Thursday, February 16, 2012

இருபாலருக்கும் த‌னி ,த‌னி தேர்வு அறை !கீழக்கரை பள்ளி கோரிக்கை குறித்து அர‌சு ப‌ரிசீல‌னை.


கொடுக்கப்பட்ட மனு

அரசு தரப்பில் பதில் கடிதம்
பள்ளிகளில் அரசு பொது தேர்வின் போது மாணவர்களையும் ,மாணவிகளையும் ஒரே இடத்தில் தேர்வு எழுத செய்வதினால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க மாணவர்களையும்,மாணவிகளையும் தனி தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்க கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் மனு அனுப்பியிருந்தார்.

இது குறித்து அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியிருந்த‌ கோரிக்கை மனுவில் ......
அரசு பொது தேர்வுகளில் மாணவ மாணவியரை ஒரே இருக்கையில் அமர வைத்து தேர்வுகளை எழுத கடந்த முறை இருந்த அரசு நடைமுறைத்தியது.இவ்வாறு ஒரே இருக்கையில் மாணவ மாணவியரை தேர்வு எழுத வைப்பதால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதுடன் அவர்களின் தேர்ச்சி சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது மேலும் விரும்பதகாத விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் வருத்தமும் கவலையும் அடந்துள்ளனர் குறிப்பாக முஸ்லீம் கோஷா மாணவியர் அதிகமுள்ள எங்களை போன்ற பள்ளிகளில் அதிக அளவில் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது.இதுகுறித்து தமிழக அரசுக்கும் மாநில கல்வித்துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் பள்ளியின் சார்பாகவும் பெற்றோர்களின் சார்பாகவும் எழுத்து பூர்வமாக முறையிட்டும் எந்த தீர்வும் ஏற்படாமல் உள்ளது.

எனவே தாங்கள் இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு மாணவ ,மாணவியரின் நலனின் பாதிப்பு ஏற்படாதவாறு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இந்த‌ கோரிக்கை குறித்து ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ க‌ல்வி அலுவ‌ல‌ருக்கு, ந‌ரேஷ் (இணை இய‌க்குந‌ர் ,அர‌சு தேர்வுக‌ள் இய‌க்க‌க‌ம்) இந்த‌ ம‌னு குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ உத்த‌ர‌விட்டுள்ளார்.

அரசின் க‌டித‌ ந‌க‌ல் மேலே த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.

இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம் கூறுகையில்,
இந்த கோரிக்கை குறிந்து நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறோம்.இது வரை நல்ல பதில் கிடைக்காத சூழ்நிலையில் தற்போது தான் மாநில கல்வித்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்விதுறைக்கு அறிவுறுத்தியுள்ளது. விரைவில் இதற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

Wednesday, February 15, 2012

மாநில அளவில் கீழக்கரை மாணவி மூன்றாம் இடம் !



கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த மஹ்தூமியா உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி முபாரக் நிஷா உலக திருக்குறள் பேரவை நடத்திய திருக்குறள் மனனம் செய்து எழுதும் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்று கேடயம் பரிசாக பெற்றார்.

இவரை பள்ளி தாளாளர் ஹமீது சுல்தான்,தலைமை ஆசிரியர் கிருஸ்ணவேனி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

17-02-12(வெள்ளிக்கிழமை)கீழக்கரையில் வேலை வாய்ப்பு முகாம் !ச‌ம்பளம் மற்றும் விப‌ர‌ங்க‌ள்!



கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை மறுதினம் 17-02-12ல் டிப்ளமா,ஐடிஐ,+2 படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

மேலே நோட்டீசில் குறிப்பிட்டுள்ள தகுதிகள் உள்ள ஆண்கள் தங்களது விண்ணப்பங்களோடு கல்வி மற்றும் வயது சான்றிதழ்களோடு 17-02-12 வெள்ளிக்கிழமை நேரில் செல்ல‌ வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்க‌ள் :009500048105,9790015262,04567 - 244392

சேது எக்ஸ்பிரஸ் தப்பியது !சென்னை அருகே தண்டவாளத்தில் விரிசல் !



விபத்தில் இருந்து தப்பிய சேது எக்ஸ்பிரஸ். அடுத்த படம்: தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரி செய்யப்படுகிறது.
மறைமலைநகர் சாமியார் கேட் அருகே நேற்று காலையில் கேங் மேன் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். 6.30 மணியளவில் தண்டவாளத்தின் இணைப்பு பகுதியில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தார். அந்த நேரத்தில் ராமநாதபுரத்தில் இருந்து சேது எக்ஸ்பிரஸ் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், கையில் வைத்திருந்த சிவப்பு கொடியை காட்டி ரயிலை நிறுத்தி னார்.

உடனே தாம்பரம், மறைமலைநகர் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு, விரிசல் சரி செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன. நேற்று மதியம் 30 கி.மீ வேகத்தில் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டன. மாலையில் தண்டவாளம் முழு வதுமாக சரி செய்யப்பட்டு வழக்கம் போல் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டன.

இதனால் தென் மாவட்டத்தில் இருந்து வந்த அனைத்து ரயில்கள், புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. அரசு, தனியார் ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். கடந்த 3 வாரங்க ளுக்கு முன்பு மறை மலைநகரிலேயே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட் டது குறிப்பிடத்தக் கது.
நன்றி : தினகரன்

Tuesday, February 14, 2012

போலி பெயரில் விஷமம்! காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்ப‌தாக‌ அறிவிப்பு !


இன்ஸ்பெக்டர் இளங்கோவன்


தொலைபேசியில் மிரட்டல்,செல்போனில் மிரட்டல் என்றெல்லாம் புகார்கள் கூறப்படும் தற்போது சமூக இணையதளங்களில் போலி முகவரிகளில் மிரட்டுவதாக பல்வேறு இடங்களில் குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கீழக்கரையை சேர்ந்தவர் முகம்மது சாலிஹ் என்ற கீழை இளையவன் சமூக சேவையில் ஆர்வமுள்ள இவர் மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் பொருளாளராக இருந்து வந்தார் சில நாட்களுக்கு முன் அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் கூறியதாவது,

தற்சமயம் சமூக வலைதளத்தில், எந்தவித முகவரியும் இல்லாத சில விசமிகள், ஊர் நலனில் திடீர் அக்கறை கொண்டு உண்மைகள் சொல்ல முனைந்திருப்பதாக கூறிக் கொண்டு, என்னை பற்றி தவறான நச்சுக் கருத்துக்களை கூறிக் கொண்டு வலம் வருவதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இது போன்று முகவரி இல்லாமல் குறை கூறித்திரியும் இவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தாங்களும் முயற்சிக்க வேண்டுகிறேன். இது போன்ற செய்திகளை மறுபடியும், இவர்கள் வெளியிட்டால், 'சைபர் கிரைம்' போலீசாரிடம் முறைப்படி புகார் தெரிவித்து, அந்த மர்ம ஆசாமிகள் பயன்படுத்தும் அவர்களுடைய IP முகவரிகள், புதிய தொழில் நுட்பம் மூலம் கண்டு பிடிக்கப்படும் போது, அவர்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்ற மாதம் இதே போல் எழுந்த வேறு ஒரு குற்றச்சாட்டு குறித்து கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது,
இது தொடர்பாக இதுவரை புகார்கள் எதுவும் வரவில்லை மேலும் இது போன்ற‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ள் மீது க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்கப்ப‌டும். இது தொட‌ர்பான‌ புகார்க‌ளை எங்க‌ளிட‌ம் அளிக்க‌லாம் அந்த புகார்கள் உரிய‌ முறையில் சைப‌ர் கிரைம் பிரிவுக்கு அனுப்ப‌ப்ப‌ட்டு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ த‌யாராக‌ இருக்கிறோம் என்றவாறு அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

கீழக்கரை ஜாமியா நகர் கழிவு நீர் பிரச்சனை!கழிவு நீர் தொட்டி அமைக்க ஜமாத் சார்பில் இடம் தரப்படுமா?




