Tuesday, June 26, 2012
சமூக விரோதிகள் அட்டகாசம் !கீழக்கரை நகராட்சியின் குப்பை கிடங்கு இடிக்கப்பட்டது!பொது மக்கள் குவிந்தனர் !
கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடம் தில்லையேந்தல் ஊராட்சி பகுதியில் உள்ளது.இங்கு கீழக்கரை பகுதி குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மறுசுழற்சி முறையில் உரமாக மாற்றுவதற்கு கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டு சுற்றுசுவர் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் விஷமிகள் சிலர் 200 அடிக்கு கட்டப்பட சுற்று சுவரை இடித்து சேதப்படுத்தியுள்ளனர்.மேலும் அங்கு கட்டுமான பொருள்களையும் உடைத்துள்ளனர். இது குறித்து ஒப்பந்ததாரர் உத்தண்டி கீழக்கரை நகராட்சி கமிஷனர் முஜிபு ரஹ்மானிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து கமிஷனர் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.இது குறித்து இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இது குறித்து ஒப்பந்ததாரர் உத்தண்டி கூறுகையில்,
நேற்று முன் தினம் மாலை அடையாளம் தெரிந்த தில்லையேந்தலை சேர்ந்த பெயர் தெரியாத 5 பேர் இப்பகுதிக்கு வந்தனர்.ஒருவர் கையில் அறிவால் இருந்தது கண்டு சந்தேகமடைந்து கவுன்சிலர் சாகுல் ஹமீது,நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் உள்ளிட்டோருக்கு தகவல் கொடுத்தேன்.உடனடியாக இங்கு வந்த அவர்களுடன் இரவு 7.30 மணி வரை இருந்தோம் அது வரை சுற்று சுவருக்கு எவ்வித சேதாரமும் இல்லை. ஆனால் இரவு நேரத்தில் விஷமிகள் சிலர் 200 அடிக்கு சுற்றுசுவரை உடைத்தும் மற்றும் 10 மூட்டை சிமெண்டை கிழித்து தண்ணீர் ஊற்றியும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் டிரம் மற்றும் தளவாட பொருள்களை உடைத்தும் சேதப்படுத்தும் நோக்கத்தில் இது போன்று செய்துள்ளனர்.
இது குறித்து நகராட்சி கமிஷனருக்கு தகவல் கொடுத்துள்ளேன்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது,
கீழக்கரை நீண்ட கால பிரச்சனையாக விளங்கக்கூடிய குப்பை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த குப்பை கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.அருகிலுள்ள ஊர் மக்களுடன் பல் வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு இறுதியாக அரசாங்கம் இப்பணியை மேற்கொண்டு வருகிறது.இதை தடுக்கும் நோக்கத்தில் ஏற்கெனவே தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றது.தற்போது சமூக விரோதிகள் சிலரால் சுவர் இடிக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கதக்கது.ஏதோ உள் நோக்கத்துடன் நடைபெறுவதாக தெரிகிறதுஉடனடியாக காவல்துறை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இடிக்கப்பட்ட பகுதியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.