Saturday, November 23, 2013

மதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது ! பல்லாண்டு கனவு நனவானது!



படங்கள்: பரக்கத் அலி
 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துபாய் சென்றடைந்தது.

இதற்கான துவக்க விழா நேற்று மதுரை விமான நிலையத்தில் நடந்தது. மதுரை சுங்கத்துறை கமிஷனர் பாஹ்கீம் அகமது, இணை கமிஷனர் மீனலோசனி, விமான நிலைய இயக்குநர் சங்கையா பாண்டியன், தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன், ஸ்பைஸ்ஜெட் விமான நிலைய சேவை அதிகாரி கமல்சிங்கோரானி, விற்பனை பிரிவு முதுநிலை அதிகாரி ராஜா, துணைப் பொது மேலாளர் ரஞ்சீவ், கமாண்டர் குருசரண்சிங், இமிகிரேஷன் அதிகாரி விக்டர், டிராவல் கிளப் தலைவர் முஸ்தபா, ஸ்பைஸ்ஜெட் மதுரை மேலாளர் பாலாஜி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். கேக் வெட்டப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து பயணிகளுக் கான முதல் டிக்கெட்டை ரத்தினவேலுக்கு சுங்கத்துறை கமிஷனர் பாஹ்கீம் அகமது மற்றும் மீனலோசனி வழங்கினர்.
முதல் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள், மதுரை டிராவல் கிளப், தொழில் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பலரும் வரவேற்றனர். இந்த விமானத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தூதுக்குழுவை சேர்ந்த 36 பேர் சென்றனர். துபாய், அபுதாபி, கெய்ரோ செல்லும் இந்த தூதுக்குழு சுற்றுலா வளர்ச்சி, உணவு பதப்படுத்துதல் குறித்த கருத்தரங்கில் பங்கேற்கிறது.
ஸ்பைஸ்ஜெட் சேவை குறித்து சங்கத்தின் முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன், டிராவல் கிளப் தலைவர் முஸ்தபா கூறுகையில்,

 தென் தமிழக மக்களின் கோரிக்கையை ஸ்பைஸ் ஜெட் ஆர்வத்துடன் நிறைவேற்றித்தருவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. துபாய்க்கு நேரடி விமானம் இயக்குவதன் மூலம் பணம், நேரம் பெருமளவு மிச்சமாகும். மேலும் தென் தமிழகத்தில் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் வளம் பெரும். ஏற்றுமதியும், வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றார்


விமானத்தில் பயணம் செய்து துபாய் வந்த கீழக்கரையை சேர்ந்த பரக்கத் அலி கூறுகையில், 
தென்மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் சேவை என்றார்.

3 comments:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.