கீழக்கரை தெற்கு தெரு ஜாமியா நகர் அருகில் சாலைமுழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள்.

சுகாதாரம் கேடு நிலவும் அவ்விடத்தை 2முறைக்கு மேல் நேரில் சென்று பார்வையிட்ட நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா,
இதற்கு
நிரந்தர தீர்வு(கழிவு நீர் தொட்டி அமைக்க) காண்பதற்கு 5 சென்ட் இடம் தேவைபடுகிறது.இடத்தை பெறுவதற்காக தெற்குதெரு ஜமாத்தாரிடம் பேசி வருகிறோம்.விரைவில் இப்பிரச்சனையை தீர்ப்போம் என்று சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் கூறியிருந்தார்.
ஆனால் இன்று வரை அப்பகுதியில் கழிவு நீர் சாலையில் ஆறு போல் ஒடிக்கொண்டிருக்கிறது.அவ்வப்போது தற்காலிக தீர்வாக உறிஞ்சு குழாய் மூலம் எடுக்கப்படுகிறது .


தெற்குதெரு ஜமாத் செயலாளர் பவுசுல் அலி ரஹ்மான்

தெற்கு தெரு ஜமாத் சார்பில் கழிவு நீர் தொட்டி அமைக்க இட‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌டாத‌து ஏன் என்று தெற்குதெரு ஜமாத் செயலாளர் பவுசுல் அலி தரப்பில் கேட்ட போது ,

ஏற்கெனவே தெற்குதெரு ஜமாத்தால் தீர்மானம் போடப்பட்டு ஜமாத்துக்கு சொந்தமான‌ பகுதியில் வழங்கப்பட்ட‌ இடத்தில் க‌ழிவு நீர் தொட்டி உள்ளது. ஆனால் நகராட்சி அதை முறையாக‌ உப‌யோக‌ம் செய்யாமல் த‌ற்போது வேறு ப‌குதியில் இட‌ம் கேட்கிறார்கள்

.மேலும் சில நாட்களுக்கு முன் க‌ழிவுநீர் நீர் ஓடும் இட‌த்தை பார்வையிட்ட‌ ந‌க‌ராட்சி க‌மிஷ‌ன‌ர் முஜிபுர் ர‌ஹ்மான் "ஏற்கென‌வே இருக்கும் இட‌த்தை ப‌ய‌ன் ப‌டுத்த‌லாமே மேலும் புதிய‌தாக‌ இட‌த்தை பெற்று க‌ழிவு நீர் தொட்டி க‌ட்டுவ‌த‌ற்கு ந‌கராட்சியில் நிதி ஆதார‌ம் இல்லை' என்று அந்த‌ இட‌த்தில் தெரிவித்தாக அறிந்தோம்.

மேலும் இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு தெற்குதெரு ஜமாத் சார்பில் மாவட்ட கலெக்டரிடமும்,கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திடமும் வலியுறுத்தி உள்ளோம்.மேலும் கழிவு நீர் அகற்றுவது சம்பந்தமாக எம்.எம்.கே.காசிம் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அதற்கான வழக்கும் நடைபெற்று வருகிறது.சூழ்நிலை இப்ப‌டி இருக்கும் போது தெற்கு தெரு ஜ‌மாத் இட‌ம் த‌ர‌வில்லை அத‌னால்தான் ஜாமியா நக‌ர் க‌ழிவுநீர் பிர‌ச்சனை தீரவில்லை என்று செய்தி ப‌ர‌ப்பப்ப‌டுகிற‌து. ம‌க்க‌ள் பிர‌ச்ச‌னைக‌ளை தீர்க்க தெற்குதெரு ஜமாத் என்றென்றும் துணை நிற்கும். இவ்வாறு அவர் தரப்பில் கூறப்பட்டது.

Monday, February 13, 2012

"இருட்டு ஆட்சியை கண்டிக்கிறோம்"கீழ‌க்க‌ரையில் மின் வெட்டை கண்டித்து ஆர்ப்ப‌ட்ட‌த்தில் கோஷ‌ம் !






கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே இன்று காலை 11 ம‌ணிய‌ள‌வில் மின் வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் ந‌டைபெற்ற‌து.


தமிழகம் முழுவதும் மின்வெட்டு நிலவி வரும் சூழ்நிலையில் கீழக்கரை நாளொன்றுக்கு காலையில்,இரவிலுமாக 10மணி நேரத்திற்கும் அதிகமாக மின் தடை ஏற்படுத்தப்படுகிறது.

இதனால் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்து பொது மக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.தொடர் மின் வெட்டால் ரைஸ் மில்,லேத் பட்டரை ,உள்ளிட்ட பல் வேறு சிறு தொழில்களும் முடங்கியுள்ளது.இதை கண்டித்து 35க்கு மேற்ப்பட்ட பல்வேறு அமைப்புகளும் இணைந்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இன்று காலை புதிய பேருந்து நிலையம் அருகே இன்று காலை 11 ம‌ணிய‌ள‌வில் மின் வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற‌து.

"இருட்டு ஆட்சியை க‌ண்டிக்கிறோம் " என்று கோஷ‌ம் எழுப்ப‌ப்ப‌ட்டு ஆர்பாட்ட‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.மின் த‌டை க‌ண்டித்து ப‌ல‌ரும் பேசின‌ர்.
இதில் திமுக‌,காங்கிர‌ஸ் ,எஸ்டிபிஐ,த‌முமுக‌,இந்திய‌ த‌வ்ஹீத் ஜ‌மாத் உள்ப‌ட‌ அதிமுக‌ த‌விர‌ அனைத்து க‌ட்சியின‌ரும், இயக்கங்கள் ம‌ற்றும் க‌வுன்சில‌ர்க‌ள் பொதும‌க்க‌ள் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

நீண்ட‌ கால‌த்துக்கு பிற‌கு கீழ‌க்க‌ரையில் ந‌டைபெறும் ஆர்ப்பாட்ட‌த்தில் திர‌ளாக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொண்ட‌தாக‌ அப்ப‌குதியில் உள்ளோர் கூறின‌ர்.

Sunday, February 12, 2012

கீழ‌க்க‌ரையில் பழுதடைந்த குழாய்களால் சாலையில் வீணாகும் குடிநீர் !



ப‌ழுத‌டைந்த‌ குடிநீர் குழாயிலிருந்து த‌ண்ணீர் வீணாக‌ வெளியேறுவ‌தையும்,சில‌ர் ரப்ப‌ர் ட‌ய‌ரால் க‌ட்டி த‌ண்ணீரை வெளியேறாம‌ல் இருக்க‌ முய‌ற்சித்துள்ள‌தையும் காணலாம்
கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் பெரும்பாலான‌ தெருக்க‌ளில் உள்ள பொதுகுழாய் மூலம் குடிநீர் விநியோக‌ம் செய்ய‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. இவைக‌ள் முறையான‌ ப‌ராம‌ரிப்பு இல்லாத‌தால் சில‌ இட‌ங்க‌ளில் குடி நீர் குழாய்கள் ப‌ழுத‌டைந்து குடி த‌ண்ணீர் சாலையில் ஓடி வீணாகிற‌து.

