Saturday, November 19, 2011

கீழக்கரையில் விண்னை நோக்கி வீட்டு மனை விலை !

கீழக்கரையில் 13000த்திற்க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. திருமணமானால் ஒரு பெண்ணுக்கு ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற நடைமுறை இப்பகுதியில்` மிகுதியாக இருந்து வருவதால் அதிகளவில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.நாளொன்று இப்பகுதியில் 2000த்திற்கும் மேற்பட்டோர் கட்டிட தொழிலில் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.இநிலையில் ஊருக்குள் வீட்டு மனைக‌ள் கிடைப்பது என்பது அரிதாகி வருகிறது இதனால் கீழக்கரையின் புறநகர் பகுதிகளில் வீடுகளை கட்டுவது அதிகரித்து வருகிறது.இதன் மூலம் ஏராளமான நில புரோக்கர்கள் இப்பகுதியில் உருவாகியுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இத்தொழிலில் முறையாக ஈடுபட்டு வருகிறார்கள்.ஆனால் ஒரு சிலர் சொத்துக்களில் உள்ள பிரச்சனைகளை மறைத்து தங்கள் சுய லாபத்துக்காக(கமிசனுக்காக) வில்லங்க சொத்துக்களை வாங்குபவர் தலையில் கட்டி விடுவதாக கூறப்படுகிறது.இதனால் சிலர் வாழ்நாள் சேமிப்பான பணத்தை கொடுத்து நில புரோக்கர்களை நம்பி வாங்கும் சொத்துக்கள் வாங்கிய பின் கோர்ட்,கேஸ் என்று பிரச்சினையில் சிக்கி விடுவதால் மிகவும் மனம் உடைந்து போய் விடுகின்றனர்.


மேலும் சில வீட்டு மனைகளை நில‌ புரோக்க‌ர்க‌ளே வாங்கி வைத்து கொண்டு செய‌ற்கையான‌ முறையில் விலையே ஏற்றி விற்பதாக‌வும் கூற‌ப்ப‌டுகிற‌து.இதனால் குறிப்பிட்ட இடங்களின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளது. மாநாக‌ராட்சி,நக‌ராட்சி,பேரூராட்சி என்று அந்த‌ ந‌க‌ர‌ங்கள் ம‌ற்றும் ஊர்க‌ளின் சுற்றுப்புற சூழ்நிலைக்கு த‌க்க‌வாறு(இடத்தின் அருகில் தொழிற்சாலைகள்,சாலை வசதி,பள்ளிகள்,பேருந்து நிலையம்,அரசு அலுவலகங்கள்,) அதற்கு தகுந்தவாறு வீட்டு ம‌னைக‌ளின் விலைக‌ள் அமைந்திருக்கும் ஆனால் கீழ‌க்க‌ரையில் ம‌ட்டும் எந்த அடிப்படையும் இல்லாமல் பெரிய‌ ந‌க‌ர‌ங்க‌ளுக்கு ச‌மமாக‌ வீட்டு மனைக‌‌ளின் விலைக‌ள் விண்ணை தொடும் அளவுக்கு அமைந்துள்ளதாக‌ க‌ருத‌ வேண்டி உள்ள‌து. இத‌னால் கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அத‌ன் சுற்றுப்புற‌ ப‌குதிக‌ளில் இட‌ம் வாங்குவ‌து என்ப‌து ந‌டுத்த‌ர‌ ம‌ற்றும் அத‌ற்கு கீழ் உள்ள மக்களுக்கு எட்டாக்க‌னியாக‌ போய்விடும் சூழ்நிலை ஏற்ப‌ட்டுள்ளது.

