கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகப் பொருளாளர்  'கீழை இளையவன்' என்ற  முஹம்மது சாலிஹ்  ஹுசைன் பேசும் போது
 
"இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கவுன்சிலர்களுக்கும் அழைப்பு விடுத்ததாக முகைதீன் இபுறாகீம் கூறுகிறார். ஆனால் இங்கு எந்த கவுன்சிலர்களும் பங்கு கொள்ளவில்லை. ஆதலால் 18 வது வார்டு கவுன்சிலர் சுட்டி காட்டும் நகராட்சி குறித்த ஊழல்களில், ஏனைய கவுன்சிலர்களுக்கும் பங்கு இருக்குமோ..? என்று பொதுமக்களாகிய நாம் எண்ணத் தோன்றுகிறது.

கீழக்கரை நகராட்சியில் நடைபெறுவதாக சொல்லப்படும் ஊழல்கள், கமிசன்கள், இலஞ்ச லாவண்யங்கள் அத்தனையும் எப்போது துவங்கியது தெரியுமா..? என்றைக்கு உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார்களோ ? அன்றே துவங்கி விட்டது. அன்றைய தினத்திலிருந்தே தங்கள் செலவுக் கணக்கையும், தாங்கள் நகராட்சியில் முதலீடு செய்த கணக்கையும் எழுதத் துவங்கி விட்டார்கள். தாங்கள் செய்த முதலீட்டினை, நல்ல இலாபத்துடன் வட்டியும் முதலுமாக திரும்பப் பெற இன்று வரை உயிரைக் கொடுத்துப் போராடி வருகிறார்கள். என்னுடைய வருத்தம் எல்லாம் முதலீடு செய்வதற்கு நகராட்சி என்ன தொழில் செய்யும் இடமா..? 

இந்த நகராட்சி நிர்வாகம் மூலம் எத்தனையோ அசவுரியங்கள் பொதுமக்களுக்கு இருந்தாலும் கூட சிலவற்றை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கீழக்கரை நகராட்சிக்கு ஒரு நல்ல பொறுப்பான ஆணையரை, தமிழக அரசு பணியமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் ஆவல் கொண்டிருந்த சமயத்தில், கடந்த ஆண்டு பொறுப்பேற்ற, நகராட்சி  கமிசனர் அவர்கள்  தன் பொறுப்புகளை உணர்ந்து செயல்படாமல் காலம் தாழ்த்தி வருவது வருத்தமளிக்கிறது. அவர் நகர் நலனில் அக்கறை இல்லாமல் நடந்து கொள்ளும் பொறுப்பற்ற பல பணிகளால், கீழக்கரை நகராட்சியின் வருவாயும், மத்திய மாநில அரசுகளின் நிதிகளும் வீணாகி வருகிறது. 

ஒரு உதாரணத்திற்கு கீழக்கரை நகராட்சிக்கு வாங்கியிருக்கும் கழிவு நீர் உருஞ்சும் (மெகா சக்கர்) வாகனத்தை எதற்காக வாங்கினார்கள் என்று இது வரை யாருக்கும் தெரியவில்லை. நம் கீழக்கரை நகர் மிக குறுகிய தெருக்களையும், சாலைகளையும் கொண்டது. ஆனால் நகராட்சி வாசலில் 'கும்கி யானை' போல் நிற்கும், கீழக்கரை நகரின் எந்த தெருக்குள்ளும் செல்ல முடியாத இந்த பிரமாண்டமான, மிகப் பெரிய உருவில் இருக்கும் இந்த வண்டியினால் என்ன பயன் இருக்கிறது..? 

கமிசனர் அவர்கள் நகர் மன்ற அங்கத்தினர்களுக்கு முறையாக அறிவுரை வழங்கி இருந்தால்,  இந்த மெகா வண்டியை வாங்கியதற்கு பதிலாக, அதே தொகையை வைத்து, கீழக்கரையின் அனைத்து தெருக்களுக்கு உள்ளும் செல்லக் கூடிய இரண்டு சிறிய அளவில் இருக்கும் கழிவு நீர் உருஞ்சும் ( மினி சக்கர் ) வாகனங்களையாவது வாங்கி இருக்கலாம். அதைக் கொண்டு நகரின் பல பகுதிகளில் வாருகால்கள் இல்லாமல் கழிவு நீர் தொட்டியை பயன்படுத்தும் இடங்களான புதிய கிழக்குத் தெரு, வடக்குத் தெரு சங்கு மால் சந்து போன்ற இடங்களில், நகராட்சி ஒரு சிறு தொகையை பெற்றுக் கொண்டு சேவை புரிந்து இருக்கலாம். இதனால் நகராட்சிக்கு ஓரளவு வருமானமும் கிடைத்திருக்கும்.

