Monday, July 8, 2013

கீழக்கரையில் முற்றிலும் சிதிலமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை மராமத்து செய்ய எதிர்ப்பு !





கீழக்கரையில் முற்றிலும் சிதிலமடைந்து பெரும்பாலான பகுதிகள் இடிந்த நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை மராமத்து செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மராமத்து பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழக்கரை மீனவர் குப்பத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. முற்றிலும் சிதிலமடைந்து பெரும்பாலான பகுதிகள் இடிந்து விழுந்து விட்டதால், இந்த மையத்திற்கு குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புவதில்லை. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் இந்த கட்டிடத்தை மராமத்து செய்ய ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளதாக மீனவர் குப்பத்தின் தலைவர் புல்லாணி தெரிவித்துள்ளார் நேற்று ஒப்பந்ததாரர் மற்றும் ஊழியர்கள் வந்து இந்த கட்டிடத்தை மராமத்து செய்யும் பணிகளை துவக்கினர்.

இதையறிந்து அப்பகுதி மக்கள் அங்கன்வாடி கட்டிடத்தை முற்றுகையிட்டு, மராமத்து பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கட்டிடம் முற்றிலும் சிதிலமடைந்து விட்டதால், கட்டிடத்தை முழுவதுமாக இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக பொறியாளர் அறிவழகனுக்கும், பொதுமக்களுக் கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மக்களின் எதிர்ப்பையடுத்து மராமத்து பணிகளை நிறுத்தி விட்டு ஒப்பந்ததாரர் மற்றும் ஊழியர்கள் திரும்பிச் சென்றனர்.

மீனவர் குப்பத்தின் தலைவர் புல்லாணி கூறுகையில், 28 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிடத்தின் ஒருபகுதி சுவர் மொத்தமாக இடிந்து விழுந்தது. இதில் குழந்தைகள் காயமடைந்தனர். இதையடுத்து இந்த அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புவதில்லை. இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் கண்துடைப்பாக மராமத்து பணி என ரூ.6 லட்சம் பணத்தை வீணாக செலவு செய்ய முயற்சி செய்கின்றனர் என்றார்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.