Monday, November 25, 2013

தேங்காய் நார் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலை! கீழக்கரை பகுதியில் அமைக்க கோரிக்கை!



 மத்திய கயிறு வாரிய தலைவர் பி.பாலச்சந்திரன் நேற்று டெல்லியில் கூறியதாவது;-

“தேங்காய் நார் கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத பசுமை மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். முதல் கட்டமாக அடுத்த 6 மாதங்களில் 60 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தலா 10 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 6 தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.


தமிழகத்தில் இரு இடங்களில்
அவற்றில் இரு தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அமைக்க திட்டமிட்டு இருக்கிறோம். கேரளாவில் இரண்டு இடங்களிலும் கர்நாடகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் தலா ஒரு இடங்களிலும் இந்த தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு தொழிற்சாலையும் தலா ரூ.60 கோடி

தேங்காய் நார் கழிவுகள் மூலம் வர்த்தக ரீதியாக மின்சாரம் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். சுற்றுச்சூழலை மாசு படுத்தாத இந்த மின் உற்பத்தியில் இறங்க தனியார் தொழில் முனைவோர் முன்வரவேண்டும். அவர்களுக்கு தேவையான தொழில் நுட்பம் உள்பட இதர வழிகாட்டுதல் உதவிகளை வழங்க தயாராக இருக்கிறோம்.

தேங்காய் நாரில் இருந்து புதிய பொருட்களை உற்பத்தி செய்வதற்காக கொச்சி மற்றும் பெங்களூரில் இரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தேங்காய் நார் கழிவுகளை உரமாக பயன்படுத்தினால், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த முடியும். மண்ணை விட 8 மடங்கு அதிகமாக தண்ணீரை உறிஞ்சும் சக்தி இதற்கு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்று பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் நிறைந்து காணப்படுகிறது.லட்சக்கணக்கான தேங்காய்கள் இங்கிருந்து விற்பனைக்கு வெளியூர் செல்கின்றன.

ஆனால் இதுவரை அரசு சார்பில் தென்னை தொடர்பான தொழிற்சாலைகள் இப்பகுதியில்  இல்லை.தற்போது தமிழகத்தில் 2 இடங்களில் தேங்காய் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதால் இப்பகுதியின் எம்.பி எம்.எல்.ஏ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இத்தொழிற்சாலை அமைய முயற்சி எடுக்கலாம்.

மேலும் தனியாரும்  இதற்கான முயற்சியில் இறங்கினால் அதற்கு வேண்டிய உதவிகளை செய்வதாக அரசு அறிவித்திருப்பதால் கீழக்கரை பகுதியை சேர்ந்த தொழில் அதிபர்கள் இது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் மின்சாரத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் இந்த சூழ்நிலையில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் பெரும் வரவேற்பும் தொழில் வளர்ச்சியும் கிடைக்கும் என்பதில் மாற்றமில்லை




No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.