Wednesday, October 10, 2012

அர‌சு அதிகாரிகளின் மெத்தனத்தால் கீழக்கரையில் டெங்கு பாதிப்பு !எம்.எல்.ஏ குற்ற‌ச்சாட்டு


‘கீழக்கரை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு அதிகாரிகளின் மெத்தனமே காரணம்’ என ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் வர்த்தக நகரங்களுள் ஒன்றான கீழக்கரை மற்றும் அருகாமை பகுதிகளில்  கடந்த மூன்று மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

ஆக. 18ல், ஏழாவது வார்டுக்குட்பட்ட பெரிய அம்பலார் தெருவில் இன்ஜினியரிங் மாணவர் பாத்திஹ் மவுலானா(19) உயிரிழந்தார். அதற்கு 10 நாட்கள் முன்னதாக, 16வது வார்டுக்குட்பட்ட புது தெருவில் அப்துல் வாஹிது என்பவரின் ஒன்றரை மாதக்குழந்தை டெங்கு காய்ச்சல் பாதிப்பால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

செப். 30ல் 15வது வார்டுக்குட்பட்ட மாதிஹூர் ரசூல் சாலையைச் சேர்ந்த ஹதிஜத் ரில்வியா(20) என்ற இளம்பெண் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக அங்கு வந்திருந்த ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா நிருப‌ர்க‌ளுக்கு அளித்த‌ பேட்டியில் கூறியதாவது:

அதிகாரிகள் மெத்தனம் காரணமாகவே, கீழக்கரை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. மூன்று மாதத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கீழக்கரையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 ஒரு வார்டில் டெங்கு பாதிப்பின் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமே, அந்தப்பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

 கீழக்கரை நகராட்சியில் தற்போது மலேரியாவும் பரவுகிறது. சரியான முறையில் கொசுவுக்கு புகை மருந்து அடிப்பதில்லை. கிணறுகளிலும் மருந்து தெளிப்பதில்லை. முறையான கண்காணிப்பு இல்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கலெக்டரை சந்தித்துப் பேசி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். இவ்வாறு தெரிவித்தார்.

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 10, 2012 at 6:10 PM

    கடந்த 30/09/12 அன்று நடந்த துயரச் சம்பவத்தை கேள்விப்பட்டோர் அனைவரின் கண்கள் குளமாக, வாய் மூடி மௌனியாக இருக்க,நமது சட்ட மன்ற மக்கள் பிரதிநிதிக்கு நாளது தேதி வரை மாவட்ட ஆட்சியரை அலைபோசியில் உடன் தொடர்பு கொள்ள நேரம் கிடைக்கவில்லை போலும்..அவரது தொகுதியின் முக்கிய ஊரான கீழக்கரையில் நடந்த துயரச் சம்பவம் தமக்கு காலத் தாமதமாக கிடைத்ததாக சால்சாப்பு சொல்ல வேண்டாம்.அரசியல் வாதிகளின் மெத்தன போக்கை மக்கள் அறிந்ததே..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.