Thursday, May 19, 2011

சிறந்த இளைஞர் மன்றங்களுக்கு விருதுகள்: ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்


கீழக்கரை, மே 19: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரு யுவ கேந்திரா சார்பில் நடந்துவரும் இளைஞர் மன்றங்களுக்கு சிறந்த விருதுகளும், சிறந்த இளைஞர் விருதுகளும் பெற விரும்புவோர் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதன் ஒருங்கிணைப்பாளர் வி.ராபர்ட் ஜேம்ஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

ஒவ்வோர் ஆண்டும் சிறந்த இளைஞர் மகளிர் மன்ற விருதும், சிறந்த இளையோர் விருதும் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் அல்லது மகளிருக்குரிய விருதுகளுக்கும், சிறந்த இளையோர் விருதுகளுக்கும் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தியைடந்து இருக்க வேண்டும்,

1.4.2010 முதல் 31.3.2011 வரை சிறப்பாகப் பணியாற்றிய அறிக்கையுடன் ஆதாரங்கள் இருக்க வேண்டும். சிறந்த இளையோர் விருதுக்கு ரூ. 5,000 ரொக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.

சிறந்த இளைஞர் மற்றும் மகளிர் மன்ற விருதுகளுக்கு ரூ.1,000 ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

விருது பெறத் தகுதியுள்ளோர் ஒருங்கிணைப்பாளர், மாவட்ட நேரு யுவ கேந்திரா, பாரதி நகர், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறும் மேலும் விவரங்களுக்கு தொலைபேசி 04567-230937 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அச் செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, May 18, 2011

கீழக்கரையில் ஆமை வேகத்தில் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணி ! பயணிகள் கடும் அவதி




கீழக்கரையில் ஆமை வேகத்தில் நடைபெறும் பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது. தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார்.
தீர்மானங்கள் குறித்து தங்கம் ராதா கிருஸ்ணன் பேசினார்.

கீழக்கரை பஸ் ஸ்டாண்டில் தரை தளம் அமைக்கும் பணிகள ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பயணிகள் ஊருக்கு வெளியே ஏர்வாடி முனை ரோட்டில் இறக்கி விடப்படுகின்றனர்.இதனால் பெரிதும் சிரமம் அடைகின்றனர்.நகருக்குள் ரூ50 வரை ஆட்டோவுக்கு கொடுத்து செல்ல வேண்டியுள்ளது.

பஸ்கள அனைத்தும் பஸ் ஸ்டாண்டு அருகிலுள்ள 40 அடி ரோடு வரை வந்து செல்ல வேண்டும் .டிரைவர்கள் ,கண்டக்டர்கள் தங்களது சொந்த தேவைகளுக்கு ,பொருள்கள் வாங்குவதற்கு மட்டும் ஊருக்குள் பஸ்களை ஓட்டி வருகின்றனர்.
எனவே அரசு நிர்வாகம் தலையிட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என்பன பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tuesday, May 17, 2011

முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா மகன் தற்கொலை

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா

கீழக்கரை.மே.17.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகரும்,அதிமுக சிறுபான்மைபிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவின் மகன் முஜ்பூர் ரகுமான் ராமநாதபுரத்தில் பல்பொருள் அங்காடி வைத்திருந்தார்[33]. இவருக்கும், ராமாநதபுரம் ஈசா பள்ளிவாசலை சேர்ந்த ரஹ்மத் நிஷா (24) என்பவருக்கும் கடந்த 2006ல் திருமணம் நடந்தது.


இடையில் குடும்ப பிரச்னைகள் இருந்து வந்த நிலையில்,கடந்த 2010 செப்.,16ல் ரகமத் நிஷா ராமநாதபுரத்தில் உள்ள அன்வர் ராஜாவின் வீட்டில் விஷம் குடித்து கவலைக்கிடமான நிலையில் கிடந்தார். பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு மயக்கமடைந்தார்என்றும் சொல்லப்பட்டது. உடனடியாக அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிறகு, நேற்று ரஹ்மத் நிஷா தற்கொலை செய்து கொண்ட தகவல் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

வரதட்சணை தராததால் ரகமத் அடித்துக் கொல்லப்பட்டதாக ரஹ்மத் நிஷாவின் அண்ணன் ஜமீன் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார்.

“குற்றவாளியை கைது செய்யக்கோரி,’ ரஹ்மத் நிஷாவின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கைது செய்தாலொழிய பிணத்தை வாங்க மாட்டோம் என்று போராட்டமும் நடத்தினர். இதைத்தொடர்ந்து, மாஜி அமைச்சர் அன்வர் ராஜாவின் மகன், முஜ்பூர் ரஹ்மான் மீது 306 பிரிவின் படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் அன்வர் ராஜாவின் மகன் முஜ்பூர் ரஹ்மான்(33). இவரது மனைவி இறந்த பின், மனவேதனையுடன் காணப்பட்டார். இதற்கிடையில் ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக அன்வர்ராஜா சென்னை சென்றிருந்தார். வீட்டிலிருந்த, முஜ்பூர் ரஹ்மான் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

500 பிளாட் பகுதி மசூதியில் திருட்டு

கீழக்கரை, மே 16: கீழக்கரை 500 பிளாட் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் சனிக்கிழமை இரவு ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டுள்ளன.


கீழக்கரை 500 பிளாட் பகுதியில் மசூதி உள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்தி்ல் உள்ள இந்த பள்ளியில் சனிக்கிழமை இரவு தொழுகை முடித்துவிட்டு, அந்த அமைப்பின் அப்பகுதி பொறுப்பாளர் அப்பாஸ், வழக்கம்போல அந்த மசூதியிலேயே தூங்கிவிட்டார். அருகில் செல்போனை வைத்திருந்தார்.

அதிகாலை வழிபாட்டிற்காக எழுந்து பார்த்த போது, செல்போனை காணவில்லை. உடனே தனது அமைப்பின் நிர்வாகிகளுடன் மற்ற பொருள்களை சரிபார்த்தபோது ரொக்கம் ரூ. 5ஆயிரம், ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள 3 மைக் செட்டுகள் ஆகியவையும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக கீழக்கரை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Monday, May 16, 2011

கீழக்கரை தலைமை தபால் நிலைய அலுவல்கள் தினமும் பாதிப்பு

கீழக்கரை மே. 16&
ஜெனரேட்டர் வசதி இல்லாததால் கீழக்கரை தலைமை தபால் நிலைய அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கீழக்கரை தலைமை தபால் நிலையம் தற்போது கணினி மயமாக்கப்பட்டு அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு கணினி மூலம் மணியார்டர் அனுப்புதல், விரைவு தபால், பதிவு தபால் சேவை மற்றும் தொலைபேசி கட்டணம், மின் கட்டணம் செலுத்துதல், வெளிநாட்டு பண பரிமாற்றம் போன்ற அனைத்து சேவைகளும் நடைபெறுகின்றன. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அதிகளவில் இச்சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது நகரில் பல மணி நேரம் மின் தடை ஏற்படுவதால் தபால் நிலையத்தில் பணிகள் பாதிக்கப்பட்டு இங்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் வெளிநாட்டு பண பரிமாற்றம் போன்ற சேவைகள் பாதிக்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்களில் மின்சாரம் தடைபடும் நேரங்களில் ஜெனரேட்டர்கள் மூலம் பணியை தொடர்கின்றனர். இதனால் பொதுமக்கள் அதிகளவில் தனியார் நிறுவனங்களுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். இதனால் தபால் துறைக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கீழக்கரை தலைமை தபால் நிலையத்தில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து மக்கள் நல பாதுகாப்பு கழக பொருளாளர் முகம்மது சாலிஹ் ஹூசைன் கூறுகையில், ‘பொதுமக்கள் நலன் கருதி இங்குள்ள தலைமை தபால் அலுவலகத்திற்கு ஜெனரேட்டர் வசதி செய்து கொடுத்தால் இப்பிரச்னை தீரும். இது சம்பந்தமாக ஏற்கெனவே தபால்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம்’ என்றார்.

