கீழக்கரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி குறைவால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கீழக்கரையில் கடந்த இரண்டு வாரமாக அனைத்து பகுதிகளிலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது இதில் சிறிய குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் பாதித்தவர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். மருத்துவமனையில் படுக்கை வசதி குறைவால் நோயாளிகளை தரையில் பாய் விரித்து போடும் நிலை உள்ளது.
காய்ச்சல் பாதித்தவர்கள் ரத்தம் பரிசோதனை செய்ய கொடுத்தால் மறுநாள்தான் ரிசல்ட் கிடைக்கிறது. இதனால் நோய் முற்றும் அபாயம் உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ரத்த பரிசோதனை செய்து அதே நாளில் முடிவை தெரிவித்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி மாவட்ட மகளிரணி செயலாளர் ரஹ்மத்நிஷா கூறுகையில், ‘கீழக்கரையில் சுகாதாரம் கேள்விக்குறியாக மாறிவருகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டு பகுதியில் 28 படுக்கைதான் உள்ளது. காய்ச்சல் பாதித்த சிறுவர்கள் 36 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுக்கை இல்லாததால் நோயாளிகளை தரையில் பாய்விரித்து படுக்க வைத்துள்ளனர். இதனால் நோய் அதிகமாகும் வாய்ப்பும் உள்ளது. மழைகாலம் என்பதால் தரையில் குளிர் ஏற்பட்டு காய்ச்சல் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது’ என்றார்.
இதுகுறித்து மலேரியா சுகாதார ஆய்வாளர் செல்லகண்ணு கூறுகையில், ‘ரத்த பரிசோதனை செய்யும் பணியாளர் விடுமுறையில் இருப்பதால் தாமதம் ஆகிறது’ என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.