Wednesday, April 10, 2013

தென் த‌மிழ‌க‌ வ‌ளைகுடா வாழ் தொழில் வ‌ர்த்த‌க‌ர்க‌ளுக்கு கீழ‌க்க‌ரையே முன்னோடியாக‌ விள‌ங்குகிற‌து! துபாயில் தென் தமிழ‌க‌ வ‌ர்த்த‌க‌ர்க‌ள் பாராட்டு!







திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, விருது நகர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய தென் தமிழக மாவட்டங்களை சேர்ந்த‌ ப‌ல்வேறு வ‌ர்த்த‌க‌ர்க‌ளையும் ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ளையும் கொண்ட ரோட்டரி இண்டர்னேஷனல் மாவட்டம் 3212ன் சார்பாக, E.T.A. ASCON STAR குரூப் நிர்வாக இயக்குநர்  செய்யது M. சலாஹூத்தீனுக்கு பாராட்டு விழா மற்றும் “ THE PRIDE OF INDIA” விருது வழங்கும் விழா துபையில் மணியளவில் நடைபெற்றது.

ஈமான் விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹ்யித்தீன் இறைவசனங்களைத் தொடர்ந்து டாக்டர் பிரேமச் சந்திரன் இறை வணக்கப் பாடல் பாட, அமீரகத் தமிழ் மன்றம் ஆசிஃப் மீரான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த 44 ரோட்டரி நிர்வாகிகளையும் ரோட்டரி செயலாளர்  சரவணன் அறிமுகப்படுத்தி பேச, அவர்கள் அனைவரும் சலாஹூத்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

அமீரக அமைப்புகளின் சார்பாக, ஈமான் பொதுச் செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் கீழை ராஸா, அமீரகத் தமிழ் மன்றம் ஜெசீலா ரியாஸ், அமீரா அமீன், ரிதம் ஈவெண்ட்ஸ் சபேசன், அமீரகத் தமிழர்கள் அமைப்பு சிம்ம பாரதி, ,காயிதே மில்லத் பேரவை ஹமீது யாஸீன், முத்தமிழ் சங்கம் ஷாஹூல் ஹமீது, யு.ஏ.இ. தமிழ்ச் சங்கம் ரமேஷ், துபை தமிழ்ச் சங்கம் முஹம்மது தாஹா, மற்றும் ஏர் இந்தியா துபை ஏர் போர்ட் மேலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் விருது பெற்ற சலாஹூத்தீன் அவர்களை வாழ்த்தி மற்றும் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த ரோட்டரி விருந்தினர்களை வரவேற்றும் பேசினர்.

2013-2014 ரோட்டரி கவர்னர் ஜோசைய்யா வில்லவராயர், முன்னாள் கவர்னர்கள் ஜோ வில்லவராயர், டாக்டர் ஷண்முகம், ஆகியோர் சலாஹூத்தீன் அவர்களின் சிறந்த சேவையைப் பாராட்டி பேசினர்.தொடர்ந்து சலாஹூத்தீன் அவர்களுக்கு விருது வழங்கி பேசிய முன்னாள் கவர்னர் ஆறுமுகப் பாண்டியன், தன் உரையில், சலாஹூத்தீன் மற்றும் ஈடியே குழுமத்தின் சாதனைகளை மேற்கோள் காட்டி சுமார் 70,000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வரும் சேவையை வியந்து பாராட்டினார், மேலும் தன் உரையில் ரோட்டரி கிளப்பின் சேவைகளையும் சாதனைகளையும் பட்டியலிட்டார்.

மேலும் தொழில் வ‌ர்த்த‌க‌ர்க‌ள் பேசும் போது, த‌மிழ‌க‌த்தின் க‌டை கோடியில் கீழ‌க்க‌ரை இருந்தாலும் ப‌ல்வேறு தொழில் ஆர்வல‌ர்க‌ள் இப்ப‌குதியில் உருவாகி வ‌ளைகுடாவில் சாத‌னைக‌ள் ப‌டைத்து வ‌ருவ‌தால்  வ‌ளைகுடாவில் தென் த‌மிழ‌க‌ வ‌ர்த்த‌க‌ர்க‌ளின் முன்னோடியாக‌‌ கீழ‌க்க‌ரை விள‌ங்குகிற‌து என்ப‌தில் மாற்ற‌மில்லை என்ற‌ன‌ர்.


பின் ஏற்புரையாற்றிய சலாஹூத்தீன்,

ரோட்டரி அமைப்பின் உல‌க‌லாவிய‌  மற்றும் அதன் சேவைகளை தன் அனுபவங்களை முன் வைத்து வியந்து பாராட்டினார்.ரோட்டரி கிளப்பின் பணிகளுக்கு மத்தியில் தம் சேவை மிகக்குறைவே என்றவர், தனக்கு கிடைத்த பாராட்டுக்களை, ஒரு அறிவுரையாக எடுத்து கொள்வதாக கூறி, ரோட்டரி அமைப்பின் சேவைகளுக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். மேலும் விழாவிற்கு வந்த ஏர் இந்தியா துபை ஏர் போர்ட் மேலாளர் ராதா கிருஷ்ணனிடம் மதுரை – துபாய் நேரடி விமான சேவையை துரிதப்படுத்த வேண்டியதுடன், பன்னாட்டு விமான சேவைக்கு தூத்துக்குடியை தயார் படுத்தவும் ரோட்டரி கவ்ர்னர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சியை கீழக்கரை ஹமீது ரஹ்மான் தொகுத்து வழங்க,உலக நகைச்சுவையாளர் சங்கம் துபை கிளை நெல்லை முகைதீன் பிச்சை நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி இண்டர்நேஷனல் நிர்வாகிகளுடன் இணைந்து, நெல்லை S.S. மீரான், மற்றும் அம்பை ஸ்பர்ஜன் சுகுமார் ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்
.
செய்தி தொகுப்பு : கீழை ராஸா என்ற‌ ராஜாக்கான்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.