Saturday, May 14, 2011

ஈமான் சங்க பொது செயலாளர் லியாகத் அலி இல்ல திருமண விழா வாழ்த்து




Advt

கூடைக்கு கிடைத்த 6667 ஓட்டுகளால் தோற்ற தேமுதிக முஜிபுர் ரஹ்மான்

சுப.தங்கவேலன்

தேமுதிக முஜிபுர் ரஹ்மான்
கீழக்கரை மே 14&
திருவாடானை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் 6 ஆயிரத்து 667 வாக்குகள் பெற்றது தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் திமுக சார்பில் சுப.தங்கவேலன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து தேமுதிக சார்பில் முஜிபுர் ரஹ்மான் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் இருவருக்கும் துவக்கத்தில் இருந்தே கடும் போட்டியிருந்த நிலையில் சுப.தங்கவேலன் 64,165 வாக்குகள் பெற்றார். முஜிபுர்ரஹ்மான் 63,238 வாக்குகள் பெற்றார். 927 வாக்குகள் வித்தியாசத்தில் சுப.தங்கவேலன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இத்தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பாண்டிவேலு 6,667 வாக்குகள் பெற்றுள்ளது தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பாண்டிவேலுக்கு சுயேட்சை சின்னமான கூடை வழங்கப்பட்டிருந்தது. கூடை மற்றும் முரசு சின்னம் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்ததாகவும், இது முதியவர்கள் உள்ளிட்ட பலருக்கும் வித்தியாசம் காண முடியாத அளவிற்கு இருந்ததாகவும் ஏற்கனவே இத்தொகுதி தேமுதிகவினர் கூறி வந்தனர்.
இந்நிலையில் சுப.தங்கவேலன் 927 வாக்குகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், கூடை சின்னத்திற்கு 6,667 வாக்குகள் கிடைத்துள்ளது தேமுதிகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. முரசு சின்னத்திற்கு விழ வேண்டிய வாக்குகள்தான் கூடைக்கு மாறி விட்டதாகவும் இதனாலேயே தங்களது வெற்றி கை நழுவி விட்டதாகவும் தேமுதிகவினர் புலம்பி வருகின்றனர்.

Friday, May 13, 2011

ராமநாதபுரத்தில் வெற்றி பெறுபவரின் கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் !மீண்டும் நீரூபிக்கப்பட்டுளளது


ராமாநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் 15000த்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இந்நிலையில் கூட்டணி கட்சியான அதிமுக தமிழகத்தில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தன் மூலம் ராமநாதபுரத்தில் வெற்றி பெறுபவர்களின் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாக்குகள் விபரம் :-
ஜவாஹிருல்லாஹ்(மமக) 65,831 ,

ஹசன் அலி (காங்) 50,074 ,

துரை கண்ணன்(பாஜக) 28,060.

ராஜா ஹுசைன்(இந்திய தேசிய லீக்) 3606

பைரோஸ்கான்(எஸ்டிபிஐ) 2731



மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் நிலவும் பெருபான்மையான மக்களின் கருத்தை ராமநாதபுரம் தொகுதி மக்கள் பிரதிபலிப்பார்கள் என்ற கருத்து நீண்ட நெடிய காலமாக நிலவி வருகிறது. இதற்கு காரணம் நடந்து முடிந்த எல்லா தேர்தல்களிலும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கட்சி அல்லது அதன் கூட்டணி கட்சியே ஆட்சி அமைத்து வந்துள்ளது என்ற கரு்த்து உள்ளது.
பொதுவாக இது காலம் வரை ராமநாதபுரம் தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏ. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்ததில்லை. இந்த தொகுதியின் எதிரொலிப்பு தமிழ்நாடு முழுவதும் பிரதிபலித்து வந்துள்ளது கடந்த கால தேர்தல்களின் வரலாற்று உண்மைகள் ஆகும். இதில் கடந்த 1952, 57, 62 ஆகிய பொதுத் தேர்தல்களில் ராமநாதபுரம் ராஜா சண்முகராஜேசுவர நாகநாத சேதுபதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சமயத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.
1967ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் டி.ராமசாமியின் அண்ணன் தங்கப்பன் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது தி.மு.க. ஆட்சி அமைத்தது. 1971ம் ஆண்டு தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.கே.சத்தியேந்திரன் வெற்றி பெற்றார். அப்போதும் திமுக ஆட்சி அமைந்தது. இதன் பின்பு 1977, 80, 84ம் வருட தேர்தல்களில் முன்னாள் டி.ராமசாமி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். அந்த 3 தேர்தல்களிலும் அதிமுக ஆட்சி அமைந்தது.
இதன் பின்பு 1989ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.கே.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். அப்போது திமு கழகம் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து கடந்த 1991ல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தென்னவன் வெற்றி பெற்றார். அதிமுக ஆடசி அமைத்தது. 1996ல் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது திமுக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்வர்ராஜா வெற்றி பெற்றார்.அப்போது அதிமுக ஆட்சி அமைந்தது. கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹசன்அலி வெற்றி பெற்றார்.காங்கிரசின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சியில் அமர்ந்தது.
அதிமுக கூட்டணி கட்சியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற பேராசிரியர் ஜவாஹிருல்லா மூலம் தற்போது மீண்டும் ஒரு முறை அது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


Thursday, May 12, 2011

2 மாதங்களாக அகற்றப்படாத மரத்தால் பொது மக்கள் அவதி



கீழக்கரை மே 12&
கீழக்கரையின் முக்கிய பகுதியான வள்ளல் சீதக்காதி சாலையில் சாய்ந்து விழுந்த மரம் கடந்த இரண்டு மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
கீழக்கரையின் முக்கிய பகுதியான வள்ளல் சீதக்காதி சாலையில் 124 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மரம் கடந்த மார்ச்சில் திடீரென சாய்ந்து விழுந்தது. நகராட்சி ஊழியர்கள் அம்மரத்தை ரோட்டிலிருந்து ஓரமாக ஒதுக்கி போட்டதோடு தஙகள் பணி முடிந்ததாக சென்று விட்டனர். பொதுமக்களின் நடைபாதை பகுதியில் மரம் விழுந்து கிடப்பதால் மின்சாரம் இல்லாத இரவு நேரங்களில் சைக்கிளில் செல்வோரும், வயதானவர்களும் மரத்தில் மோதி அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதியினர் கூறுகையில், ‘மரம் சாய்ந்து 2 மாதங்கள் ஆகியும் அதை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மரத்தின் ஒரு பகுதி பக்கவாட்டில் சாய்ந்தபடி இருப்பதால் அவ்வழியாக செல்வோர் தலையை பதம் பார்த்து விடுகிறது. இரவு நேரத்தில் வாகனங்கள் மரத்தின் மீது மோதி விழுவதும் நடக்கிறது. எனவே உடனடியாக மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்

Wednesday, May 11, 2011

கீழக்கரை பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ ,மாணவிகள் விபரம்! இஸ்லாமியா பள்ளி மாணவிகளுக்கு முதல் இரண்டு இடங்கள் !




கீழக்கரை மே.11.

பிளஸ் 2 தேர்வில் கீழக்கரை பள்ளிகளில் நகர அளவில் முதல் இரண்டு இடங்களை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவிகள் கைப்பற்றினர்.மூன்றாம் இடத்தை முஹைதீனியா மெட்ரிக் மாணவி பெற்றுள்ளார்.

இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் 64 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றனர்.இவர்களில் அப்சன் பாத்திமா 1142 மதிப்பெண்களும் பெற்று முதலிடமும்,பாத்திமா அஸ்ரா 1130 மதிப்பெணகள் பெற்று இரண்டாம் இடத்தையும்,நஜியா பாத்திமா 1127 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களில் அப்சன் பாத்திமா மற்றும் பாத்திமா அஸ்ரா ஆகிய இருவரும் கீழக்கரை நகர அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

முஹைதீனியா மெட்ரிக் பள்ளியில் மாணவி ஜாமிஆ பாத்திமா 1129 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்,கீழக்கரை அளவில் 3ம் இடமும் பெற்றுள்ளார்.சித்தி ருக்சானா 1116 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், உம்முல் அசிபா 1104 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடமும் பெற்றுள்ளனர்.

கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் அல் ஹம்தியா 1093 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும் , சண்முக பிரியா 1029 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், கவிதா 962 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் ஹசீனா மொஜிரா பாத்திமா 1107 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்,செய்யது பர்வீன் 1082 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், தைபு ரினொஷா பாத்திமா 1081 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.


ஹமீதியா பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஹசூரா பானு 1112 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், ஆயிசத்துல் ராலியா 1108 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் ,மோனிகா ஜெலஸ்,ஹம்மத்து நசீரா ஆகிய இருவரும் தலா 1078 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டனர்.

ஹமீதியா ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சலாம் ஹுசைன் 1019 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும் , சக்தி முருகன் 1003 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், யாசிர் அகமது 994 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற அனைத்து மாணவ ,மாணவிகளும் எல்லா நிலைகளிலும் புகழ் பெற்று விளங்க கீழக்கரை டைம்ஸ் வாழ்த்துகிறது.

மீன்பிடி தடையால் வருமானமின்றி கந்து வட்டி கும்பலிடம் பரிதாபமாக சிக்கி தவிக்கும் மீனவர்கள்



கீழக்கரை, மே 11&
கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கீழக்கரை,ஏர்வாடி,காஞ்சிரங்குடி ஆகிய பகுதியில் உள்ள ஏராளமான மீனவர்கள் வருமானத்துக்காக கூலி வேலைக்குச்சென்று வருகின்றனர். சிலர் போதிய வருமானம் இன்றி கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கி தவிக்கின்றனர்.
கீழக்கரை பகுதியில் ஏராளமான விசைப் படகுகள் உள்ளன. வெளியூரிலிருந்து வந்தும் ஏராளமான படகுகள் இப்பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. மீன்கள் இனப்பெருக்கம் செய்ய வசதியாக ஏப்.15 முதல் மே 29வரை விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீன் பிடிக்க தடை உள்ளதால் மீனவர்கள் வருமானம் இன்றி உள்ளனர். மீன்பிடி தடை காலத்தில் அரசு வழங்கும் நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதி மீனவர்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க கூலி வேலைக்குச் செல்கின்றனர். ஒரு சிலர் படகுகள் மற்றும் வலைகளை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்ற நேரங்களில் வேறு வேலைகளுக்குச் செல்கின்றனர்.
சில மீனவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் பணம் வாங்கி வட்டி கட்டமுடியாமல் சிக்கி தவிக்கின்றனர். இதனால் மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வருமானம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கீழக்கரை சிறு தொழில் மீனவர்கள் சங்க செயலாளர் நல்ல இப்ராகிம் கூறுகையில், ‘மீன் பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு தரப்படும் அரசு நிவாரண தொகையை உயர்த்தி தர வேண்டும். மேலும் மற்ற தொழில் வாய்ப்பையும் மீனவர்களுக்கு அரசு ஏற்படுத்தி தரவேண்டும். வேலைவாய்ப்பு இல்லாததால் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் ஜவுளி கடைகளுக்கும், கட்டிட வேலை உட்பட பல வேலைகளுக்கும் குறைந்த சம்பளத்துக்குச் சென்று வருகின்றனர்’ என்றார்.

Sunday, May 8, 2011

14.30 மணி நேரம் பறந்த புறா முதல் சுற்றில் வெற்றி !

வெற்றி பெற்ற புறாவுடன் ஹனீப்

கீழக்கரையில் தொடர்ந்து 14.30 மணி நேரம் பறந்த புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 4ந்தேதி கேபிசி புறா கிளப் சார்பாக புறா பந்தயம் தொடங்கியது.இந்த போட்டியில் சபியுல்லா,அபுபக்கர்,ஹனீப்,அப்துல் ஆகியோரின் புறாக்கள கலந்து கொண்டன.பல சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டியில் ஹனீபுக்கு சொந்தமான புறா 14.30 மணி நேரம் பறந்து சாதனை படைத்தது.இதையடுத்து இந்த புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கேபிசி கிளப் தலைவர் சபியுதீன் ,செயலாளர் வலம்புரி செய்யது இப்ராகிம் மற்று நிர்வாகிகள் பந்தயத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வரும் 17.18,19 ஆகிய தேதிகளில் ஜோடி புறா போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குப்பை கரையாக மாறி வரும் கீழக்கரை ! தடுமாறும் நகராட்சி


கீழக்கரை, மே 8&
கீழக்கரை நகராட்சியில் தினமும் 2 டன் குப்பைகள் குவிந்து வருகின்றன. இதனை அகற்ற முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 13 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதில் 45 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் வெளியூரிலிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டிட வேலைக்காக கீழக்கரை வந்து செல்கின்றனர். கீழக்கரையில் நாளொன்றுக்கு 2 டன் குப்பைகள் குவிகின்றன. இந்த குப்பைகளை நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் டிராக்டரில் அள்ளிக் கொண்டு சென்று ராமநாதபுரம் செல்லும் சாலையின் ஒரு புறத்தில் குவித்து வந்தனர்.இதற்கு அவ்வழியாக செல்லும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் குப்பைகள் அனைத்தையும் கடற்கரையில் கொட்டி வைத்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஏர்வாடி செல்லும் சாலையின் ஓரத்தில் கொட்டி வைத்தனர். ஆனால் தற்போது அப்பகுதியில் தோட்டப் பகுதிகளில் வசிப்போர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மாற்று ஏற்பாடு இல்லாததால் குப்பைககளை எங்கு போய் கொட்டுவது என்பது தெரியாமல் நகராட்சி நிர்வாகம் விழி பிதுங்கி நிற்கிறது. இந்தப் பிரச்னையால் நகரில் குப்பைகள் அரைகுறையாக அள்ளப்படுகின்றன. தற்போது கீழக்கரை நகரமே குப்பைக்காடாக மாறி வருகிறது.
இது குறித்து முன்னாள் கவுன்சிலர் கென்னடி கூறுகையில், “பல ஆண்டுகளாக நகராட்சிக்கென்று தனியாக குப்பை கொட்டும் இடம் இல்லாமல் இருந்து வந்தது. தற்போதைய நகராட்சி நிர்வாகத்தின் முயற்சியில் கீழக்கரை வெல்பேர் அசோசியேசன் மூலமாக தோணி பாலம் அருகில் 11.5 ஏக்கர் இடம் கிடைத்தது. நகாராட்சிக்கு குப்பைகள் கொட்டுவதற்கு இடம் கிடைத்தும் நீதிமன்ற தடை இருப்பதால் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகளுடன் டிராக்டர்கள் நகராட்சி அலுவலகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பிரச்னைக்கு முடிவு காண வேண்டும்“, என்றார்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த முகம்மது ஜலாலுதீன் கூறுகையில் ,நகராட்சி நிர்வாகம் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் காரணத்தை மட்டும் சொல்லி கொண்டிருப்பது மாற்று திட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை.நகராட்சி நிர்வாகமே இந்த சுகாதார சீர்கேட்டிற்கு பொறுபேற்க வேண்டும்.தற்போது கீழக்கரையில் பல இடங்களில் குப்பைகளை நிறைந்து பெயர் தெரியாத நோய்கள் பரவி வருகிறது.ஏற்கெனெவே கீழக்கரை கடற்கரையில் குப்பைகள் கொட்டப்பட்டு அழகிய கடற்கரை சீரழிக்கப்பட்டு விட்டது . இனி கொட்டுவதற்கு இடமில்லை உடனடியாக மாநில அரசின் உயர் அதிகாரிகள் தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்
நகராட்சி தலைவர் பசீர் அகமது கூறுகையில், “11.5 ஏக்கர் நிலத்தில் குப்பைகளை கொட்டி, மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து சுத்திகரிப்பு செய்து உரம் தயார் செய்யலாம் என்ற நோக்கத்துடன் ஐந்து மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கப்பட்டன. இதற்கு சிலர் உயர்நீதி மன்றத்தில் இடைக்கால தடை பெற்றதால் பணி நிறுத்தப்பட்டு இங்கு குப்பைகளை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இடைக்கால தடையை நீக்குவதற்கு நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம்“ என்றார்.

