்தை சேர்ந்தோர் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த துபாயில் பணிபுரியும் யாசர் அராபாத் கூறுகையில்,

மிகவும் பயனுள்ள விமான வழித்தடம் .இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

நெல்லை மாவட்டம் மேலப்பளையத்தை சேர்ந்த இப்திகார் கூறுகையில்,

மிகவும் மகிழ்ச்சியான செய்தி மதுரை - துபாய் நேரடி விமானம் மூலம் பயண சிரமமும்,பொருளாதரம் விரையமாவதும் குறையும்
 விரைவிலேயே ஏர் இந்தியாவும் மதுரை- துபை சேவையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.