கீழக்கரை அன்பு நகரில் டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கீழக்கரை புதிய பஸ்ஸ்டாண்டு அருகில் உள்ளது அன்புநகர். இங்கு கடந்த ஒரு மாதகாலமாக குப்பை, கழிவுநீர் சரியான முறையில் அகற்றப்படாததால் அனைத்து வீடுகளிலும் டெங்கு, மலேரியா, டைபாய்டு காய்சல் பரவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கீழக்கரை அன்பு நகரில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். தற்போது அப்பகுதியைச் சேர்ந்த பாபு என்ப வரின் மகள் மாலதி(10) மற்றும் கமலி(6), ஹபீப்(3), மணிமேகலை(20) உட்பட 25க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கவிதா(25), வாசுவின் மனைவி வசந்தி (22) உள்பட 50கும் மேற்பட்டோர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி பெண்கள் நகராட்சி அலுவலகத்திற்கு கூட்டமாக வந்து நகராட்சி கமிஷனர் முகமது முகைதீனிடம் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து ரூபி மற்றும் ஜெனி கூறுகையில், ‘எங்கள் பகுதியில் குப்பை அகற்றப்படாமல் உள்ளது. கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடி கிடக்கிறது. அன்புநகர் முன்னேற்ற சங்கம் சார்பாக பலமுறை நகராட்சியில் மனு கொடுத்துள்ளோம். இன்றுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
செப்டிக்டேங்கில் எடுக்கும் கழிவுநீரையும் எங்கள் பகுதியில் இரவு நேரங்களில் சுடுகாட்டில் திறந்து விட்டுச் செல்கின்றனர். இதனால் எங்கள் பகுதியில் துர்நாற்றம் எடுத்து காய்ச்சலால் பாதிக்காத வீடுகளே இல்லை என ஆகிவிட்டது. தற்போது கமிஷனரிடம் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மனு கொடுத்துள்ளோம். இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்றால் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.
இதுகுறித்து கமிஷனர் கூறுகையில், ‘உடனடியாக கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.