தொடரும் இஸ்லாமியா பள்ளி மாணவிகளின் சாதனை ! 9ம் வகுப்பு மாணவி மாவட்ட அளவில் 2ம் இடம்



கீழக்கரை : சில நாட்களுக்கு முன் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி ஆயிசத் அப்சா பிளஸ் 1 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கீழக்கரை பள்ளிகளில் முதல் இடத்தையும், ராமநாதபுரம் மாவட்ட அளவில் 3வது இடத்தையும் பெற்று சாதனை படைத்தார்.

தற்போது மேலு்ம் ஒரு மாணவி சாதனையை தொடர்கிறார்.அவர் இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி மாணவி ஆயிஷா சித்திகா இவர் 9 ஆம் வகுப்பு தேர்வில் 477/500 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

கீழக்கரை கலங்கரை விளக்கம் !மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா மத்திய அமைச்சர் வாசன்




ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் அலியை ஆதரித்து பிரசாரம் செய்ய மத்திய அமைச்சர் வாசன் கீழக்கரை வந்த போதுஅவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்

தேர்தல் முடிந்தவுடன் தூத்துக்குடி & கொழும்பு கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். அதே போல் ராமேஸ்வரம் & தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தும் துவங்குவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்தியா முழுவதும் உள்ள 13 கலங்கரை விளக்கங்களை ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் திட்டத்தில் கீழக்கரை கலங்கரை விளக்கமும் இணைப்பது குறித்து ஆராயப்படு்ம் என்று அறிவித்தார்.

தற்போது தேர்தல் நடைபெற்று விட்டது எனவே மத்திய கப்பல் துறை அமைச்சர் வாச்ன் அவர்கள் வெறு்ம் அறிவிப்போடு நின்று விடாமல் அத்திட்டத்தில் கீழக்கரை கலங்கரை விளக்கத்தையும் இணைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரை கலங்கரை விளக்கம் இத்திட்டதில் இணைந்து விட்டால் கீழக்கரை கடற்கரை பகுதி சுத்தப்படுத்தப்பட்டு சுற்றுலா தலமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மாணவர் பட்டம் பெற அரசு செலவு ரூ.4 லட்சம்

கீழக்கரை, :
ஒவ்வொரு மாணவரும் பட்டம்பெற, அரசு தலா ரூ.4 லட்சம் வீதம் செலவு செய்வதாக, கீழக்கரையில் நடந்த கல்லூரி விழாவில் அழகப்பா பல்கலை. துணை வேந்தர் சுடலைமுத்து கூறினார்.
கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லூரி ஆண்டு விழா சென்ற மாதம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுமையா ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி தாளாளர் ரஹ்மத்துநிஷா தலைமை வகித்தார். கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பள்ளி முதல்வர் மஞ்சுவள்ளி மற்றும் சீதக்காதி டிரஸ்ட் செயலாளர் காலித் புகாரி மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அழகப்பா பல்கலை., துணைவேந்தர் சுடலைமுத்து பேசியதாவது:
இந்திய மக்கள் தொகை 121 கோடி பேரில், 60 கோடி பெண்கள். இவர்களில் 30 வயதுக்குட்பட்டவர்கள் 30 கோடி. 2011 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்தவர்களில் 12 சதவீத பெண்களே உயர்கல்வி பெறுகின்றனர். 88 சதவீதம் பேருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஒவ்வொரு தனிப்பட்ட மாணவ, மாணவியர் பட்டம் பெறுவதற்காக அரசு செய்யும் செலவு ரூ.4 லட்சம். பட்டம் பெற்றவுடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பணிக்கு அனுப்ப வேண்டும். அவர்களை பணிக்கு அனுப்புவது பணத்துக்காக மட்டுமல்ல தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காகத்தான். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சீதக்காதி டிரஸ்ட் துணை பொதுமேலாளர் சேக் தாவூத் உள்பட ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழா !





கீழக்கரை .மே.7. கீழக்கரை முகம்மது சதக் இஞ்சினியரிங் கல்லூரியில் சென்ற மாதம் 23வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சதக் டிரஸ்ட் தலைவர் ஹமீ்து அப்துல் காதர் தலைமை வகித்தார்.தாளாளர் கபீர், கல்லூரிகளின் நிர்வாக இயக்குநர் யூசுப்,இயக்குநர்கள் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா,பைசல் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பல்தேவ்ராஜ் மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவி்ல் ஏராளமான பெற்றோர்களும், மாணவ,மாணவிகளும் பங்கேற்றனர்.

Saturday, May 7, 2011

காஞ்சிரங்குடியில் புதிய தொழுகை பள்ளி திறப்பு


கீழக்கரை, மே 7&
காஞ்சிரங்குடி கடற்கரை அருகே புதிய தொழுகை பள்ளி திறக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கடற்கரை அருகே பக்கீர் அப்பா தர்கா உள்ளது. அதன் அருகில் புதிதாக கட்டப்பட்ட மக்கா மஸ்ஜித் தொழுகை பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு அமீர் தலைமை வகித்தார். சித்தார் கோட்டை தஸ்தகீர் புதிய பள்ளியை திறந்து வைத்தார்.
விழாவில் மாவட்ட டவுன் காஜி சலாஹூதீன், காஞ்சிரங்குடி இமாம் முல்லா ஹூசைன், இமாம் செய்யது முகம்மது, கீழக்கரை பழைய குத்பா பள்ளி இமாம் ஹைதர் அலி ஆகியோர் மார்க்க சொற்பொழிவு ஆற்றினர். டவுன் காஜி காதர் பக்ஸ் தொழுகை நடத்தி துஆ ஓதினார்.
முன்னதாக காஞ்சிரங்குடி துணை சேர்மன் முகப்பத்துல்லா வரவேற்றார். இமாம் யூசுப் நன்றி கூறினா

சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் கீழக்கரையில் போக்குவரத்து நெரிசல்



கீழக்கரை மே.7:
கீழக்கரையில் பிரதான சாலைகளில் இஷ்டம்போல் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழக்கரையில் பிரதான சாலைகளில் ஒன்றான தபால் நிலையம் அமைந்துள்ள சாலையில் மூன்று வங்கிகளும் செயல்படுகின்றன.இந்த சாலையில் காலை 10 மணி முதல் சாலையின் இருபுறங்களிலும் ஆட்டோ,கார் மற்றும் மினி வேன்கள் ஆகிய வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சில வாகனங்களை நாள் கணக்கில் சாலை ஓரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள், குறிப்பாக வங்கிகளுக்கு வரும் பெண்கள் சாலை ஓரங்களில் நடந்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
சமூக சேவகர் தங்கம் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,‘‘ இந்த சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி சாலையை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். அந்த வழியாக செல்லும் மற்ற வாகனங்கள் மட்டுமின்றி பொது மக்களும் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
காலை நேரங்களில் போலீசார் இப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

ராமநாதபுரம் சட்டசபை தொகுதி் ! ஒரு பார்வை

காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் அலி


மமக வேட்பாளர் ஜவாஹிருல்லா


எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் பைரோஸ்கான்


பாஜக வேட்பாளர் துரை.கண்ணன்


கீழக்கரை.மே.7. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி(தனி), திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் ராமநாதபுரம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 405வாக்காளர்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 1 லட்சத்து 60 ஆயிரத்து 77 ஆகு்ம் இதில் ஆண் வாக்காளர்கள் 77 ஆயிரத்து 555 ,பெண் வாக்காளர்கள் 86 ஆயிரத்து 572 மொத்த சதவீதம் 70.8 ஆகும்.இங்கு பெண் வாக்காளர்களே அதிகப்படி்யாக வாக்களித்துள்ளார்கள்.