இது குறித்து அஹ‌ம‌து என்பவ‌ர் கூறுகையில் ,

ஒருபுறம் கீழ‌க்கரையில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஒரு குட‌ம் ரூபாய் 5க்கு வாங்க‌க்கூடிய‌ சூழ்நிலை நில‌வுகிற‌து. ம‌றுபுற‌ம் இது போல் குடிநீர் வீண‌டிக்க‌ப்ப‌டுகிற‌து.கீழ‌க்க‌ரையில் உள்ள அனைத்து பொது குடிநீர் குழாய்க‌ளை முறையாக‌ ப‌ராம‌ரிக்க‌ வேண்டும்.

மேலும் சில‌ நேர‌ங்க‌ளில் வாக‌ன‌ங்க‌ளால் குடிநீர் குழாய்க‌ள் சேத‌ப்ப‌டுத்த‌ப்படுகிற‌து.சேத‌ப்ப‌டுத்துப‌வ‌ர்க‌ள் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும். சில‌ ச‌ம‌யம் ப‌ழுத‌டையும் போது நாங்க‌ளே ச‌ரி செய்கிறோம். நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் சொன்னால் உடனே வந்து சரி செய்வதில்லை எனவே ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ந‌ட‌வ‌டிக்கை எடுத்து குடித‌ண்ணீர் வீணாகாம‌ல் பாதுகாக்க‌ வேண்டும் என்றார்.
ப‌ழுத‌டைந்த‌ குடிநீர் குழாயிலிருந்து த‌ண்ணீர் வீணாக‌ வெளியேறுவ‌தையும்,சில‌ர் ரப்ப‌ர் ட‌ய‌ரால் க‌ட்டி த‌ண்ணீரை வெளியேறாம‌ல் இருக்க‌ முய‌ற்சித்துள்ள‌தையும் காணலாம்.

இது குறித்து கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியாவிடம் கேட்ட போது ,

கீழக்கரை முழுவதும் பழுதடைந்த குடிநீர் குழாய்கள் விரைவில் சரி செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்படும்.

எம்பிஏ ப‌ட்டதாரியான கீழக்கரையின் முதல் சப்- இன்ஸ்பெக்டர் பயிற்சி நிறைவு!


முகம்மது அனஸ்

யிற்சியின் போது..

கீழக்கரையில்... ழையம்

கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்னை புதுக்கல்லூரியில் 2005 - 2008 ஆண்டுகளில் பி.காம் பட்டபடிப்பை முடித்த இவர் தொடர்ந்து மேற்படிப்பான எம்.பி.ஏ. 2008 - 2010 வரை கீழக்கரை சதக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். இவர் அரசு தேர்வு எழுதி சப் - இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார்.கடந்த ஒரு ஆண்டாக சப் இன்ஸ்பெக்டரக்கு உண்டான‌ பல் வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். வரும் 15ந்தேதி இவரின் பயிற்சி நிறைவு பெறுகிறது.

சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சி நிறைவு விழா முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது.இதில் கீழக்கரையை சேர்ந்த சப்-இன்ஸ்பெடராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனஸ் தனது பயிற்சியை நிறைவு செய்கிறார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அனசிடம் கீழக்கரை டைம்ஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து பயிற்சி நிறைவு குறித்து கேட்ட போது,

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.எல்லா புகழும் இறைவனுக்கே.இப்பணிக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்தது எனது பெற்றோர்தான.மேலும் வாழ்த்துக்களையும்,ஆதரவையும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இது தொட‌ர்பாக சென்ற வருடம் வெளியிட‌ப்ப‌ட்ட‌ முந்தைய‌ செய்தி...
http://keelakaraitimes.blogspot.com/2011/03/blog-post_6210.html

நாளை(13-02-12) கீழக்கரையில் 36 அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்ட‌ம்!


நோட்டீஸ் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து

நாளை(13-02-12)கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே காலை 11 ம‌ணிய‌ள‌வில் மின் வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் மின்வெட்டு நிலவி வரும் சூழ்நிலையில் கீழக்கரை நாளொன்றுக்கு காலையில்,இரவிலுமாக 10மணி நேரத்திற்கும் அதிகமாக மின் தடை ஏற்படுத்தப்படுகிறது.

இதனால் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்து பொது மக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.தொடர் மின் வெட்டால் ரைஸ் மில்,லேத் பட்டரை ,உள்ளிட்ட பல் வேறு சிறு தொழில்களும் முடங்கியுள்ளது.

பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தா விட்டால் அவ‌ர்களின் மின் இணைப்பை துண்டிப்பதில் காட்டும் அக்கறையை அரசாங்கமானது பொதுமக்களுக்கு மின்சாரம் சீராக விநியோகம் செய்வதிலும் காட்ட வேண்டும்.

இந்த மின் வெட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் உள்ளக்குமுறலின் எதிரொலியாக கீழக்கரையில் 35க்கு மேற்ப்பட்ட பல்வேறு அமைப்புகளும் இணைந்து நாளை(13-02-12)புதிய பேருந்து நிலையம் அருகே காலை 11 ம‌ணிய‌ள‌வில் மின் வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட‌த்தில் கீழ‌க்க‌ரையில் உள்ள‌ அனைவ‌ரும் க‌ல‌ந்து த‌ங்க‌ள‌து க‌ண்ட‌ன‌த்தை ப‌திவு செய்ய‌ வேண்டும் என‌ அழைப்பு விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம்அர‌சாங்க‌த்தின் செவிக‌ளில் கீழ‌க்க‌ரை ம‌க்க‌ளின் க‌ண்ட‌ன‌ குர‌ல்க‌ள் ஓங்கி ஒலிக்க‌ட்டும்.

ஆர்ப்ப‌ட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்ளும் அமைப்புக‌ள்

Saturday, February 11, 2012

கீழ‌க்கரை வளர்ச்சிக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு !ந‌க‌ராட்சி கூட்ட‌த்தில் தீர்மானம்!



பைல் ப‌ட‌ம் (பழைய படம்)


ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள‌ பணிகளை நிறைவேற்றுவதற்காக தீர்மானம், கீழக்கரை நகராட்சி அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.


கீழக்கரை நகராட்சி அவசர கூட்டம் தலைவர் ராபியத்துல் காதரியா தலைமையில் துணைத்தலைவர் ஹாஜா முகைதீன், கமிஷனர் முஜிபுர் ரஹ்மான், மேற்பார்வையாளர் மதுசூதனன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம் பகுதிகளில் குடிநீர் குழாய் புதுப்பித்தல், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உர கிடங்கிற்கு சுற்றுசுவர் கட்டுதல், உர கிடங்கிற்கு செல்லும் வழிகளில் சிமென்ட் சாலை அமைத்தல், புதிய 16 மீட்டர் உயர்மின் கோபுர விளக்கு அமைத்தல் மற்றும் வடக்குத்தெரு, சிஎஸ்ஐ சர்ச் முதல் பாபு கிளினிக் வரையும், வள்ளல் சீதக்காதி சாலை மற்றும் கிழக்குத்தெரு ரோடு பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டுதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Friday, February 10, 2012

வெள்ளிக்கிழமை நகர்மன்ற கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் புறக்கணிப்பு !



