Thursday, March 31, 2011

அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த விஷமிகள் சதி!கீழக்கரை நகராட்சித்தலைவர் ‘பகீர்’ குற்றச்சாட்டு


கீழக்கரை, மார்ச் 31&
அரைமணி நேரத்துக்கு ஒரு முறை விட்டு விட்டு ஏற்படும் ‘பவர் கட்’ விவ காரம் கீழக்கரை பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தேர்தல் நேரத்தில், திமுக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த, விஷமிகள் செய்யும் சதி இது’ என நகராட்சித் தலைவரும், ‘அதிகளவு மின் நுகர்வு காரணமாக, ஜம்பர் இணைப்பு துண்டிப்பால் ஏற்படும் பிரச்னை இது’ என மின்வாரிய அதிகாரி களும் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட் டம், கீழக்கரை பகுதியில் தினமும் காலை 10 முதல் 12 மணி வரை இரண்டு மணி நேரம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எவ்வித அறிவிப்பும் இன்றி, அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. பகல் 12 மணிக்கு மீண்டும் மின் விநியோகம் துவங்கினாலும் கூட அரைமணி அல்லது ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை மீண்டும் மின் விநியோகம் ‘கட்’ ஆகி விடும். பகல் 1 மணி, பிற்பகல் 2 மணி, மாலை 6 மணி, இரவு 8 மணி என காலநேரம் இல்லாமல் அடிக்கடி அரைமணி நேரத்துக்கு ஒரு முறை மின்சாரம் விட்டு விட்டு வருகிறது.
தேர்வு நேரம் என்பதால், பள்ளி மாணவ, மாணவியர் பெரிதும் அவதிப்படுகின்றனர். அறிவிப்பின்றி மின்சாரம் ‘கட்’ ஆவது பற்றி மின் வாரியத்திடம் கேட்டால் முறையான பதில் இல்லை என அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கீழக்கரை நகராட்சித்தலைவர் பஷீர் அகமது கூறுகையில், “பாலையாறு பகுதியில்தான் மின் விநியோகம் அடிக்கடி துண்டாகிறது. தேர்தல் நேரம் என்பதால், திமுக அரசுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக விஷமிகள் வேண்டும் என்றே செய்யும் சூழ்ச்சி இது. அதிகாரிகள் உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து கீழக்கரை மின் வாரிய உதவிப் பொறியாளர் பால்ராஜிடம் கேட்ட போது, “மின் தடைக்குப் பிறகு, மீண்டும் மின்சாரம் விநியோகிக்கும் நேரத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் மின் நுகர்வு செய்கின்றனர். ஒரே நேரத்தில் மோட்டர், டிவி, மிக்சி என மின் சாதனப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், மின் நுகர்வு அதிகமாகி, ஜம்பர் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இந்தப் பிரச்னை விரைவில் சரி செய்யப்படும்,” என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.