Wednesday, March 28, 2012

நில அபகரிப்பில் ஈடுபடும் கட்டப்பஞ்சாயத்து கும்பல்! கீழக்கரை பகுதியில் விழிப்போடு இருக்க வேண்டுகோள்



விழிப்போடு இருக்க வேண்டுகோள் விடுக்கும் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் தமீமுதீன் துணை த‌லைவ‌ர் மாணிக்க‌ம்,பொருளாள‌ர் சாலிஹ் ஹுசைன் ஆகியோரை காண‌லாம்

தமிழக அரசின் நடவடிக்கையின் பேரில் தமிழகம் முழுவதும் தற்போது நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு வருகிறார்கள். நம் கீழக்கரை சுற்று வட்டார பகுதிகளிலும், இது போன்ற கட்டப்பஞ்சாயத்து கும்பலின் ஊடுருவல்கள் துவ‌ங்கியுள்ள‌தாக‌வும் ம‌க்க‌ள் விழிப்போடு இருக்க‌ வேண்டுமென‌ ம‌க்க‌ள் ந‌ல‌ பாதுகாப்பு க‌ழ‌க‌த்தின‌ர் வேண்டுகோள் விடுத்துள்ள‌ன‌ர்.

இது குறித்து கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் தமீமுதீன்,செயலாளர் முகைதீன் இப்ராகிம் ஆகியோர் கூறியதாவது ,
இது போன்ற நில அபகரிப்புகளில் பெரிய கட்சிகளில் அங்கம் வகிக்கும் பொறுப்பாளர்கள் மட்டுமின்றி, கிராம புறங்களில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரியும் கரை வேட்டி, கட்டப் பஞ்சாயத்தார்கள், இது போன்ற விசயங்களில் நாட்டாமை பண்ணுவது வருத்தத்துக்குரியது. இந்த நாட்டாமைகள், சில குறுக்குப் புத்தி அதிகாரிகளின் ஒத்துழைப்போடு , தாசில்தார் , சர்வேயர் , கிராம அதிகாரி (VAO ), இவர்களுடன் சிநேகம் வைத்து கொண்டு ஊரில் இருக்கும் வசதி வாய்த்தவர்கள் மற்றும் சிறுக சேர்த்து நிலங்கள் வாங்கி வைதோர்களிடமும் கைவரிசை காட்டுகிறார்கள்.

உதாரணமாக முதலில் வேலி அடைப்பு இல்லாமல் அல்லது கவனிப்பாரின்றி கிடக்கும் நிலங்கள் அல்லது விலை உயர்த்த நிலங்கள் இப்படி பட்ட நிலங்களை தேர்ந்து எடுத்து அதில் உள்ள சர்வே எண்ணை அறிகிறார்கள். பின்பு சம்பந்தப்பட்ட பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, அந்த இடத்தின் பட்டாகளில் தன்னுடைய பெயரை அடுத்தடுத்து இணைத்து விடுகிறார்கள். இதை வைத்து அவர்களுக்கு அறிந்தவர்களிடம் முதலில் விலைக்கு விற்று விடுகிறார்கள். கீழக்கரையில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளன ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏனோ புகார் தெரிவிக்காமல் இருக்கிறார்கள்.பாதிக்கப்பட்ட இவர்கள் புகார் தெரிவிக்க முன் வர வேண்டும் மேலும் இது சம்பந்தமாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்ப உள்ளோம்" என்று தெரிவித்தார்.

இது குறித்து துணை தலைவர் மாணிக்கம் அவர்கள் கூறும் போது

"கவனிப்பாரற்று கிடக்கும் சொத்துக்களை, இது போன்ற கும்பல், அவர்கள் சொந்த இடம் போல் அடைக்க முயற்சி மேற்கொள்ளுகிறார்கள். பின்பு நிலத்தின் உண்மையான சொந்தகாரருக்கு தெரியவந்ததுடன் இருவருக்கும் பல பஞ்சாயம், பல வாக்குவாதம் நடந்தபின் இறுதில் சமாதான பேச்சுவார்த்தை என்று அமர்கிறார்கள்.இந்த பேச்சு வார்த்தையில், கணிசமான தொகையை பாதிக்கப்பட்டவரால் இந்தகும்பலுக்கு வழங்கப்படாமல் முடிவு எட்டப் படுவதில்லை எனபது வேதனையான செய்தி.

இதில் சிக்கும் பாமர மக்கள் பலர் 'தொல்லை வேண்டாம்' என்று விட்டு கொடுத்ததும் இருக்கிறார்கள். அதுபோல அரசு அலுவலகங்களில் உள்ள சில கறுப்பாடுகளின் ஒத்துழைப்போடு பல வசதி படைத்தவர்களின் நிலங்களை அபகரிப்பு மற்றும் பேரம் பேசுகிறார்கள். இது போன்ற செயல்கள் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை நம் கீழக்கரை மக்கள் தற்சமயம் கட்டாயமாக பெறுவது அவசியம்" என்று தெரிவித்தார்.

பொருளாளர் சாலிஹ் ஹுசைன் கூறியதாவது,
ஒருவர் தன நிலத்தை விற்க முயற்சி செய்தால் எந்த ஒரு நில தரகரிடமும் அவர்களின் மூலபத்திரம் அல்லது ஒரே பத்திரத்தில் ஷெட்யூலாகவோ தனித் தனியாக குடும்ப பத்திரங்களையும் கொடுக்க கூடாது. அதுபோல் தன்னுடைய நிலங்களை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வில்லங்கம் ( E .C ) போட்டு பார்த்து கொள்வது நல்லது. அவ்வாறு செய்யும் போது, முறைகேடுகள் நடந்திருந்தால் உடனடியாக, நம் பார்வைக்கு கிடைக்கும் என்றார்.

1 comment:

  1. paratukal veerathhudan thodarunga ungal paniyai

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.