அதே போல கீழக்கரை புதிய நகர் மன்றம் பொறுப்பேற்று முதன் முதலாக வந்த அரசு நிதியான  ரூ .2 கோடியில் ரூ. 50 இலட்சம் கழிவு நீர் வடிகால்கள் அமைக்க ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை எடுத்த துணை சேர்மன் ஹாஜா முஹைதீன் அவர்களின் நண்பர் திரு. வெள்ளைசாமி எடுத்து பணியை துவங்கினார். என்ன காரணத்தினாலோ பணிகள் பாதியிலேயே விடப்பட்டு இருக்கிறது. தற்போது கீழக்கரையில் குப்பை பிரச்சனைகள் ஓரளவுக்கு மட்டுப்பட்டு இருக்கும் சூழலில் சாக்கடை பிரச்சனைகள் பெரும் தலை வலியாக உருவெடுத்துள்ளது. ஆனால் திரு. வெள்ளை சாமிக்கு அவர் வேலை பார்த்த வரை உள்ள அனைத்து தொகைகளும் (ரூ.1800000)  வழங்கப்பட்டு விட்டது.  

நம் வீடுகளில் சாதாரண கொத்தனார் வேலைகள் நடந்தால் கூட, அவர்களுக்கு பேசிய தொகையில் சிறிதளவை வேலை முடியும் வரை பிடித்து வைத்துக் கொள்வோம். அந்த சிறிய நடை முறை கூட நகராட்சி நிர்வாகத்தினருக்கு ஏன் தெரியாமல் போனது ? துணை சேர்மன் அவர்கள் ஆதரவோடு ரூ.5 இலட்சத்திற்கு வாருகால் மூடி போட பணி ஆணை வழங்கப்பட்டது. இங்கு வந்திருக்கும் பொது மக்களே.. சொல்லுங்கள். உங்கள் தெருக்களில் உள்ள வாருகால்களுக்கு மூடி போடப்பட்டு விட்டதா ? வாருகால்களுக்கு மூடி போட ஒன்றரை வருட காலமா.. சொல்லுங்கள்.

இனி வரும் காலங்களில் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் வரவு செலவுக் கணக்குகள் அத்தனையும் நமது ஊரின் அத்தனை அமைப்புகளின் சங்கங்களின் கோப்புகளில் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் தகவல் அறியும் உரிமைகள் சட்டம் 2005 ன் கீழ் அனைவரும் ஆக்கப்பூர்வ கேளவிகளை கேட்பதன் மூலம் அவற்றை பெற்று தவறுகள் நடை பெற்று இருப்பின் சட்ட நடவைக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் பணிகளை சரி வர செய்யாத ஒப்பந்ததாரர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, சட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் அவர்களை நம் ஊரிலிருந்து ஓட ஓட அடித்து விரட்ட வேண்டும்.  

இனி வரும் காலங்களிலாவது கவுன்சிலர்கள் இலஞ்சத்தை தவிர்த்து, நெஞ்சத்தை நிமிர்த்த வேண்டும். இங்கு வராத வார்டு கவுன்சிலர்களின் கவனத்திற்கு இங்கு பேசப்படும் செய்திகளை, இங்கு வந்திருக்கும் அந்தந்த வார்டு பெருமக்கள் கொண்டு சேருங்கள். அதனையும் விடுத்து அவர்கள் இன்னும் கமிசன்களை தொடர்ச்சியாக பெறுவார்களாயின், அடுத்த உள்ளாட்சி தேர்தலில் இதே வார்டு கவுன்சிலர்கள் போட்டியிட்டால், பொது மக்களாகிய நாம் இவர்களை செருப்பால் அடிப்பதை தவிர வேறு வழியில்லை" இவ்வாறு பேசினார்.