Friday, June 8, 2012

மதுரையில் சர்வதேச விமான நிலையம் ரத்தா?மத்திய அரசின் அறிவிப்பில் இடம்பெறவில்லை!



படம்: சுந்தர்

பிரதமர் மன்மோகன் சிங் அடிப்படை கட்ட மைப்பு துறை தொடர் பான அமைச்சகங்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன்சிங், புதிதாக நிறைவேற்றப்பட இருக்கும் திட்டங் கள் பற்றி அறிவித்தார். அவர் கூறிய தாவது:-

"சிவில் விமான போக்குவரத்து துறையில் நவி மும்பை, கோவா மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும். கோவை, திருச்சி மற்றும் லக்னோ, வாரணாசி, காயா ஆகிய நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப் படும். நடப்பு நிதியாண்டில் டெல்லி மற்றும் சென்னை யில் புதிய விமான சேவை மையங்கள் அமைக்கப்படும். என்றார்


சர்வதேச விமான நிலையம் விரிவாக்கி உருவாக்கும் பிரதமரின் பட்டியலில் திருச்சி, கோவை இடம் பெற்றுள்ளன.மதுரை பட்டியலில் இல்லை இதனால் மதுரையில் சர்வதேச விமான நிலையம் உருவாகும் திட்டம் கானல் நீர்தானா என்று தென் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தென்மாவட்ட வளர்ச்சிக்காக மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக்க மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்து இருந்தது. இதன் முதற்கட்டமாக சர்வதேச தரத்தில் ரூ.130 கோடியில் டெர்மினல் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இங்கு சுங்கத் துறை வசதியை தொடர்ந்து, மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படை நியமிக்கப்பட்டதும் சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சர்வதேச விமான நிலையமாகி, ஏர் பஸ் போன்ற பெரிய ரக விமான போக்குவரத்துக்கு விமான ஓடு தளத்தை தற்போதுள்ள 7 ஆயிரத்து 500 அடியில் இருந்து 12 ஆயிரத்து 500 அடியாக விஸ்தரிக்க வேண்டும். இதற்காக 630 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து தரும்படி விமான ஆணையம் தமிழக அரசிடம் கோரியது. அதன்படி அரசு நில ஆர்ஜித நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு விட்டன. நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசு வழங்க வேண்டிய விலை நிர்ணயம் ஆகாததால், நிலம் விமான ஆணையத்திடம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை.

நிலம் ஒப்படைக்கப்பட்டதும், ரிங்ரோட்டை மண்டேலா நகரில் இருந்து சிறிது தூரம் துண்டித்து மாற்றுப் பாதையில் அமைக்கவும் திட்டம் உருவாக்கப்பட்டது.

விரைவில் சர்வதேச விமான நிலையம் கனவு நனவாகும் சூழல் நிலவியது. பயணிகள் விமானம் மட்டுமின்றி சர்வதேச அளவில் சரக்கு விமான போக்குவரத்தும் தொடங்கி தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அதில் தமிழகத்தில் திருச்சி, கோவை இடம் பெற்று மதுரை இடம் பெறாதது இங்கு சர்வதேச விமான நிலையம் உருவாகும் திட்டம் கானல் நீராகி விடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. தென் மாவட்டமே புறக்கணிக்கப்பட்டு விட்டதோ? என்ற எண்ணமும் உருவாகி உள்ளது.


காரணம் என்ன

தமிழகத்தின் 2வது பெரிய நகரம் மதுரைதான். தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது. இங்கு சர்வதேச விமான நிலையம் உருவாக்க அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் திடீரென்று மதுரை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு, சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையை விரிவாக்க தமிழக அரசு 630 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்து ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது

இது குறித்து கீழ‌க்க‌ரை த‌ங்க‌ம் ராதாகிருஸ்ணன் கூறுகையில்,
தென் மாவட்டத்தின் தொழில் வ‌ள‌ர்ச்சிக்கு பெரும் உத‌வியாக‌ இருக்கும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌ட்ட‌ ம‌துரை ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌ம் க‌ன‌வுதான் என்ற‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌து.குறிப்பாக ம்துரையில் சர்வதேச விமான நிலையம் அமைந்தால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பெரும் பயனடைவர் தென் மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ அனைத்து த‌ர‌ப்பின‌ரும் உட‌ன‌டியாக‌ ம‌துரை ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌ம் அமைக்க‌ ஒருமித்த‌ குர‌ல் எழுப்ப‌ வேண்டும்.ஏற்கென‌வே சேது ச‌முத்திர‌ம் திட்ட‌ம் கிட‌ப்பில் போட‌ப்ப‌ட்டுள்ள‌து. தென் மாவ‌ட்ட‌ங்க‌ள் தொட‌ர்ந்து புற‌க்க‌ணிக்க‌ப்ப‌டுகிறது என்றார்.

.






No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.