ராமநாதபுரம் தொகுதியில் ராமேசுவரம் தாலுகா பகுதிகள், ராமநாதபுரம் நகராட்சி பகுதிகள், கீழக்கரை, மண்டபம் 3-ம் நிலை நகராட்சி பகுதிகள், ராமநாதபுரம் தாலுகாவில் உள்ள ஆற்றாங்கரை, பெருங்குளம், வாலாந்தரவை , குசவன்குடி, ஆர்.எஸ்.மடை, வெல்லாமரிச்சுகட்டி, அச்சடிபிரம்பு, குதகோட்டை, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், கும்பரம், ரெட்டைïரணி, நாகாச்சி, என்மனங்கொண்டான், பிரப்பன்வலசை, சாத்தகோன்வலசை, மண்டபம், நொச்சிïரணி, புதுமடம், காரான், பெரியபட்டினம், களிமண்குண்டு, திருப்புல்லாணி, களரி, உத்தரகோசமங்கை, மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, பனையடியேந்தல், வேளானூர், குலபதம், பள்ளமோர்குளம், காஞ்சிரங்குடி, கீழக்கரை, மாணிக்கனேரி, புல்லந்தை மற்றும் மாயாகுளம் வருவாய் கிராமங்கள் அடங்கி உள்ளன.இதில் ராமேஸ்வரம்,ராமநாதபுரம்,கீழக்கரை,மண்டபம் ஆகிய ஊர்களில் அதிகபடியான வாக்குகள் உள்ளதா்ல் இவை வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்க கூடிய ஊர்களாக விளங்கு்ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழக சட்டமன்ற தேர்தல் என்றாலே தமிழக அரசியல் தலைவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டமும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியும் பற்றிய நினைவே மேலோங்கி நின்று வருகிறது. இதற்கு காரணம் நடந்து முடிந்த எல்லா தேர்தல்களிலும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கட்சி அல்லது அதன் கூட்டணி கட்சியே ஆட்சி அமைத்து வந்துள்ளது என்ற கரு்த்து உள்ளது. பொதுவாக இது காலம் வரை ராமநாதபுரம் தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏ. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்ததில்லை. இதற்கு காரணம் ராமநாதபுரம் மக்களின் தேர்தல் கால சிந்தனை, நினைப்பு, விருப்பம் இவையே ஆகும். இந்த தொகுதி மக்களின் தேர்தல் கணிப்புதான் நாடு தழுவிய கணிப்பாக இருந்து வந்துள்ளது. இந்த தொகுதியின் எதிரொலிப்பு தமிழ்நாடு முழுவதும் பிரதிபலித்து வந்துள்ளது கடந்த கால தேர்தல்களின் வரலாற்று உண்மைகள் ஆகும். இதில் கடந்த 1952, 57, 62 ஆகிய பொதுத் தேர்தல்களில் ராமநாதபுரம் ராஜா சண்முகராஜேசுவர நாகநாத சேதுபதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சமயத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. 1967ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் டி.ராமசாமியின் அண்ணன் தங்கப்பன் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது தி.மு.க. ஆட்சி அமைத்தது. 1971ம் ஆண்டு தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.கே.சத்தியேந்திரன் வெற்றி பெற்றார். அப்போதும் திமுக ஆட்சி அமைந்தது. இதன் பின்பு 1977, 80, 84ம் வருட தேர்தல்களில் முன்னாள் டி.ராமசாமி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். அந்த 3 தேர்தல்களிலும் அதிமுக ஆட்சி அமைந்தது. இதன் பின்பு 1989ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.கே.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். அப்போது திமு கழகம் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து கடந்த 1991ல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தென்னவன் வெற்றி பெற்றார். அதிமுக ஆடசி அமைத்தது. 1996ல் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது திமுக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்வர்ராஜா வெற்றி பெற்றார்.அப்போது அதிமுக ஆட்சி அமைந்தது. கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹசன்அலி வெற்றி பெற்றார்.காங்கிரசின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சியில் அமர்ந்தது.

இந்த 2011-ல் (ஏப்ரல்) 13-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக அசன்அலி எம்எல்ஏ மீண்டும் களத்தில் போட்டியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ சார்பில் பைரோஸ்கான் ,பாரதிய ஜனதா சார்பில் துரைகண்ணன் ஆகிய இவர்களில் வெல்லப்போவது யார்? எந்த அணியின் ஆட்சி அமையும் என்பது தெரிய அடுத்த வாரம் மே 13 வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

ஈமான் சங்கம் மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம் சார்பில் ரத்த தான முகாம்








துபாய் : துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான்) மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து துபாய் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அல் வாஸல் மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து மாபெரும் ரத்ததான முகாமினை 06.05.2011 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வெகு சிறப்புற நடத்தியது.

துபாய் ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநருமான் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் அவசர உதவிக்கு செய்யப்படும் ரத்ததானம் செய்வதற்கு முன்வந்திருப்பவர்கள் குறித்து மிகவும் பெரிமிதம் தெரிவித்தார். இதுபோன்ற சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் ஈமான் மற்றும் துபாய் தமிழ்ச் சங்க அங்கத்தினர்களைப் பாராட்டினார்.

துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் முன்னிலை வகித்தார். ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்றார்.

ரத்ததான முகாமினை இந்திய கன்சல் சஞ்சய் வர்மா துவக்கி வைத்து முதலாவதாக தானும் ரத்ததானம் செய்தார். மேலும் ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்தும் வலியுறுத்திப் பேசினார்.

ரத்ததான முகாமில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவரும், நேபாளம், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாட்டவரும் ஆண், பெண் என்ற பேதமின்றி ரத்ததானம் வழங்க முன்வந்திருந்தனர்.

ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை ஈமான் மற்றும் துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். ஈமான் மற்றும் துபாய் தமிழ்ச் சங்க தன்னார்வத் தொண்டர்கள் ஆர்வமுடன் பணியாற்றினர்.

நிகழ்வில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும இயக்குநர் அஹமது சலாஹுத்தீன், மனிதவள மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான், மேலாளர் நிஜாமுத்தீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்விறகான அணுசரனையினை அல் ரவாபி, அல் அய்ன் வாட்டர், அல்கபே, மூன் டிவி, சிவ் ஸ்டார் பவன், அல் ரியாமி பிரிண்டிங் பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கியிருந்தன.

Friday, May 6, 2011

கீழக்கரை அருகே முள்ளுவாடி பகுதியில் விபத்தில் காயமடைந்தவர் சாவு




கீழக்கரை,மே 6: கீழக்கரை அருகே முள்ளுவாடி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் காயமடைந்த ஏர்வாடியைச் சேர்ந்த பெயிண்டர் சுல்த்தான புதன்கிழமை உயிரிழந்தார்.

