கீழக்கரை, ஜூன் 13&
கீழக்கரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு தினமும் இயங்கிய அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரான கீழக்கரை 3ம் நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் வசிக்கின்றனர். கீழக்கரையைச் சேர்ந்த 90 சதவீத மக்கள் தங்களது அனைத்து தேவைகளுக்கும் ராமநாதபுரம் சென்று வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் ராமநாதபுரத்திற்கு தினமும் செல்கின்றனர்.
பொதுமக்களின் நலன் கருதி கீழக்கரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு 3 அரசு டவுன் பஸ்கள், ஒரு தனியார் டவுன் பஸ் தினமும் இயங்கப்பட்டது. தற்போது 2 அரசு டவுன்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் தொலைதூர பஸ்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடுகிறது. இதனால் பயணிகள் அனைவரும் அரசு டவுன் பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருந்து கூட்ட நெரிசலில் மேற்கூரை, படிக்கட்டில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்படுவதால் கூட்டம் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது,’ அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயங்கிய 3 டவுன் பஸ்களில் பழுதான ஒரு பஸ் பணிமனையில் கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் பஸ் இயக்குவது குறித்து கிளை மேலாளர் தான் தீர்மானிக்க வேண்டும்’ என்றனர்.
தனியார் நிறுவன ஊழியர் ஜமீல் கூறுகையில்,’ தனியார் டவுன் பஸ் மராமத்து பணிக்காக சென்று விட்டது. பழுதடைந்த அரசு டவுன் பஸ்சிற்கு மாற்று பஸ் இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. பஸ் ஸ்டாண்ட் மராமத்து பணி மந்தகதியில் நடைபெறுவதால் பஸ்கள் ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதால் 2 கிமீ தூரம் நடந்து மெயின் ரோட்டிற்கு வரவேண்டியுள்ளது. இதனால் நடந்து செல்ல இயலாத பெண்கள், முதியவர்கள் ரூ.50 கொடுத்து ஆட்டோவில் மெயின் ரோடு வந்து பஸ்சில் செல்கின்றனர். பொதுமக்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்க போக்குவரத்து கழகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.