Thursday, July 26, 2012

கீழக்கரை முக்கிய சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை!



பள்ளி வாகனங்கள் அடிக்கடி சென்று வரும் கீழக்கரை மூன்று சாலை சந்திப்பில் இருந்த வேகத்தடை அகற்றப்பட்டதால் விபத்துகள் நடைபெற வாய்ப்புள்ளது எனவே உடனடியாக மீண்டும் இங்கு வேகத்தடை அமைக்கவேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கீழக்கரையில், வள்ளல் சீதக்காதி சாலை மூன்று சந்திப்பில், பேட்டைத்தெரு முதல் சொக்கநாதர் கோயில் வரை கடந்த திமுக ஆட்சியில் தார் சாலை அமைக்கப்பட்டது. அப்போது மூன்று சந்திப்பில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்றதால், அந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டு விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது. தற்போது, புதிதாக அந்த இடத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

புதிய சாலை அமைக்கும் போது, அந்த இடத்தில் வேகத்தடை அமைக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். ஆனாலும், வேகத்தடை இல்லாமலே சாலை அமைக்கப்பட்டு விட்டது. இதனால் விபத்து எப்போ தும் நடக்கும் சூழ்நிலையில் உள்ளது. சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. ஆகவே இந்த இடத்தில் மீண்டும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் செய்யது இபுராகிம் கூறுகையில்,

“கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை சந்திப்பில் உள்ள பேட்டைதெரு அருகே தனியார் தொடக்கப்பள்ளி உள்ளது. மேலும் அதன் வழியாக உயர்நிலைப்பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் அடிக்கடி சென்று வரும். மூன்று சாலைகள் சந்திக்கும் இந்த இடத்தில் வேகத்தடை இல்லாததால் பள்ளி குழந்தைகள் விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது. பேட்டை தெருவில் இருந்து மெயின் சாலைக்கு செல்லும் வாகனங்களும் வேகமாக செல்வதால் மெயின் சாலையில் வரும் பஸ்சில் மோதி விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்க உத்தரவிடவேண்டும் என கலெக்டருக்கு மனு அளித்துள்ளோம்என்றார்.


பள்ளி வாகனங்கள், சைக்கிள்கள், பைக்குகள் அடிக்கடி சென்று வரும் கீழக்கரை மூன்று சாலை சந்திப்பு இது. புதிதாக சாலை அமைத்தபோது, இங்கிருந்த வேகத்தடை அகற்றப்பட்டு விட்டது. இதனால் சிறு, சிறு விபத்துகள் நடக்கின்றன. உடனடியாக வேகத்தடை அமைத்தால் மக்களுக்கு நல்லது.

1 comment:

  1. சிறு, சிறு விபத்து களுக்கு பிரதானக் காரணம் வேகத்தடை இல்லாதது மட்டும் அல்ல. ஓட்டுனர் தகுதி இல்லாத இளம் வயதினர்கள் இளம் கன்று பயமறியாது என்ற சொலவடைக்கு ஏற்ப செயல்படுகிறார்கள். அதற்கு குறைந்த கல்வி, குடும்ப வறுமை காரணமாக இருக்கலாம்.ஆனால் வாகனத்திற்கு நிலமை புரியாதே.

    வாகனத்தை ஓட்டும் போது திடீர் பிரச்சனைகள் ஏற்படும் போது அவர்களால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை, மேலும் தெரியவும் இல்லை. சட்டத்திற்கு புறம்பாக நாம் செயல் படுகிறோம் என அவர்கள் உணரும் வரை இந்த பிரச்சனை ஓயப் போவதில்லை.அதற்கு குறைந்த பட்ச ஒரே வழி ஊர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான போக்குவரத்து காவல்துறை காவலர்களை நியமிப்பதே.

    மேலும் அஞ்சலக வீதியில் கனரக வாகனங்களை (காலை7 மணி முதல் மாலை ஐந்து மணி வரை) தடை செய்து அவசியப் பட்டால் மாற்று பாதையான பணியக்காரத் தெரு. பரதர் தெரு வழியாக கிழக்குத் தெரு செல்ல வழி காணலாம். மேலு அங்கு நோ பார்கிங் விதியை கடுமையாக பின் பற்ற வேண்டும்.

    இந்த அதி முக்கியமான நடவடிக்கையை உடனடியாக செய்தே ஆக வேண்டும். காரணம் முன் காலங்களில் நமதூர் பெண்கள் பகல் காலங்களில் வெளியவே வர மாட்டர்கள். காலம் மாறி வருகிறது. படிப்பறிவும் கூடி வருகிறது. அபரிதமான அரபக தொடர்பால் வங்கி மற்றும் தொலைபேசி, மின்சார கட்ட்ணங்கள் செலுத்துவதை அவர்களே கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கான அலுவலங்கள் அனைத்தும் அஞ்சலக வீதியில் தான் உள்ளது. மேலும் அந்த வீதி குறுகலாக இருப்பதினாலும் பகலில் அநேக நேரங்களில் போக்குவரத்து நெரிச்சலால் உண்டாகும் சிரமங்கள் வார்த்தைகளால் விளக்க முடியாது.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.