Monday, July 8, 2013

ராமநாதபுரம் மாவட்டம் மீன் உற்பத்தியில் மாநிலத்தில் முதலிடம்! கலெக்டர் தகவல்!கீழக்கரை கடல் பகுதியில் நாளொன்றுக்கு 2 டன்னுக்கு மேல் மீன் பிடிபடுகிறது.

 

   மீன், மிளகாய் உற்பத்தியில் ராமநாதபுரம் மாவட்டம் தமிழக அளவில் முதலிடம் பெற்றிருப்பதாக ஆட்சியர் க. நந்தகுமார் கூறினார்.
 
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தொழில் வணிகத் துறை சார்பில் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வுக் கருத்தரங்கை சனிக்கிழமை தொடக்கி
வைத்து அவர் மேலும் பேசியதாவது:
 
  நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து விவசாயத்தை நம்பித்தான் இருந்திருக்கிறது. 70 சதவிகித மக்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்து வந்தனர். ஏறக்குறைய 20  ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயத்தை நம்பியிருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதற்குக் காரணம் என்னவெனில் உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் நம்நாடு பிற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
 
  கடந்த 1980-ல் 70 சதவிகிதம் விவசாயத்தை நம்பி இருந்த நாம் இப்போது விவசாயத்தை நம்பி இருப்பது 25 சதவிகிதமாக குறைந்து விட்டது. உற்பத்தி துறையும், சேவைத் துறையும் 70 சதவிகிதமாகி விட்டது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பொருள்களை உற்பத்தி செய்தாலும் அதற்கான சந்தையும் இந்தியாவில் உள்ளது.
 
  ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத ஏராளமான இயற்கை வளங்கள் இருக்கின்றன. மீன், மிளகாய் உற்பத்தியில்  தமிழகத்திலேயே ராமநாதபுரம் மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது. மாற்று மின்சாரம் எனப்படும் சூரிய மின்சக்தியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக இருக்கிறது. சிப்காட் நிறுவனம் சார்பில் 2 ஆயிரம் ஏக்கரில் மீன் பதப்படுத்தும் தொழிற்கூடம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. சிட்கோ தொழிற்பேட்டைகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
 
  கனரகம் சார்ந்த தொழில்கள் தொடங்கும் வகையில் மதுரை-ராமநாதபுரம் மற்றும் திருச்சி-ராமநாதபுரம் ஆகிய இருவழிச் சாலைகள் விரைவில் நான்குவழிச் சாலைகளாக மாற்றப்பட இருக்கின்றன.
  அரசின் சிறப்பான செயல்பாடுகளால் ராமநாதபுரம் மாவட்டம் பல்வேறு வழிகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஏராளமான தொழில்கள் தொடங்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  தமிழக அரசு முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடனுதவி செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்படி தொழில் தொடங்க விரும்புவோருக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்யவும் காத்திருக்கிறது. இதுவரை
30 சேவை தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  எனவே இளைஞர்கள் லாபம் தரும் தொழிலை தேர்வு செய்து அதை தொடங்க விரும்பினால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் என்றார் ஆட்சியர்.
 
  கருத்தரங்கில் 8 பயனாளிகளுக்கு ரூ.53.19 லட்சம் மதிப்பில் புதிய தொழில் தொடங்குவதற்கான வங்கிக் காசோலைகளை ஆட்சியர் வழங்கினார். சிறப்பாகப் பணியாற்றிய வங்கி மேலாளர்களுக்கும் நினைவுப் பரிசுகளை ஆட்சியர் வழங்கினார்.
 
  முன்னதாக மாவட்டத் தொழில் மையப் பொதுமேலாளர் தி. ரமேஷ் வரவேற்றார்.
 
  கருத்தரங்கில் பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் எஸ்.ஆர். ஆஞ்சநேய மூர்த்தி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் எம். வளையாபதி, நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் எஸ். மதியழகன், முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ் பாபு, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பா. இளங்கோவன், சிறு  மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மைய ஆய்வாளர் பி. ஜெயசெல்வம்  ஆகியோர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.