Saturday, May 21, 2011

கீழக்கரை அருகே தீவுகளில் மஞ்சள் நிற பலூன் வேலிகள்


பவளப்பாறைகளை பாதுகாப்பதற்காக கீழக்கரை அருகே உள்ள் அப்பாதீவு உள்பட 21 தீவுகளில் மிதவை பலூன் வேலிகள் அமைப்பது தொடர்பாக மீனவர்கள் இயக்கங்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என வன உயிரின பாதுகாவலர் சுந்தரகுமார் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் தென்கிழக்கு முனை கடல் பகுதியில் 10 ஆயிரத்து 500 சதுர கி.மீ. பரப்பளவில் மன்னார் வளைகுடா உலக உயிர் கோள காப்பகம் அமைந்துள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை இந்த கடல் பகுதி உள்ளது. இதில் கரையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் பவளப்பாறைகள் அதிகமுள்ள 21 சிறிய தீவுகள் உள் ளன. இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொருட்டு கடந்த 1986ம் ஆண்டு மத்திய அரசு இதனை தேசிய கடல் பூங்காவாக அறிவித்து பாதுகாத்து வருகிறது.
கடலில் உள்ள அரிய வகை பவளப்பாறைகள், கடல் பசு, கடல் பகுதியை தூய்மைப்படுத்தும் கடல் அட்டைகள், ஆமைகள் உள்ளிட்ட உயிரினங்களை பாதுகாக்க மன்னார் வளைகுடா உயிர்கோள பாதுகாப்பு அறக்கட்டளை, வனச்சரகத்தினர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மன்னார் உயிர்கோள வன உயிரின பாதுகாவலர் சுந்தரகுமார் கூறியதாவது:
மன்னார் வளைகுடா தேசிய கடல் பூங்காவில் சிங்கிள் தீவு, நல்லதண்ணீர் தீவு, முயல் தீவு, குருசடி தீவு, அப்பாதீவு, வாலைத்தீவு உள்ளிட்ட 21 தீவுகள் உள்ளன. 3,600க்கும் மேற்பட்ட தாவர வகைகள் கடல்வாழ் விலங்கினங்கள் இந்த கடல் பகுதியில் உள்ளன. இங்கு அலையாத்தி காடுகள், சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மன்னார் உயிரிகோள காப்பகம் எடுத்து வருகிறது. கழிவுநீரால் மாசுபடுதல், பவளப்பாறைகள் அழிந்து விடாமல் தடுக்கும் வகையில் தீவுகளை சுற்றிலும் 500 மீட்டர் இடைவெளியில் வரிசையாக மிதவை பலூன்களை மிதக்கவிட்டு பாதுகாப்பு வேலி அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தற்போது 325 மிதவை பலூன்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த பலூன்கள் நகர்ந்துவிடாமல் இருக்க துருப்பிடிக்காத இரும்பு சங்கிலி இணைக்கப்பட்டு, சங்கிலியின் மறுமுனை 250 கிலோ எடையுள்ள சிமென்ட் சதுர கல்லில் இணைக்கப்படும். இந்த வேலியால் பாதுகாக்கப்படும் கடல் பகுதிக்குள் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படவுள்ளது. இதன்மூலம் பவளப்பாறைகள், கடல் வளங்களை பாதுகாக்க உயிர்கோள காப்பகம் திட்டமிட்டுள்ளது.
மிதவை வேலிகள் அமைப்பதால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மீனவர்கள் இயக்கங்களை அழைத்து பேசி சுமூக முடிவு எடுத்த பின்னர் மிதவைகள் தீவுப்பகுதிகளில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி.தினகரன்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.