இன்று கீழக்கரை நகராட்சி கூட்டம் நடைபெறுகிறது.



இந்நிலையில் க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ம‌ற்றும் துணை த‌லைவ‌ருக்கு அனுப்பியுள்ள‌ ம‌னுவில் கூறியிருப்ப‌தாவ‌து ,


கடந்த நகர் மன்ற கூட்டங்களில் வெள்ளிக்கிழமை நகர்மன்ற கூட்டம் நடத்த வேண்டாம் என்று பல நகர்மன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து இருந்தார்கள். இதை நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்த போது பலர் இதை ஆதரித்தார்கள். கடந்த நகர்மன்ற சாதரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்திய போதும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


தற்போது நடைபெறும் அவசர கூட்டமும் உரிய கால அவகாசம் இருந்தும் நகர்மன்ற உறுப்பினர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் வெள்ளிக்கிழமை நடத்தப்படுவதால் இக்கூட்டத்தில் நான் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்கின்றேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு அவ‌ர் குறிப்பிடுள்ளார்

சதக் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு செல்போன் தொடர்பான‌ பயிற்சி !





கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாடு மையம் மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு சார்பாக மின்னனுவியல் மற்றும் தொடர்பியல் துறை இறுதியாண்டு மாணவ ,மாணவிகளுக்கு மூன்று நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் கல்லூரி புதிய கருத்தரங்கு கூட்டத்தில் நடைபெற்றது.


இதில் கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கினைப்பாளர் சேக் தாவுத் வரவேற்றார். மேலும் செல்போன் ட்ரைய்னர் மரியதாஸ் செல்போன் கையாளுமுறை,செல்போன் சர்விஸ் முறை,செய்முறை போன்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு நடத்தினார்.இதில் 60க்கும் மேற்பட்ட இறுதியாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சேக் தாவுத் செய்திருந்தார்.

கீழக்கரையில் காவேரி குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் அவலம் !



கீழக்கரை நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதால் பொது மக்கள் பயன்படுத்த முடியாமல் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.இதனால் பல வருடங்களாக தனியார்களின் மூலம் சப்ளை செய்யப்படும் குடிநீரை விலைக்கு வாங்கும் அவல நிலை இன்றும் தொடர்கிறது. ஒரு குடம் ரூ 5க்கு விற்கப்படுகிறது.


இது குறித்து 21வது வார்டு ஜெயபிராகஷ் கூறுகையில் , ராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு கடந்த ஆட்சியில் பல கோடி ரூபாய் செலவில் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.அதை கீழக்கரை மக்கள் பயன் படுத்த முடியாத சூழ் நிலை உள்ளது. என்றார் .

இது குறித்து அவர் நகராட்சி கமிஷனரிடம் கொடுத்துள்ள மனுவில் , கீழக்கரையில் 39 வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்ட குடிநீர் பைப்புகள் தற்போது பழுதடைந்து விட்டதால் அரசின் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது.எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய பைப்புகளை பதிக்க வேண்டும்.

இதே போல் கீழக்கரையில் செயல்பட்டு வரும் செந்தமிழ்,அன்பு,தோழிகள்,ரோஜா வனம் உள்ளிட்ட மகளிர் அமைப்புகளும் மனு கொடுத்துள்ளன.

Thursday, February 9, 2012

கீழக்கரையில் 10 மணி நேரம் மின்சார தடை !பொது மக்கள் கடும் எதிர்ப்பு !



தமிழக‌ம் முழுவதும் பல மணி நேரத்திற்க்கும் மின்சார தடை நீடித்து வருகிறது. இநிலையில் கீழக்கரையில் அதிகமாக கடந்த சில நாட்களாக 10 மணி நேரம் மின் தடை ஏற்படுத்தப்படுகிறது. இரவில் நான்கு மணி நேரம் ,காலை ,பகல் நேரங்களில் 6 மணி நேரம் என்று 10 மணி நேரம் மின் தடை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வ‌ருகின்ற‌ன‌ர்.இது குறித்து பொதுமக்கள் கடும் எதிர்பையும்,கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.


இது குறித்து ர‌ஹ்மான் என்பவ‌ர் கூறுகையில்,


மாண‌வ‌ர்க‌ளுக்கு பொது தேர்வுக‌ள் நெருக்க‌த்தில் இது போன்ற‌ மின்த‌டை மிக‌வும் க‌ண்டிக்கத்த‌க்க‌து.
மேலும் பல‌ வீடுகளில் யுபிஎஸ் சாதனம் ,கேஸ் மூலம் இயங்கும் சாதனங்கள் ,பேட்டரி விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்தி மின் வெட்டை சமாளித்து வருகிறார்க‌ள்.மேலும் தற்போது மின்சாரம் சேமிக்கும் யுபிஎஸ் போன்ற‌ சாத‌ன‌ங்க‌ளை ‌ ரூ20000 முத‌ல் ரூ25000 வ‌ரை விற்கிறார்க‌ள்.எத்தனை பேர் இவ்வளவு விலை கொடுத்து வாங்கமுடியும். குறைந்த பட்சம் மின் இலாகா இர‌வு நேர‌ங்க‌ளில் மின் வெட்டை த‌விர்க்க‌ வேண்டும்.இது தொட‌ர்ந்தால் வீதிக்கு வ‌ந்து ம‌க்க‌ள் போராடுவார்க‌ள் என்ப‌து நிச்ச‌ய‌ம் என்றார்

கீழக்கரை நலனை பாதிக்கும் தலைவர் - துணை தலைவர் மோதல் போக்கு!


நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரிய

துணை தலைவர் ஹாஜா முகைதீன்
கீழக்கரை நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோருக்கிடையே அதிகரித்து வரும் மோதல் போக்கினால் கீழக்கரை நகரின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கீழக்கரை நலனை கருத்தில் கொண்டு இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரையில் சுகாதாரம்,குடிநீர் உள்பட பல் வேறு மக்கள் பிரச்சனைகள் நீண்ட காலமாக‌ தீர்க்கபடாமல் உள்ளது இந்நிலையில் கீழக்கரை முழுவதும் உள்ள கழிவு நீர் கால்வாய்களை தூர் வாரி சுத்தப்படுத்தியது, கீழ‌க்க‌ரையில் க‌ட‌ற்க‌ரை பூங்கா அமைப்ப‌து,குப்பை கொட்டுவ‌த‌ற்கான‌ இடத்தில் சுற்று சுவர் கட்டுவது தொட‌ர்பாக‌ தில்லையேந்த‌ல் ப‌ஞ்சாய‌த்தாரிட‌ம் சுமூக‌ தீர்வு,வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலையை சீர‌மைப்ப‌து தொட‌ர்பாக‌ நெடுஞ்சாலைத்துறையை வ‌லியுறுத்தியது என தற்போதைய நகராட்சி நிர்வாகத்தின் பல்வேறு விரைவான நடவடிக்கைகள் கீழக்கரை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் அனைவ‌ரையும் வேத‌னை ப‌ட‌ வைக்கும் அளவுக்கு த‌ற்போது நில‌வி வ‌ரும் த‌லைவர் ம‌ற்றும் துணை த‌லைவ‌ரின் மோத‌ல் போக்கு உள்ளது.

