Sunday, November 11, 2012

ஓட்டல்களில் குடிக்க வெந்நீர் வழங்க வேண்டும் !கீழ‌க்க‌ரை ந‌கராட்சி நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கை!

 
மழைக்கால நோய் பாதிப்புகளை தடுக்க, ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு கொதிக்க வைத்த சுடு தண்ணீர் வழங்கவேண்டும் என கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
 
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமானோர் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழைக்காலம் என்பதால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக கீழக்கரை நகரின் பிரதான ஓட்டல் மற்றும் டீக்கடைகளின் உரிமையாளர்கள் சில வழிமுறைகளை கடைபிடிக்க நகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் முகமது முகைதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
கீழக்கரை நகராட்சி கமிஷனர் முகமது முகைதீன் கூறியதாவது:
ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு கொதிக்க வைத்த தண்ணீரையே கொடுக்க வேண்டும். உணவு விடுதிகளில் பணிபுரியும் உணவை பரிமாறக் கூடிய தொழிலாலர்கள் உள்ளூர் மருத்துவ அதிகாரியிடம் சான்று பெற்ற பின்பே பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
 
 உணவு மற்றும் போண்டா, வடை போன்ற தின்பண்டங்களை திறந்தோ, ஈ மொய்க்கும் விதத்திலோ வைத்திருக்க கூடாது.மழைக்காலம் என்பதால் அடிக்கடி தரையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தரமான தாவர எண்ணையை உணவு தயாரிப்புக்குப் பயன்படுத்த வேண்டும். உணவு விடுதிகளில் பணிபுரிவோர் அனைவரும் நகம் மற்றும் தலைமுடியைச் சீராக வெட்டி இருக்க வேண்டும், சுத்தமான ஆடைகள் அல்லது மேல் அங்கி அணிந்திருக்க வேண்டும்.
 
நாள்பட்ட மாமிசம் (இறைச்சி) மீன் மற்றும் இதர அசைவ உணவுகளை சேமித்து வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. சுகாதார ஆய்வாளர்கள் கூறும் அறிவுரைகளை உடனுக்குடன் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு நகராட்சி சட்டம் 1920 மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரம் சட்டம் 1939ன் படி மேல்நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.