Sunday, April 8, 2012

ராமநாதபுரத்தில் பாஸ்போர்ட் விண்ணப்ப மையம் மூடல்! மீண்டும் செயல்படுத்த கோரிக்கை



ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் விண்ணப்பம் பெறும் மையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக பாஸ்போர்ட் விண்ணப்பம் அளிக்கும் மையம் ராமநாதபுரம்கலெக்டர் அலுவலகத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த ஏப்.1 முதல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி தொழில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் வேலை பார்க்க செல்லுவோர் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். கீழக்கரை, பனைக்குளம், பெருங்குளம், அழகன்குளம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரும்பாலானோர் அயல் நாட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் பாஸ்போர்ட் எடுப்பதற்கு விண்ணப்பங்களை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இதற்காக தொடங்கப்பட்ட சிறப்பு அலுவலக பிரிவில் அளித்து வந்தனர்.

நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 30 முதல் 50 விண்ணப்பங்கள் வரை பெறப்பட்டது. இதனை பதிவு செய்வதற்கு வருவாய்துறையை சேர்ந்த முதுநிலை உதவியாளர் இருவர் மற்றும் கணினி ஆப்ரேட்டர் ஒருவர் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர். இங்கு வரும் விண்ணப்பங்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதனை சரிபார்த்து மதுரையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பட்டும் அங்கிருந்து விண்ணப்பதாரர்கள் குறித்த விபரங்களை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மூலம் சான்றிதழ் பெறப்பட்டு பாஸ்போர்ட் கிடைத்து வந்தது.

ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்கள் மதுரை பாஸ்போர்ட் மண்டலத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பெறுவதற்காக கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் விண்ணப்ப அலுவலகங்கள் படிப்படியாக நிறுத்த மண்டல அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்திலும் கடந்த ஏப்.1 முதல் இந்தப்பிரிவு செயல்படுவது நிறுத்தப்பட்டது.

இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் அளிக்க வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கடந்த ஜனவரி முதல் மார்ச் 31 வரை 850க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

அபுல் ஹசன் என்பவர் கூறுகையில்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பம் பெற்றதால் மதுரைக்கு செல்லும் சிரமம் இல்லாமல் இருந்தது.தற்போது விண்ணப்ப மையத்தை மூடியது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.குறிப்பாக பெண்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள்.செலவும் அதிகரிக்கும் உடனடியாக மறு பரிசீலனை செய்து மீண்டும் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சமூக நல அமைப்புகளும் இதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.