ம‌றைமுக‌மாக நிலவி வ‌ந்த‌ மோத‌ல் போக்கின் உச்ச கட்டமாக கடந்த ந‌க‌ராட்சி ம‌ன்ற‌ கூட்ட‌த்தில் வெளிப்ப‌டையாக‌ இரு த‌ர‌ப்பின‌ரும் வாக்கு வாத‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.

இந்த ஒற்றிமையின்மை காரணமாக நகராட்சி கூட்டங்களில் திட்டங்களை அங்கீகரித்து தீர்மானங்கள் நிறைவேற்றுவ‌தில் சிரமம் ஏற்படும் இதன் காரணமாக கீழக்கரையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

தற்போது தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் சிறப்பு நிதி ,தானே புயல் நிதி என்று சுமார் ரூபாய் 2.5 கோடி கீழக்கரை நகராட்சி நிர்வாகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது போன்ற நிதியை கொண்டு கீழக்கரை நகர் மக்களுக்கு பயன் தரும் விதமாக செயல்படுத்த வேண்டும்.

கீழக்கரை நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீனிடம் கேட்ட போது ,

பிரச்சனைக்கு காரணம் நகராட்சி நிர்வாகத்தில் நகராட்சி தலைவரின் கணவர் ரிஸ்வானின் தலையீடுதான் நிர்வாகத்தில் அவர் குறுக்கீடு இல்லாமல் நகராட்சி தலைவர் சுயமாக செயல்பட வேண்டும் என்றார்

இது குறித்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியவிடம் கேட்ட போது ,

கணவர் துணையுடன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில் என்ன தவறு உள்ளது மேலும் எனது கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை.ஆனால் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் நகராட்சி துணை தலைவர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் இதை தவிர்க்க வேண்டும் என்றார்.

கீழக்கரை நலனை கருத்தில் கொண்டு இரு தரப்பும் ஒற்றுமையாக செயல்பட்டு கீழக்கரை நகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.

Wednesday, February 8, 2012

ராமநாதபுரம் அருகே 1,600 மெகாவாட் திறனில் புதிய அனல் மின்நிலையம்



ராமாநதபுரம் அருகே உப்பூர் சமீபத்தில் ஆயிரத்து 600 மெகாவாட் திறன் கொ ண்ட அனல் மின்நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது என வழுது�ர் இயற்கை எரிவாயு நிலைய மேற் பார்வை பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட் டம், கீழக்கரையில் உள்ள முகமது சதக் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்பாக தேசிய அளவிலான தொழில்நுட்ப கலந்துரையாடல் நடந்தது. கல்லூரி முதல்வர் முகமது ஜகாபர் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவ ட்டம், வழுதூர் இயற்கை எரிவாயு மேற்பார் வை பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் ராஜா காந்தி, மும்பை கிரா ம்டன் கிரிவ்ஸ் மேலாளர் ஜெயபாலன், கல்லு�ரி இயக்குனர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறைத்தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை சேர்ந்த 25 கல்லூரிகளும், தமிழகத்தில் 40 கல்லூரிகளும் பங்களித்து 65 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
வழுதூர் இயற்கை எரி வாயு நிலைய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் பேசுகையில், “ உப்பூரில் ஆயிரத்து 200 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு நடைபெறுகிறது. சுமார் ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் இந்த அன ல்மின் நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் எரிவாயு அதிகமாக கிடைத்த போதிலும் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. இதனால், 3வது யூனிட் துவங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

இத‌ன் மூல‌ம் ராமாநாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்திற்கான‌ மின்சார‌ தேவை ஓர‌ள‌வு பூர்த்தியாகும் என‌ கூற‌ப்ப‌டுகிறது.

இது குறித்து மின்சார துறை சம்பந்தபட்டவரிடம் கேட்ட‌ போது,

மின்சார தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய ராமநாதபுரம் மாவ‌ட்ட‌த்துக்கு நாளொன்றுக்கு 100 மெகவாட் தேவை ஆனால் த‌ற்போது வழங்கப்படுது 40 மெகாவாட்தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கென‌வே நாளொன்றுக்கு 400 மெக‌வாட்க்கும் குறையாத அளவில் உற்ப‌த்தியாகிறது. உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் உற்பத்தி செய்யும் மாவட்டத்துக்கோ அல்லது மாநிலத்துக்கோ கொடுக்கப்பவதில்லை பல இடங்களுக்கும்(வேறு மாவட்டம்,வேறு மாநிலம்) மின்சார‌ ப‌கிர்ந்து கொடுக்க‌ப்ப‌டும்.அதனால் தான் ஓரளவுக்கு தீரும் என்று சொல்லப்படுகிறது.மேலும் இந்த‌ புதிய‌ அன‌ல் தொட‌ங்கி செய்ல‌ப‌ட‌ சுமார் 4 வ‌ருட‌ கால‌ம் ஆகும் இவ்வாறு தெரிவித்தார்க‌ள்.

Tuesday, February 7, 2012

இளைஞ‌ர் மீது தாக்குதல்! பெரியபட்டிணத்தில் பஸ் சிறை பிடிப்பு




ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் அரசு பஸ் பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்டது.

ராமநாதபுரத்திலிருந்து பெரியபட்டிணம் செல்லும் அரசு பஸ்ஸில் பயணிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பெரியபட்டிணத்தை சேர்ந்த இளைஞர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக பெரிய பட்டிணம் பஸ் நிலையத்தில் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது.


இதையறிந்த கீழக்கரை டிஎஸ்பி முனியப்பன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமரசம் செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்பே பஸ்சை விடுவித்தனர்.

Monday, February 6, 2012

அநாகரீகமாக பேசியதாக நகராட்சி அலுவலர் மீது கலெக்டரிடம் புகார் !




அநாகரீகமாக பேசியதாக ந‌க‌ராட்சி அலுவ‌ல‌ர் மீது ந‌ட‌வடிக்கை எடுக்க‌ கோரி க‌லெக்ட‌ரிடம் 18வ‌து வார்டு க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ர் அருண்ராயிட‌ம் ம‌னு கொடுத்துள்ளார்.

அம்ம‌னுவில் கூறியிருப்ப‌தாவ‌து,

4.02.2012-ம் தேதி காலை 11 மணியளவில் கீழக்கரை நகராட்சி 5வது வார்டு பகுதியில் பொது சுகாதாரம் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வு தேவை என குப்பைகளை தெருக்களில் போடாமல் பெரிய பிளாஸ்டிக் டிரம் வைத்து அதில் குப்பைகளை போடவும் அதில் சேரும் குப்பைகளை தினசரி நகராட்சி பொது சுகாதார வாகனம் எடுத்துக் செல்லவும் கீழக்கரை நகராட்சி 5வது வார்டு கவுன்சிலர் தன் சொந்த செலவில் பெரிய 6 பிளாஸ்டிக் டிரம் வாங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது பல கவுன்சிலர்கள் கலந்து கொண்டார்கள்.
5வது வார்டு பருத்திக்காரத் தெருவில் வீட்டின் அருகே பல நாட்களாக அள்ளாத குப்பைகளால் துர்நாற்றம் அதிகமாக இருந்தது. அங்கு வந்த கீழக்கரை நகராட்சி துப்பர‌வு பணி மேற்பார்வையாளர் மனோகரிடம் வீதியில் குப்பைகளை அள்ளாமல் துர்நாற்றம் வீசும் அளவுக்கு உள்ளதே இப்பகுதி மக்கள் மாசுகட்டுப்பாடு வாரியத்திற்கு புகார் செய்தால் நம் நகராட்சிக்கு அவப்பெயர் என்ற அடிப்படையில் கேட்டேன்.

