Thursday, November 21, 2013

பாலை தேசத்து கீழைவாசிகள் ...பகுதி 4 ! கட்டுரையாளர் :ராஜாக்கான் என்ற கீழை ராஸா


   பாலை தேசத்து  கீழைவாசிகள்
வெளிநாடு வாழ் கீழைவாசிகளின் வாழ்வியல் ஆய்வு..                       4
கட்டுரை மற்றும் படம் வடிவமைப்பு :ராஜாக்கான் என்ற கீழை ராஸா

வெளிநாடு என்றாலே மாடமாளிகைகள், கூட கோபுரங்கள் நிறைந்த          ஒரு சொர்க்கபுரி என்றே பெரும்பாலோனோர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்...சொகுசான வாழ்க்கை, எங்கெங்கும் ஏசி, அறுசுவை உணவு,உற்சாக பானம், இரவு நடனம், இப்படியான வெளிநாட்டு வாழ்க்கை தன் கண் முன்னே இருந்தும், அதைத் தொட்டறிய முடியாத தூரத்தில் தான் நம் ஹீரோக்கள் வாழ்ந்தார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...அப்படிப்பட்ட நம் ஹீரோக்களின் சொகுசு வாழ்க்கை முறைக்குத்தான் இந்த அத்தியாயத்தில் உங்களை நான் அழைத்து செல்லப் போகிறேன்.

நம்மில் பல பேர், எங்க வாப்பா வெளிநாட்டில் இருந்தாங்க, எங்க காக்கா வெளிநாட்டில் இருக்கிறாங்க...எங்க மாமா ஃபாரின் போயிருக்காங்கன்னு எத்தனையோ பேரிடம் பெருமிதத்துடன் கூறியிருப்போம்...ஆனால் எத்தனை பேர் அவர்கள், என்னவாக இருக்கிறார்கள்?...என்று எண்ணிப்பார்த்திருப்போம்... இதில் நம்மைச் சொல்லி குற்றமில்லை, இதற்கு முழுக்காரணம் நம் ஹீரோக்கள் தான்..ஆம் தங்களின் சந்தோசங்களை, உற்சாகங்களை பகிர்ந்து கொண்ட அளவிற்கு, அவர்கள் தங்கள் இருண்ட வாழ்க்கையை தம் சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை.

வெளிநாட்டில் செருப்பாக தேய்ந்து போதும் ஹீரோ போன்ற உடையணிந்து புகைப்படம் அனுப்புவதையும், கருகி வெந்த போதும் காருடன் நின்று படம் அனுப்புவதையுமே ஹீரோக்கள் தம் வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

இப்படித்தான் நம் ஹீரோக்களில் ஒருவரை என் நண்பன் ”நீங்க வெளிநாட்ல  என்ன 
வேலை செய்றீங்க” ன்னு கேட்க,

”நான் சுலைமானி ஆப்பரேட்டராக இருக்கிறேன்” என்றாராம்.

என் நண்பனும் என்னிடம் வந்து மச்சான் உனக்குத் தெரியுமா, அவரு சுலைமானி ஆப்பரேட்டராம்னு பெருமையா சொல்ல, எனக்கும் ஒரே குழப்பம், சுலைமானின்னா நமக்குத் தெரிஞ்சு ”வரட் டீ”...இதுலே ஆப்பரேட் பண்ண என்ன இருக்குன்னு குழம்ப, கடைசியில் அவர் டீ போடுறதைத்தான் எதோ டெக்னிக்கல் வேலை போல சுலைமானி ஆப்பரேட்டருன்னு ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு திரிஞ்சாருன்னு அப்புறமா தெரிய வந்தது...

இது நமக்கு வேடிக்கையாக இருந்தாலும், அவர் தன் சொந்தங்களுக்கு மத்தியில் தான் படும் வேதனைகளை வெளிக்காட்டிக் கொள்ள முன் வருவதில்லை. என்பதே உண்மை.

ஆனால் இதுவே நம் ஹீரோக்களின் குடும்பத்தினருக்கு மிகவும் சாதகமாக போய் விடுவது தான் பரிதாபத்திற்குரியது.

”ஏங்க, உங்க லாத்தா மாப்புளே 10 பவுனுலே ஒரு காசு மாலை அனுப்பியிருக்காங்க, அப்படியே கண்ணுக்குள்ளேயே நிக்குது...அடுத்த மாசம் எங்க காக்கா வர்றாங்களாம்...நீங்க வாங்கி கொடுத்துட்டா அவங்க எப்படியும் கொண்டு வந்துடுவாங்க...”

