கீழக்கரையை அடுத்துள்ள திருப்புல்லாணி அருகே உள்ள சின்னாண்டிவலசையைச் சேர்ந்தவர் மாயழகு. இவரது மனைவி கலா (25). மாயழகு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
ஏப்ரல் 17 ஆம் தேதி கலா வீட்டில் குடும்பத்தினருடன் இருந்தபோது வீட்டிற்குள் புகுந்த 4 மர்ம நபர்கள் கலா அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
இது குறித்து திருப்புல்லாணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந் நிலையில் நேற்று முன்தினம் ரெகுநாதபுரம் பகுதியில் திருப்புல்லாணி காவல் ஆய்வாளர் கணேசன், துணை காவல் ஆய்வாளர் ஜேசுதாஸ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரைப் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் சித்தார்கோட்டை லட்சுமணன் மகன் தெய்வேந்திரன் (36), ராசு மகன் அசோக்குமார் (32), தேனி மாவட்டம் கடமலைகுண்டு பாலூத்துவிலக்கு பகுதியைச் சேர்ந்த சுருளியாண்டி மகன் ராஜா (40) என்பது தெரியவந்தது. இவர்கள் தான் கலாவிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் அளித்த தகவலின் பேரில் ஆற்றாங்கரை பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் மகன் சரவணன் (40) என்பவரை போலீஸார் ராமநாதபுரம் பஸ் நிலையம் பகுதியில் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தெய்வேந்திரனும், அசோக்குமாரும் 2011 ஆம் ஆண்டு தேவிபட்டினத்தில் கமலேஸ்வரி என்ற பெண்ணை கொலை செய்து 70 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்று கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் கெப்பனா என்பவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்று கைதான ராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறையிலிருந்து வெளியே வந்த இவர்கள் செலவுக்குப் பணம் இல்லாததால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இவ்வாறு இவர்கள் அழகன்குளத்தில் ஒரு கடையிலும், சித்தார் கோட்டையில் ஒரு செல்போன் கடையிலும் 11 செல்போன்களை கொள்ளையடித்துள்ளதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 7 செல்போன்களையும், கலாவிடம் பறித்துச் சென்ற 5 பவுன் தங்கச் சங்கிலியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.