துப்பரவு பணி மேற்பார்வையாளர் மனோகரன் அநாகரிகமான முறையில் "மாசு கட்டுப்பாட்டு வாரியம் போங்கள், எந்த மாமா கட்டுபாட்டு வாரியம்" போங்கள் எங்கு புகார் செய்தால் எனக்கென்ன அதை நான் பார்த்துக் கொள்கின்றேன் உங்க வேலையை பாருங்க என அநாகரிகமான முறையில் மாசுக் கட்டுபாட்டு வாரிய நிர்வாகத்தை தவறாக பேசினார். நகர்மன்ற கவுன்சிலரிடம் தவறாக பேசும் இவர் பொது மக்களிடம் எப்படி பேசுவார்? பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் இவரை வேறு நகராட்சிக்கு பணிமாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். சொந்த ஊரில் 25 வருடங்கள் தொடர்ந்து பணிபுரிவதால் இவர்களின் செயல்பாடுகள் முற்றிலும் பொறுப்பற்ற முறையில் இருந்து வருகின்றது என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்

கீழக்கரை கல்லூரிகள் இணைந்து நடத்திய மீலாது விழா !








கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி ,முகம்மது சதக் பொறியியல் கல்லூரி,செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,முகம்மது சதக் ஐ.டி.ஐ ,செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி,முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் பள்ளி ஆகியவை நடத்திய மீலாது விழா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


இவ்விழாவிற்கு முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமை தாங்கினார்.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்றார்.


கல்லூரி தாளாளர் யூசுப் சாகிப்,இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா,முன்னிலை வகித்தனர். தொழில் வர்த்தக சங்க தலைவர் அன்வர்தீன்,யூசுப் சுலைகா மருத்துவமனை இயக்குநர் செய்யது அப்துல் காதர்,கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ், முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கரும்புகடை ஜீம்மாப்பள்ளி இமாம் அப்துல் அஜீஸ் நபிகளாரின் எளிமையான வாழ்க்கை குறித்து விரிவாக எடுத்து கூறினார்.


மேலும் நிகழ்ச்சியில் சமூக நல இயக்க அமானுல்லா,செயலாளர் தங்கம் ராதாகிருஸ்ணன் உள்ளிட்ட பலர் பங்கு பெற்றனர்

கீழக்கரை உள்ளிட்ட மன்னார் வளைகுடாவில் எரிபொருள் கண்டுபிடிப்பு!கல்லூரி நிகழ்ச்சியில் தகவல் !



கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஒரு நாள் கடல் சார் பயிற்சி பட்டறை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கடல் சார் துறை பல்கலைகழக தென் மண்டல இயக்குநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய போது....

இந்திய கடலில் ஆழம் குறைவாக உள்ளதால் நீர் வழி போக்குவரத்து குறைவாக உள்ளது இருப்பினும் ஒரு ஆண்டுக்கு 1 பில்லியண் அளவு சரக்குகள் கொன்டு செல்லப்படுகிறது. மேலும் வரும் காலங்களில் பெட்ரோல்,டீசலை நம்பி இருக்க முடியாது.மும்பை,டில்லி போன்ற ந‌க‌ர‌ங்க‌ளில் வாக‌ன‌ங்க‌ளில் எரிபொருள்(க‌ம்ரேச‌ர் நேச்சுர‌ல் கேஸ்) கொண்டு இய‌க்க‌ப்ப‌டுகிற‌து. இந்தியாவில் 12 பெரிய‌ துறைமுக‌ங்க‌ளும்,215 சிறிய‌ துறைமுக‌ங்க‌ளும் உள்ள‌து.

மேலும் ம‌ன்னார் வ‌ளைகுடா க‌ட‌லில் ஹைட்ராய்டு என்ற‌ எரிபொருள் அதிக‌ அள‌வில் இருப்பதாக‌ ஆய்வில் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டுள்ளது.இதை கொண்டு வ‌ர‌ 6 கிலோ மீட்ட‌ர் ஆழ‌த்திற்கு குழாய்க‌ள் அமைத்து வெளியில் கொண்டு வ‌ர‌ வேண்டும். அப்ப‌டி வெளியே கொண்டு வ‌ந்தால் சுமார் 200 ஆண்டுக‌ளுக்கு தேவையான‌ எரிபொருள் கிடைக்க‌ வாய்ப்புள்ள‌து. இவ்வாறு பேசினார்.

நிக‌ழ்ச்சியில் முக‌ம்ம‌து ச‌த‌க் அற‌க்க‌ட்ட‌ளை த‌லைவ‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர்,க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ஜ‌காப‌ர் வ‌ர‌வேற்றார்.க‌ல்லூரி இய‌க்குந‌ர்க‌ள் ,ச‌த‌க் பாலிடெக்னிக் முத‌ல்வ‌ர் அலாவுதீன்,க‌ட‌ல் சார்துறை த‌லைவ‌ர் மூர்த்தி,க‌ல்லூரி கட‌ல் சார் டீன் விஜ‌ய‌ ராக‌வ‌ன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்துக்கொண்ட‌ன‌ர்.

வாகனம் செல்ல முடியாத அளவில் வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலை ! க‌மிஷ‌ன‌ரிட‌ம் த‌முமுக‌ ம‌னு


ப‌ல் வேறு கோரிக்கைக‌ளை வ‌லியுறுத்தி ந‌க‌ராட்சி க‌மிஷ‌ன‌ர் முஜிபு ர‌ஹ்மானிட‌ம் கீழ‌க்க‌ரை ந‌க‌ர் த‌முமுக‌ பொருளாள‌ர் "ஈஸி ஜெராக்ஸ்"சாதிக் ம‌னு கொடுத்தார். அம்ம‌னுவில் கூறியிருப்ப‌தாவ‌து..

கீழக்கரையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.சென்னை முதல் கன்னியாக்குமரி வரை செல்லும் பேருந்துகள் கீழக்கரை வழியாகவும்,நகருக்குள்ளும் வந்து செல்கின்றனர்.

கீழக்கரைக்கு வரும் பெரும்பாலான பேருந்துகள் குறிப்பாக கன்னியாக்குமரி,திருச்செந்தூர்,திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் கீழக்கரை பேருந்து நிலையம் வந்து செல்வதில்லை .ஏர்வாடி முக்கு ரோட்டிலேயே பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர். குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணி வரை நகருக்குள் பஸ்கள் வராததால் பெண்கள்,வயதான பெரியவர்கள்,மாற்று திறனாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே அனைத்து பேருந்துகளும் ஊருக்குள் வந்து செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டு கொள்கறோம்.



பழைய(பைல்) படம்
மேலும் கீழக்கரை ஏர்வாடி விலக்கு சாலையிலிருந்து கீழக்கரை கடற்கரை சாலை வரை செல்லும் சாலையான வள்ளல் சீதக்காதி சாலை பல இடங்களில் குண்டும்,குழியுமாக மேடு பள்ளம் நிறைந்து போக்கு வரத்திற்கு ஏற்றதாக இல்லை. வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.