“மச்சான் நோக்கியாவுலே புதுசா ஒரு மாடல் போட்டிருக்கானாம், லாபிரோட காக்கா வாங்கிக்கிட்டு வந்திருக்காங்க...லாத்தா கூட மச்சாண்டே சொல்லுடான்னு சொன்னிச்சி, அதோட ஹெட்போனும், எக்ஸ்ட்ரா பேட்டரியும் வாங்கி அனுப்புங்க..”
“தம்பி, நம்ம தெருலேயே ஒரு இடம் வெலைக்கு வருது, விலை கொஞ்சம் கூடத்தான் ஆன நம்ம கௌரவத்துக்கு அதை எப்படியாவது வாங்கிடனும்..”

“ஏண்டா நீ அனுப்புற பத்தாயிர ரூபா பத்து நாளைக்கு கூட பத்த மாட்டேங்குது...அடுத்த மாசத்துலே இருந்து ஒரு இருபத்தைந்தாயிரமாவது அனுப்பு, அப்புறம் உன் சாச்சி சீட்டு போடப் போறாளாம் அதுக்கு ஒரு ஐயாயிரம் தனியே அனுப்பு”
இப்படியான அணுகுண்டுகள் தொடர்ந்து வந்து தாக்க, நம் ஹீரோக்களின் வெளிகாட்டிக் கொள்ளா குணமும் ஒரு காரணமாகி விடுகிறது.இப்படி எத்தனை அணுகுண்டுகளும், ஏவுகணைகளும் தொடர்ந்து வந்தாலும், தன் வேதனைகளை மறைத்த படி அனைத்தையும் நிறைவேற்ற அவர்கள் செய்யும் தியாகங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல..
ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம், போன்றவை அமைவதைப் பொருத்தே அவன் வாழ்க்கையின் தரம்  நிர்ணயிக்கப்படுகிறது.அந்த வகையில் நல்ல வீடு, நல்ல உணவு.மற்றும் நல்ல உடை என ஒரு செல்வந்தராக தன் சொந்த ஊரில் வாழும் நம் ஹீரோக்களின் வெளிநாட்டு வாழ்க்கை அதற்கு அப்படியே

 எதிர்மறையானது...ஒரு புழுக் கூட தனக்கென்று ஒரு கூட்டை அமைத்துக் கொள்ளும். ஆனால் இங்கே அவர்களின் வாழ்க்கை அதைவிட பரிதாபத்திற்கு உரியது.

ஆம் ஒரு பத்துக்கு பத்து அறையில் பதினைந்து பேர் இணைந்து வாழ்வது சாத்தியமா..?என்றால் அது வெளிநாட்டில் நம் ஹீரோக்களுக்கு மட்டுமே சாத்தியம்.இரண்டடுக்கு கட்டிலில், கீழே ஒரு விலை, மேலே ஒரு விலை, தரையில் படுக்க ஒரு விலை என அறைகளில் தங்குவதற்கான விலைகள் நிர்ணயிக்க பட, சொந்த மண்ணில் பஞ்சு மெத்தையில் படுத்துறங்கும் பெரும்பாலான நம் ஹீரோக்கள் தரையில் தங்கவே போட்டா போட்டி போடுகிறார்கள்...தன்னை பார்க்க வரும் நண்பர்களிடம் கூட, முதுகு வலி கட்டிலில் படுத்தா ஒத்துக்க மாட்டேங்குது என சப்பை கட்டு கட்டினாலும்..உண்மையான காரணம் அதன் மூலம் கிடைக்கும் சிறு தொகையையும் தன் சொந்தங்களின் சொகுசு வாழ்க்கைக்கு முதலீடு செய்வதற்கே என்பதே ஊரறிந்த உண்மை.
கேம்ப்களின்  நிலை இதை விட மோசம், அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட அறைகளில் வசிப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியே கிடையாது.அன்றெல்லாம் கேம்ப்களில் மின்விசிறி மட்டும் தான்.., ஏசி எல்லாம் கிடையாது. ஏசி என்பது நமக்கு சொகுசான ஒன்று ஆனால் வளைகுடா நாடுகளில் அது அத்தியாவசியம்.அங்குள்ள வெப்பத்தை தாங்குவதற்கே தனிப்பயிற்சி வேண்டும்.வெப்பகாலங்களில் மாலை ஏழு மணிக்கு வெளியே சென்றாலும் சுற்றிலும் நெருப்பால் சூழப்பட்ட பகுதியின் நடுவே செல்வது போன்று அனல் வீசும்.இரெவெல்லாம் அந்த அனல் தொடர்ந்து வீசும். குளிர்காலத்தில் பகலெல்லாம் வெயில் சுட்டெரிக்கும், இரெவெல்லாம் கடும் குளிர் வீசும்.இப்படி பாலைவன காலநிலைக்கு மத்தியில் சிக்கி மன அழுத்தத்திற்கு ஆளாகும் நம் ஹீரோக்கள் ஏராளம்.

