Sunday, May 1, 2011

ஆட்டோ ஓட்டும் சிறுவர்கள்! கீழக்கரையில் விபத்து அபாயம்


கீழக்கரை,
கீழக்கரையில் லைசென்ஸ் பெறாதவர்கள், சிறுவர்கள் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச்செல்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது.
கீழக்கரையில் அறுநூறுக்கும் அதிக ஆட்டோக்கள், இருநூறுக்கும் அதிக மினிவேன்கள் வாடகைக்கு இயக்கப்படுகின்றன. இதனை இயக்கும் டிரைவர்களில் சிலரிடம் லைசென்ஸ் இல்லை. ஒருபுறமிருக்க, கோடை விடுமுறையையொட்டி சிறுவர்கள் பலர் ஆர்வத்தில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். ஆட்டோ ஓட்ட அதிக சிரமமில்லை என கருதி, கீழக்கரையில் சாலைகளில் தாறுமாறாக ஓட்டிச் செல்கின்றனர். தவிர, குறுகலான சந்து, வீதிகளிலும் புகுந்து அசுரவேகத்தில் செல்வது, பாதசாரிகளை அச்சுறுத்துகிறது.
தவிர, பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இயங்கி வந்த மினி வேன்கள், கோடை விடுமுறையையொட்டி உள்ளூர் வாடகைக்கு இயக்கப்படுகின்றன. இதனை ஓட்டும் சிலர் 14 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இதுபோன்ற விதிமீறல்கள் விபத்து அபாயத்தை உருவாக்கியுள்ளது. அசம்பாவிதம் நேரும் முன்பு, போக்குவரத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மினி வேன் டிரைவர் காதர் கூறுகையில், ‘ஓட்டுநர் உரிமம் இல்லாத சிலர், பொழுது போக்குக்காக வாடகை மினி வேன் இயக்குகிறார்கள். இவர்களால் முறையாக லைசென்ஸ் பெற்றுள்ள எங்களை போன்ற ஓட்டுனர்களுக்கும் தொந்தரவு ஏற்படுகிறது. விதிமீறுவோர் மீது நடவடிக்கை வேண்டும்‘ என்றனர்.
கீழக்கரையை சேர்ந்த ஹசன் அப்துல் கூறுகையில், ‘வாகனம் ஓட்ட தகுதியான வயதை எட்டாதவர்களும், லைசென்ஸ் பெறாதவர்களும் வாகனங்களை இயக்குவது அச்சத்திற்குரியதாக உள்ளது.
போக்குவரத்து போலீசார் பாராமுகமாக இருப்பதே இதுபோன்ற விதிமீறல்கள் அதிகரிக்கவும், விபத்து அதிகரிக்கவும் காரணமாக இருக்கிறது‘ என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.