Monday, September 16, 2013

பெரியபட்டிணத்தில் சந்தனகூடு உள்ளிட்ட பொருட்களுக்கு தீவைப்பு! போலீஸ் குவிப்பு!


 photo : Aslam
Top of Form
திருப்புல்லாணி காவல் நிலையத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 
ராமநாதபுரம் அருகே பெரியபட்டிணம் பகுதியில் செய்யதுஅலி ஒலியுல்லா தர்கா உள்ளது.  இந்த தர்காவில் ஆண்டுதோறும் உரூஸ் எனும் சந்தனக்கூடு விழா நடைபெறும்.
 
அடுத்த மாதம் (அக்டோபர்) 13-ந்தேதி சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 22-ந்தேதி நள்ளிரவு முதல் 23-ந்தேதி அதிகாலை வரை சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.
 
விழா ஏற்பாடுகளை பெரியபட்டிணம் இஸ்லாமிய பொதுநல சங்கம், அல்ஜ்ரா சமூக நலச்சங்கம், சுல்தானியா சமூக நலச்சங்கம் மற்றும் பலர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சந்தனக்கூடு திருவிழாவை நடத்தக்கூடாது என்று பெரியபட்டிணம் ஜலால் ஜமால் ஜும்மா பள்ளி ஜமாத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
 
இந்தநிலையில் தர்காவின் சந்தனக்கூடு மற்றும் அதற்கான பொருட்கள் அனைத்தும் தர்காவின் அருகில் உள்ள ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசல் வளாக கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவில் இங்கு புகுந்த மர்மநபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த சந்தனக்கூடு மற்றும் மற்றும் பொருட்களுக்கு தீவைத்து விட்டு தப்பி விட்டனர்.
 
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த கீழக்கரை துணைபோலீஸ் சூப்பிரண்டு சோமசேகர் தலைமையில் திருப்புல்லாணி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
இதன்பின்னர் திருப்புல்லாணி போலீஸ் நிலையத்தில் துணைபோலீஸ் சூப்பிரண்டு சோமசேகர் தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து சமாதன கூட்டம் நடைபெற்றது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கீழக்கரை கணேசன், சிக்கல் துரை, வருவாய் ஆய்வாளர் மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சந்தனக்கூடு திருவிழா நடத்துவது தொடர்பாக ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் இரு தரப்பினரும், ஜமாத் நிர்வாகத்தினரும் கலந்துகொண்டனர்.
 
இதுதொடர்பாக இஸ்லாமிய சங்கங்களின் கூட்டு கமிட்டி தலைவர் சிராஜீதின் திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குபதிவு செய்து ஜமாத் உதவி செயலாளர் காஜாமைதீன்(63) என்பவரை கைது செய்தனர். மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 
Bottom of Form

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.