கடுமையான வெப்பம் என்று வாயால் சாதாரணமாக சொன்னாலும் அதன் வீரியம் மிகவும் கொடூரமாக இருக்கும். சாதரணமாக நமது ஊரில் 35 டிகிரி செண்டி கிரேட்டையே தாங்க முடியாது, ஆனால் பாலை தேசங்களில் 50 டிகிரி வெப்பம் வரை தாங்க வேண்டி வரும். அந்த நேரங்களில் குளிர்சாதன அறைக்குள் வேலை செய்பவர்களே மிகவும் சிரமப்படுவார்கள்.நம் ஹீரோக்களின் கதி அதோகதி தான்..இதில் மிகவும் கொடுமையாக பாதிக்கப் படுவர்கள், சாலை மற்றும் கட்டுமான பணியில் ஈடுபடும் ஹீரோக்களே...

50 டிகிரி வெப்பத்தில் காருக்குள் வைக்கப்பட்ட பொருட்களே உருகிக் கொண்டிருக்கும் போது, பாலைவனத்தின் மத்தியில் நிழல் என்பதே தென்படாத இடத்தில் சூரியக்கதிர்களின் நேரடி தாக்குதலில் பணிபுரியும் அந்த ஹீரோக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்...

சர்க்கஸ்களில் கயிற்றை பற்றிக்கொண்டு அந்தரத்தில் தொங்குபவர்களை பார்த்து ஆ வென்று வாயை பிளந்திருப்போம். ஆனால் நம் சொந்தத்தில் ஒரு ஹீரோ எங்கோ கண்காணாத தேசத்தில், அதைவிட உயரமான கட்டிடத்தில் கயிற்றில் தொங்கியபடி வேலை செய்வது நம்மிடமிருந்து சுத்தமாக மறைக்கப் பட்டதை அறியாமல், நம் ஹீரோக்களை அவர்கள் தகுதிக்கு மீறி பணம் பணமென்று நச்சரிப்பது தான் உச்சகட்ட பரிதாபம்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்றார்...போன ஒரே வாரத்தில் ஓடி வந்து விட்டார். அவர் டிகிரி வரை படித்தவர், அவருக்கு கிடைத்த வேலையோ கட்டிடங்களில் லிப்ட் நிறுவும் வேலை, அதற்கும் அவர் படிப்பிற்கும் சம்பந்தமில்லை.வேலைக்கு சென்ற முதல் நாள், அவர் வேலை செய்ய வேண்டிய லிப்ட் கிணற்றை காட்டி இருக்கிறார்கள்...கிட்டத்தட்ட முப்பது மாடி உயரமுள்ள அந்த லிப்ட் கிணற்றின் ஆழத்தை மேலிருந்து பார்த்து விட்டு ஓடி வந்த அவர் இன்று வரை வெளிநாடு செல்ல துணியவில்லை. ஆனால் இதில் பரிதாபம் என்ன வென்றால், எதோ போருக்கு சென்று புறமுதுகிட்டு ஓடி வந்த வரைப் போல அவரை எள்ளி நகையாடியவர்கள் ஏராளம். வெளிநாட்டு வாழ்க்கையில் இதுவெல்லாம் வெகு சாதாராணம் என்பதே நம் ஹீரோக்களின் கருத்து. திரும்பி வந்த நண்பர் படித்தவர்...படிக்காமல் சென்ற எத்தனையோ நண்பர்கள், அதைப் பழகி விட்டார்கள்...


வீட்டில் காலையில் முழிச்சதும் பசியாற, இடியப்பம், கறி, முட்டாப்பம்,கறியடை,  வட்டலப்பம், சவ்வரிசி கஞ்சி இப்படி வித விதமான டிபனுடன் ஆரம்பித்து, பகல் இரவு என்று தொடரும் சாப்பாடுகளில் திக்கு முக்காடி போகும் நம் ஹீரோக்களின், வெளிநாடு உணவு பழக்கம் தெரியுமா..? காலையில் குப்பூஸ் எனப்படும் அரேபியன் ரொட்டியும், பருப்பும் தான். இன்னும் சிலர், விரும்பி உண்பது (வேறு வழி..??)  பாலை தேசங்களில் அதிக பேமஸான மலபாரி சான்விட்சான, பரோட்டாவுடன் சுருட்டப்பட்ட ஆம்லெட்டைத்தான்.. ஆனால் பெரும்பாலான ஹீரோக்கள் வெறும் குப்பூஸ் மற்றும் பரோட்டாவை டீயில் தொட்டு தான் சாப்பிடுவார்கள்.