கீழக்கரையைச் சேர்ந்தவர்கள் ஜேசுமரியஅந்தோனி மகன் இருதயராஜ் (36), சபரிமுத்து நாடார் மகன் மற்றொரு இருதயராஜ் (40) ஆகிய இருவரும் கீழக்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது முகைதீன்மஸ்தான் மகன் ஆட்டோ டிரைவர் செய்யது இபுராம்சா (28) ஏர்வாடியைச் சேர்ந்த பெயிண்டர் சுல்த்தான் (65) மாயாகுளத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது மகன் முகம்மதுதார்அல்புதீன் ஆகியோர் ஒரு ஆட்டோவில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஏர்வாடி நோக்கிச் சென்றனர்.

அப்போது இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ வேகமாக மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏர்வாடியைச் சேர்ந்த பெயிண்டர் சுல்த்தான் புதன்கிழமை உயிரிழந்தார்.

கீழக்கரை அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர்களை நியமிக்க கோரிக்கை


கீழக்கரை, மே 6&
கீழக்கரை அரசு மருத்துவமனையில், பெண் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை அரசு மருத்துவமனையில் தினமும் 400க்கு அதிகமான நோயாளிகள், சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் 40 சதவீதம் பெண்கள். மருத்துவமனையில் பல்வேறு நவீன கருவிகள் உள்ளன. ரத்த அழுத்த பரிசோதனை செய்யும் கருவி இல்லை. எந்த நோயாக இருந்தாலும் முதலிம் ரத்த அழுத்த பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் இந்த மருத்துவமனையில் ஆண் டாக்டர்கள் 5 பேர் பணியில் உள்ளனர். பெண் டாக்டர் ஒருவர் கூட இல்லை. சிகிச்சைக்கு வரும் பெண்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். உடனடியாக இந்த மருத்துவமனையில் பெண் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என கீழக்கரை பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.
நேற்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த முத்துலட்சுமி கூறுகையில், “ஆண் டாக்டர்களிடம் ஒரு சில நோய்களின் குறைபாடுகளை முழுமையாக கூறுவதற்கு சங்கடமாக உள்ளது. பெண் டாக்டர்கள் என்றால் நோய் குறித்து சகஜமாக கூற முடியும். அவர்களும் பிரச்னைகளை எளிதில் புரிந்து கொள்வார்கள். எனவே இந்த மருத்துவமனையில் பெண் டாக்டர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.
அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி அங்காள ரெட்டி கூறுகையில், “இந்த அரசு மருத்துவமனைக்கு பெண் டாக்டர் ஒருவரை நியமிக்க வேண்டும் என சென்ற மாதம் நடந்த துறை ரீதியான கூட்டத்தின் போது வலியுறுத்தியுள்ளேன். விரைவில் பெண் டாக்டர் ஒருவர் நியமிக்கப்படுவார்“ என்று தெரிவித்தார்.

Thursday, May 5, 2011

கீழக்கரை பகுதி "தினகரன்" & தமிழ்முரசு நாளிதழ்களுக்கு புதிய நிருபர்



தினகரன் மற்றும் தமிழ் முரசின் புதிய நிருபர் ஜகுபர் ஹமீது இப்ராகிம்


அப்துல் சலாம் இப்ராகிம்

கீழக்கரை பகுதி "தினகரன்" மற்றும் "தமிழ்முரசு" நிருபராக கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வந்த அப்துல் சலாம் இப்ராகிம்(மொளலானா) தொழில் சம்பந்தமாக இலங்கை சென்று விட்டதால் தற்போது "தினகரன்" மற்றும் "தமிழ்முரசு" நிருபராக ஜகுபர் ஹமீது இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளர்.

தொடர்பு எண் : 0091 94434 66669

கீழக்கரையில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை

கீழக்கரை, மே

வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, ஏராளமானோர் வாக்களிக்காத நிலை ஏற்பட்டதால், கீழக்கரையில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என நகர் மக்கள் நல பாதுகாப்பு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பின் செயலாளர் முகைதீன் இப்ராகிம், தமிழக தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கீழக்கரை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பல வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட குளறுபடியாலும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை கிடைக்காததாலும் வாக் காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தினாலும், குறிப்பாக புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை கிடைத்தும் வாக் காளர் படிவத்தில் பெயர் இல்லாததாலும், நகரில் பெரும்பான்மை வாக்காளர்கள் வாக்களிக்க முடியவில்லை. இதனால் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டிய வாக்காளர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். குறைகளை சரி செய்து கீழக்கரையில் மறுவாக்கு பதிவு நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கீழக்கரையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள தர்பூசணி பழங்கள்

டிரான்ஸ்பார்மர் மீது லாரி உரசியதால் சேதம்: இரவு முழுவதும் மின் விநியோகம் நிறுத்தம்

கீழக்கரை, மே: கீழக்கரையில் மின் மாற்றி மீது லாரி உரசி சேதம் ஏற்பட்டதால் திங்கள்கிழமை இரவு முழுவதும் மின் சப்ளை நிறுத்தப்பட்டது.
இப்போது சென்னையில் தினமும் ஒரு மணி நேரமும், பிற பகுதிகளில் 3 மணி நேரமும் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக கீழக்கரையில் பகலில் 3 மணி நேரம் போக, பிற நேரங்களிலும் அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதனிடையே கீழக்கரை அலவாக்கரைவாடி பகுதியில் செங்கல் சுமையை இறக்கிவிட்டு திங்கள்கிழமை திரும்பிச் சென்ற லாரி, அங்கிருந்த மின் மாற்றி மீது பக்கவாட்டில் உரசியது. இதனால் மின் மாற்றி சேதமடைந்ததோடு, உப மின் நிலையத்தில் உள்ள மின் மாற்றியில் கரும்புகை ஏற்பட்டது. இதையடுத்து கீழக்கரையில் திங்கள்கிழமை இரவு முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூக்கமின்றி அவதிப்பட்டனர்.
இது சம்பந்தமாக உதவி மின் பொறியாளர் பால்ராஜ் கூறியது: திங்கள்கிழமை இரவு கீழக்கரை அலவாக்கரைவாடி பகுதியில் மின் மாற்றி மீது லாரி உரசியதால் சேதம் ஏற்பட்டது. சேத மதிப்புக்குரிய தொகையை மின் வாரியத்திற்கு கொடுப்பதாக லாரி உரிமையாளர் எழுத்து முலம் கொடுத்த வாக்குமூலத்தால், அதனை ஏற்றுக்கொண்டு வழக்கு போடாமல் லாரியை அனுப்பி வைத்துவிட்டோம். இதனால் ஏற்பட்ட மின் விநியோ நிறுத்தம் செவ்வாய்க்கிழமை பகலில் சீரமைக்கப்பட்டது என்றார்.