இது குறித்து ரிய‌ல் எஸ்டேட் தொழில் செய்து வ‌ரும் ஜ‌குப‌ர் சாதிக் கூறுகையில்,



ஒரு சில புரோக்கர்கள் வீட்டு மனை காலி இடங்களை தாங்களே வாங்கி வைத்து கொண்டு போலியான டிமாண்டை உருவாக்கி விலையை அதிகரிக்க செய்கிறார்கள். ஒரு சிலர் ரிய‌ல் எஸ்டேட் பிஸிண‌ஸ் செய்கிறேன் என்ற பெயரில் அதை ப‌ற்றிய‌ அடிப்ப‌டை அறிவு இல்லாம‌ல் ஏமாற்றுவ‌தை ம‌ட்டுமே குறிக்கோளாக‌ கொண்டு சில‌ர் செயல்ப‌டுகிறார்க‌ள். இப்ப‌குதியில் போலி ப‌த்திர‌ம் மூல‌ம் ஏமாற்றுதல்,ஒருவர் பெயரில் உள்ள சொத்துக்களை வேறு ஒருவர் பெயரின் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தல் உள்ப‌ட‌ ப‌ல் வேறு ஏமாற்று வேலைக‌ளில் சில‌ர் ஈடுப‌ட்டு அத‌னால் ப‌ல‌ரும் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள்.இது குறித்து அர‌சு க‌வ‌ன‌ம் செலுத்தி கீழ‌க்க‌ரை முழுவ‌து இது போல் யார்,யார் ஏமாற்றியுள்ளார்க‌ள் என்று க‌ண்ட‌றிந்து ந‌ட‌வ‌டிக்கை ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.மாவ‌ட்ட‌ நிர்வாகம் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டால் ஏராள‌மான‌வ‌ர்க‌ள் புகார் செய்ய‌ முன்வருவார்க‌ள். மேலும் உயர்ந்து வரும் வீட்டும‌னைக‌ளின் விலையை க‌ட்டுப்ப‌டுத்துவ‌து என்ப‌து மிக‌வும் சிர‌ம‌மான விச‌ய‌ம் ஆனால் இட‌த்தை வாங்குப‌வர்க‌ள் விழிப்புட‌ன் இருந்தால் இந்த‌ விலை உய‌ர்வை ஓர‌ள‌வு க‌ட்டுக்குள் கொண்டு வ‌ர‌லாம்.


நான் படித்த சில குறிப்புகளை உங்களுக்கு தருகிறேன் ...
ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை நிலத்தின் மீதுள்ள உரிமைகள் போலியானதாக இருக்கும், புரோக்கர்களில் சிலர் போலிகளாக இருப்பார்கள், மனை அல்லது வீட்டை வாங்கும்போது மிகக் குறைந்த காலகட்டத்துக்குள்ளாகவே பலமுறை சொத்து கைமாறியிருக் கிறதா என பாருங்கள். அப்படி இருந்தால் உஷாராகி, தாய் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் உரிமையாளரைச் சந்தித்து உண்மையில் அவர் சொத்து விற்றாரா அல்லது பாகப் பிரிவினை செய்து தந்தாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
தாய் பத்திரம் அல்லது கிரயப் பத்திரம் தொலைந்துவிட்டது என்று சொன்னால் கூடுதலாக உஷாராகுங்கள்.
வீட்டை நேரில் பார்க்காமல் வாங்காதீர்கள். அதில் யாராவது குடியி ருந்தால் அவர்களிடம் நீங்கள் வீட்டை வாங்கும் விஷயத்தைச் சொல்லுங்கள். சில இடங்களில் வீட்டின் உரிமையாளரிடம் வாடகைக்கு ஆள் கூட்டி வருவதாகச் சொல்லி வீட்டைக் காட்டி, போலிபத்திரம் மூலம் வீட்டை விற்கும் வேலையும் நடந்து வருகிறது!
புரோக்கர்கள் அவசரப்படுத்தினால் ஒரு முறைக்கு நூறு முறை விசாரியுங்கள்.
சொத்தின் உரிமையாளரை கண்ணில் காட்டாமலே விலை பேசிக் கொண்டிருந்தால் அந்த புரோக்கரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
புரோக்கர் நல்லவர்தானா என்பதை அறிய அப்பகுதி சார் பதிவாளர் அலுவலக பணியாளர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே தெரிந்துவிடும்.
இது போன்று பல் வேறு விசயங்களை தெரிந்து கொண்டுதான் சொத்தை வாங‌க‌ வேண்டும் என்றரார்