என்ன இது..? வெளிநாடுகளில் அவ்வளவு உணவு தட்டுப்பாடா..? என்று எண்ணிவிடாதீர்கள்...உணவு தட்டுபாடு அல்ல பணத் தட்டுப்பாடு...ஹீரோக்கள் ஒரு போதும் சுவைகளை பார்ப்பதில்லை, குறைந்த விலையை மட்டுமே பார்க்கிறார்கள்...கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் இந்திய ரூபாயில் மாற்றி பார்த்து, ஒரு பெப்ஸியை கூட இவ்வளவு ரூபாயா..? என்று இன்றுவரை  பெப்சி குடிக்காமல் இருக்கும் ஹீரோக்கள் ஏராளம்..

கேம்ப்களில் வசிப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம், காலையில் நான்கு மணிக்கே பார்சல் கட்டிக் கொண்டு வேலைக்கு கிளம்பும் இவர்களின் உணவை மதிய வேளையில் திறந்ததும் வரும் துர்நாற்றத்தை தாங்கிக் கொண்டு சாப்பிடுவதும், தூர எறிந்து விட்டு தண்ணீரை குடித்து அன்றைய பொழுதை கழிப்பதும், ஹீரோக்களின் அன்றாடம் நிகழ்வு என்றாலும், சொந்த மண்ணில் சாப்பாடு சிறிது சூடு ஆறிப் போனதுக்கு, தன் உம்மாவை, தங்கச்சியை. பொண்டாட்டியை படுத்திய பாட்டை அவர்களால் நினைத்து பார்க்காமல் இருக்க இயலாது.

15 பேருடன் ஒரு அறையில் வசித்து, கிடைத்த உணவை சாப்பிட்டு, ஒரு பைசா, இரண்டு பைசாக்களுக்கு கணக்கு பார்த்து, உச்ச கட்ட வெப்பத்திலும், கடும் குளிரிலும் கஷ்டப்பட்டு, தான் படும் இந்த வேதனையை என் பிள்ளை படக்கூடாதென்று பாலைவன மணலில் தன்னைப் புதைத்து இன்று தன் தலைமுறையை தூக்கிப்பிடித்திருக்கும் நம் ஹீரோக்கள் நிச்சயம் போற்றப் பட வேண்டியவர்களே...ஆனால் உண்மை நிலை..??


தொடர்ந்து பேசுவோம்....

பகுதி 1 காண.... http://keelakaraitimes.blogspot.ae/2013/10/blog-post_432.html

பகுதி 2 காண.. http://keelakaraitimes.blogspot.ae/2013/10/2_23.html

பகுதி 3 காண.. http://keelakaraitimes.blogspot.ae/2013/11/3.html

4 comments:

  1. sako..!
    kan kalangukirathu..
    ithellaam saththiyaamaakave unmaikal.

    ReplyDelete
  2. உண்மை, உண்மை நம்ம ஊரு பொம்பலைங்க கண்டிப்பா இதை தெரிந்து கொள்ள வேண்டும்.By kareem

    ReplyDelete
  3. 1990ல் நடந்தது.
    மனைவி வீ.சி.ஆர் கேட்டதுக்காக ஹீரோ வாங்கிய வீ.சி.ஆரின் இந்திய மதிப்பு
    12000 ரூபாய்
    ஹீரோ உம்மாவீட்டில் சொன்ன பொய் மதிப்பு 3000 ரூபாய்தான்(மனைவிக்கு கொடுப்பதற்காக)
    உம்மா சொன்னது, 3000 ரூபாய்தானே அடுத்த தடவை வரும்போது பொஞ்சாதிக்கு கொடு இப்ப இது நம்மவீட்லயே இருக்கட்டும் உன் பொஞ்சாதிய
    இங்க வந்து பார்த்துக்க சொல்லு.
    ஹீரோவும் வேறு வழியில்லாமல் அவ்வாறே செய்வார்
    அடுத்து ஹீரோ துபாய்க்கு வந்ததும்,வீ.சி.ஆர் நல்லா ஓடுதாம்மா?
    கொஞ்சம் கஷ்டமாயிடுச்சு தம்பி அதை வித்துட்டோம்
    ஹீரோ அதிர்ச்சியோட எவ்வளவுக்கும்மா?
    பாஸா, 500 கூடவைத்து 3500 தந்தான்

    ReplyDelete
  4. பாலை தேசத்து கீழைவாசிகள் . ..கட்டுரை அருமை.. கண்டிப்பா தொடர்கிறேன் ...
    . ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.
    www.99likes.blogspot.com

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.