Sunday, May 1, 2011

உயரே பறக்குது கறிக்கோழி'

கீழக்கரை,
ஆழ்கடல் மீன்பிடி தடை காரணமாக வரத்து குறைந்ததால், மீன் பிரியர்களின் கவனம் கறிக்கோழியை நோக்கி திரும்பியுள்ளது. கிராக்கி காரணமாக, கீழக்கரை பகுதியில் கறிக்கோழி விலை எகிறி, கிலோ ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆழ்கடல் மீன் பிடிப்புக்கான தடை அமலில் உள்ளதால், மீன் பிரியர்களின் கவனம் கோழி இறைச்சியை நோக்கி திரும்பியுள்ளது. கறிக்கோழிக்கு கிராக்கி அதிகரித்ததால் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கீழக்கரை பகுதியில் சில்லரை விலையில் ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட, ஒரு கிலோ உரித்த கோழி தற்போது ரூ.140லிருந்து ரூ.160 வரை விற்பனையாகிறது. தோல் நீக்கப்பட்ட கறி இன்னும் அதிக விலையில் விற்கப்படுகிறது. மீன்பிடி தடை காலம் முடியும் வரை இந்த விலை உயர்வு தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக கோடைகாலத்தில் கோழி இறைச்சி நுகர்வு குறையும். ஆனால் மீன் பிடி தடை காரணமாக தற்போது, மாவட்டம் முழுவதும் கறிக்கோழியின் தேவை அதிகரித்துள்ளது. கறிக்கோழி விற்பனையும், விலை உயர்வும் கடைக்காரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், கடும் விலை உயர்வு நுகர்வோருக்கு சிரமத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கீழக்கரை தெற்குத்தெருவை சேர்ந்த சாவன்னா கூறுகையில், ‘இந்த விலையேற்றத்தால் சாமானியர்கள் கோழிக்கறி வாங்குவதை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கீழக்கரையில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை கோழி இறைச்சி கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையிலும் ஒரு விலை வைத்து விற்கிறார்கள். அனைத்து கடைகளிலும் மார்க்கெட் விலையை நிர்ணயித்து ஒரே விலையில் விற்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.