Friday, May 24, 2013

மீன் பிடி த‌டை கால‌ம்!கீழ‌க்க‌ரை அருகே ப‌ட‌குக‌ள் ப‌ழுது நீக்கும் ப‌ணி தீவிர‌ம்!



மீன்பிடி தடைக்காலத்தில் பழுது பார்ப்பதற்காக ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகுகள் சின்னஏர்வாடி கடற்கரை படகு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்திய கிழக்கு கடற் கரை பகுதிகளில் மீன் இனப் பெருக்கத்திற்காக ஏப்.15 முதல் மே 30 வரை 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. அதனால் விசைப்படகுகளை கரைக்கு கொண்டு வந்து பழுதுபார்க்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் பகுதிகளில் விசைப்படகுகளில் மீன்பிடிப்பது அதிகமாக உள்ளது. மற்ற பகுதிகளில் நாட்டுப்படகுகள், வல்லங்கள், கட்டுமரங்களில் மீன்பிடிப்பு நடைபெறுகிறது. மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றன.

தற்போது மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய ஏப்ரல் 15 முதலே பட கு களை பழுது பார்க்க தொடங்கிவிட்டனர். மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் படகுகளை கரை யில் ஏற்றி பழுதுபார்க்கும் படகு தளம் உள்ளது. மாவட்டத்தின் தெற்கு பகுதியில் பெரியபட்டினம், கீழக்கரை, வாலிநோக்கம் ஆகிய பகுதிகளில் பட குகளை பழுதுபார்க்கும் தளம் இல்லை.
இந்த கடற்கரை பகுதி யில் ஏர்வாடி அருகே சின்னஏர்வாடி படகு தளத்தை விட்டால் தூத்துக்குடி சென்றால்தான் படகுகளை சரி செய்ய முடியும்.

அதனால் கீழக்கரை, பெரியபட்டினம், ஏர்வாடி, வாலிநோக்கம், தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகுகள் சின்ன ஏர்வாடி படகு தளத்திற்கு கொண்டு வரப்பட்டு பழுதுபார்க்கப்படுகின்றன.
இங்கு ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட படகுகளை கரைக்கு கொண்டு வந்து பழுதுபார்க்க இடம் உள்ளது. அதனால் இரண்டு மாவட்ட விசைப்படகுகளும் சின்னஏர்வாடி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு படகை கடலில் இருந்து கரைக்கு கொண்டு வர 20க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்கள் கரையில் இழுத்து வைத்துவிட்டுச் செல்கின்றனர்.

இதையடுத்து அந்த படகில் மர வேலைகள், இன்ஜின் பழுது, கடைசல் வேலைகள், மெக்கானிக் வேலைகள் செய்யப்பட்டு பெயிண்ட் அடிக்கப்படுகிறது. அதனால் சின்னஏர்வாடி கடற்கரை ஏப்.15 முதல் பிசியாகி உள்ளது. இங்கு எந்நேரமும் கார்பெண்டர்கள், பெயிண்டர்கள், மெக்கானிக்குகள் வேலை செய்த வண்ணம் உள்ளனர்.
ஒரு படகிற்கு குறைந்தது. ரூ.50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை பழுது பார்க்கும் பணிகளுக்கு செலவாகிறது. இந்த 45 நாட்களில் ஒரே நேரத்தில் அனைத்து படகுகளும் பழுது பார்ப்பதால் கூலி ஆட்கள், கார்பெண்டர்கள், மெக்கானிக்குகள், லேத் வேலை செய்பவர்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. அதனால் கூலியும் கூடுதலாக கொடுக்க வேண்டி உள்ளது. மீன்பிடி தடைகாலம் இன்னும் ஒரு வாரமே உள்ளதால் படகுகளை சரிபார்க்கும், பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து மீனவர் குமார் கூறுகையில், ‘சின்னஏர்வாடி கடற்கரை பட குகளை ஏற்றி வேலை செய்ய வசதியாக உள்ள தால் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட படகுகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. மீன்பிடித் தடை காலத்தில் ஒரே நேரத்தில் அனைத்து படகுகளும் பழுது பார்ப்பதால் கூலி தொழிலாளர்கள், கார்பெண்டர்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. கூலி யும் கூடுதலாக கொடுக்க வேண்டியுள்ளது’ என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.