கீழக்கரை, மே 11&
கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கீழக்கரை,ஏர்வாடி,காஞ்சிரங்குடி ஆகிய பகுதியில் உள்ள ஏராளமான மீனவர்கள் வருமானத்துக்காக கூலி வேலைக்குச்சென்று வருகின்றனர். சிலர் போதிய வருமானம் இன்றி கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கி தவிக்கின்றனர்.
கீழக்கரை பகுதியில் ஏராளமான விசைப் படகுகள் உள்ளன. வெளியூரிலிருந்து வந்தும் ஏராளமான படகுகள் இப்பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. மீன்கள் இனப்பெருக்கம் செய்ய வசதியாக ஏப்.15 முதல் மே 29வரை விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீன் பிடிக்க தடை உள்ளதால் மீனவர்கள் வருமானம் இன்றி உள்ளனர். மீன்பிடி தடை காலத்தில் அரசு வழங்கும் நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதி மீனவர்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க கூலி வேலைக்குச் செல்கின்றனர். ஒரு சிலர் படகுகள் மற்றும் வலைகளை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்ற நேரங்களில் வேறு வேலைகளுக்குச் செல்கின்றனர்.
சில மீனவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் பணம் வாங்கி வட்டி கட்டமுடியாமல் சிக்கி தவிக்கின்றனர். இதனால் மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வருமானம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கீழக்கரை சிறு தொழில் மீனவர்கள் சங்க செயலாளர் நல்ல இப்ராகிம் கூறுகையில், ‘மீன் பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு தரப்படும் அரசு நிவாரண தொகையை உயர்த்தி தர வேண்டும். மேலும் மற்ற தொழில் வாய்ப்பையும் மீனவர்களுக்கு அரசு ஏற்படுத்தி தரவேண்டும். வேலைவாய்ப்பு இல்லாததால் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் ஜவுளி கடைகளுக்கும், கட்டிட வேலை உட்பட பல வேலைகளுக்கும் குறைந்த சம்பளத்துக்குச் சென்று வருகின்றனர்’ என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.