கீழக்கரையில் ஒடிந்து விழும் நிலையில் உள்ள பட்டமரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலையின் மத்தியில் பஸ் ஸ்டாண்டுக்கு திரும்பும் முக்கியமான இடத்தில் வி.ஏ.ஓ. அலுவலகம் உள்ளது. இதன் அருகில் பஸ் ஸ்டாப்பும் உள்ளதால் மக்கள் எந்த நேரத்திலும் கூடும் இடமாக உள்ளது.
வி.ஏ.ஓ. அலுவலகம் அருகே உள்ள மரம் ஒன்றின் மரக்கிளை ஒன்று ஒடிந்து மின்கம்பியை தொட்டவாறு உள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக இதே நிலையில் இருப்பதால் மின்கம்பி அறுந்து விழும் அபாயம் உள்ளது. மின்கம்பி அறுந்து விழுந்தால் பெரும் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது.
இதேபோல் சின்னகடைத்தெரு, வியாபார கடைகள் அதிகம் உள்ள முஸ்லீம் பஜார் ஆகிய இரண்டு பகுதியிலும் பட்ட மரங்கள் உள்ளன. இவை எப்போது ஒடிந்து விழும் என்று சொல்ல முடியாத நிலையில் உள்ளது.
ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன் தினகரன் நாளிதழில் இதுகுறித்து படத்துடன் செய்தி வந்தது. உடனே வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டதுடன் சரி. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்ட மரம் ஒடிந்து விழுந்து பெரிய விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து 13வது வார்டு கவுன்சிலர் ரபியுதீன் மற்றும் சின்னகடைத்தெரு அப்துல்காதர் ஆகியோர் கூறுகையில், ‘சின்னகடைத்தெருவில் உள்ள பழம்பெரும் மரமும், முஸ்லீம் பஜாரில் உள்ள பழம்பெரும் மரமும் தற்போது பட்டுப்போய் ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. நகராட்சிக்கும், வருவாய்துறைக்கும், கலெக்டருக்கும் பலமுறை மனு கொடுத்துள்ளோம். அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் சென்றனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வி.ஏ.ஓ. அலுவலகம் அருகிலேயே மரக்கிளை உடைந்து மின்கம்பியின் பிடியில் நிற்கிறது. இவைகள் விழுந்து பெரிய விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.