Tuesday, August 27, 2013

வெளிநாட்டிலிருந்து டிவி! இந்தியாவில் இறக்குமதி வரி அமலுக்கு வந்தது!


வெளிநாடுகளுக்கு செல்வோர் இனிமேல் எல்சிடி, எல்இடி டிவிக்களை வரி எதுவும் செலுத்தாமல் இந்தியா கொண்டு வர முடியாது. மத்திய அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு இம்மாதம் 26ம் தேதி முதல் அமலுக்கு வந்தது
. வெளிநாடுகளுக்கு செல்வோர் ரூ.35 ஆயிரம் வரையிலான ஃபிளாட் ஸ்கிரீன் டிவி எனப் படும் எல்சிடி, எல்இடி டிவிக்களை வரி எதுவும் செலுத்தாமல் கொண்டு வர முடியும் என்ற நிலையில். கடந்த ஆண்டில் மட்டும் இதுபோல 10 லட்சத்துக்கும் மேற்பட்ட டிவிக்கள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

தற்போது ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தவும், நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஏற்படுவதை சரிசெய்யவும் இறக்குமதியை குறைக்க அரசு முயன்று வருகிறது. எனவே தங்கம் இறக்குமதி வரியை அரசு நடப்பு ஆண்டில் 3 முறை உயர்த்தியது. தேவையற்ற பொருட்களான கைக்கடிகாரங்கள், கலைப் பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது ஃபிளாட் ஸ்கிரீன் டிவிக்களுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு ஆகஸ்ட் 26 முதல்  அமலுக்கு வந்தது இத்தகைய டிவிக்களை கொண்டு வருபவர்கள் 36.5% வரி மற்றும் இதர கட்டணங்களை செலுத்த வேண்டும்.

இது குறித்து வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் தயாரிப்போர் சங்கத் தலைவர் அனிருத் தூத் கூறுகையில், ''உள்நாட்டிலேயே ஃபிளாட் ஸ்கிரீன் டிவிக்களை தயாரிக்க நமது நிறுவனங்கள் ரூ.1,500 கோடியில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன.
அரசின் புது உத்தரவால் உள்நாட்டு டிவி உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள். தற்போது 80 லட்சம் ஃபிளாட் டிவிக்களுக்கு தேவை உள்ளது. ஆண்டுதோறும் 30 முதல் 35 லட்சம் டிவிக்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.750 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதால் உள்நாட்டு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்போர் நடப்பு ஆண்டில் 3 முறை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது'' என்றார்.

தகவல் : வெளிச்சம் விக்னேஷ்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.