Tuesday, May 3, 2011

கீழக்கரை ஜெட்டி பாலத்தி்லிருந்து மீன் பிடிக்கும் சிறுவர்கள்

கீழக்கரையில் கிரிக்கெட் பயிற்சி மையம் ! இளைஞர்கள் கோரிக்கை





மூர் ஹசனுதீன்

கீழக்கரையில் பல்வேறு அணிகள் சார்பில் கிரிக்கெட்விளையாட்டு சூடு பிடித்துள்ளது.சிறந்த வீரர்களை உருவாக்க இங்கு கிரிக்கெட் பயிற்சி மையம் அமைக்க வேண்டு்மென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது விடுமுறை காலம் துவங்கிவிட்டதால் கீழக்கரையில் மாணவர்கள் ,இளைஞர்கள் ஏராளமானோர் கிரிக்கெட் விளையா்ட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.மார்னிங் ஸ்டார்,சவுத் ஸ்டா்ர் என்று ஐபிஎல் ரேஞ்சுக்கு தங்களி்ன் அணிகளுக்கு பெயர்களை சூட்டியுள்ளனர்.இந்த அணிகளில் சிலர் 130கிலோ மீட்டர் வேகத்தில் துல்லியமாக ,நேர்த்தியாக பந்து வீசுபவர்களு்ம் உள்ளனர்.ஆனா்ல் இவர்களுக்கு முறையான பயிற்சியில்லாததால் வெறும் பொழுது போக்கிற்காக விளையாடி செல்கின்றனர்.இப்பகுதியில் கிரிக்கெட் பயிற்சி மையம் அமைத்தால் திறமையான வீரர்களை உருவாக்க முடியும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்குதெருவை சேர்ந்த அசாரூதீன் கூறுகையில் , இப்பகுதியில் முண்ணனி வீரர்களை கொண்டு 15 நாள் ,30 நாள பயிற்சி முகாம்கள் நடத்தினா்ல் இப்பகுதியிலிருந்து சிறந்த வீரர்கள் உருவாகி வருவார்கள் என்றார்.
இது குறித்து மூர் விளையாட்டு கிளப் தலைவர் ஹசனுதீனிடம் கேட்ட போது, நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசளித்து ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம் .மேலு்ம் அரசின் விளையாட்டு துறை ஆதரவளித்தால் நாங்களே முண்ணனி கிரிக்கெட் வீரர்களை அழைத்து வந்து இலவச பயிற்சி முகாம்களை நடத்த தயராக உள்ளோம் என்றார்.,





Monday, May 2, 2011

கீழக்கரை அருகே ஆட்டோ - டூ வீலர் மோதல் !

4 நாட்களுக்கு முன் நடைபெற்ற விபத்தில் சேதமான வாகனங்கள்

கீழக்கரை முள்ளுவாடி அருகே ஆட்டோ மற்றும் டூ வீலர் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் காயமடைந்தந்தனர். காயமடைந்தோர் விபரம் கீழக்கரையை சேர்ந்த பைக்கில் பயணம் செய்த இருதயராஜ்(36),சி.இருதயராஜ்(46).ஆட்டோவில் பயணித்த ஏர்வாடியை சேர்ந்த சுல்தான்(65),மாயகுளத்தை சேர்ந்த அலிப்தீன்(20),இப்ராகி ஷா(28) ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிக்ச்சை பெற்று வருகின்றனர்.

கீழக்கரை சின்னக்கடைதெரு அருகே நின்ற மர்ம பைக் அகற்றப்பட்டது


ஒரு மாதத்திற்கு மேலாக சின்னக்கடை தெருவில் நிறுத்தப்பட்டிருந்த பைக்



சின்னக்கடை தெருவிலிருந்து கீழக்கரை காவல் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்ட பைக்


கீழக்கரை மே.2. கீழக்கரை சின்னக்கடை தெருவில் ஒரு மாதத்திற்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மர்ம பைக் கீழக்கரை போலீசாரால் அகற்றப்பட்டது. டயர்கள் கழற்றப்பட்டு எலும்பு கூடு போல் காட்சியளித்த இந்த பைக் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

இது குறித்து தெற்கு தெருவை சேர்ந்த சேகு சதக் இப்ராகிம் கூறியதாவது, கடந்த ஒரு மாதமாக இந்த பைக் நிறுத்தப்பட்டிருந்தது.இப்பகுதியில் உள்ளோர் தங்களுடையது இல்லை என்று கூறி விட்டார்கள் என்றார்.

இது குறித்து டி எஸ் பி முனியப்பனிடம் கேட்ட போது, இந்த டூ வீலர் யாருடையது என்பது பற்றி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இது போன்று மர்மமான முறையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் உடனடியாக பொது மக்கள் காவல் துறைக்கு தகவல் தர வேண்டும் என்றார்

Sunday, May 1, 2011

கீழக்கரையில் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை !

கீழக்கரை,
கீழக்கரையில் கடைகளில் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறையினர் அதிரடியாக ஆய்வு செய்ய மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கீழக்கரையில் பெரும்பாலான கடைகளில், தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஐஎஸ்ஐ தர முத்திரையில்லாதது மட்டுமின்றி, குடிநீரும் தரமற்றதாக உள்ளது. குடிநீரை பருகினால், உடலுக்கு பல்வேறு நோய் வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
கீழக்கரையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘கீழக்கரையில் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் தாராளமாக விற்பனையாகிறது. இதனை வாங்கி பருகுவோர், நோய் வரும் அபாயம் உள்ளது. வள்ளல் சீதக்காதி மணிமண்டபம், சதக்கத்துல்லாஅப்பா தர்ஹா ஆகியவற்றை காண கீழக்கரைக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்களும் தாகம் தணிக்க இங்குள்ள கடைகளில் குடிநீர் பாக்கெட் வாங்கி பருகி சிரமமடைகின்றனர். தவிர காலாவதி உணவு பாக்கெட்டுகளும் அதிகளவில் விற்பனையாகின்றன.
மக்களின் நலன்கருதி சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக களமிறங்கி ஆய்வு நடத்த வேண்டும்‘ என்றார்.
களமிறங்குமா சுகாதாரத்துறை?

கீழக்கரையில் மே 4ல் புறா பந்தயம் துவக்கம்

கீழக்கரை, :
கீழக்கரையில் புறா பந்தயம், மே 4ம்தேதி துவங்குகிறது. இதையொட்டி முன்னோட்ட பயிற்சி போட்டிகள் நேற்று நடந்தன.
கீழக்கரை பகுதியில் புறாக்கள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. கேபிசி புறா கிளப் சார்பாக மே 4ம்தேதி முதல் புறா பந்தயம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக போட்டி பங்கேற்பாளர்கள் நேற்று கீழக்கரையில் புறாக்களுக்கு பயிற்சி போட்டியை நடத்தினர். பத்துக்கும் மேற்பட்ட புறாக்கள் பங்கேற்றன. வீட்டுக்கு 2 புறா வீதம் பறக்கவிடப்பட்டது. வெளியே பறக்க விடும் புறாக்களில், நீண்ட நேரம் பறந்து வீடு திரும்பிய புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கேபிசி கிளப் தலைவர் சபீயுதீன், செயலாளர் வலம்புரி செய்யது இப்ராகிம் கூறுகையில், ‘மே 4ம் தேதி தொடங்கி தொடர்ந்து ஒரு வாரம் கீழக்கரையில் புறா போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் 30க்கும் மேற்பட்ட புறாக்கள் பங்கேற்கவுள்ளன. புறாக்கள் உள்ளூரிலேயே பறக்கவிட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு புறாவுக்கும், ஒரு நடுவர் நியமிக்கப்படுவர்‘ என்றனர்.
புறாக்கள் வளர்க்கும் ஜலால் கூறுகையில், ‘என் வீட்டு மொட்டை மாடியில் புறாக்கள் வளர்க்கிறேன். கூண்டுகள் அமைக்காமல் புறாக்களை அதன் போக்கிலேயே சுதந்திரமாக விட்டு விட்டேன். பச்சை பயறு, கோதுமை, கம்பு ஆகியவற்றை புறாக்களுக்கு உணவாக கொடுக்கிறேன். புறா பந்தயத்தில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன்‘ என்றார்.