இத்துடன் சகோதரர் ரஸீன் அனுப்பிய குறிப்புகளும் இணைக்கப்பட்டுள்ளது


பத்திரப் பதிவு - அரசு வழிகாட்டி மதிப்புக்கான வரைவு திருத்தம்- சி.சரவணன்தமிழ்நாட்டில் கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு வழிகாட்டி மதிப்பு என்கிற கைடு லைன் வேல்யூ அதிகரிக்கப்படாமல் இருந்தது. புதிய அரசு, அதன் பல்வேறு திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை வரவே... இப்போது சுறுசுறுப்பாக மாநிலம் முழுக்க உள்ள ஒரு கோடி சர்வே எண்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது. மனை மற்றும் வீட்டை பத்திரப் பதிவு செய்பவர்கள் அதன் அரசு வழிகாட்டி மதிப்பில் (8 சதவிகிதம் முத்திரைத் தாள் கட்டணம், ஒரு சதவிகிதம் பதிவுக் கட்டணம்) 9 சதவிகிதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். பெரும்பாலும் சந்தை மதிப்புக்கும் அரசு வழிகாட்டி மதிப்பும் இடையே வித்தியாசம் இருக்கும்.தற்போது சந்தை மதிப்பு மற்றும் அரசு வழிக்காட்டி மதிப்பு இணையாக இருக்கும்படி அரசு புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. பல இடங்களில் தற்போதுள்ள வழிகாட்டி மதிப்பை விட சுமார் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இப்போது ஒருவர் பத்திரப் பதிவுக்காக 20 ஆயிரம் ரூபாய் செலவிட்டால், இனி 2 லட்ச ரூபாய் செலவிட வேண்டி வரும்..!இதற்கான வரைவு வழிகாட்டி மதிப்பு, புத்தகமாக தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுக்க பத்திரப் பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படிருக்கிறது. மேலும், தமிழக அரசின் பதிவுத் துறை இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது. (இணைப்பு : http://www.tnreginet.net:80/DraftGuideline2011/gvaluemainpage2011.asp )இதில், சந்தை மதிப்பை விட அதிகமாக அரசு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதை குறைக்கச் சொல்லி அரசுக்கு மனு கொடுக்கலாம். சாலை, குடிநீர், தெரு விளக்கு, பஸ் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடத்துக்கு அதிகமாக மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அரசு வழிகாட்டி மதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரைவு வழிகாட்டி மதிப்பு டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்பட இருக்கிறது. இந்த வழிகாட்டி மதிப்பை பார்த்து சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது சொத்து வைத்திருக்கும் மற்றும் விரைவில் வாங்கப் போகும் அனைவரின் கடமையும் கூட..!ஏன் சரிபார்க்க வேண்டும் என்பதற்கான விளக்கம் சிறிய உதாரணமாக தருகிறேன். ஒரு ஏரியாவுக்கு தவறுதலாக அரசு வழிகாட்டி மதிப்பு, மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டால் பாதிப்பு அந்த பகுதில் சொத்து வைத்திருக்கும் மற்றும் வாங்கப் போகிற இருவருக்கும்தான். எடுத்துக்காட்டாக ஒரு இடத்தின் அரசு வழிகாட்டி சதுர அடிக்கு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உள்கட்டமைப்பு வசதி எதுவும் இல்லாத அந்த இடத்தின் மார்க்கெட் விலை 1000 ரூபாய்தான். இந்த ஒரிஜினல் மதிப்புபடி 1,000 ச.அடி மனையின் விலை 10 லட்ச ரூபாய். இதற்கு முத்திரை மற்றும் பதிவு கட்டணம் 9% என்பது 90,000 ரூபாய். ஆனால், அரசு வழிகாட்டி மதிப்பு 3000 ரூபாய் என்கிற போது, 1000 ச.அடி. மனைவின் மதிப்பு 30 லட்ச ரூபாயாகிவிடுகிறது. இதற்கான பத்திரப் பதிவு செலவு 4.5 லட்ச ரூபாயாக இருக்கும். அதவாவது, 10 லட்ச ரூபாய் இடத்துக்கு 4.5 லட்ச ரூபாய் பதிவு கட்டணம் என்றால் என்ன செய்வது?இடத்தை விற்பவர் கணிசமாக விலையை குறைத்து கொடுத்தால் மட்டுமே வாங்குவார்கள். அப்படி நடக்கவில்லை என்றால், கடைசி வரைக்கும் சொத்து கைமாறுவது என்பதே இருக்காது. எனவே, அரசு வழிகாட்டி மதிப்பு இறுதி செய்யப்படுவதற்குள், அனைவரும் அவர்களின் சர்வே எண் அல்லது தெருவுக்கு என மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து மறுப்பு தெரிவித்து சரிசெய்வதே செய்ய வேண்டிய காரியம்.எனவே, மறந்தும் இருந்துவிடாதீர்கள். இருந்தும் மறந்துவிடாதீர்கள்..!நன்றி: அமீரக பதிவர்கள் குழுமம்

2 comments:

  1. செய்தி சிறப்பாய் தொகுக்கப்பட்டிருக்கிறது. kilakarai real estate guide(old/new) + procedures and formalities to be done after purchasing the property யும் சேர்த்து செய்தியாக கொடுத்திருந்தால் செய்தி மேலும் சிறப்பாய் அமைந்திருக்கும்.

    ReplyDelete
  2. thanks for information !!!!!!
    some brokers made unlimited price in land in outside kilakarai also .,,,,
    kilakarai municipality nothing doing

    pls keep watching kilakarai land brokers

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.