Saturday, March 16, 2013

தேசிய அளவில் ராமநாதபுரம் மாவட்டம் சூரியஒளி(சோலார்) மின் உற்பத்தியில் 2ம் இட‌ம்!

ராமநாதபுரம் மாவட்டம், சூரியஒளி(சோலார்)  மின் உற்பத்தி செய்யும் திறனில் இரண்டாம் இடத்தில் உள்ளது,' என அண்ணா பல்கலை எரிசக்தி துறை பேராசிரியர் சேது மாதவன் கூறினார்.

கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில், மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்பில், எரிசக்தி குறித்த கருத்தரங்கம், முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமையில், இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா முன்னிலையில் நடந்தது. துறை தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். அண்ணா பல்கலை முதுகலை மாணவர்கள் வான்ஜீஸ்வரன், விஜயகுமார், உமா மகேஸ்வரி, விஜயஸ்ரீ விளக்கமளித்தனர்.

 கல்லூரி துறை தலைவர்கள் அழகிய மீனாள், பீர்ஒலி, மும்பை கிராம்டன் கீரிவ்ஸ் ஆராய்ச்சி மைய பேராசிரியர் ஜெயபாலன் கலந்து கொண்டனர்.

அண்ணா பல்கலை எரிசக்தி துறை பேராசிரியர் சேது மாதவன் பேசியதாவது 
மின் தடைக்கு "இன்வெர்ட்டர்' தற்காலிகமாக பிரச்னையை தீர்க்கலாம்.நிரந்தர தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் காரணமாக சூரிய ஒளி மூலம் 1,000 மெகாவாட் திறன் மின் உற்பத்தி கொண்ட திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 2015ம் ஆண்டுக்குள் உற்பத்தி துவங்கி விடும்.மக்கள் மத்தியில் சூரியஒளி குறித்த, விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு தொழில் நுட்பங்கள் மூலமாக மின்சாரம் தயாரிக்க முடியும். குறிப்பிட்ட அளவு வெப்பம், மூன்று மணி நேரத்திற்குள் கிடைப்பதால் கோவை, ஊட்டியில் மக்கள் வீட்டுக்குள் பிளான்ட் அமைத்து சுடுதண்ணீருக்காக "சோலார்' ஹீட்டர் பயன்படுத்தி வருகின்றனர்.

தேசிய அளவில், ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரியஒளி மின் உற்பத்தி அதிகம் செய்யப்படுகிறது, என்றார்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.