Thursday, April 4, 2013

பெண்க‌ல்வியில் இந்தியாவிலேயே த‌மிழ‌க‌மே சிற‌ந்த‌ மாநில‌மாக‌ திக‌ழ்கிற‌து!தாசிம்பீவி க‌ல்லூரி ப‌ட்ட‌ம‌ளிப்பு விழாவில் துணைவேந்த‌ர் பேச்சு!ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா செவ்வாய்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
 இவ்விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் ரஹ்மத்நிசா ரஹ்மான் தலைமை வகித்தார். சீதக்காதி அறக்கட்டளை துணை பொதுமேலாளர் சேக்தாவூத்,யூசுப்சுலைஹா மருத்துவமனை இயக்குநர் செய்யது அப்துல்காதர்,மருத்துவமனை என்.ஜி.ஒ.புரவலர் குர்ரத்ஜெமிலா,கல்லூரி துறைத்தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்புரையாற்றினார்.
 சிறப்பு விருந்தினராக கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழக துணைவேந்தர் மணிமேகலை கலந்து கொண்டு பேசியதாவது,
 இந்தியாவிலேயே தமிழகம் பெண்கள் கல்வியில் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. ஆண் பெண் விகிதாசாரத்தில் இந்திய அளவில் 50 ஆண்களுக்கு 48 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் 50 ஆண்களுக்கு 49.88 என்ற விகித்ததில் பெண்கள் உள்ளனர். இந்த வகையில் ஆண் பெண் விகிதாசாரத்தில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
 இந்தியாவில் 504 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 59 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இந்தியாவில் உயர்கல்வி கற்ற பெண்களின் எண்ணிக்கை 13சதவீதமாகும். ஆனால் தமிழகத்தில் உயர்கல்வி கற்ற பெண்களின் எண்ணிக்கை 18சதவீதமாக உள்ளது.
 தமிழ்நாட்டில் தான் உயர்கல்வி துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. படித்த பெண்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 73.86சதவீதம் உள்ளது. இந்த வகையில் பெண்கள் கல்வியில் தமிழ்நாடு இந்திய அளவில் முன்னனியில் உள்ளது. பெண்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 அதிகளவில் பெண்கள் உயர்கல்வி கற்றாலும் அதிகளவில் வேலை வாய்ப்புகளை பெறுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். சாதனை படைத்த பெண்களை முன்மாதிரியாக மனதில் வைத்து பட்டம் பெற்ற பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்.
 ஆண் பெண் வித்தியாசம் மறைந்தால் தான் அனைத்து துறைகளிலும் இந்தியா வல்லரசாக மாறும். இதற்கு ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
 பின்னர் கல்லூரியில் இளங்கலை பயின்ற 423 மாணவிகள்,முதுகலை பயின்ற 77மாணவிகள்,ஆய்வியல் நிறைஞர் பயின்ற 8மாணவிகள் உட்பட 508 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

அர‌பி பாட‌ திட்ட‌த்தில் 189 மாண‌விக‌ள் முப‌ல்லிகா ப‌ட்ட‌ம் பெற்ற‌ன‌ர்

முன்ன‌தாக‌ காலையில் ந‌டைபெற்ற‌ இர‌ண்டாவ‌து ஆண்டு அர‌பி(முப‌ல்லிகா)ப‌ட்ட‌ம‌ளிப்பு விழாவில் ந‌ர்கீஸ் ஆசிரியை அணீஸ் பாத்திமா ப‌ட்ட‌ங்க‌ளை மாண‌விக‌ளுக்கு வ‌ழ‌ங்கினார்.இந்நிக‌ழ்ச்சியில் இமாம்க‌ள் செய்ய‌து அக்ப‌ர் ஜ‌மாலி, ஹ‌க்கீம் சுல்தான் காசிபி,ம‌ற்றும் யூசுப் சுலைகா ம‌ருத்துவ‌ம‌னை இய‌க்குந‌ர் டாக்ட‌ர் செய்ய‌து அப்துல் காத‌ர்,குர்ர‌த் ஜ‌மிஆ,சீத‌க்காதி அற‌க்க‌ட்ட‌ளை கீழ‌க்க‌ரை துணை பொது மேலாள‌ர் சேக் தாவுது ஹாங்காங் த‌மிழ் ப‌ண்பாட்டு க‌ழ‌க‌ உதவி த‌லைவ‌ர் ஜ‌மால் ம‌ற்றும் ஏராளமானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.
 

1 comment:

 1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்April 5, 2013 at 6:27 PM

  சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கீழக்கரை நகரில் குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்டு வந்தது.பெண்கள் பருவ வயதை நெருங்கும் சமயத்தில் வீடுகளில் “ சிறை” வைக்கப்பட்டார்கள். இதன் காரணமாக இன்று வரை அவர்களுக்கு திருமணம் நடக்கும் சமயத்தில் கல்யாண வீட்டின் முதன்மை நிகழ்ச்சியாக “சிறை கழற்றுதல்” என்ற நிகழ்ச்சியுடன் கோலாகலமாக ஆரம்பம் ஆகிறது.

  இந்த காலக் கட்டத்தில் மாமனிதர் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் காக்கா அவர்களால்,ஒரு சேர அகால மரணம் அடைந்த அவர்தம் அன்பு சகோதரி மர்ஹூமா தாசிம் பீவி மச்சான் மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் நினைவாக தொடங்கப்பட்டது தான் இன்று காலத்தால் அழியாப் புகழ் பாடும் தாசிம் பீவி அப்துல் காதர் வனிதையர் கல்லூரி ( கலாசாலை).

  கல்வி மறுக்கப்பட்ட இஸ்லாமிய பெண்கள் நிறைந்த கீழக்கரையில் இன்று வீட்டுக்கு வீடு பட்டதாரிகள். வியக்க வைக்கும் சாதனை.இதன் ஒரே காரணகர்த்தா இன்று உச்சாணி கொப்பில் இருக்கும் தாசிம் பீவி அப்துல் காதர் வனிதையர் கல்லூரியாகும். எல்லாப் புகழும் படைத்த இறைவனுக்கே.

  பாராட்ட ஏதுவான வார்த்தை கிடைக்காத காரணமாக இரு கையேந்தி உவகையுடன் வல்ல ரஹ்மானிடத்தில் பிரார்த்திக்கின்றோம் அவர்கள் மேன்மேலும் சீரோடும் சிறப்போடும் வளர.ஆமீன்

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.