உயரே பறக்குது கறிக்கோழி'

கீழக்கரை,
ஆழ்கடல் மீன்பிடி தடை காரணமாக வரத்து குறைந்ததால், மீன் பிரியர்களின் கவனம் கறிக்கோழியை நோக்கி திரும்பியுள்ளது. கிராக்கி காரணமாக, கீழக்கரை பகுதியில் கறிக்கோழி விலை எகிறி, கிலோ ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆழ்கடல் மீன் பிடிப்புக்கான தடை அமலில் உள்ளதால், மீன் பிரியர்களின் கவனம் கோழி இறைச்சியை நோக்கி திரும்பியுள்ளது. கறிக்கோழிக்கு கிராக்கி அதிகரித்ததால் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கீழக்கரை பகுதியில் சில்லரை விலையில் ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட, ஒரு கிலோ உரித்த கோழி தற்போது ரூ.140லிருந்து ரூ.160 வரை விற்பனையாகிறது. தோல் நீக்கப்பட்ட கறி இன்னும் அதிக விலையில் விற்கப்படுகிறது. மீன்பிடி தடை காலம் முடியும் வரை இந்த விலை உயர்வு தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக கோடைகாலத்தில் கோழி இறைச்சி நுகர்வு குறையும். ஆனால் மீன் பிடி தடை காரணமாக தற்போது, மாவட்டம் முழுவதும் கறிக்கோழியின் தேவை அதிகரித்துள்ளது. கறிக்கோழி விற்பனையும், விலை உயர்வும் கடைக்காரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், கடும் விலை உயர்வு நுகர்வோருக்கு சிரமத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கீழக்கரை தெற்குத்தெருவை சேர்ந்த சாவன்னா கூறுகையில், ‘இந்த விலையேற்றத்தால் சாமானியர்கள் கோழிக்கறி வாங்குவதை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கீழக்கரையில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை கோழி இறைச்சி கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையிலும் ஒரு விலை வைத்து விற்கிறார்கள். அனைத்து கடைகளிலும் மார்க்கெட் விலையை நிர்ணயித்து ஒரே விலையில் விற்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்.

ஆட்டோ ஓட்டும் சிறுவர்கள்! கீழக்கரையில் விபத்து அபாயம்


கீழக்கரை,
கீழக்கரையில் லைசென்ஸ் பெறாதவர்கள், சிறுவர்கள் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச்செல்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது.
கீழக்கரையில் அறுநூறுக்கும் அதிக ஆட்டோக்கள், இருநூறுக்கும் அதிக மினிவேன்கள் வாடகைக்கு இயக்கப்படுகின்றன. இதனை இயக்கும் டிரைவர்களில் சிலரிடம் லைசென்ஸ் இல்லை. ஒருபுறமிருக்க, கோடை விடுமுறையையொட்டி சிறுவர்கள் பலர் ஆர்வத்தில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். ஆட்டோ ஓட்ட அதிக சிரமமில்லை என கருதி, கீழக்கரையில் சாலைகளில் தாறுமாறாக ஓட்டிச் செல்கின்றனர். தவிர, குறுகலான சந்து, வீதிகளிலும் புகுந்து அசுரவேகத்தில் செல்வது, பாதசாரிகளை அச்சுறுத்துகிறது.
தவிர, பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இயங்கி வந்த மினி வேன்கள், கோடை விடுமுறையையொட்டி உள்ளூர் வாடகைக்கு இயக்கப்படுகின்றன. இதனை ஓட்டும் சிலர் 14 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இதுபோன்ற விதிமீறல்கள் விபத்து அபாயத்தை உருவாக்கியுள்ளது. அசம்பாவிதம் நேரும் முன்பு, போக்குவரத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மினி வேன் டிரைவர் காதர் கூறுகையில், ‘ஓட்டுநர் உரிமம் இல்லாத சிலர், பொழுது போக்குக்காக வாடகை மினி வேன் இயக்குகிறார்கள். இவர்களால் முறையாக லைசென்ஸ் பெற்றுள்ள எங்களை போன்ற ஓட்டுனர்களுக்கும் தொந்தரவு ஏற்படுகிறது. விதிமீறுவோர் மீது நடவடிக்கை வேண்டும்‘ என்றனர்.
கீழக்கரையை சேர்ந்த ஹசன் அப்துல் கூறுகையில், ‘வாகனம் ஓட்ட தகுதியான வயதை எட்டாதவர்களும், லைசென்ஸ் பெறாதவர்களும் வாகனங்களை இயக்குவது அச்சத்திற்குரியதாக உள்ளது.
போக்குவரத்து போலீசார் பாராமுகமாக இருப்பதே இதுபோன்ற விதிமீறல்கள் அதிகரிக்கவும், விபத்து அதிகரிக்கவும் காரணமாக இருக்கிறது‘ என்றார்.

நகராட்சி தேர்தலில் கீழக்கரை நகராட்சியை கைப்பற்றுவோம் ! தமுமுக முஜீப்



கீழக்கரை.மே.1

தமுமுகவை சேர்ந்த கீழக்கரை பிரமுகர் முஜீப் கூறுகையில் ,

இன்சா அல்லாஹ் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிகமாக வாக்கு வித்தியாசத்தில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வெற்றி பெறுவார்.

கீழக்கரையில் தமுமுக பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இதனால் இப்பகுதி மக்களிடையே மிகுந்த செல்வாக்கை பெற்று வருகிறது எனவே இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நகராட்சி தேர்தலில் கீழக்கரை நகராட்சியை தமுமுக கைப்பற்றும்.இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி பிளஸ் 1 மாணவி சாதனை





கீழக்கரை.மே.1.கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி ஆயிசத் அப்சா பிளஸ் 1 தேர்வில் திக மதிப்பெண்கள் பெற்று கீழக்கரை பள்ளிகளில் முதல் இடத்தையும், ராமநாதபுரம் மாவட்ட அளவில் 3வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவிக்கு மாவட்ட கல்வி முதன்மை அதிகாரி ராதாகிருஸ்ணன் பரிசு வழங்கி பாராட்டினார். மேலு்ம் இஸ்லாமியா பள்ளிகளி்ன் தாளாளர் முகைதீ்ன் இப்ராகிம் மற்று்ம் ஆசிரிய ,ஆசிரியைகள் மாணவி ஆயிசத் அப்சாவை பாரட்டினர்.

டீயின் விலை ரூ1 ! அசத்தும் வியாபாரி !







கீழக்கரை.மே 1. தமிழகம் முழுவதும் டீயின் விலை குறைந்தது ரூ5க்கு விற்கபடுகிறது.இந்நிலையில் கீழக்கரையை சேர்ந்த மன்சூர்கான்(35) என்பவர் கீழக்கரை சாலை தெரு பகுதி தெருவோரத்தில் டீக்கடை நடத்தி வருகிறார்.இவர் கடையில் ஒரு டீ ரூ 1க்கு விற்பனை செய்து அனைவரை ஆச்சரியபடுத்துகிறார்.டீயின் சுவையும் நன்றாக உள்ளதாக கடைக்கு வருபவர்கள் கூறுகின்றனர்.இதனால் இவரின் கடையில் இடைவிடாத வியாபாரம் நடைபெறுகிறது. ஒவ்வொரு டீக்கும் ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தக்கூடிய அட்டை டம்ளரைத்தான் பயன் படுத்துகிறார் .

இது குறித்து இந்த ரோட்டோர கடையை நடத்தும் மன்சூர் கூறியதாவது, ஒரு லிட்டர் ரூ32க்கு வாங்கி அதில் 72டீ தயார் செய்கிறேன்.நாளொன்றுக்கு 700 டீ விற்பனையாகிறது.நான் தனியாளாக இருந்து செயல்படுவதால் எனக்கு செலவு அதிகமில்லை .நல்ல லாபமும் கிடைக்கிறது.பத்து நாளில் நஷ்டம் ஏற்பட்டு வியாபாரத்தை நிறுத்தி விடுவாய் என்று நண்பர்கள் கூறினார்கள்.ஆனால் தொடர்ந்து 4 மாதங்களாக வியாபாரம் வெற்றிகரமாக நடைபெறுகிறது என்றார்.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த முஜிப் கூறுகையில். ரூ 1க்கு டீ என்ற போது முதலில் நம்பவில்லை.தற்போது நானும் இக்கடையின் ரெகுலர் கஸ்டமராகி விட்டேன் என்றார்.