Thursday, July 18, 2013

துபாயில் ஈமான் சார்பில் ரமலான் மாதம் முழுவதும் இப்தார் நிகழ்ச்சி!தினமும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

 தாயகத்திலிருந்து வருகை தந்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்.பி,ஈமான் துணைத் தலைவர் மற்றும் க‌ல்விக்குழுத் த‌லைவ‌ர்  கீழக்கரை பி.எஸ்.எம். ஹ‌பிபுல்லாஹ்,ஈடிஏ மனித வள மேம்பாட்டுதுறை நிர்வாக இயக்குநர் கீழக்கரை அக்பர் கான் உள்ளிட்டோர் துபாயில் ஈமான் சார்பில் நடைபெற்ற  இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்"புதிய தலைமுறை" சேனலில் வெளியான ஈமான் நோன்பு கஞ்சி தொடர்பான செய்தி கானொலி தொகுப்பு...  http://www.youtube.com/watch?v=GoD7K02UYBY&feature=c4-overview&list=UUmyKnNRH0wH-r8I-ceP-dsg

 துபாயில் ஈமான் என்று அழைக்கப்படும் இந்திய‌ன் முஸ்லிம் அசோசியேஷ‌ன் இஃப்தார் எனும் நோன்பு திற‌ப்பு நிக‌ழ்ச்சியை துபாய் தேரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் (குவைத் ப‌ள்ளி) ர‌மலான் மாத‌ம் முழுவ‌தும் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சியுட‌ன் நடத்தி வருகிறது.

இது குறித்து ஈமான் பொதுச் செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி கூறுகையில்,துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்ச்சி க‌ட‌ந்த‌ 25 ஆண்டுகளுக்கும் மேலாக‌ ந‌டைபெற்று வ‌ருகிற‌து.

ஆர‌ம்ப‌த்தில் சிறிய‌ அள‌வில் ஆர‌ம்பித்து இன்று சுமார் 3,500க்கும் மேற்ப‌ட்டோருக்கு தின‌மும் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சியை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து. நோன்புக் க‌ஞ்சியுட‌ன் ச‌மோசா, ஆர‌ஞ்சு, குளிர்பான‌ம், த‌ண்ணீர், பேரிச்ச‌ம் ப‌ழ‌ம் உள்ளிட்ட‌வை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் ஒரே பகுதியில் அமர்ந்து இப்தார் மேற்கொள்கிறார்கள்.

துபாயில் ரமாலான் மாதம் முழுவதும் நடைபெறும் மிக பெரும் இப்தார் நிகழ்ச்சியாகும்.இத்த‌கைய‌  நிக‌ழ்ச்சி ஈமான் அமைப்பின் த‌லைவ‌ர் கீழக்கரை சைய‌து எம். ஸ‌லாஹுத்தீன், துணைத் தலைவர் மற்றும் க‌ல்விக்குழுத் த‌லைவ‌ர்  கீழக்கரை பி.எஸ்.எம். ஹ‌பிபுல்லாஹ் ஆகியோர‌து வ‌ழிகாட்டுத‌லுட‌ன் பொதுச் செய‌லாள‌ர் ஏ.லியாக்க‌த் அலி, துணைப் பொதுச் செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, ஊடக‌த்துறை மற்றும் மக்கள் தொடர்பு செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், விழாக்குழு செய‌லாள‌ர் கீழை ஹமீது யாசின், நலத்துறை மற்றும் நிர்வாக மேலாளர் திருச்சி ஃபைசுர் ரஹ்மான், அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், ப‌டேஷா ப‌ஷீர், இல்யாஸ், ஷ‌ர்புதீன், உஸ்மான், முஹ‌ம்ம‌து அலி உள்ளிட்ட‌ நிர்வாகக் குழு உறுப்பின‌ர்க‌ள் ம‌ற்றும் புர‌வ‌ல‌ர்க‌ள் ஒத்துழைப்புட‌ன் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து

.பள்ளியில் அமர்ந்து நோன்பு திறப்பவர்களுக்கு மட்டுமல்லாது தங்களது அறையில் அல்லது இல்லத்தில் நோன்பு திறப்பதற்கும் நோன்புக் கஞ்சியினை பிளாஸ்டிக் கன்டெய்னரில் மாலை 6 மணி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 500 பேர் பலன் பெற்று வருகின்றனர்.கடும் வெயிலையும் பொருட்படுத்தாது தன்னார்வ ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
 இப்ப‌ணியில் ஈடுப‌ட‌ விரும்புவோர் 050 4674399 / 050 5196433 எனும் அலைபேசி எண்ணில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. பங்கேற்பு:ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் பங்கேற்றார். அவருடன் அவரது மகன் சித்திக்கும் வந்திருந்தார்.இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்துல் ரஹ்மான் ஈமான் அமைப்பினரின் இந்த சேவையை பாராட்டினார். இறைப் பொருத்தத்தை நாடி இறை உவப்பிற்காக மேற்கொண்டு வரும் இச்சீரிய பணிகளுக்கு பெரும் ஒத்துழைப்பு நல்கி வரும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமம் மற்றும் புரவலர்களை நினைவு கூர்ந்தார்.

 
 மேலும் ஆரம்ப காலத்தில் நோன்புக் கஞ்சியினை தான் பொதுச் செயலாளராக இருந்த போது செய்யப்பட்ட விதத்தினையும் மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டது பலரையும் அந்த கால கட்டத்திற்கு இழுத்துச் சென்றது.
மாலை 6 மணிக்கு நோன்புக் கஞ்சியினை பார்சலாக வழங்குவதற்கு ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் கும்பகோணம் சாதிக் ஏற்பாட்டில் டோக்கன் முறையில் வழங்கப்படும் முறையினைப் பாராட்டினார்.

தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் பள்ளி மட்டுமல்லாது துபாய் பிரிஜ் முரார் லத்திஃபா பள்ளியிலும் அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹம்மது தலைமையில் நெல்லிக்குப்பம் காதர், பெரம்பலூர் உஸ்மான் உள்ளிட்டோர் நோன்புக் கஞ்சி விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் சுமார் 450 பேர் பயன் பெற்று வருகின்றனர்.ஈமானின் இத்தகைய பணிகளுக்கு தனது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என அப்துல் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.