Sunday, November 18, 2012

டெங்கு! ஆறுமாத குழந்தை உயிரிழப்பு! ஏர்வாடி தர்காவில் துய‌ர‌ம்!


டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஆறு மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் ஏர்வாடி தர்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொசுக்களின் ‘விறுவிறு’ இனப்பெருக்கம், சுற்றுப்புற சுகாதாரச் சீர்கேடுகள் காரணமாக தமிழகத்தில் பல்வேறு தொற்றுநோய்கள், மர்மக்காய்ச்சல்கள் பரவுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, மதுரை மாவட்டத்தில் மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே ஏர்வாடி தர்கா பகுதியில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இது தொட‌ர்பாக‌ செய்திகள் வெளியாகின. ஆனாலும், அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்காததால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தற்போது ஆறு மாத குழந்தை டெங்குவுக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்வாடி தர்கா, தண்ணீர் பந்தல் முதல் தெருவை சேர்ந்தவர் நஜ்முதீன். இவரது ஆறு மாத ஆண் குழந்தை ஹசீன் ஒரு வார காலமாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தக் குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும், இதே பகுதியில் சேகு இபுராகிம் என்பவரது பத்து மாத பெண் குழந்தை ரைகானா பாத்திமா, அகமது இபுராகிம் என்பரது மகன் முர்சல் இபுராகிம்(19) உள்பட ஏராளமானோர் டெங்கு பாதிப்பால் ராமநாதபுரம் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.