Thursday, November 15, 2012

கீழ‌க்க‌ரை அருகே ஊர‌ணியில் முத‌லை!

ராமநாதபுரம் அருகே பெரியபட்டிணத்தில் உள்ள பண்ணக்கரை ஊரணியில் சுமார் ஆறரை அடி நீளமுள்ள பெண் முதலையை புதன்கிழமை பொதும‌க்க‌ள்,வனத்துறையினரும், மீனவர்களும் இணைந்து 10 மணி நேரம் போராடி உயிருடன் பிடித்ததாக‌ வ‌ன‌த்துறையின‌ர் தெரிவித்த‌ன‌ர்.
ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டிணத்தில் பண்ணக்கரை ஊரணியில் முதலை ஒன்று இருப்பதாகவும், அது அப்பகுதி மீனவர்களுக்கு மீன்பிடிக்க இடையூறாகவும்,
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார்கள் செய்திருந்தனர். அதன்படி ஊரணியில் முதலை இருக்கும் இடத்தை துல்லியமாக அறிந்து கொண்டு பெரியபட்டிணம் பகுதி எஸ்.டி.பி.ஐ அமைப்பின‌ர்,மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் வனச்சரகர்கள் எஸ். ஜெயராமன்(கீழக்கரை), எஸ். கணேசலிங்கம்(ராமநாதபுரம்), வனவர் பழனிக்குமார், வனக்காப்பாளர்கள் காதர் மஸ்தான், பாலகிருஷ்ணன், ரவிக்குமார் ஆகியோரும் இணைந்து மீன்பிடி வலை மூலம் முதலையை உயிருடன் பிடித்தனர்.
முதலையைப் பிடிப்பதை, அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். உயிருடன் பிடிக்கப்பட்ட முதலையை வனத்துறை அதிகாரிகள் கயிற்றால் கட்டி ஜீப்பில் ஏற்றி ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து மாவட்ட வன உயிரினக் காப்பாளர் எஸ். சுந்தரக்குமார் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலைகள் கடல் பகுதியிலோ அல்லது ஊரணியிலோ இருக்க வாய்ப்பில்லை. இப்போது பிடிபட்டிருப்பது தான் முதல் முறையாகும். வெள்ளப்பெருக்கு காலங்களில் அடித்து வரப்பட்டு நதிப்பகுதி வழியாக பண்ணைக்கரை ஊரணிக்குள் வந்திருக்கும்.
மழைக்காலமாக இருப்பதால் அதிகளவில் மீன்கள் கிடைத்து, அதனை உண்டு உயிர் வாழ்ந்திருக்கும். கடந்த 3 மாதமாக பெரியபட்டிணம் பகுதியில் பொதுமக்களை துன்புறுத்தி வருவதாக புகார்கள் வந்தன. எனவே மீனவர்கள், பெரியபட்டிணம் பகுதி பொதுமக்கள் ஆகியோரின் உதவியுடன் முதலையை உயிருடன் பிடிப‌ட்டுள்ள‌து. இது பெண் முதலை ஆகும்.
சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக போராடி முதலையை பிடிக்க ஒத்துழைத்த மீனவர்கள், பொதுமக்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அப்ப‌குதியை சேர்ந்தோர் கூறிய‌தாவ‌து,
வ‌ன‌த்துறையினரிடம் ப‌ல‌முறை புகார் தெரிவித்தும் எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌வில்லை.இத‌னால் இப்ப‌குதி எஸ்.டி.பி.ஐ அமைப்பின‌ர் உள்ளிட்ட‌ இப்ப‌குதி ம‌க்க‌ள் முய‌ற்சியால் முத‌லை பிடிக்க‌ப்ப‌ட்டு இப்ப‌குதி ம‌க்க‌ளின் அச்ச‌ம் அக‌ற்ற‌ப‌ட்ட‌து என்ற‌ன‌ர்.

1 comment:

  1. தகவலுக்கு நன்றி... keelakaraitimes

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.