கீழக்கரை நகராட்சி பகுதியில் வள்ளல் சீதக்காதி சாலை,தபால் தந்தி அலுவலகம் செல்லும் சாலை,பேட்டை தெரு,தெற்கு தெரு ஆகிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக இரு பக்கமும் ,இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி வாகனங்கல் செல்லாத அளவிற்கும்,மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றனர்.எனவே முக்கிய சாலைகளை "நோ பார்க்கிங்" பகுதியாக அறிவித்து காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க ஆணையாளர் அவர்களை கேட்டு கொள்கிறோம்.

பொது சுகாதாரம் கருதி "பிளாஸ்டிக்" உபயோகிக்க தடை செய்து தீர்மாணம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தொடர்ச்சியாக இது குறித்து ப‌ள்ளி,கல்லூரி மாண‌வ‌ர்க‌ள் மூல‌ம் ஊர்வ‌ல‌ம் ந‌ட‌த்தி விள‌ம்ப‌ர‌ம் செய்து விழிப்புண‌ர்வு ஏற்ப‌டுத்தி த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ பிளாஸ்டிக் ப‌ய‌ன்பாட்டை முழுமையாக‌ த‌டை செய்ய‌ வேண்டும்.

மேற்குறிப்பிட்ட‌ அனைத்து கோரிக்கைக‌ளையும் நிறைவேற்ற‌ எங்க‌ள் அமைப்பின் மூல‌ம் ப‌க்க‌ப‌ல‌மாக‌வும்,உறுதுணையாக‌ இருந்து ஒத்துழைப்பு கொடுபோம் இவ்வாறு ம‌னுவில் கூறியிள்ளார்.








,

மானிய விலையில் குப்பை கூடை வழங்கும் அறிவிப்பிற்கு வ‌ர‌வேற்பு !


ஒருங்கிணைப்பாளர் லாபீர்
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் சார்பில் தூய்மையான கீழக்கரையாக மாற்றுவது சம்பந்தமாக எதிர்கால செயலாக்க பணிகள் குறித்து முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல்காதர் தலைமையில் ஆலோசனை நடத்தினர். இதில், வீடுகள் தோறும் மக்கும் ,மக்கா குப்பைகளை கொட்ட மானிய விலையில் தலா இரண்டு குப்பை கூடைகள் வழங்க முடிவு செய்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் லாபீர் தெரிவித்திருந்தார்

இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ச‌மூக‌ ந‌ல‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் கருத்து தெரிவிக்கையில் ,
இது போன்று தனி தனியாக குப்பைகளை பிரிப்பதால் எளிய முறையில் குப்பைகளை அகற்ற முடியும் மேலும் இதை விரிவுபடுத்தி குறைந்த விலையில் கொடுப்பதோடு எளியவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இலவசமாக கொடுப்பதற்கு முயல வேண்டும் என கூறி கூடை வழங்கும் ‌ முய‌ற்சிக்கு பாராட்டுதல்களை தெரிவித்த‌ன‌ர்.

.

Sunday, February 5, 2012

அவதூறு வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை ! நகராட்சி தலைவர் !



கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் ..

சமீப காலமாக கீழக்கரை நகராட்சி பற்றியும் எனது குடும்பத்தினர் பற்றியும் விஷமிகள் சிலர் போலியான பெயர்களில் அவதூறாக பொய்யான தகவல்களை நோட்டீஸ்சாக வெளியிட்டு வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

மக்கள் பணியில் தொந்தரவு செய்யும் வகையிலும் மன உளைச்சலை ஏற்படுத்தியும் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க‌ மேற்கொள்ள படும் .இவ்வாறு அறிவித்துள்ளார்.

கீழக்கரை டைம்ஸ் சார்பாக‌ வேண்டுகோள் !



நமது கீழக்கரை டைம்ஸ் வலைதளத்தில் (www.keelakaraitimes.com,www.kilakaraitimes.com,www.keeakaraitimes.bogspot.com)விளம்பரம் வெளியிடுகிறோம் என்றும் செய்தி வெளியிடுகிறோம் என்று சிலர் பணம் வசூல் செய்ய முயற்சி செய்ததாக‌ அறிந்தோம்.

மேலும் இதுபோன்று யாரேனும் பணம் வாங்கியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.

செய்திக்கும்,விள‌ம்ப‌ர‌த்திற்கும் இது வ‌ரை யாரையும் நிய‌மிக்க‌வில்லை என்ப‌தை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் கீழக்கரை டைம்ஸ் சார்பாக எந்த ஒரு விளம்பரமும் வாங்கப்படவில்லை.செய்திகள் வெளியிடுவதற்கு கட்டணம் வாங்குவதும் இல்லை என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவது நமது கடமையாகும்.இத்தளம் நமதூர் மக்கள் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்படுகிறது.

இது போன்று உங்களை யாரேனும் அணுகினால் உடனடியாக கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்.

எனவே கீழக்கரை டைம்ஸ் பெயரில் இது போன்ற‌ இழிசெய‌ல்க‌ளில் ஈடுபட்டு இடையூறு செய்ய வேண்டாம் என்ற‌ எச்ச‌ரிக்கையை ம‌ன‌ வேத‌னையுட‌ன் வெளியிடுகிறோம்.


என்றும் உங்க‌ள் ஆதரவுடன்...

0091 9486483759 ( கீழ‌க்க‌ரை )
0097 1554145064 ( துபாய் )

Saturday, February 4, 2012

கீழக்கரையில் சுழற்சி முறையில் மின்சார தடை !முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனு !



கீழக்கரை நுகர்வோர் பாதுகாப்பு கழக பொருளாளர் முகம்மது இப்ராகிம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள மனுவில்,
கீழக்கரையில் சென்ற ஜனவரி மாதம் பகல் 2 மணி முதல் 4 மணி வரை மின் தடை செய்யப்பட்டது அதன் படி இந்த மாதம் மாலை 4 மணி முதம் 6 மணி வரை சுழற்சி முறையில் மின் தடை செய்யப்பட வேண்டும் .

ஆனால் இந்த மாதமும் மீண்டும் பகல் 2 மணி முதல் 4 மணி வரை மின் தடை ஏற்படுத்தப்படுகிறது. இதனால் கடந்த 2ந்தி தொடங்கிய‌ பிளஸ் 2 பொது தேர்வில் ஒரு பகுதியான‌ செயல்முறை தேர்வு எழுதும் மாணவர்கள் மிகுந்த சிமத்துக்குள்ளாகிறார்கள்.

தேர்வின் போது மின் தடை ஏற்படுவதால் மாணவ,மாணவியரின் எதிர்கால கல்வியை பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுழற்சி முறையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின் தடை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ சாதிக் கூறுகையில், பெய‌ர‌ள‌வில் தான் 2 ம‌ணி நேர‌ மின் த‌டை ஆனால் ப‌ல‌ மணி நேர‌ம் மின்சார‌ம் த‌டை செய்ய‌ப்ப‌டுகிற‌து.எனவே இது குறித்தும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்

விழிப்புணர்வு! பைக் ம‌ற்றும் ஆட்டோவில் கவுன்சிலர் தலைமையில் இளைஞர்கள் ஊர்வலம் !



கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40 மைக்ரோன் அடர்த்திக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பை மற்றும் கப்கள் உபயோகத்திற்கு பிப்2 முதல் நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இது குறித்து பொது ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு ஏற்ப‌டுத்தும் வ‌கையில் 12வ‌து வார்டு க‌வுன்சில‌ர் சித்தீக் த‌லைமையில் 13 ம‌ற்று 14வ‌து வார்டு க‌வுன்சில‌ர்க‌ள் ர‌பியுதீன் தாஜீன் அலிமா ஆகியோர் பிளாஸ்டிக் உப‌யோகிப்ப‌தால் ஏற்ப‌டும் தீங்குக‌ள் குறித்து பிட் நோட்டீஸ் அச்ச‌டித்து இளைஞ‌ர்க‌ளுட‌ன் டூவீல‌ர் ம‌ற்றும் ஆட்டோக்க‌ளில் தெருதெருவாக‌ ஊர்வ‌ல‌மாக‌ சென்று வீடுக‌ள் ம‌ற்றும் க‌டைக‌ளுக்கு பிட் நோட்டீஸ் வ‌ழ‌ங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வ‌ருகின்ற‌னர்.

தாசிம் பீவி கல்லூரியில் 2012 கலை‌நிகழ்ச்சி !


கல்லூரி முதல்வர் சுமையா

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரியில் ஜாமிஅத்துத் தாஸிம் 2012 கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் மைம், செய்தி வாசித்தல்,யூத் பார்லிமெண்ட்,கவிதை,கோலம்,நகை உருவாக்குதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரியின் முன்னாள் மாணவி கலைமதி பரிசு வழங்கினார்.தனி நபர் சாதனையாளர் விருது மாணவி மதிமலருக்கு வழங்கப்பட்டது.

ஏராளமான கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவி தஸ்னீம் நன்றி கூறினார்.

Friday, February 3, 2012

தடகள போட்டிகளில் கீழக்கரை கல்லூரி மாணவர்கள் வெற்றி !



மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நடைபெற்ற தடகள போட்டிகளில் முகம்மது சதக் பாலிடெக்னிக் போட்டிகளில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள் போட்டி காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் ந‌டைபெற்றது.இதில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் உயரம் தாண்டுதல்,ஈட்டி எறிதல்,உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்றவர்களை கல்லூரிகளின் தலைவர் ஹமீது அப்துல் காதர்,கல்லூரி முதல்வர் அலாவுதீன் உள்ளிட்ட பலர் பாரட்டினர்.

கீழக்கரை நகரை தூய்மையாக்க தாசிம் பீவி கல்லூரியில் கருத்தரங்கம் !




கீழக்கரை நகரை தூய்மையாக்குவதை தொடர் நிகழ்ச்சியாக நடத்துவது குறித்த செயலாக்க பணிகளை பற்றிய கருத்துக்களின் பரிமாற்றத்திற்க்கான கருத்தரங்கம் கல்லூரிகளின் நலப்பணிதிட்ட மாணவ,மாணவிகள் மற்றும் கீழக்கரை வெல்பர் அசோஸியேசன் சார்பாக கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார். கீழக்கரை நகராட்சி கமிசனர் முஜிப் ரஹ்மான், நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா ரிஸ்வான்,முன்னாள் மதுரை மாநகராட்சி ஆணையாளர் நாகராஜன்,முகம்மது பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன்,இயக்குநர் யூசுப் சாகிப்,கல்லூரி முதல்வர் சுமையா கீழக்கரை உஸ்வதுன் ஹசனா முஸ்லீம் சங்க நிர்வாகிகள், சென்னை எக்ஸ்னோரா நிர்வாக அலுவலர் ஜெய்க்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் சுகாதாரம் குறித்த பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.


நிகழ்ச்சி நிறைவில் ஹமீதியா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஹமீது நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்த லாபிர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இது குறித்து ஏற்கெனவே டிசம்பர் மாதம் எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் தலைமையில் லாபிர் ஒருங்கினைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.அத‌ன் தொட‌ர்ச்சியாக‌ இந்த‌ நிக‌ழ்ச்சி ந‌டைபெற்றுள்ள‌து.
கருத்தரங்குகளில் வெளியிடப்பட்ட சுகாதாரம் தொடர்பான‌ க‌ருத்துக்க‌ளை செய‌ல்ப‌டுத்தி கீழ‌க்க‌ரையை தூய்மையான ந‌க‌ரமாக‌ வேண்டும் என்ப‌தே பொது ம‌க்களின் எதிர்பார்ப்பாக உள்ள‌து.


http://keelakaraitimes.blogspot.com/2011/12/blog-post_9726.html - டிசம்பர் மாத கருத்தரங்கம் தொடர்பான முந்தைய செய்தி

Thursday, February 2, 2012

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்தால் ரூ500 அபராதம் !


முஜிபு ரஹமான்- நகராட்சி கமிஷனர்(பொறுப்பு)

கீழக்கரை நகராட்சி பகுதிகளில் 40 மைக்ரோனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரையில் சுமார் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனறனர். சுற்றுப்புற சூழலை பாழ்படுத்தும் பிளாஸ்டிக் பை மற்றும் கப்கள் அதிகளவில் பயன்படுத்தபட்டு மிகுந்த சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் வியாபாரிகள் கூட்டத்தில் பிளாஸ்டிக் மற்றும் கப்களுக்கு தடை விதிக்கப்பட்டு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் முஜிபு ரஹமான் கூறுகையில் ,
கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் முடிவின்படி இப்ப‌பகுதிகளில் 40 மைக்ரோனுக்கு குறைந்த பிளாஸ்டிக் பை மற்றும் கப்கள் விற்பனை செய்யக்கூடாது.

எங்கள் அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் பொருள்களை பறிமுதல் செய்வதோடு ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்றார்.

கீழக்கரையில் மலேரியாவை தடுக்க கிணறுகளில் மீன்கள் ! க‌ருத்த‌ர‌ங்கில் கோரிக்கை !



கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கம் ஹீசைனியா மஹாலில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு இயக்கத்தின் தலைவர் செய்யது இபுராகிம் தலைமை வகித்தார்.நிர்வாக இயக்குநர் ஹமீது அப்துல் காதர்,துணை தலைவர் சித்தீக்,செயலாளர் பசீர் அகமது,கொளரவ ஆலோசகர் ரிபாய்தீன்,செயல் தலைவர் பாரதி, நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகரில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் மதுரை மாநகராட்சி ஆணையாளர்(திடக்கழிவு மேலாண்மை) நடராஜன் ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டு பொது மக்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

இதில் மஹ்தூமியா தொடக்கப்பள்ளி ஆசிரியை ஆனந்தி பேசுகையில் , கீழக்கரையில் மலேரியாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சுமார் 2 வருடங்களுக்கு முன் கீழக்கரையில் உள்ள பெரும்பாலான வீடுகளில் உள்ள கிணறுகளில் அரசு நிர்வாகம் கம்போசியா எனும் மீன்களை விட்டனர்.இதன் மூலம் தண்ணீர் ஓரளவுக்கு சுத்தப்படுத்தப்பட்டது.மலேரியாவும் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.
தற்போது பெரும்பாலான கிணறுகளில் அந்த மீன்கள் அழிந்து விட்டது.இதனால் ஊரில் மலேரியா தலைதூக்க துவங்கியுள்ளது எனவே மீண்டும் அதே முறையை கையாண்டு மீன்களை கிணறுகளில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மேலும் விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட‌ இக்க‌ருத்த‌ர‌ங்கில் சுகாதார‌ம் தொட‌ர்பாக பலரும் ப‌ல் வேறு க‌ருத்துக்க‌ள் தெரிவித்த‌ன‌ர்