Wednesday, July 25, 2012
மனைக்காக அழிக்கப்படும் பனை!ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகிறது!
பட விளக்கம்:-கீழக்கரை அருகே தில்லையேந்தல் பகுதியிலிருந்து வெளிமாநிலத்துக்கு கொண்டு செல்லப்படும் வெட்டப்பட்ட பனை மரங்கள்! வெட்டிய மரங்களை ஏற்றி செல்லும் லாரியில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் "பனைசெல்வம்" என்பது குறிப்பிடதக்கது.
கீழக்கரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பனந்தோப்புகள் வெகு வேகமாக காணாமல் போய் கொண்டிருக்கின்றன. பிளாட்டுகள் போடுவதற்காகவும், செங்கல் சூளைக்கு எரிபொருளாக விற்பனை செய்வதற்காகவும் பனை மரங்கள் வெகு வேகமாக வெட்டி அழிக்கப்படுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ஏர்வாடி, உச்சிப்புளி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மற்றும் பனைமர தோப்புகள் அதிக அளவில் உள்ளன. கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் காற்றாலை மின் இயந்திரங்கள் அமைப்பதற்காக ஏராளமான தென்னை மற்றும் பனைமர தோப்புகள் வெளிமாவட்ட தொழிலதிபர்களால் அதிக விலை கொடுத்து இப்பகுதிகளில் வாங்கப்பட்டன. பின்னர் தோப்புகள் அழிக்கப்பட்டு காற்றாலை இயந்திரங்கள் அமைக்கப்பட்டன.
இப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வளர்ந்துள்ள பனைமர தோப்புகள் பிளாட் விற்பனைக்காக அழிக்கப்பட்டு வருகின்றன. கான்கீரிட் வீடுகள் அதிகளவில் கட்டப்படுவதால் குடிசை வீடுகளும் குறைந்து வருகின்றன. “பனை மரத்தோப்புகளில் இருந்து கிடைக்கும் வருமானம், உரம் மற்றும் பராமரிப்பு செலவுக்கே சரியாகி விடுவதால் இந்தத் தொழில் நலிவடைந்து வருகிறது. அதிகம் செலவு பிடிப்பதால் பலரும் தோப்புகளை விற்றுவிட்டு புதிய சூழலுக்கேற்ப வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர்,” என தோப்பு உரிமையாளர்கள் தங்கள் செயலை நியாயப்படுத்துகின்றனர்.
பிளாட்டுகளுக் காக அழிப்பது தவிர, செங்கல் சூளைகளுக்காகவும், பனை மரங்கள் வெட்டப்பட்டு, வெறும் ரூ.2 ஆயிரத்திற்கு விற்கப்படும் அவலம் நடக்கிறது. பனை மரங்களின் விளைபொருட்களை விற்பதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் அரசு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே அழிந்து கொண்டிருக்கும் பனைமரங்களை காப்பாற்ற முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
“இந்தியாவில் சுமார் 8 கோடி பனைமரங்கள் உள்ளன. இதில் 5 கோடி பனைமரங்கள் தமிழகத்தில் உள் ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 லட்சத்திற்கும் மேற் பட்ட பனைமரங்கள் இருக்கின்றன. வெறும், 20 லட்சம் பனைமரங்கள் மட்டுமே வைத்திருக்கும் தாய்லாந்து நாடு, பனைப்பொருள் ஏற்றுமதியில் தலைசிறந்து விளங்கும் போது 5 கோடிக்கும் அதிகமான பனைமரங்கள் இருக்கும் தமிழகம், நிச்சயம் பனைப்பொருள் ஏற்றுமதியில் லாபம் அள்ளமுடியும். ஆகவே, பனைப்பொருட்கள் விற்பதற்கும், ஏற்றுமதி செய்யவும் அரசு நடவடிக்கைகளை துவக்கவேண்டும்,” என தெரிவிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
சமூக ஆர்வலர்களின் ஆதங்கம் பரிபூரணமாக உணர முடிகிறது. ஆனால் இன்றைய அரசியல் கலந்த நிர்வாக சூழ்நிலையில் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
ReplyDeleteதமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா