Monday, September 2, 2013

ஏர்வாடியிலிருந்து முதுகுளத்தூர், அபிராமம், வழியாக மதுரை வரை செல்லும் புதிய பஸ் வழித்தடம் துவக்கம்!


ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலிருந்து மதுரைக்கு புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்துப் பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் சுந்தரராஜ் முதல்வரின் திட்டங்களால் ராமநாதபுரம் விரைவில் முன்னேறிய மாவட்டமாகும் என்று தெரிவித்தார். 

        ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலிருந்து மதுரைக்கு புதிய பேருந்து வழித்தட தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காரைக்குடி பொது மேலாளர் மணிமுத்து தலைமை வகித்தார். ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா வரவேற்புரையாற்றினார். சேமிப்பு கிடங்கு வாரியத் தலைவர் முனியசாமி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சுந்தரபாண்டியன், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் சுந்தரராஜ், ஏர்வாடியிலிருந்து சிக்கல், முதுகுளத்தூர், அபிராமம், வீரசோழன், நரிக்குடி வழியாக மதுரை வரை செல்லும் புதிய பேருந்து வழித்தடத்தை துவங்கி வைத்தார்.
 பின்னர் அவர் பேசும் போது, தமிழக முதல்வர் பொதுமக்களின் தேவைகளையும் எண்ணங்களையும் அறிந்து செயல்பட்டு வருகிறார். அரசின் அனைத்துத் திட்டங்களும் சிறப்பான முறையில் குறிப்பிட்ட காலங்களுக்குள் சென்றடைவதன் மூலம் நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை பகுதியில் ஆண்கள், பெண்கள் பயிலும் கலைக் கல்லூரிகளை வழங்கியுள்ளார். பரமக்குடியில் 500 ஏக்கர் பரப்பளவில் ரூ.920 கோடி முதலீட்டில் சூரிய மின்சக்தி பூங்காவில் 100 மெகாவாட் அளவிற்கு மின்உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் அனைத்துத் திட்டங்களின் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் விரைவில் முன்னேறுகின்ற மாவட்டமாக திகழும். ஏர்வாடி பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இப்பேருந்து காலை 9.20-க்கு ஏர்வாடியிலிருந்து புறப்பட்டு 2.10-க்கு மதுரை சென்றடையும். மாலை 2.30-க்கு மதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு ஏர்வாடி வந்தடையும் என்று பேசினார்.

  இந்நிகழ்ச்சியில் கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மூக்கையா, இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெயச்சந்திரன், கேபிள் முருகன், சாயல்குடி ஒன்றியச் செயலாளர் அந்தோனிராஜ், கடலாடி ஊராட்சி ஒன்றிய 5-வது வார்டு கவுன்சிலர் சவுந்தரபாண்டியன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் பார்த்திபன், கிளை மேலாளர் சரவணன் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.